உங்கள் எம்.எல்.ஏ. எப்பூடி?
Published:Updated:

பிரார்த்தனைக்கு செவி சாயுங்கள்... பிழைகளைத் திருத்திக்கொள்ளுங்கள்!

தமிழருவிமணியன்

##~##

ன்பிற்கினிய தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களுக்கு... 

வணக்கம். வளர்க நலம்.

ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, நீங்கள் முதல்வர் மகுடம் தரித்து அரியாசனத்தில் அமர்ந்து ஓர் ஆண்டு முடிந்து விட்டது. கன வுகளைக் கண்ணில் சுமந்து, நம்பிக்கைகளை நெஞ்சில் நிறைத்து வாக்குச்சாவடிகளைத் தேடி வந்து, கலைஞரை வீட்டுக்கு அனுப்பும் விருப்பத்துடன் மக்கள் வழங்கிய தீர்ப்பு உங்களைக் கோட்டையில் கொண்டுபோய் அதிகார நாற்காலியில் அமரச் செய்தது. உங்கள் தலைமையில் தமிழகத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதைவிட, களப்பிரர்களைக் காட்டிலும் மோசமாக ஆட்சி செய்த கலைஞரின் பரிவாரத்திடம் இருந்து தமிழகத்தை எப்படியாவது விடுவித்தாக வேண்டும் என்பதே வாக்காளர்களின் வேட்கையாக இருந்தது. இந்தக் கணிப்பு உங்கள் உள்ளத்துக்கு

பிரார்த்தனைக்கு செவி சாயுங்கள்... பிழைகளைத் திருத்திக்கொள்ளுங்கள்!

உவப்பைத் தராமல் போனாலும் இதுதான் மறுக்கமுடியாத உண்மை. தமிழகத்தின் தேர்தல் வரலாற்றிலேயே உச்சபட்சமாக 77.8 சதவிகிதம் வாக்குகள் பதிவானதே கோட்டையில் இருந்து கலைஞரைக் கோபாலபுரத்துக்கு அனுப்பி வைக்கும் நோக்கத்துடன் புதிய வாக்காளர்கள் புறப்பட்டதனால்தான் என்பதைப் புரிந்து செயற்படுவது நல்லது.

நீங்கள் மனம் குளிர வேண்டும் என்பதற்காக, ஓர் ஆண்டில் நூறாண்டுச் சாதனைகளை நீங்கள் நிகழ்த்தி ​விட்டதாக உங்கள் கட்சியில் உள்ளவர்கள் புகழ்ந்து பேசுவது இயற்கை. சொந்தக் கால்களில் நடக்கும் வலிமை இல்லாமல் உங்கள் தோள்களில் அமர்ந்து சட்டமன்றப் பிரவேசம் செய்திருக்கும் கூட்டணித் தலைவர்கள், 'புரட்சித் தலைவியின் பொற்கால ஆட்சியில் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் தானாகப் பாய்ந்தோடுகின்றன’ என்று, புகழாரம் சூட்டுவது தங்கள் சொந்த நலனுக்காக என்பதை அறியாத அளவுக்கு அரசியலில் நீங்கள் அரிச்சுவடி வாசிப்பவர் அன்று.

'இனிமையாகப் பேசுவதில் உண்மை இருப்பதில்லை. உண்மையைப் பேசுவதில் இனிமை இருப்பதில்லை’ என்ற பொன்மொழி நம் முன்னோர் வாழ்க்கை அனுபவத்தின் ஆழ்ந்த வெளிப்பாடு. ஓர் ஆண்டு ஆட்சியில் நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்துமே வாக்காளர்களின் வரவேற்புக்கு உரியன அல்ல என்பதை உளவுத்துறையின் மூலம் நீங்கள் உணர முடியும். புகழுரைகள் போதையைத் தரும். நேர்மையான விமர்சனங்களே உண்மையை நிறம் மாறாமல் இனம் காட்டும். உங்கள் ஓர் ஆண்டு சாதனை விழாவின் விளம்பர வெளிச்சமும், மின்னலங்கார ஜாலங்​களும், அரசுப் பண விரயமும், வீதியெங்கும் விண்ணைத் தொட்ட ஜெய கோஷங்களும் மனோபாவத்தில் நீங்கள் சிறிதும் மாறவே இல்லை என்று நிரூபித்துவிட்டன.

இரவும் பகலும் இணைந்ததுதான் காலம். இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. சாதனையும் வேதனையும் நிறைந்ததுதான் உங்கள் ஓர் ஆண்டு ஆட்சியில் அரங்கேறிய நிகழ்வுகள். மக்கள் ஆனந்தக் கூத்​தாடும் அளவுக்கு எந்த அதிசயமும் மலர்ந்து விடவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா(?) அரிசி, ஏழைப் பெண்களுக்குத் திருமாங்கல்யத்துடன் 25 ஆயிரம் ரூபாய் உதவி, எளிய மக்களின் பொருளாதாரம் உயர இலவசக் கறவை மாடுகள், ஆடுகள், மாணவர்களுக்கு மடிக்கணினிகள், இலவச மிக்ஸி - கிரைண்டர் - மின் விசிறி, வளர் இளம் பெண்களுக்கு நாப்கின், முதியோர் உதவித்தொகை உயர்வு போன்றவை சாதனைகள் அல்ல. வாக்கு வங்கியை வளர்த்து எடுப்பதற்கான சாதாரண வழிமுறைகள். இவற்றை நடைமுறைப்படுத்த ஈரமனம் மட்டும் ஆட்சியாளருக்கு இருந்தால் போதும். இதற்கு எந்த அறிவுக் கூர்மையும் ஆட்சித் திறனும் அவசியம் இல்லை.

நில அபகரிப்பு சிறப்புக் காவல் பிரிவு உருவாக்கமும், அதன் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் குறித்த உங்கள் சிந்தனையும் பாராட்டுக்கு உரியவை. 2011-12 வரவு செலவுத் திட்ட மதிப்பீடு உங்கள் ஆட்சியில் முதல் முறையாக ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியதற்கு நியாயமாக நீங்கள் பெருமைப்படலாம். பொருளாதார வளர்ச்சி 11 சதவிகிதம் எட்டும் வகையில் 15 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க 'தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டம் - 2023’ வெற்றிகரமாகச் செயல் வடிவம் பெறுமானால், அது உங்கள் சரித்திரச் சாதனையாக இருக்கும் என்பதில் இரு கருத்து இல்லை. எங்கே தொலை நோக்கு இல்லையோ, அங்கே மக்கள் அழிவர். (கீலீமீக்ஷீமீ tலீமீக்ஷீமீ வீs ஸீஷீ ஸ்வீsவீஷீஸீ, tலீமீ ஜீமீஷீஜீறீமீ ஜீமீக்ஷீவீsலீ) என்பது அறிவார்ந்தோர் கூற்று.

முதல்வர் அவர்களே... ஆரோக்கியமான அரசியலமைப்​புக்கு ஊழலற்ற ஆட்சியே அடித்தளம். இன்றுள்ள இளைய சமூகம் எதிர்பார்ப்பது ஊழலற்ற உயரிய நிர்வாகமே அன்றி, வெறும் இலவசத் திட்டங்கள் இல்லை. கடந்த ஓர் ஆண்டில் உங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் ஊழல் நடவடிக்கைகள் எவற்றிலும் ஈடுபட்டது இல்லை என்று இதயசுத்தியுடன் சொல்லக் கூடுமா? உங்கள் கவனத்துக்கு அவற்றைக் கொண்டு வந்தால், தக்க நடவடிக்கை எடுப்பீர்களா? ஊழலில் புழுத்துப்போனவர்களை நேர்மையாளர்களாக மாற்றிவிடக் கூடுமா? நிர்வாகத் திறனுமற்று, நெறி சார்ந்த வாழ்க்கை ஒழுக்கமுமின்றி உங்கள் கருணைப் பார்வையால் கதிமோட்சம் பெற்ற தளபதிகளை வைத்துக்கொண்டு தமிழகத்தை உயர்த்திவிட முடியுமா? இரண்டு முறை நீங்கள் முதல்வராக இருந்தபோது, உங்கள் உடன்பிறவாத சகோதரி சசிகலாவும், அவருடைய ரத்த உறவுகளும் சட்டத்துக்குப் புறம்பான அதிகார அமைப்புகளாகச் (Where there is no vision, the people perish) செயற்பட்டதை மக்கள் மறந்து விடவில்லை. இந்த முறை நீங்கள் முதல்வரான பின்பும், அவர்களுடைய 'திருவிளையாடல்கள்’ தொடரத்தான் செய்தன. உங்களையே பாதிக்கும் அளவு அவர்களுடைய ஆட்டங்கள் எல்லை மீறிய நிலையில் நீங்கள் விழித்துக்கொண்டீர்கள். போயஸ் தோட்டத்தில் இருந்து சசிகலாவின் வெளியேற்றமும், நடராஜன் - திவாகரன் - ராவணன் பரிவாரங்கள் மீது பாய்ந்த சட்ட நடவடிக்கைகளும் உங்களுக்கு மக்களிடம் பெருமதிப்பைப் பெற்றுத் தந்தன. ஆனால், சசிகலாவின் மறுபிரவேசமும், அவரது உறவுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நீர்த்துப்​போனதும் நீங்கள் நல்லாட்சி தருவீர்கள் என்ற நம்பிக்கையைத் தகர்த்துவிட்டன. தன்னந்தனியாக இருக்கும் உங்களுக்கு போயஸ் தோட்டத்தில் சசிகலா உதவியாக இருப்பதில் ஒரு தவறும் இல்லை. ஆனால், அரசு நிர்வாகத்தில் சசிகலா குடும்பம் நிச்சயம் தலையிடப் பார்க்கும். ஆடிய கால்களும் பாடிய வாயும் எளிதில் மௌனிப்பது இல்லை.

ஜான்பாண்டியன் விவகாரத்தை ஒரு சாதாரண சட்டம் - ஒழுங்கு பிரச்னையாகக் கையாளத் தவறி

பிரார்த்தனைக்கு செவி சாயுங்கள்... பிழைகளைத் திருத்திக்கொள்ளுங்கள்!

பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு, உங்கள் நிர்வாகத் திறமையைக் கேள்விக்கு உள்ளாக்கியது. பூவைப் பறிக்க யாராவது கோடரியைப் பயன்படுத்துவார்களா? சமச்சீர்க் கல்வியில் நீங்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று பிடிவாதம் காட்டியதும், பள்ளிப் பிள்ளைகளின் படிப்பு மாதக்கணக்கில் பாழ்படுவதற்குக் காரணமாக நின்றதும் உங்கள் நிர்வாகத்தில் நேர்ந்து விட்ட நீங்காத கறைகள். மக்கள் நலப் பணியாளர்கள் வாழ்வோடு நீங்கள் விளையாடுவது உங்கள் தாய்மை உள்ளத்துக்குத் தகுந்ததாக இல்லை. போக்குவரத்துத் துறையில் 16,661 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று நீங்கள் அறிவித்து இருக்கிறீர்கள். தேர்ந்தெடுக்கப்படும் அனைவரும் அ.இ.அ.தி.மு.க. அனுதாபிகள் என்று நாளை ஒரு மாற்று அரசு மலர்ந்து இவர்களை வீட்டுக்கு அனுப்பினால், அது விவேகமான செயல் என்று நீங்கள் ஆதரிப்​பீர்களா?

