மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!
எனது இந்தியா!
##~##

ந்த வழிமுறைகளால், பிண்டாரிகளை ஒடுக்க முடியாது என்று உணர்ந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், அவர்கள் எந்த மராட்டிய ஆட்சியாளர்களுக்கு விசுவாசிகளாக இருக்கிறார்களோ... அவர்களை வைத்தே பிண்டாரிகளை ஒடுக்குவது என்று முடிவு செய்தனர். மராட்டிய ஆட்சியாளர்களுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தனர். அதோடு, தனிப் படைப் பிரிவு உருவாக்கப்பட்டு அந்தப் பிரிவு, பிண்டாரிகளை ஒடுக்குவதற்கு முழு வீச்சில் களம் இறங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, எல்லைப் பகுதிகள் யாவும் பிரிட்டிஷ் படைப் பிரிவால் பாதுகாக்கப்பட்டது. 

மராட்டிய ஆட்சி, சிவாஜிக்குப் பிறகு பேஷ்வாக்களின் கைக்குப் போனதால், அவர்களுக்குள் ஏகப்பட்ட பிரச்​னைகள் இருந்தன. அவர்கள், அதைத் தீர்த்துக்கொள்ள பிண்டாரிகளைப் பயன்படுத்தினர். ஒவ்வொரு மராட்டிய ஆட்சியாளரும் தனக்கெனத் தனிப் பிண்டாரிக் குழுவை வளர்த்துவைத்திருந்த காரணத்தால், அதைத் துண்டித்து, பிண்டாரிகளைத் தனிமைப்படுத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது.

எனது இந்தியா!

இதன் காரணமாக, பிண்டாரிகளுக்கு அதிகம் உதவி செய்து வந்த சிந்தியாவை வரவழைத்து, பிண்டாரிகளை ஒடுக்குவதில் தங்களுக்கு உதவி செய்யாவிட்டால், அவரை பிரிட்டிஷ் எதிரி என்று முடிவு செய்து, அவரது ஆளுகையில் உள்ள பகுதிகளைப் பறித்துக்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை செய்தனர். சிந்தியா மீது பிண்டாரிகள் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். ஆனாலும், பிரிட்டிஷ் அச்சுறுத்தலுக்குப் பணிந்து, பிண்டாரிகளை ஒடுக்குவதற்கு ஒத்துழைப்புத் தருவதாக அவர் சம்மதித்தார்.

பிண்டாரிகளுக்கு ஆதரவு தரக்கூடியவர்களை, பிண்​டாரிகளிடம் இருந்து பிரித்து அவர்களை இருப்பிடத்தில் இருந்து வெளியே வரச்செய்து சுற்றி வளைத்துத் தாக்குவதுதான் ஹேஸ்டிங்கின் திட்டம். ஆகவே, அவர் லாகவமாகக் காய்களை நகர்த்தத் தொடங்கினார். அதன்படி, பிண்டாரிகள் பக்கம் இருந்த சிலர் பிரிட்டிஷ் வசமானார்கள். ஆனாலும், பேஷ்வா பாஜிராவ், முதோஷி போன்ஸ்லே ஆகியோர் பிண்டாரிகளுக்கு ஆதரவு அளித்தனர். பிண்டாரிகளைத் தாக்குவதற்காக பிரிட்டிஷ் காத்திருந்தது. நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் அவர்களைத் தாக்கினால், எளிதாக மடக்கிவிடலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. காரணம், அது அவர்கள் கொள்ளையடிக்கச் செல்லாத காலம்.

ஒரு லட்சத்து 20 ஆயிரம் பிரிட்டிஷ் படை வீரர்களுடன், பிண்டாரிகளை ஒடுக்குவதற்கான யுத்தம் 1817-ல் தொடங்கியது. இரண்டு அணிகளாகப் பிரிந்துகொண்ட ராணுவம், பிண்டாரிகளை அசுர வேகத்துடன் தாக்கியது. ஒவ்வோர் அணியும் மூன்று பிரிவுகளாகப் பிண்டாரிகளைச் சுற்றி வளைக்கத் தொடங்கியது. அவர்கள் நேரடியான சண்டையைத் தவிர்த்து தப்பி ஓடவே முயற்சித்தனர். நான்கு பக்கமும் சுற்றி வளைக்கப்பட்டதால், வேறு வழி இல்லாமல் சண்டையிட்டனர்.  

