சென்னையில் சிக்கிய மாவோயிஸ்ட்
##~## |
சுற்றுலாப் பயணிகள், எம்.எல்.ஏ., கலெக்டர் போன்றவர்களைக் கடத்திச் சென்று, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளும் மாவோயிஸ்ட்டுகளின் செயல்பாடுகள், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நேரத்தில், 'தமிழகத்தில் மாவோயிஸ்ட்டுகளின் முக்கியத் தலைவர் விவேக் கைது’ என்று செய்தி வெளியாகவே, தமிழகமும் திகிலில்!
யார் இந்த விவேக்?
''விவேக்கின் பூர்வீகம் திண்டுக்கல் மாவட்டம். 20 ஆண்டுகளுக்கு முன்பே இவரது குடு¢ம்பம் சென்னையில் குடியேறிவிட்டது. சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக்கில் படித்தவர் விவேக். அந்தக் காலகட்டத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டங்களால்

ஈர்க்கப்பட்டு, ஈழ ஆதரவு மாணவர்கள் போராட்டக் குழு என்ற அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டார். அப்போது அந்த அமைப்பில் தீவிரமாக இயங்கி வந்தவர்கள்தான், வழக்கறிஞர் அருள்மொழி, விடுதலை ராஜேந்திரன் போன்றவர்கள்.
அடுத்து, முற்போக்கு மாணவர் இயக்கம் என்ற அமைப்பினருடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அது மாவோயிஸ்ட்கள் அமைப்பின் மாணவர் பிரிவாகும். அதில் சாதாரண உறுப்பினராகச் சேர்ந்த விவேக், அதன் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்கும் அளவுக்குத் துடிப்புடன் செயல்பட்டார். அதன்பின், அகில இந்தியப் புரட்சிகர மாணவர் கூட்டமைப்பு என்ற அமைப்பின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளராகவும் உயர்ந்தார்.
அதன்பிறகு, அந்த அமைப்புகளில் இருந்து தன்னுடைய தொடர்பைத் துண்டித்துக்கொண்ட விவேக், தன்னுடைய ஜாகையை சேலத்துக்கு மாற்றிக்கொண்டார். அந்தப் பகுதியில் உழவர் உழைப்பாளர் மாமன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி, பாலன் என்ற பெயரில் இயங்கினார். அப்போது, கல்ராயன் மலைப்பகுதி, வெள்ளி மலை போன்ற இடங்களில் கந்துவட்டிக் கொடுமை, கொத்தடிமை முறை போன்றவை புரையோடிக்கிடந்தன. அவற்றுக்கு எதிராக அந்தப் பகுதியில் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இதனால், அந்தப் பகுதிகளில் உள்ள ஏழை விவசாயிகள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் மத்தியில் அவர் வெகு பிரபலம். இந்தக் காலகட்டம் வரை அவர் மீது எந்த வழக்கும் கிடையாது. ஏனென்றால், அது வரை சட்டபூர்வமான போராட்டங்களில் மட்டுமே ஈடுபட்டு இருந்தார்.

அத்தப்பட்டி எனும் கிராமத்தில் விவசாயிகள் பிரச்னைக்காக சாலை மறியலில் ஈடுபட்டபோதுதான், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தண் டனைக் காலம் முடிந்து விடுதலையானவர், அதன் பிறகு ஆறு ஆண்டுகள் தலைமறைவாகி விட்டார். அந்தக் காலகட்டத்தில் அவர் எங்கே இருந்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
பிறகு, 2004-ல் ஊத்தங்கரை மலைப் பகுதியில் ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இயக்கத்தினர் பலர் கைது செய்யப்பட்டனர். சிலர் தப்பியோடினர். தப்பி ஓடியவர்கள் பட்டியலில் ஆனந்தன் என்ற பெயரும் இருந்தது. 2007-ம் ஆண்டு தேனி மாவட்டம் முருகமலைப் பகுதியில் இயக்கத்தினரின் ஆயுதப்பயிற்சி நடைபெற்றது. அதைப் பார்த்த பொதுமக்கள் பயந்துபோய் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சுதாரித்துக் கொண்ட போலீஸ், மூத்த தலைவர்களான சுந்தரம், வேல்முருகன் உள்ளிட்ட நால்வரைக் கைது செய்தது. அப்போதும் சிலர் தப்பிவிட்டனர். அவர்களில் ஆனந்தனும் ஒருவர். இதைஅடுத்து, பெரியகுளம் நீதிமன்றத்தில் தப்பி ஓடியவர்களுக்கு பிடிவாரன்ட் போடப்பட்டது. அதன்பேரில்தான் இப்போது, கியூ பிராஞ்ச் போலீஸார் ஆனந்தனைக் கைது செய்தனர். பாலன் என்ற பெயரிலும் செயல்பட்ட விவேக் அவர்தான்'' என்று விரிவாகச் சொன்னார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
விவேக் கைது செய்யப்பட்டது எப்படி?
''சென்னை, ஷெனாய் நகர் பகுதியில் வசிக்கும் விவேக்கின் பெரியம்மா ஒருவர் இரண்டு மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். அதற்காக, கடந்த 18-ம் தேதி இரவு துக்கம் கேட்க வந்த விவேக்கை, கியூ

பிராஞ்ச் போலீஸ் எஸ்.பி. சம்பத்குமார் தலைமையிலான போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர். அங்கு நடத்திய சோதனையில் இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த விவேக்கின் பெரியம்மா மகன் திருமண நிச்சயதார்த்த வீடியோவையும் கைப்பற்றினர். அதைச் சோதனை செய்தபோது, அந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியிலும் விவேக் கலந்து கொண்டது தெரியவந்தது.
அந்த நிகழ்ச்சியில், விவேக்குடன் பத்மா என்ற பெண் இருப்பதையும் போலீஸார் கவனித்தனர். பத்மா, ஊத்தங்கரை ஆயுதப்பயிற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகள் பொடா சட்டத்தில் சிறையில் இருந்தவர். அவர் விவேக்குடன் இருப்பது போலீஸாரின் சந்தேகங்களை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. மேற்கொண்டு விசாரிக்கத்தான் பத்மாவைத் தேடி வருகின்றனர்'' என்றனர் போலீஸ் வட்டாரத்தில்.
பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார் விவேக். கோர்ட் பிடிவாரன்ட்டில் கைது செய்யப்பட்டதால், விவேக்கிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தவில்லை. அதனால், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அதன் பின்னரே இடைப்பட்ட காலங்களில் விவேக்கின் செயல்பாடுகள் என்ன? தமிழகத்தில் எங்கெல்லாம் மாவோயிஸ்ட்டுகள் செயல்பட்டு வருகின்றனர் என்பது தெரியவரும்!
- ஜோ.ஸ்டாலின்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி