ஜனாதிபதி ரேஸ் விறுவிறு
##~## |
அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி, கோபாலகிருஷ்ண காந்தி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, ஏ.கே.அந்தோணி என்று, பல பெயர்கள் ஜனாதிபதி ரேஸில் இருந்தன. திடுமென ஜெயலலிதா களம் இறங்கினார். அ.தி.மு.க. மற்றும் பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பி.ஏ.சங்மா பரிந்துரைக்கப்படவே, விறுவிறுப்பானது அரசியல் சதுரங்கம்!
லோக்சபாவின் முன்னாள் சபாநாயகரான பி.ஏ.சங்மாவின் முழுப்பெயர் பூர்ணோ அஜிதோக் சங்மா. 64 வயதான இவர், வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் பழங்குடிக் கிராமமான சப்பஹாட்டியில் பிறந்தவர். சட்டம் படித்தவர். அரசியலில் நுழைவதற்கு முன் கல்லூரிப் பேராசிரியர், வழக்கறிஞர் மற்றும் பத்திரிகை ஆசிரியராக இருந்தார். 1970-களில் அரசியலில் நுழைந்தவர், மேகாலயா காங்கிரஸின் இளைஞர் பிரிவுப் பொதுச்செயலாளர், மாநிலத் துணைத் தலைவர் மற்றும் மாநிலத் தலைவராகவும் வளர்ந்தார். அடுத்து, மேகாலயாவின் தூரா தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். இவரை, மத்தியத் துணை அமைச்சர் ஆக்கினார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. அடுத்து பிரதமரான ராஜீவ் காந்தி ஆட்சியில், கேபினெட் அமைச்சர் ஆனார். 1988-ல் மாநில அரசியலில் நுழைந்தவர், மேகாலயா முதல் அமைச்சராக இரண்டு வருடங்கள் இருந்தார்.

மீண்டும் தேசிய அரசியலுக்குத் திரும்பிய சங்மா, 1991 முதல் 1996 வரை மத்திய அமைச்சராகவும் இருந்தார். அனைத்துக் கட்சியினரையும் அரவணைத்துச் செல்லும் பண்புகொண்டவர் என்பதால், எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தும் 1996-ம் ஆண்டு, அனைத்துக் கட்சியினரின் ஆசியுடன் மக்களவை சபாநாயகர் ஆனார். இதன்மூலம், பாராளுமன்றத்தின் 50 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக எதிர்க்கட்சியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் சபாநாயகர் ஆனார். இவரது வழிகாட்டுதலின் பேரில்தான் பெண்கள் முன்னேற்றத்துக்காக கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில்தான் பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் 33 சதவிகித ஒதுக்கீடு வேண்டும் என்று முதன் முறையாகக் கோரப்பட்டது. சங்மா எழுதிய ‘A Life in Politics’ என்ற நூல், அவருக்கு இந்திய அரசியல் வரலாற்றில் இருக்கும் ஆழ்ந்த அறிவைக் காட்டக்கூடியது. இந்த நூலைத்தான், ஆதரவு கேட்டு சந்திக்கும் தலைவர்களுக்குப் பரிசாக அளித்து வருகிறார் சங்மா.
ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு, சோனியா பிரதமர் வேட்பாளராக நிற்பார் என்ற சூழலில், 'வெளிநாட்டுப் பெண் இந்தியப் பிரதமராகக் கூடாது’ என்று ஆவேசமானார். அப்போது, காங்கிரஸை விட்டு வெளியேறி, சரத்பவார் மற்றும் தாரீக் அன்வர் ஆகியோருடன் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை உருவாக்கினார். அதன்பிறகு, சரத்பவாருடன் கருத்து வேறுபாடு காரணமாக, 2004-ல் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். பின்னர், மீண்டும் சரத்பவாருடன் இணைந்த சங்மா, தேசியவாத காங்கிரஸ் சார்பில் எம்.பி-யாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். இவரது மகன் மேகாலயா சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க... மகள் அகதா சங்மா, இப்போது மத்திய அமைச்சராக இருக்கிறார்.
''அன்று பெரிய வெடிகுண்டாக நினைத்துக் கிளப்பப்பட்ட 'சோனியா வெளிநாட்டவர்’ என்ற பிரச்னை, இன்று புஸ்வாணம் ஆகிவிட்டது. அந்தப் பிரச்னையை சங்மா கிளப்பாமல் இருந்திருந்தால், இன்று அவர் பெயரை ஜனாதிபதி பதவிக்காக காங்கிரஸ் கட்சியே நிச்சயம் பரிந்துரைத்து இருக்கும். தான் எந்த லாபியையும் சேர்ந்தவன் அல்ல என்று சங்மா கூறினாலும், அவரை ஆதரிக்கும் ஜெயலலிதா மற்றும் நவீனை வைத்துப் பார்க்கும்போது, மூன்றாவது அணியின் வேட்பாளர் சங்மா என்பது புரிகிறது. இவர்கள், ஜனாதிபதி தேர்தல் மூலமாக அடுத்த வருடம் வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு வெள்ளோட்டம் பார்க்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலுக்காக எடுத்திருக்கும் பழங்குடி என்ற ஆயுதம், கண்டிப்பாக தேசிய அரசியலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்'' என்கிறார்கள் டெல்லியில்.
இது குறித்து சங்மா, ''பழங்குடி சமூகத்தில் இருந்து இதுவரை யாரும் ஜனாதிபதியாகத் தேர்ந்து எடுக்கப்படவில்லை. அது போலவே, வட கிழக்குப் பகுதியில் இருந்தும் இதுவரை யாரும் ஜனாதிபதி பதவி வகித்தது இல்லை. இந்தமுறை அனைத்துக் கட்சிகளிலும் சேர்த்து 53 பழங்குடி எம்.பி-க்கள் உள்ளனர். எனவே, ஜனாதிபதி பதவிக்காக என்னையே போட்டியிட வைக்கும்படி நான் கூறவில்லை. யாராவது ஒரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவரை தேர்வு செய்யும்படிதான் கூறுகிறேன். ஆந்திராவைச் சேர்ந்த பழங்குடி நலத்துறையின் மத்திய அமைச்சர் கிஷோர் சந்திரதேவ், லோக்சபாவின் துணை சபாநாயகரும், பி.ஜே.பி-யைச் சேர்ந்தவருமான கரிய முண்டா, காங்கிரஸின் அர்விந்த் நேத்தாம் போன்றவர்களைக்கூட தேர்வு செய்யலாம். இந்தியாவில் 100 மில்லியன்களுக்கு மேலான எண்ணிக்கையில் பழங்குடிகள் உள்ளனர். இவர்களில் ஒருவரை ஜனாதிபதி பதவிக்காகப் பரிந்துரைக்கும் ஜெயலலிதா மற்றும் பட்நாயக்குக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்'' என்று உருகுகிறார்.
இந்தக் கோரிக்கையை ஏற்கப்போவது யார் என்பதுதான் கேள்வி!
- ஆர்.ஷஃபி முன்னா