உங்கள் எம்.எல்.ஏ. எப்பூடி?
Published:Updated:

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!
##~##

''பயணிகள் கவனிக்கவும். இப்போது விமானம் ஜார்கண்ட் தலைநகரம் ராஞ்சியை நெருங்கி​விட்டது. தயவுசெய்து சீட் பெல்ட்டை அணிந்துகொள்ளவும்.'' - விமானப் பணிப்பெண் அறிவித்ததும் வெளியே எட்டிப்பார்த்தோம். 

'காட்டு நிலம்' என்பதுதான் ஜார்கண்ட் என்பதன் அர்த்தம். கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி பிறந்த மண். 700 மலைகளைக் கொண்ட சரண்டா காடு இங்கேதான் இருக்கிறது. 24 மாவட்டங்களைக் கொண்ட சிறிய மாநிலம். இவற்றில் 22 மாவட்டங்களில் மாவோயிஸ்ட்டுகளின் கொடிகள் மட்டுமே பறக்கின்றன. இவற்றை, 'மாவோயிஸ்ட்டுகளால் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள்’ என்கிறார்​கள் காவல் துறையினர். முன்னாள் முதல்வர் சிபுசோரனுக்குச் செல்வாக்கு உள்ள இரண்டு மாவட்டங்களில் மட்டும் மாவோயிஸ்ட்டுகள் நட​மாட்டம் இல்லாததன் ரகசியம் இதுவரை தெரியவில்லை!    

இந்த மாநிலம் ஏன் மாவோயிஸ்ட்டுகளின் பிடியில் இருக்கிறது? உரிமைக்குப் போராடும் மாவோயிஸ்ட்​டுகள், அவர்களை அடக்கத் துடிக்கும் மத்தியக் காவல் படையினர், இருவருக்கும் இடையே மாட்டித் தவிக்கும் ஆதிவாசிக் கிராம மக்கள், சமரசத்துக்குப் போராடும் மனித உரிமை ஆர்வலர்கள், இத்தனை சிக்கல்களுக்கு இடையே ஆட்சி நடத்தும் ஆளும் கட்சி என்று அத்தனை பேரையும் சந்திப்பதுதான் நம் நோக்கம்.  

மாவோயிஸ்ட் பெயரைச் சொல்லி அபாயச்சங்கு ஊதுகிறார் பிரதமர் மன்மோகன் சிங். பச்சைவேட்டை என்கிற பெயரில் ஒருங்கிணைந்த போலீஸ் படைகளை மாவோயிஸ்ட்டுகள் மீது ஏவுகிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். இவர்களின் கட்டளைக்கு ஏற்ப, களத்தில் நின்று மாவோயிஸ்ட்டுகளுடன் மோதிக்கொண்டு இருக்கிறார், மத்திய ரிசர்வ் காவல் படைத் (சி.ஆர்.பி.எஃப்) தலைவர் விஜயகுமார். சுமார் 1.6 லட்சம் மக்கள் படையைக் கொண்ட மாவோ​யிஸ்ட்டு இயக்கத் தினர், கெரில்லா முறையில் போலீஸாரைத் தாக்கி துவம்சம் செய்கிறார்கள்.

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

இந்த இயக்கத்தின் பொதுச் செய​லாளராக அறியப்படுபவர் கணபதி. தலைமறைவாக வாழ்ந்து​கொண்டே, இந்த இயக்கத்தை உயிர்ப்புடன் நடத்திக்கொண்டு இருக்கிறார். மாவோயிஸ்ட் ஆதரவுப் பத்திரிகை​களில் கண​பதியின் பெயரில் சில நேரங்களில் பேட்டி வரும். மற்ற​படி, இயக்கத்தின் சீனியர்​கள் சிலருக்குத்தான் அவர் யார் என்ற அடையாளமே தெரியும்.  

ராஞ்சி 'பிர்ஸா முண்டா' ஏர்​போர்ட்டை விமானம் தொட்டது. ஜன்னல் வழியாக ஓடுதளத்தைக் கவனித்ததும், தூக்கிவாரிப் போட்​டது. காரணம், அங்கே மினி ஹெலிகாப்டர் ஒன்று தலைகுப்புற நொறுங்கிக் கிடந்தது. ''மே 9-ம் தேதி, மாநில முதல்வர் அர்ஜூன் முண்டா வந்த ஹெலிகாப்டர் அது. திடீரென நிலை தடுமாறி விழுந்து விட்டது. அந்த விபத்தில் உயிர் தப்பிய அர்ஜூன் முண்டா,  காயங்​​களுடன் இன்னமும் மருத்துவ மனையில்  இருக்கிறார்'' என்று என் சக பயணியான தினேஷ் என்பவர்  சொன்னார்.

