அலசல்
Published:Updated:

காரில் கூட்டு பாலியல் வன்கொடுமை... அதிரவைத்த கொச்சி சம்பவம்!

பாலியல் வன்கொடுமை
பிரீமியம் ஸ்டோரி
News
பாலியல் வன்கொடுமை

பார்ட்டிக்கு, எனக்கு அறிமுகம் இல்லாத டிம்பிளின் மூன்று ஆண் நண்பர்கள் வந்தார்கள். அவர்கள் கொடுத்த பீரைக் குடித்தவுடன் நான் உணர்வற்ற நிலைக்குச் சென்றேன்.

கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், மாடலாக இருந்துவருகிறார். விளம்பரப் படங்களில் நடிக்கும்போது சக மாடலான ராஜஸ்தானைச் சேர்ந்த டோலி என்ற டிம்பிள் லாவா இவருக்குத் தோழியாகியிருக்கிறார். இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி இரவு ‘பார்ட்டி’ என்ற பெயரில், கொச்சி எம்.ஜி ரோட்டிலுள்ள பாருக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறார் டிம்பிள் லாவா.

காரில் கூட்டு பாலியல் வன்கொடுமை... அதிரவைத்த கொச்சி சம்பவம்!


அதன் பின்னர் நடந்த சம்பவங்களை விவரிக்கும் மாடல் பெண், “பார்ட்டிக்கு, எனக்கு அறிமுகம் இல்லாத டிம்பிளின் மூன்று ஆண் நண்பர்கள் வந்தார்கள். அவர்கள் கொடுத்த பீரைக் குடித்தவுடன் நான் உணர்வற்ற நிலைக்குச் சென்றேன். சுற்றி என்ன நடக்கிறது என என்னால் புரிந்துகொள்ள முடிந்தது, ஆனால் என்னால் சுயமாகச் செயல்பட முடியாத அவஸ்தை நிலைக்குச் சென்றேன்.

இதையடுத்து டிம்பிள், தன் நண்பர்களுடன் என்னை மகேந்திரா தார் வாகனத்தில் ஏற்றிவிட்டுவிட்டு நழுவிவிட்டார். அவர்கள் மூன்று பேரும் ஓடும் காரில்வைத்தே என்னைப் பாலியல் பலாத்காரம் செய்தனர். சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு ஹோட்டலில் சாப்பாடு வாங்க நிறுத்தினர். அதிர்ச்சி காரணமாக, அங்கிருந்த யாரிடமும் எனது நிலையைச் சொல்ல முடியவில்லை. பிறகு எனது பிளாட்டுக்குப் பக்கத்தில் இறக்கி விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். மறுநாள் காலையில் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, களமசேரியிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்தேன்” என்கிறார் அதிர்ச்சி விலகாமல்.

காரில் கூட்டு பாலியல் வன்கொடுமை... அதிரவைத்த கொச்சி சம்பவம்!

இந்த வழக்கில் டிம்பிள், அவருடைய நண்பர்களான கொடுங்கல்லூரைச் சேர்ந்த சுதீப், நிதின், விவேக் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து கொச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் சி.ஹெச்.நாகராஜூ தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், டிம்பிள் திட்டமிட்டே அந்த மாடலைத் தன் நண்பர்களின் பாலியல் வக்கிரத்துக்கு இரையாக்கியது தெரியவந்தது. இதற்கு ஆதாரமாக டிம்பிளின் போன் உரையாடல்களைக் கைப்பற்றியிருக்கின்றனர் போலீஸார். இதேபோல வேறு யாரையும் டிம்பிள் ஏமாற்றியிருக்கிறாரா என்றும் விசாரணை நடக்கிறது.

கொச்சியில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைதானார். கடந்த ஆண்டு இதே கொச்சியில் டி.ஜே பார்ட்டிக்குச் சென்று காரில் திரும்பிய மாடல்களான ‘மிஸ் கேரளா 2019’ ஆன்சி, அஞ்சனா ஆகியோர் விபத்தில் சிக்கி இறந்தனர். இதன் பின்னணியில் பாலியல் விவகாரம் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இப்போது அதே கொச்சி மாநகரம், டி.ஜே பார்ட்டி பின்னணியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது கேரளத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது!