மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!
##~##

க்ராவில் இருந்து டெல்லிக்குத் தலைநகரை இடம் மாற்றிய ஷாஜகானால்தான் நகரம் வளர்ச்சி அடையத் தொடங்கியது. ஷாஜகா​னாபாத் என்ற புதிய நகரை உருவாக்கினார் ஷாஜகான். அவரது மகள் சாந்தினி சௌக் பகுதியை வடிவமைத்தார். 

இவரால்தான் அஜ்மீர் கேட், டெல்லி கேட், காஷ்மீரி கேட், துருக்மான் கேட் என நான்கு பெரிய நுழைவாயில்கள் டெல்லியில் கட்டப்பட்டன. செங்கோட்டையைக் கட்டியதும் ஷாஜகானே. 254 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்தக் கோட்டையை 1638-ம் ஆண்டு கட்டத் தொடங்கி, 1648-ல் கட்டி முடித்தார். இந்தக் கோட்டைக்குள் அரசரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மட்டுமே வசித்தனர். பகதூர் ஷா காலம் வரை டெல்லி செங்கோட்டை, அரசாள்பவர்களின் அடையாளமாக இருந்தது. 1857-ம் ஆண்டில் சிப்பாய் புரட்சியின்போது, பிரிட்டிஷ் ராணுவத்தால் இந்தக் கோட்டை ஆக்கிரமிக்கப்பட்டு, ராணுவத் தலைமை இடமாக மாற்றப்பட்டது. இங்குதான் பகதூர் ஷா விசாரணை செய்யப்பட்டார். மேலும், இங்கே செயல்பட்ட ராணுவ நீதிமன்றத்தில், இந்திய தேசிய ராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு 1945-ம் ஆண்டு நவம்பர் மாதம் தூக்கில் இடப்பட்டனர்.

எனது இந்தியா!

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கல்கத்தா​வைத்தான் தலைநகரமாக வைத்து இருந்தனர். 1905-ல் கர்சன் பிரபு காலத்​தில், வங்காளத்தை இரண்டாகப் பிரித்​தாளும் சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதையட்டி, கல்கத்தாவில் ஏற்பட்ட கலவரம் நிரந்தரமான ஆங்கிலேய எதிர்ப்பு இயக்கம் உருவாகக் காரணமாக அமைந்தது. அப்போதுதான், தலைநகரை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்ற எண்ணம், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு உருவானது. அதற்கான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தனர். 1911-ம் ஆண்டு, ஐந்தாம் ஜார்ஜ் மன்னராகப் பதவி ஏற்றதை முன்னிட்டு, மாபெரும் தர்பார்  டெல்லியில் நடந்தது. இதில், இந்தியா முழுவதும் இருந்து மகாராஜாக்கள், குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள், நிலப்பிரபுக்கள் என, ஆயிரக்கணக்கான பிரமுகர்கள் கலந்துகொண்டனர். நகரம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஒரு லட்சம் பார்வையாளர்கள், மன்னர் முடிசூட்டும் நிகழ்ச்சியைக் காண்பதற்காக விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மன்னரின் இந்த தர்பார் நிகழ்ச்சியை முழுமையாகப் படம்பிடிக்க இரண்டு படப்பிடிப்புக் குழுக்களும் இங்கிலாந்தில் இருந்து வந்திருந்தன.