முகலாயப் பேரரசர் ஷாஜஹானைப் போன்று மக்கள் பணத்தில் 1,000 கோடி ரூபாயை விரயமாக்கி ஒரு புதிய சட்டமன்றக் கட்டடத்தைக் கலைஞர் கட்டியதை மக்கள் அங்கீகரிக்க​வில்லை. அதை உயர்சிகிச்சை மருத்துவமனையாக நீங்கள் மாற்ற முடிவெடுத்ததும் பாராட்டுக்கு உரியது. ஏழை மக்களின் பிரதிநிதிகள் ஐந்து நட்சத்திர விடுதிக்குரிய வசதிகளோடு அமர்ந்து சட்டம் செய்வது எவ்வளவு அருவருப்பானது! ஆனால், அண்ணா நூலகத்தில் நீங்கள் கைவைத்தபோது, அதை எந்த அறிவுஜீவியாலும் ஜீரணிக்க முடியவில்லை. உங்களை ஓர் அறிவுஜீவியாகத்தான் அனைவரும் பார்க்கின்றனர். நீங்கள் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கக் கூடாது. இதை ஒரு கௌரவப் பிரச்னையாகக் கருதாமல், நூலகம் அங்கே தொடர்ந்து செயற்பட நீங்கள் வழிவிட வேண்டும்.

கலைஞருடைய ஆட்சியில் நிதி மேலாண்​மை திறம்பட நிர்வகிக்கப்படவில்லை என்பது உண்மை. சீரழிந்துகிடந்த பல துறைகளைச் சரிப்படுத்த சில கசப்பான முடிவுகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்ததும் உண்மை. கால நடையில் கொஞ்சம் கொஞ்சமாக மின்சாரம், பேருந்து, பால் ஆகியவற்றின் கட்டணத்தை உயர்த்தாமல், வாக்களித்த மக்களின் அன்றாட வாழ்க்கை நிலைதடுமாறும் வகையில் நீங்கள் எடுத்த நடவடிக்கைகளால் கசந்துபோன மக்கள், 'ஏன் இவருக்கு வாக்களித்தோம்?’ என்று நொந்து புலம்புவதை நீங்கள் அறிவீர்களா?

கலைஞரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மறைமுகமாகப் 'பிரிமியம்’ என்ற பெயரில் எத்தனை கோடி எங்கு போகிறது என்று நீங்கள் கேட்டது சரி. உங்கள் புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் 750 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறீர்கள். இதில் முறைகேடுகள் நடப்பதற்கு நீங்கள் இடம் தரவில்லை என்பது மனம்விட்டு வாழ்த்த வேண்டிய அம்சம். ஆனால், ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கப்படும் 3,750 கோடி ரூபாயை அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தவும் 100 கோடி ரூபாயில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொது மருத்துவமனையுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கவும் ஏன் பயன்படுத்தக் கூடாது? எல்லா மாவட்டங்களிலும் உயர் சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் நோயுற்றவர்க்கு எளி​தாகக் கிடைக்கச் செய்வதுதானே ஒரு நல்லரசின் நல்லடையாளமாக இருக்க முடியும்.

அன்பிற்கினிய முதல்வரே..!

உங்கள் ஓர் ஆண்டு ஆட்சியில் திருச்சி, சங்கரன் கோவில் இடைத்தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்றும், மக்கள் அந்த வெற்றியை மகிழ்வுடன் வரவேற்கவில்லை. முள்ளை முள்ளால் எடுக்கலாம். வைரத்தால் வைரத்தை அறுக்கலாம். ஆனால், திருமங்கலம் பாணியிலேயே தேர்தல் நடக்க​லாமா? ஓர் இடைத்தேர்தலில் பணியாற்ற ஒட்டுமொத்த அமைச்சர்களும் கோட்டையைக் காலி செய்துவிட்டு, பணப்பெட்டியுடன் வாக்காளர்களை முற்றுகை​யிடுவது முறையான தேர்தலுக்கு வழி வகுக்கும் செயலா? கலைஞர் உடைத்தால் பொன் குடம், நீங்கள் உடைத்தால் மண் குடமா? ஆட்சி அதிகாரத்தையும், ஊழல் பணத்தையும் பயன்படுத்தி வாக்காளர்களை வளைத்துப் போடும் வகையிலான கலைஞர்  பாதையில் தடம் மாறாமல் சுவடு பதிக்கவா நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம்? புதுக்கோட்டை இடைத்தேர்தல் அறிவிப்பு வரும் சூழலில் பட்ஜெட்டில் 50 கோடி ரூபாய் அந்தத் தொகுதிக்கு ஒதுக்கியது நேர்மையான நடவடிக்கையா?