எனது இந்தியா!

இந்தச் சண்டையில், பிண்டாரிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் வசிப்பிடங்கள் அழிக்கப்பட்டன. பிண்டாரிகள் தோற்றுப்போனார்கள். தப்பி ஓடும் குழுவைத் துரத்திப்போய் அழித்தது பிரிட்டிஷ் ராணுவம். பிரிட்டிஷ் படையிடம் பிடிபட்டுவிடக் கூடாது என்று நினைத்த சில பிண்டாரிகள் உயிரை மாய்த்துக்கொண்டனர். ஜான் மால்கம் என்ற ராணுவ அதிகாரியால் துரத்தப்பட்ட சேத் என்ற பிண்டாரி தலைவன், காட்டுக்குள் ஒளிந்துகொண்டான். அவனைப் பிடிக்கவே முடியவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, அவன் புலி அடித்துக் கொல்லப்பட்டுக் கிடந்ததைக் காட்டுவாசிகள் கண்டு பிடித்தனர்.

பிண்டாரிகளை ஒடுக்கியதோடு பிரிந்துகிடந்த மராட்டியப் பகுதிகளை ஒட்டுமொத்தமாகச் சேர்த்துத் தனதாக்கிக்கொண்டது பிரிட்டிஷ் அரசு. பேஷ்வாக்களின் அதிகாரம் முற்றிலும் ஒடுக்கப்பட்டது. பிண்டாரிகளின் இனத்தைச் சேர்ந்தவர்கள் தேடித்தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, தூக்கில் இடப்பட்டனர். தப்பி ஓட முயன்றவர்கள், சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1825-ல் பிண்டாரிகள் எனத் தனியே எவரையும் அடையாளம் காண முடியாதபடி அந்த இனமே அழிந்துபோய் இருந்தது. உயிர் பிழைத்தவர்கள், மக்களோடு ஐக்கியமாகி தங்களது அடையாளங்களை மாற்றிக்​கொண்டு கொள்ளை அடிப்பதையும் கைவிட்டார்கள் என்று மால்கம் தனது அறிக்கையில் கூறி இருக்கிறார்.

பிண்டாரிகளைப் பற்றிக் கூறும் எப்டி ட்ருவிட், 'பிண்டாரிகள் ஓர் இடத்தில் நிலை கொள்ளாதவர்கள். ஆகவே, கூடாரங்களையே தங்களது வீடுகளாகப் பயன்படுத்திக்கொண்டனர். இவர்களைப் போல மூர்க்கமாக சண்டையிடும் இனமாக ருஷ்யாவில் உள்ள கசாக்குகளைக் குறிப்பிடலாம். இவர்களைப் பற்றிய பிரிட்டிஷ் குறிப்புகள் ஒருதலைப்பட்சமானவை. உண்மையில் அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடந்துகொண்டார்கள் என்பதே அவர்களை குற்றவாளி ஆக்கியதற்கான முக்கியக் காரணம்’ என்கிறார்.

சண்டையிடுவதில் பிண்டாரிகள் கைதேர்ந்தவர்கள். அவர்களில் ஒரு பிரிவினர் கொள்ளையும் அடித்​தனர். ஆனால், பிரிட்டிஷ் அரசு ஒட்டுமொத்த இனமும் கொள்ளையர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டது. இந்தப் பிண்டாரிகளைப் போலவே, வங்காளத்தில் ஆற்றில் பயணிக்கும் வணிகர்களைக் கொள்ளை அடிக்கும் 'தக்கீ’ எனப்படும் இனக் குழுவினர் இருந்தனர். 3,000-க்கும்

எனது இந்தியா!