7 லட்சத்து 67,000 பவுண்ட் செலவில் நடந்த டெல்லி தர்பாரின் ஆடம்பரத்தைக் கண்டு, இங்கிலாந்தே வியந்துபோனது. இந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாட்டில் இருந்து நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சென்று இருக்கிறார். இவர், சிறந்த கவிஞர் மட்டுமல்ல தேர்ந்த ஓவியரும்கூட. சிறந்த ஓவியர் என்பதற்காக, இந்த தர்பரில் மன்னரிடம் பரிசு பெற்றுத் திரும்பினார். இந்த முடிசூட்டு விழாவில், 1911-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதியன்று, பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ், டெல்லியைத் தலைநகராக்கும் அறிவிப்பை முறைப்படி வெளியிட்டார். அப்போது இருந்த டெல்லி தங்களின் நிர்வாக வசதிகளுக்கு உகந்ததாக இருக்காது என்று கருதிய பிரிட்டிஷ் அரசு, புதிய நகரை உருவாக்க முனைந்தது. அப்படி உருவாக்கப்பட்டதே புதுடெல்லி. இதற்காக, 130 மில்லியன் பவுண்ட் பணம் ஒதுக்கப்பட்டது. புதிய நகரை யாரைக்கொண்டு வடிவமைப்பது என்பதைப் பற்றிய ஆலோசனை நடந்தபோது, முதலில் பரிசீலனை செய்யப்பட்டவர் கட்டடக் கலை நிபுணர் ஹென்றி வாகன் லான்செஸ்டர். இவர், டெல்லியைப் புதிய வடிவில் மாற்றம் செய்வதற்கான மாதிரி வரைபடங்களையும் திட்டங்களையும் முன்னதாகவே வைத்திருந்தார். ஆனால், இங்கிலாந்தில் இருந்து கட்டடக் கலைஞர் எட்வின் லுட்யன்ஸ் வரவழைக்கப்பட்டார். இவர், அதற்கு முன் எந்த நகரத்தையும் வடிவமைத்தது இல்லை. ஆனால், பிரபலமான வணிகர்கள் மற்றும் பிரபுக்களின் மாளிகைகளை வடிவமைத்து இருக்கிறார். சில பண்ணை வீடுகள், அலங்காரக் கூடங்கள் அவரது தனித்துவமான வடிவமைப்பில் பெயர் பெற்று இருந்தன.

எனது இந்தியா!

அவரை புது டெல்லி நகர நிர்மாண வடிவமைப்​பாளராக நியமனம் செய்ததற்கு முக்கியக் காரணம் இருந்தது. வைஸ்ராய் லிட்டன் பிரபுவின் ஒரே மகள் எமிலி, எட்வின் லுட்யன்ஸின் மனைவி. ஆகவே, தனது ஆளுகைக்குள் இருந்த டெல்லியை வடிவமைப்பது தனது மருமகனாகவே இருக்கட்டும் என்று, லிட்டன் பிரபு முடிவு செய்தார். அதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. நகர நிர்மாணக் குழு உருவாக்கப்பட்டது. ஜார்ஜ் ஸ்வின்டென் என்பவர், அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். லுட்யன்ஸ் மற்றும் அவரது குழுவினர், நகரை வடிவமைப்பு செய்யும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். 1912-ம் ஆண்டு, டெல்லிக்கு வந்த லுட்யன்ஸ், தனது நண்பரும் தென் ஆப்பிரிக்காவில் பல ஆண்டு காலம் கட்டட வடிவமைப்புக் கலைஞராகப் பணியாற்றியவருமான ஹெர்பர்ட் பேக்கரை, இந்தப் பணியில் தன்னோடு இணைத்துக்கொள்ள விரும்பினார். அதையும் பிரிட்டிஷ் அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால், நகர நிர்மாணப் பணி ஆரம்பித்த பிறகு, இருவருக்கும் இடையே கருத்துமோதல்கள் ஏற்பட்டன. லுட்யன்ஸின் வடிவமைப்பு மோசமானது என்று வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தார் பேக்கர். ஆகவே, எந்தக் கட்டடத்தை யார் வடிவமைப்பது என்று, அவர்களுக்குள் பேசி முடிவு செய்துகொண்டு வேலை செய்தனர்.

இன்று உள்ள ஜனாதிபதி மாளிகை அன்று வைஸ்ராய் ஹவுஸாக இருந்தது. 'ரைசினா பிந்த்’ என்ற சீக்கியக் கிராமமாக இருந்த 'ரைசினா குன்று’ பகுதியில் 'ராஷ்டிரபதி பவன்’ அமைக்கப்பட்டது. அதை, லுட்யன்ஸ் வடிவமைத்தார். மொகலாய மற்றும் பௌத்தக் கட்டடக் கலைகளின் ஒருங்கிணைந்த வடிவமாக அதை உருவாக்கினார். அந்த வடிவமைப்பு பொருத்தமானது இல்லை என்று கோபமாக ஒரு கடிதம் எழுதினார் பேக்கர். தனது பணி முடியும் வரை தலையிட வேண்டாம் என்று சூடாகப் பதில் அனுப்பினார் லுட்யன்ஸ். இவ்வளவு மனவேறுபாடுகள் இருந்தும், புது டெல்லியை நிர்மாணிக்க லுட்யன்ஸ் தன்னை ஏன் அழைத்தார் என்பது பேக்கருக்குக் கடைசி வரை புதிராகவே இருந்தது.

