மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!
##~##

இரண்டு அடிமைகள்!

 இந்திய வரலாற்றின் போக்கை இரண்டு அடிமைகள் மாற்றி அமைத்து இருக்கின்றனர். இருவரின் வாழ்வும் எழுச்சியும் வரலாற்றின் பக்கங்களில் தனித்துப் பேசப்படுகின்றன. ஒருவர்... அடிமை வம்சத்தை இந்தியாவில் ஆட்சி புரியச் செய்த சுல்தான் குத்புதீன் ஐபக். இன்னொருவர்... தமிழகம் வரை பெரும் படை நடத்தி வந்து இந்தியாவைச் சூறையாடிக் கதிகலங்க வைத்த மாலிக் கபூர். இருவருமே விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள்தான். தங்களது எஜமானனின் விருப்பத்துக்கு உரியவராகி மெள்ள மெள்ள அதிகாரத்தினுள் நுழைந்து சந்தர்ப்பங்களை தங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு அதிகாரத்தின் உச்சத்துக்கு வந்தவர்கள். வாழ்வின் விசித்திரம் ஒரு மனிதனை எவ்வளவு உயரத்துக்குக் கொண்டுசெல்லும் என்பதற்கு அடையாளம் போலவே இருவரின் வரலாறும் விளங்குகிறது.

டெல்லியில் உள்ள குதுப்மினார், சுல்தான் குத்புதின் ஐபக்கை நினைவுபடுத்தும் அழியாத நினைவுச்சின்னம். இந்தியாவின் மிக உயரமான இந்த மினார், 237 அடி உயரமும் ஏழு அடுக்குகளும் கொண்டது. இதனுள் 379 படிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள ஜாம் மினாரைப் போல ஒன்றை டெல்லியில் உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட குத்புதீன் ஐபக், இதை 1193-ம் ஆண்டில் கட்டத் தொடங்கினார். அவர் காலத்தில் இந்த மினாரின் முதல் தளம் மட்டுமே கட்டப்பட்டது. இதை முழுமையாகக் கட்டி முடித்தவர் ஐபக்கின் மருமகன் இல்ட்டுமிஷ்.

எனது இந்தியா!

மினார் என்பது தொழுகைக்கு அழைக்கும் கோபுரம். 'ஹசரத் குவாஜா குத்புதீன் பக்கியார் காகி’ என்ற சூபி ஞானியின் நினைவாகக் கட்டப்பட்ட இந்த மினார், சிவப்புக் கற்களால் ஆனது. இதன் சுற்றுச்சுவரில் குரான் வாசகங்கள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. இஸ்லாமியக் கட்டடக் கலையின் உன்னதமாகக் கொண்டாடப்படும் குதுப்மினாரைக் கட்டுவதற்காக, 27 இந்து மற்றும் ஜைனக் கோயில்களை இடித்து அந்தக் கற்களைக்கொண்டே குதுப்மினார் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்துவது போலவே குதுப்மினார் வளாகத்தினுள் விஷ்ணு ஸ்தம்பம் எனப்படும் இந்தியாவின் மிகப் பெரிய இரும்புத் தூண் இருக்கிறது.

துருப்பிடிக்காத இந்த இரும்புத் தூண், குப்த சாம்ராஜ்யத்தின் பொற்காலத்தில் அமைக்கப்பட்டது. இதை அமைத்தவர் முதலாவது அனங்கபால்என்றும், இது ராய் பிதோரா என்ற கோயிலில் இருந்தது என்றும் தெரிய வருகிறது. இது, கிரீட உச்சியில் இருந்து கீழ்மட்டம் வரை 23 அடி எட்டு அங்குலம் கொண்டது. இதில், 22 அடி தரைமட்டத்துக்கு மேற்பகுதியிலும், எஞ்சிய ஒரு அடி 8 அங்குலம் தரைமட்டத்துக்கு அடியிலும் இருக்கிறது. இந்தத் தூண் ஆறு டன் எடை கொண்டது. தூணின் கீழ்க்குறுக்களவு 16.4 அங்குலம். மேல்குறுக்களவு 12.5 அங்குலமாக இருந்து ஓர் அடி உயரத்துக்கு 0.29 அங்குலம் குறைந்துபோய்க் காணப்படுகிறது. மணி போன்ற வடிவம்கொண்ட இதன் சிகரம் 3.5 அடி உயரம்கொண்டது. இரும்புத் தூணின் மீது ஒரு விஷ்ணு சிலை இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். இந்தத் தூணில் காணப்படும் எழுத்துக்கள், அலகாபாத்தில் உள்ள சமுத்திர குப்தனின் கல்வெட்டில் காணப்படும் எழுத்துகளைப் போன்றே  இருக்கின்றன. இந்தத் தூணில், சமஸ்கிருதம் மற்றும் பிராமியில் எழுதப்பட்ட வாசகங்கள் காணப்படுகின்றன.