மாண்புமிகு முதல்வரே, உங்களிடம் முக்கிய​மான ஒரு வேண்டுகோள். சட்டப் பேரவையை சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் தேவால​யமாகவும், நல்ல சட்டங்களுக்கு வடிவம் தரும் நியாயஸ்தலமாகவும், ஜனநாயக மரபுகள் கொலு​விருக்கும் மாண்புமிகு மண்டபமாகவும் இருப்பதற்கு அன்புகூர்ந்து அனுமதியுங்கள். ஜெயா தொலைக்காட்சியில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போதெல்லாம் நான் அவமானத்துக்கு ஆட்படுகிறேன். மாநில அமைச்சர்களும், ஆளும் தரப்பு உறுப்பினர்களும், குழைந்து பேசும் கூட்டணித் தலைவர்களும் கொஞ்சமும் கூச்சமின்றி எல்லை மீறி உங்களைப் புகழ்ந்து பேசுவதும், இடையிடையே எம்.ஜி.ஆர். படப் பாடல்களைச் சுருதி பேதத்துடன் பாடிப் பரவசம் அடைவதும், கலைஞரையும் விஜயகாந்தையும் மறைமுகமாகக் கேலி செய்வதும், 'அம்மா, அம்மா’ என்று சந்நதம் வந்ததுபோல் வார்த்தைக்கு வார்த்தை பொய்யாய் உருகிப் போலியாய் நடிப்பதும், விடலைப் பிள்ளைகள் போல் அடிக்கடி ஓயாமல் மேஜையைத் தட்டுவதும் உங்கள் பெருமையை ஒரு போதும் உயர்த்தாது.

எந்தப் புகழுரையும் முகஸ்துதியும் உண்மை இலை. சொந்த ஆதாயத்துக்காக இவர்கள் போட்டி போட்டு விஸ்தாரமாக நடத்தும் ஆலாபனையில் நீங்கள் மகிழ்வதைப் பார்க்க முடிகிறது. கலைஞரிடம் இருந்து நீங்கள் கற்ற பாடம்தான் என்ன? இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன. எங்களுக்குத் தேவை காமராஜரைப் போல் எளிமை சார்ந்த, தன்னலமற்ற ஒரு முதல்வர். ஆடம்பர ஆரவாரங்களுக்கு இடம் தராத ஆட்சிமுறை, போலிப் புகழுரையும், வசை மொழியும் இல்லாத சட்டப் பேரவை. எதிர்க் கட்சிகளைக் கண்ணியத்துடன் நடத்தும் மனோபாவம். நேர்மையான தேர்தலுக்கான சூழல். ஊழலின் நிழல் படாத உயரிய நிர்வாகம். விமர்சனங்கள் எவ்வளவு கசப்பாக இருந்தாலும் காது கொடுத்துக் கேட்கும் பெருந்தன்மை. இவைதான் நல்ல அரசியலை நாடும் மக்களின் பிரார்த்தனை. இனியாவது எங்கள் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்து உங்கள் பிழைகளைத் திருத்திக் கொள்வீர்களா?

கலைஞர் ஆட்சியில் கசப்பான உண்மைகளைக் கடை விரித்ததால், எனக்கு ஏற்பட்ட வலிகளும் இழப்புகளும் அதிகம். உங்கள் ஆட்சியிலும் அதே அனுபவங்கள்தான் நேருமெனில், அதற்காக என் பேனாவை நான் மூடிவிட மாட்டேன். உள்ளதைச் சொல்வதும், உண்மையைச் சொல்வதும்தான் எப்போதும் என் பேனாவின் உன்னதம்!