புது டெல்லியை உருவாக்கு​கிற வேலை முழு வேகத்தில் தொடங்கியது. தினமும் 20,000 தொழிலாளர்கள் வேலை செய்தனர். புதிதாக 64 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சாலை அமைக்கப்​பட்டது. இங்கிலாந்​தில் உள்ள வீதி அமைப்புகளைப் போலவே புது டெல்லியிலும் வீதிகள் அமைக்கப்பட்டன.

ராபர்ட் ரஸ்ஸல் என்ற இன்ஜினீயர், கனாட் பிளேஸ், தீன்மூர்த்தி பவன், நேஷனல் ஸ்டேடியம் மற்றும் அரசாங்கக் குடியிருப்புகளைக் கட்டினார். மான்டேகு தாமஸ் என்பவர், செகரெட்டரியேட் கட்டடங்களைக் கட்டினார். வடக்கு மற்றும் தெற்கு பிளாக் கட்டடங்களை பேக்கர் கட்டினார்.

எனது இந்தியா!

நிகோலஸ் ப்ளும் ஃபீல்டு, வால்டர் ஸ்கைஸ் ஜார்ஜ், ஹென்றி மெட் ஆகியோரும் இந்தப் பணியில் லுட்யன்ஸ் உடன் வேலை செய்தனர். சாலையோரம் எந்த மரக்கன்று நட வேண்டும், அதை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டவர் பி.எச்.கிளட்டர் பக். இதற்காக அவர், 72 விதமான மரங்களைத் தேர்வு செய்து, லுட்யன்ஸுக்கு அனுப்பிவைத்தார். இந்த மரங்கள் முழுமையாக வளருவதற்கு 10 ஆண்டுகள் ஆகும் என்பதால், அது வரை மரங்களைப் பராமரிக்கத் தேவையான ஏற்பாடுகளை உரிய முறையில் செய்ய வேண்டும் என்று லுட்யன்ஸ் கேட்டுக்கொண்டார்.

அதுபோலவே, பூங்கா, அலங்காரச் செடிகள் மற்றும் கொடிகளை உருவாக்கும் பொறுப்பை, தோட்டக் கலைத் துறை இயக்குனரான முஸ்டோ ஏற்று இருந்தார். ஜனாதிபதி மாளிகையின் மொகல் தோட்டத்தை உருவாக்குவதில் ஜெரூட் ஜெகில் மற்றும் வால்டர் ஸ்கை ஜார்ஜ் ஆகிய இருவரும் முக்கியப் பணியாற்றினர். இதற்காக, ஆக்ரா, லாகூர் மற்றும் காஷ்மீரில் உள்ள மலர்த் தோட்டங்களைப் பார்வையிட்டு வந்தனர். ஸ்வின்டன் ஜேக்கப் கட்டட உள்அலங்காரங்களுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

நகரக் கட்டுமானப் பணி, சுஜான் சிங் மற்றும் அவரது மகன் ஷோபா சிங் ஆகியோரிடம் ஒப்படைக்கப்​பட்டது. இந்தியா கேட் மற்றும் சவுத் பிளாக் கட்டடப் பணிகள், ஷேக் ஹரூன் அல் ரசீத் என்ற ஒப்பந்ததாரரிடம் வழங்கப்பட்டது. புது டெல்லியின் முக்கியக் கான்ட்ராக்டராக சுஜான் சிங் நியமிக்கப்பட்டதற்குக் காரணம், அவர்தான் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவின்போது முக்கி​யப் பணிகளுக்குக் கான்ட்ராக்டராக இருந்தவர்.