இந்த நெடுதுயர்ந்த தூண், திருமாலின் கொடிக் கம்பம். விஷ்ணு மீது பக்திகொண்ட அரசன் சந்திராவால், விஷ்ணு பாதம் எனும் மலை உச்சியில் நிறுவப்பட்டது என்ற வரிகள் இந்தத் தூணில் எழுதப்பட்டு உள்ளது. பொதுவாக, கோயில் கொடிக் கம்பங்களுக்கு கருங்கல் அல்லது மரமே பயன்படுத்தப்படும். மாறாக, ஓர் உலோகத்தை அதுவும் இரும்பைப் பயன்படுத்தி இருப்பது வழக்கத்தில் இல்லாத ஒன்று. அத்துடன், இறைவனுக்கு உருவாக்கப்பட்ட கம்பத்தில் மன்னரைப் பற்றி புகழுரைகள் பொறிப்பதும் மிகவும் அரிது. ஆகவே, இந்தத் தூணில் உள்ள வெட்டெழுத்துகள், பல ஆண்டுகளுக்குப் பிறகு வேறு எவராலோ எழுதப்பட்டு இருக்கக்கூடும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

எனது இந்தியா!

இந்திய எஃகு செய்யும் முறையின் தொன்மை வியக்கத்தக்கது. ''எந்தக் கருவிகளைக்கொண்டு எகிப்தியர்கள் தங்களது நினைவுக் கம்பங்களையும், கற்கோயில்களில் வெட்டுச் சித்திர எழுத்துகளால் நிரப்பினார்களோ, அவை இந்திய எஃக்கால் ஆனவை. இந்தியர்களைத் தவிர வேறு எந்தத் தேசமும் எஃகு செய்யும் கலையில் இவ்வளவு தேர்ச்சி பெறவில்லை. இரும்பை, இந்தியாவில் இருந்தே எகிப்தியர்கள் இறக்குமதி செய்திருக்க வேண்டும். அல்லது இந்திய உலோகத் தொழில்நுட்பக் கலைஞர்களை அழைத்துச் சென்று அவர்கள் உதவியால்தான் பெரிய நினைவுச்சின்னங்களை எழுப்பத் தேவையான கருவிகளை உருவாக்கி இருக்க வேண்டும்'' என்று கூறுகிறார் வரலாற்று அறிஞர் ராபர்ட் ஹாட்பீல்டு.

விஷ்ணுவைப் போற்றும் இரும்புத் தூணை, ஏன் ஐபக் அதே இடத்தில் அப்படியே விட்டுவைத்தார் என்பதைப்பற்றி நிறையக் கதைகள் உலவுகின்றன. இரும்புத் தூணை பூமியில் இருந்து அகற்றுபவரின் ஆட்சி முடிந்துபோய்விடும். தூணை ஒருபோதும் பூமியில் இருந்து பெயர்த்து எடுக்க முடியாது. அதை, யாராவது அகற்ற முயன்றால், அவர் எதிர்பாராத மரணத்தைச் சந்திப்பார் என்ற நம்பிக்கைகள் இருந்து இருக்கின்றன. குத்புதீன் ஐபக் அதை நம்பி இருக்கக்கூடும்.