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

சென்னையில் இருந்துவந்​திருக்கும் பத்திரிகை​யாளர்என்று அறிமுகம் ஆனதால், பல்வேறு தகவல்​களைக் கொட்டினார் தினேஷ். மாவோயிஸ்ட்டுகளின் அட்டூ​ழியம் காரணமாக சாதாரண மக்கள் தொடங்கி அதிகாரவர்க்கத்தினர், அரசியல்வாதிகள் வரை அனைவரும் எத்தனை துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்று அவர் சொல்லச் சொல்ல, அவரது நிலைப்பாடு என்ன என்பதை உணர முடிந்தது.

''வருடத்துக்கு 400 கோடி ரூபாய் அளவுக்குத் தனியார் நிறுவனங்கள் மற்றும் கான்ட்ராக்டர்களிடம் மாவோ​யிஸ்ட்​​டுகள் வரிவசூல் செய்கிறார்கள். கிட்டத்தட்ட மினி அரசாங்கமே காட்டுக்குள் நடக்கிறது'' என்றார் தினேஷ்.

''அப்படி என்றால் போலீஸ் நடவடிக்கைதான் மக்களுக்கு ஆறுதலாக இருக்கிறதோ?'' என்று கேட்டதும் மர்மப் புன்னகை வீசினார். மாவோயிஸ்ட்டுகளை வேட்டை ஆடுகிறோம் என்ற பெயரில் போலீஸ் நடத்தும் அத்துமீறல்கள் குறித்தும், பச்சைவேட்டையின் பெயரால் வருடத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் அரசுப் பணத்தைச் செலவு செய்வது பற்றியும் அவருக்கு நிறையவே தெரிந்து இருந்தது. மாவோயிஸ்ட் - சி.ஆர்.பி.எஃப். ஆகிய இரண்டு தரப்பின் நடவடிக்கைகள் மீதும் விமர்சனம் செய்யும் மனிதராகவே அவர் இருந்தார். உண்மைநிலை அறிய ஜார்கண்ட்டுக்குள் அடி எடுத்து வைத்தோம்!

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!
மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

....

உயர்ந்த மலைகள் காடு... மலையளவு மரங்கள்... அதன் உச்சியில் ஏதோ ஒரு பறவை. காடுகளில் பறவைகளுக்கா பஞ்சம் என்றுதான் தோன்றியது. ஆனால், அந்தப் பறவை ஆகாயத்தில் அப்படியே ஒரே இடத்தில், அப்போதுதான் எடுக்கப்பட்ட புகைப்​படம் போல ஃப்ரீஸ் ஆக நின்றது.

சில நிமிடங்கள்தான்... நாலு கால்கள் கொண்ட இரும்புக் குண்டு ஒன்று நம்மை நோக்கி விழுவதைப் போல, அது சரேலனக் கீழ் நோக்கி வந்தது. அலுமி​னியப் பறவையாக 100 மீட்டர் உயரத்தில் நாம் நண்பர்களுடன் நின்ற இடத்தை வட்டம் அடித்து​விட்டு மறைந்தது. அன்றைய இரவில், அந்தக் காட்சி​யை மறக்க முடியவில்லை!

சி.ஆர்.பி.எஃப்.காரர்களிடம் சொன்னபோது சிரித்தார்கள். 'ஓ....! நேத்ராவைப் பார்த்தீங்களா?’ என்று கேட்டார்கள்.

யார் அந்த நேத்ரா?

 - அதிர்ச்சி தொடரும்..

 எங்கே இருக்கிறது ஜார்கண்ட்?

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்!

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் 2000-ம் ஆண்டு உருவான ஒரு புதிய மாநிலம். வடக்கே பீகார், தெற்கே ஒடிசா, மேற்கே உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், கிழக்கே மேற்கு வங்கம் இதன் எல்லைகள். இந்த மாநிலத்தின் மக்கள் தொகை 3.29 கோடி. இதில் 28 சதவிகிதத்தினர் ஆதிவாசிகள். இயற்கை வளம் நிரம்பிய மாநிலம். விட்டு வைப்பார்களா? 183 நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. 28 இடங்களில் இரும்புத் தாதுக்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இவைதவிர, சுண்ணாம்புக் கல் 33 இடங்களிலும், மைக்கா 84 இடங்கங்களிலும், சீனா களிமண் 25 இடங்களிலும் வெட்டி எடுக்கப்படுகின்றன. இவை தவிர, இன்னும் வெட்டி எடுக்கப்படாத கனிம வளங்கள் நிறையவே இருக்கின்றன. ஏற்கெனவே, பொக்காரோ ஸ்டீல் ஆலை, டாடா ஸ்டீல் பிளான்ட், ஜாம்ஜெட்பூர் டாடா மோட்டார்ஸ் என்று ஏராளமான தொழிற்சாலைகள் இயங்குகின்றன. தொழில் நகரமான ராஞ்சி, இந்த மாநிலத்தின் தலைநகரம். அதேபோல், ஜாம்ஷெட்பூர் நகரம், மிகப்பெரிய தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்றது. சென்னையில் இருந்து ரயிலில் சென்றால் 33 மணி நேரத்தில் ராஞ்சியை அடையலாம். கொல்கத்தா வழியாக விமானத்தில் ராஞ்சி செல்ல அதிகபட்சம் நான்கு மணி நேரம் போதும்.