குறைவாக இருந்த இந்த இனம், தனித்தனிக் குழுவாகப் பிரிந்து ஆற்றில் வரும் வணிகர்களின் படகுகளை மடக்கிக் கொள்ளை அடித்தும், சாலைகளில் செல்பவர்களை மறைந்து இருந்து தாக்கிக் கொள்ளை அடித்தும் வந்தனர். இதனால், பிரிட்டிஷ் கம்பெனிக்குச் சேர வேண்டிய தானியங்கள், பருத்தி மற்றும் விளைபொருட்கள் கொள்ளை போகத் தொடங்கியது.

தக்கீக்கள் கொள்ளை அடிக்கும்​போது, வணிகர்​களையும், மக்களையும் கடுமையான முறையில் துன்புறுத்திக் கொலை செய்தனர். 'பெக்ரம்’ என்ற தக்கீ இனத் தலைவன், தனது குழுவோடு 931 பேரை கொலை செய்து இருக்கிறான். இதில், தான் மட்டுமே 125 பேரைக் கொன்று இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறான். தக்கீக்களில் ஒரு குழுவினர் சாலைகளில் செல்பவர்களை, மறைந்து இருந்து தாக்கிக் கொலை செய்து கொள்ளை அடிப்பது உண்டு. திடீரெனப் பின்னால் வந்து, துணியால் முகத்தை மூடிக் கழுத்தை நெரித்துக் கொல்வது இவர்களின் பாணி. இந்தத் தக்கீகளால் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருக்கின்றனர் என்று, பிரிட்டிஷ் புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது.

பயணிகள் இரவில் பயணம் செய்யும்போது, வழியில் யாராவது புகையிலை கிடைக்குமா என்று கேட்டால் தர மாட்டார்கள். காரணம், புகையிலை தருவது என்பது பொருட்களைக் கொள்ளை அடிப்பது என்பதன் குறியீட்டு வார்த்தை. தக்கீக்கள் புகையிலை கேட்கிற ஆட்களைப் போல வந்து, பொருட்களை மதிப்பீடு செய்வார்கள். அது முடிந்தவுடன், அவர்களின் கூட்டம் சுற்றி வளைத்துக் கொள்ளை அடிக்கும்.

தக்கீகள் தங்களைக் காளியின் வாரிசுகள் என்று கூறி வந்தனர். தாங்கள் கொல்வது காளியின் பொருட்டே என்றும் சொல்லினர். 1799 வரை ஒரு தக்கீ கூட பிரிட்டிஷ் அதிகாரிகளால் கைது செய்யப்படவில்லை. 1810-ல் தபால் கொண்டுசென்ற வண்டியைத் தாக்கிக் கொள்ளையிட்ட பிறகே, தக்கீக்கள் பிரச்னை குறித்து பிரிட்டிஷ் கவனம் செலுத்தத் தொடங்கியது.

ஒரு பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி, தனது பரிவாரத்துடன் இரவுப் பயணம் செய்தபோது, தக்கீக்கள் அவர்களை வழிமறித்து உடன் வந்த காவலர்களை ஒட்டுமொத்தமாகக் கொலை செய்துவிட்டு, பிரிட்டிஷ் அதிகாரிகளின் உடைகள் மற்றும் ஆயுதங்களைப் பறித்துக்கொண்டனர். அதோடு, பிரிட்டிஷ் அதிகாரிகளை சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் கட்டிவைத்துவிட்டுச் சென்று விட்டனர். பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியே தனியாகப் பயணம் செய்ய முடியாத சூழல் இருப்பது ஆபத்தானது என்று உணர்ந்த கம்பெனி, தக்கீக்களை ஒடுக்க கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வலியுறுத்தியது. சர் வில்லியம் ஹென்றி ஸ்லீமென், தக்கீக்களை ஒடுக்குவதில் முக்கியப் பணியாற்றியவர். அரபி, ஹிந்துஸ்தானி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளைக் கற்றுத் தேர்ந்த ஸ்லீமென், மூர்க்கத்தனமாக தக்கீக்களை நேரடியாக எதிர்கொண்டு தாக்க முடியாது என்பதை அறிந்துகொண்டார். அவர்களைப் போலவே ஒளிந்து வேறு ஓர் உருவில் சென்று தாக்குவதே சரியான வழி என்று நினைத்தார். தக்கீக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதற்காக, ரகசிய பாஷை ஒன்றை உருவாக்கி வைத்திருந்தனர். அதை ஓர் உளவாளி வழியாக அறிந்துகொண்ட ஸ்லீமென், தக்கீக்களின் திட்டங்களை முன்னதாக அறிந்துகொண்டு, அவர்களின் கொள்ளைகளைத் தடுத்தி நிறுத்தியதோடு பிடிபட்டவர்களை தனிமைச் சிறையில் அடைத்து மற்றவர்களைப் பற்றிய தகவல்களை அறிந்தார்.