டெல்லியில் அடிமை வம்சத்தை நிலைபெறச் செய்த குத்புதீன் ஐபக், துருக்கிய வம்சா வழியைச் சேர்ந்தவர். ஆப்கானிஸ்தானில் பிறந்த இவர், சிறு வயதிலேயே அடிமையாக விற்கப்பட்டவர். இவரை விலைக்கு வாங்கிய நிஷா பூரின் குவாஷி, குத்புதீன் ஐபக்கை தனது சொந்தப் பிள்ளையைப் போல வளர்த்தார். குதிரை ஏற்றம், வாள் பயிற்சி மற்றும் வில் பயிற்சிகள் அளித்தார். அதோடு, அரபி மற்றும் பெர்ஷிய மொழிகளிலும் தேர்ச்சி பெறச் செய்தார்.

அப்போது, கஜினியின் ஆட்சியாளராக இருந்த கோரி முகமது, விலை கொடுத்து குத்புதீன் ஐபக்கை வாங்கி, தனது அடிமைகளில் ஒருவராக்கிக்கொண்டார். கோரி முகமதுவின் பாதுகாவல் பணிக்கும், அரண்மனைக் காவலுக்கும் நிறைய அடிமைகள் இருந்தனர். அவர்களில் ஒருவராக தனது வாழ்வைத் தொடங்கிய ஐபக், தனது தீர்க்கமான வீரத்தால் கோரிக்கு நெருக்கம் ஆனார். படைப் பிரிவு அதிகாரியாகப் பதவிபெற்று அதில் இருந்து கோரியின் வலது கை போன்ற முக்கியத் தளபதியாக உயர்ந்தார்.

இந்துஸ்தானைப் பிடிக்க வேண்டும் என்பதில் கோரி முகமதுவுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. 1192-ம் ஆண்டு, அதற்காகப் படை நடத்தி வந்தபோது, பிரித்விராஜ் சௌகானால் தோற்கடிக்கப்பட்டார். அந்தத் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத கோரி முகமது, தனது படைத் தளபதிகள் அத்தனை பேரையும் ஒரே இடத்துக்கு வரச்செய்து அவர்களின் கைகளைப் பின்னால் கட்டி, குதிரைகளைப் போல வாயால் உணவைக் கவ்விச் சாப்பிடட்டும் என்ற குரூரமான தண்டனை விதித்தார். அது, அவரது போர் வீரர்களை உக்கிரமான போராளிகளாக மாற்றியது.

1193-ம் ஆண்டு டெல்லியைப் பிடிப்பதற்காக கோரி முகமது அனுப்பிய படைக்குத் தலைமை ஏற்ற குத்புதீன் ஐபக், தனது ஆவேசமான தாக்குதலால் டெல்லியைக் கைப்பற்றினார். அந்த வெற்றிக்குப் பரிசாக, ஐபக் ஆளுனராக நியமிக்கப்பட்டார்.  உடனே, தனது எல்லையற்ற அதிகாரத்தின் புற வடிவம் போல, குதுப்மினார் கட்டும் வேலையைத் தொடங்கினார். இதற்காக, பெர்ஷியா மற்றும் ஆப்கன் ஆகிய இடங்களில் இருந்து திறமை வாய்ந்த கட்டடக் கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் அழைத்து வரப்பட்டனர்.  

மினார் என்ற வடிவம் இந்தியக் கட்டக் கலைக்குப் புதியது. ஆகவே, பிரம்மாண்டமான மினார் அமைப்பதன் மூலம், தனது வெற்றியை உலகம் என்றென்றும் நினைவுவைத்து இருக்கும் என்று குத்புதீன் ஐபக் நம்பினார். கோரி முகமதுவுக்கு வாரிசுகள் கிடையாது. எனவே, அவரது மரணத்துக்குப் பிறகு, அவரது ஆளுகையில் இருந்த நிலப் பரப்பை அவரது தளபதிகள் நான்காகப் பிரித்துக்கொண்டனர். கஜினி பகுதியை தாஜ்வுதீன் யேல்டோல்ஸ், பெங்கால் பகுதியை முகம்மது கில்ஜி, முல்தானை நசுருதீன் குபாஷா, டெல்லியை குத்புதீன் ஐபக் ஆகியோர் ஆள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

1206-ம் ஆண்டில், குத்புதீன் ஐபக் டெல்லியின் முதல் சுல்தானாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். அதில் இருந்துதான் அடிமை வம்சம் டெல்லியை ஆளத் தொடங்கியது. டெல்லி நகரை உருமாற்றியதில் குத்புதீன் ஐபக் முக்கியமானவர். கோட்டைகள் மற்றும் கண்காணிப்புக் கோபுரங்களை அமைத்து நகரை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டதோடு, நிர்வாக முறைகளிலும் பல சீர்திருத்தங்களைச் செய்தார்.

குத்புதீன் ஐபக், கோரி முகமதுவைப் போல குரூரமானவர் இல்லை என்று சொல்லும் வரலாற்று ஆய்வாளர்கள், ''அவர் அடிமையாக இருந்த காரணத்தால் சுகபோகங்களை அனுபவிக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டினார். தனது மகள் திருமணம் நடைபெற்ற அதே நாளில் தானும் ஓர் இளம்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆசைநாயகிகள் இருந்தனர்'' என்று கூறுகின்றனர். கஜினியின் ஆளுநராக இருந்த தாஜ்வுதீன் யேல்டோல்ஸ், டெல்லியில் தனக்கும் உரிமை உள்ளது என்று கூறி, அதைக் கைப்பற்ற முயற்சித்தார். அதை அறிந்த ஐபக், இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர போரை விட எளிய தீர்வு இருக்கிறது என்று, தாஜ்வுதீனின் மகளைத் தானே திருமணம் செய்துகொண்டுவிட்டார். ஐபக் காலத்தில், டெல்லியின் முக்கியப் பிரச்னையாக இருந்தது வழிப்பறிக் கொள்ளை. அதை முற்றிலும் ஒடுக்கியதோடு, சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து வணிகச் சந்தைகளையும் முறைப்படுத்தி இருக்கிறார்.

டெல்லியின் சுல்தானாக நான்கே ஆண்டுகள் ஆட்சி செய்த குத்புதீன் ஐபக், லாகூரில் குதிரையில் சென்றபடியே ஆடும் போலா விளையாட்டின்போது தவறி விழுந்து பலத்த காயமடைந்து இறந்துபோனார். அவருக்குப் பின், அவரது மகன் ஆராம்ஷா, டெல்லியின் சுல்தானாக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் ஆட்சி செய்யத் தகுதியற்றவர் என்று கருதிய குத்புதீன் ஐபக்கின் மருமகன் இல்ட்டுமிஷ், அவரைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியில் அமர்ந்தார். இவரும், குத்புதீன் ஐபக்கால் அடிமையாக விலைக்கு வாங்கப்பட்டவரே.

குத்புதின் ஐபக்கைப் போலவே, இல்ட்டுமிஷ§ம் சிறுவயதிலேயே அடிமையாக விற்கப்பட்டவர். அவரை முதலில் விலைக்கு வாங்கியவர் புகாராவில் வசித்த ஜாமாலுதீன் என்ற குதிரை வணிகர். இல்ட்டுமிஷ் சிறந்த போர் வீரனாகவும் மதிநுட்பம் கொண்டவராகவும் இருப்பதை அறிந்து, அவரை அதிக விலை கொடுத்து வாங்கினார் ஐபக். தனக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது மகளை அவருக்குத் திருமணம் செய்துவைத்து உறவை ஏற்படுத்திக்கொண்டார்.

இல்ட்டுமிஷ் காலத்தில்தான் செங்கிஸ்கான் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தார். அதை, சாதுர்யமாக சமாளித்த இல்ட்டுமிஷ், உள்நாட்டுக் கலகங்களை ஒடுக்கியதோடு, பிரிந்துகிடந்த நிலப்​பகுதிகளைத் தன்வசமாக்கி ஒருமித்த ஆட்சியாக வலுப்​படுத்தினார். துருக்கி கலிபாவின் அங்கீகாரம் பெற்ற முதல் டெல்லி சுல்தானும் இவரே.

எனது இந்தியா!