ஹென்றி வாகன் என்பவரை இந்தக் கட்டுமானப் பணிக்குள் கொண்டுவர வேண்டும் என்று விரும்பிய சிலர், ஆலோசனைக் குழுவில் அவரை நியமித்தனர். ஆனால், லுட்யன்ஸ் அவரை நிராகரித்துவிட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த ஹென்றி வாகன், ஜனாதிபதி மாளிகைக்கு நிகராக ஒரு பெரிய அரண்மனையை நானும் கட்டிக் காட்டுகிறேன் என்று சவால்விட்டார். அப்படி அவர் உருவாக்கியதே ஜெய்ப்பூரில் உள்ள உமைத் பவன். 300 அறைகளுக்கு மேல்கொண்ட இந்த பிரம்மாண்ட அரண்மனை இப்போது, நட்சத்திர ஓட்டலாக இருக்கிறது. எட்வின் லுட்யன்ஸ், வைஸ்ராய் வீட்டைக் கட்டும்போது அது இங்கிலாந்தின் சர்வ வல்லமை மிக்க ஆட்சியின் அடையாளச் சின்னம் போல இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காகவே அதை ரசினா குன்றின் மீது கட்டத் திட்டமிட்டார். அது ஒரு சீக்கியக் கிராமமாக இருந்தது. அங்கு வசித்தவர்கள் டெல்லியின் புறநகருக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 340 அறைகளும் 227 தூண்களும் இரண்டு கிலோ மீட்டருக்கும் அதிகமான காரிடாரும்கொண்ட இந்த வைஸ்ராய் ஹவுஸ் 330 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ளது.

வைஸ்ராய் ஹவுஸ் முழுவதையும் தாஜ்மகால் போலவே வெள்ளைக் கற்களைக்கொண்டே கட்ட வேண்டும் என்று, லுட்யன்ஸ் முதலில் முடிவு செய்து இருந்தார். ஆனால், நினைவுச் சின்னம் அமைப்பதற்கே வெள்ளைக் கற்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்று, பலர் கூறியதால் அந்த எண்ணம் கைவிடப்பட்டது. சிவப்பு நிறக் கற்களால் இந்தக் கட்டடம் கட்டப்பட்டது.

எனது இந்தியா!

1912-ல் தொடங்கப்பட்ட நகரக் கட்டுமானம், 1931-ல் முடிவடைந்தது. டெல்லியை வடிவமைத்த லுட்யன்ஸின் மனைவி எமிலி, புகழ்பெற்ற தத்துவஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளால் கவரப்பட்டார். எமிலியின் மகள் மேரி லுட்யன்ஸ்தான், ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.

புது டெல்லியை உருவாக்கும் காலத்தில் லுட்யன்ஸுக்கும் இந்தியக் கட்டுமானப் பணியாளர்களுக்கும் இடையில் கடும் மோதல்கள் ஏற்பட்டு இருக்கின்றன. கறுப்பர்கள், முட்டாள்கள், உதவாக்கரைகள் என்று இந்தியர்களை அவமதித்தார் லுட்யன்ஸ் என்றும் கூறுகிறார்கள்.  

டெல்லி நகரை, தான் வடிவமைத்தபோதும் அதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் லார்ட் ஹார்டிஞ்ச். அவரது இடைவிடாத ஊக்கமும் ஆலோசனைகளுமே நகரை உருவாக்குவதற்குக் காரணமாக அமைந்தது என்று, லுட்யன்ஸ் கூறியிருக்கிறார். இன்றும் நாம் பழைய டெல்லிக்குள் சுற்றும்போது, கடந்த காலத்தின் சுவடுகளாக இடிந்த கோட்டைகள், கல்லறைகள், குறுகலான வீதிகள், கடைகளைப் பார்க்கலாம். புது டெல்லியோ, பிரிட்டிஷ் ஆட்சி முடிவுற்ற போதும் அவர்களின் அழியாத நினைவுகளுடன் கம்பீரமாக இன்றும் அப்படியே இருக்கிறது. இந்தியாவின் வேறு எந்த நகருக்கும் இப்படியான இரட்டை வாழ்க்கை கிடையாது. நகர நாகரிகத்தைப் பொறுத்தவரை, உலகின் முன்னோடி நாடு இந்தியா என்பதற்கு இந்த இரண்டு நகரங்களே சாட்சியமாகத் திகழ்கின்றன.

எனது இந்தியா!