 என்ன நடக்கிறது 'மாவோயிஸ்ட்’ மாநிலங்களில்?

 போலீஸ் - மாவோயிஸ்ட்டுகளுக்கு இடையே நடக்கும் போராட்டம் காரணமாக, உளவாளிகள் என்ற சந்தேகத்தில் அப்பாவிக் கிராமவாசிகள் இரு தரப்பினராலும் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். சித்ரவதை அதிகமானால், மரணங்கள் தவிர்க்க முடியாதவை. இந்திய வரைபடத்தில், மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளை, சிவப்புப் பிரதேசம் (ரெட்காரிடர்) என்று குறிக்கிறார்கள். மத்தியப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் உட்பட எட்டு மாநிலங்களைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள், மாவோயிஸ்ட்டுகளின் தீவிர ஆதிக்கத்தில் இருக்கின்றன. அங்கே வரிவசூல், மக்கள் நீதிமன்றம் என்று நிர்வாகத்தைக் கவனிப்பவர்கள் மாவோயிஸ்ட்டுகள். அதனால் ஊழல் அரசியல்வாதிகள், லஞ்ச அதிகாரிகள் குறைவு. அப்படி இருப்பவர்கள் உயிர் பயத்தில் நடமாடுகிறார்கள். சில மாதங்களுக்கு முன், பச்சை வேட்டை நடவடிக்கைக்குப் பிறகு, சுமார் 20 மாவட்டங்களில் மாவோயிஸ்ட்டுகளை விரட்டி அங்கே போலீஸார் முகாம் அமைத்து இருக்கின்றனர்.

ஜார்கண்டில் வாழும் ஆதிவாசி மக்கள், கனிம வளம் மிகுந்த வனங்களையும், மலைகளையும் தெய்வங்களாகவே நினைத்து வழிபடுகின்றனர். ஆனால், அந்த நிலத்துக்குக் கீழே இருக்கும் கனிம வளங்களைக் கொள்ளை அடிக்க உள்ளூர் தாதாக்கள், சுரங்கத் தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் துடிப்பதுதான் மோதலுக்குக் காரணம். அரசிடம் நிலத்தை ஏலத்துக்கு வாங்கிய தனியார் முதலாளிகளை, தங்களின் கடவுளை அழிக்க வரும் ராட்சதர்களாகத்தான் என்றுதான் ஆதிவாசிகள் பார்க்கிறார்கள். அதனால், 'வனத்தையும் மலையையும் விற்பது என்றால், எங்கள் கடவுளை விற்பனை செய்வதாக அர்த்தம். அதனால் ஓர் அடி நிலத்தைக்கூட யாருக்கும் விட்டுத்தர மாட்டோம். முடிந்தால், நுழைந்து பாருங்கள்' என்று தங்களது வில் - அம்பு, நாட்டுத் துப்பாக்கிகளை தூக்கிப் பிடித்துப் போராடுகிறார்கள். ஆதிவாசிகளின் பாதுகாவலர்​கள் என்கிற பேனரில்தான் மாவோயிஸ்ட்டுகள் நடமாடுகிறார்கள்.

அதனால், அரசை எதிர்க்கும் இவர்களுக்கும் அரசுத் திட்டங்களை நிறைவேற்ற உறுதுணையாக நிற்கும் போலீஸுக்கும் இடையே வனப்பகுதிகளில் அவ்வப்போது துப்பாக்கிச் சண்டை நடக்கின்றன. மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எஃப்.), ஜார்கண்ட் மாநில போலீஸைச் சேர்ந்த ஜாக்குவார் படையினர், உள்ளூர் போலீஸார் ஆகியோர் இணைந்து கடும் தாக்குதல் நடத்துகிறார்கள். ஜார்கண்ட் - சத்தீஸ்கர் மாநில எல்லைப் பகுதிகளில் அவ்வப்போது வெடிச் சத்தமும் மரண ஓலமும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.