தக்கீக்களை அடையாளம் கண்டு சொல்வதற்கு, உள்ளுர் ஆட்களையே உளவு சொல்பவர்களாக நியமித்தார். கூடவே ஒளிந்திருந்து தாக்கும் படைப் பிரிவின் உதவியால், தக்கீக்களை கடுமையாகத் தண்டிக்கத் தொடங்கினர். இதன் ஓர் அம்சமாக, அந்த ஒட்டுமொத்த இனமே திருடர்களாக அறிவிக்கப்பட்டு அவர்களின் பிள்ளைகள், மனைவிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு பக்கம் சட்டம், மறு பக்கம் தாக்குதல், இரண்டையும் சமாளிக்க முடியாத தக்கீக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிப்போனார்கள்.  

தக்கீக்களோ, பிண்டாரிகளோ எவராயினும் அவர்களைத் தங்களது சுயலாபத்துக்காக பயன்படுத்திக்​கொண்டது அன்றைய ஆளும் அரசுகள்தான். அவர்களின் ஆதரவு இல்லாமல் குற்றவாளிகள் உருவாகி இருக்க முடியாது. ஆகவே, அரசியல் காரணங்களே இதுபோன்ற குற்றவாளிகள் வளர்வதற்குக் காரணமாக இருந்திருக்கிறது என்று சொல்கிறார் வரலாற்று ஆய்வாளர் பி.கோஷ்.

பிண்டாரிகளின் வரலாற்றை மையமாகக்கொண்டு, 2009-ல் 'வீர்’ என்ற படம் வெளியானது. சல்மான்கான் நடித்த இந்தத்  திரைப்படம், பிண்டாரிகளை அரச வம்சமாகச் சித்தரிக்கிறது. இந்தப் படத்தில், பிரிட்டிஷ் படையை எதிர்த்து பிண்டாரிகள் பெரும் ஆவேசத்துடன் சண்டை​யிடுகின்றனர். வீர் படத்தின் கதை, ருஷ்ய எழுத்தாளர் கோகலின் தாரஸ்புல்பா நாவலை காப்பி அடித்து எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில், பிண்டாரிகள் வெறும் பெயர்களாகவே பயன்படுத்தப்​பட்டு இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில், பல்லாயிரம் பேராக இருந்த பிண்டாரி இனத்தில் வெறும் 150 பேரே மிச்சம் இருந்ததாக ரஸ்ஸலின் 1911-ம் வருசத்து சாதிவாரிக் கணக்கெடுப்பு கூறுகிறது.

வன்முறைக்கு யார் காரணமாக இருந்தாலும், பாதிக்கப்பட்டது எளிய சாமான்ய மக்களே. வன்முறையைக் கையில் எடுக்கும் இனம், தானே அதற்குப் பலியாகிவிடும் என்பதே எளிய மக்கள் வரலாற்றில் இருந்து நாம் உணர வேண்டிய பாடம்.

எனது இந்தியா!