சத்தீஸ்கர் மாநிலத்தில் ’கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு இலவசமாக இரண்டு கிலோ தக்காளி கொடுக்கப்படும்’ என நகராட்சி அறிவித்ததால், தடுப்பூசி போடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்தபடியே இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16,000 பேருக்கும் மேல் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழியும் சூழலிலும், அந்த மாநில மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் குறைவாகவே இருக்கிறது. மக்களிடம் தடுப்பூசி குறித்த அச்சம் நிலவுவதால் தடுப்பூசி மையங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
மாநிலத்தில் உள்ள 28 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. ஊரடங்கு, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் என்ற கருதப்பட்டது. ஆனால் தடுப்பூசி போடவும் மக்கள் வெளியில் வருவதை தவிர்த்தனர்.
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. நகராட்சித் தலைவரான பென்ஹெர் ரவாட்டியா மற்றும் நகராட்சி அதிகாரி பவன் மெரியா ஆகியோர் மக்கள் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க திட்டமிட்டனர்.

அப்போது தான் அந்த அதிரடி ஆஃபர் ஐடியா அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அதன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களின் ஆர்வம் சற்று அதிகரித்திருக்கிறது.
ஊரடங்கு காரணமாக வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதால், விவசாயப் பொருள்கள் தேக்கம் அடைந்துள்ளன. அதனால் வணிகர் ஒருவர் விற்காமல் இருந்தத் தக்காளிக் கூடைகளை, நகராட்சிக்கு இலவசமாகக் கொடுக்க முன்வந்தார். அதைக் கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பொதுமக்களுக்கு இலவசமாக தக்காளி விநியோகிக்கப்பட்டது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே இப்போதைக்கு இருக்கும் வழி என்று கூறும் மத்திய அரசு, அது பற்றி மக்களிடம் உள்ள அச்சத்தை நீக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதை முறையாக செய்திருக்கும்பட்சத்தில் தக்காளிகளுக்கு இங்கு தேவையே இல்லை.