கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

20 கோடி ரூபாயில் ஒரு நாய்!

எஸ்.சதீஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.சதீஸ்

சின்ன வயசுல இருந்தே செல்லப்பிராணிங்கன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும், அதுலயும் நாய்கள் வளர்ப்புல அலாதி இன்பம்.

‘ஒரே ஒரு நாயின் விலை 20 கோடியா, என்னங்க சொல்றீங்க?' என, ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பும் வகையில், பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.சதீஸ், கடந்த மாதம் அரியவகை Caucasian Shepherd வகை நாயை, 20 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளார். இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவர், நடிகர், தொழிலதிபர் எனப் பல முகங்களைக்கொண்ட சதீஸ், அந்த நாயை வாங்கியதுடன் ‘கடபோம் ஹைடர்’ என்ற செல்லப்பெயரையும் வைத்துவிட்டார். நாய்களுக்கான அழகு நிகழ்ச்சியில் முதலிடம், பரிசு மழை, செல்லுமிடமெல்லாம் அன்பளிப்பு என ஒரு மாடல் போல் வலம்வருகிறது ‘கடபோம் ஹைடர்.’

20 கோடி ரூபாயில் ஒரு நாய்!

வீடுகள், பெரிய அளவிலான விளைநிலங்களைப் பாதுகாக்க உதவும், அதிக மோப்ப சக்தியும் அறிவும் உடைய ஒரு நாய் வகைதான் Caucasian Shepherd. இது ஜார்ஜியா, ஆர்மீனியா, தஜிகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டது. அதிகபட்சமாக, 12 ஆண்டுகள் வரை வாழும் இந்த நாய், 2.5 அடி உயரத்துடன் 140 கிலோ எடை வரை இருக்கும்.

தற்போது, இந்த நாய் சினிமாவில் நடித்துவருவதாகத் தகவல் வெளியானதால், சமீபத்தில் பெங்களூரில் நடந்த கண்காட்சியில் கடபோம் ஹைடரைப் பார்த்துவிட்டு, சதீஸை சந்தித்துப் பேசினோம்.

‘‘சின்ன வயசுல இருந்தே செல்லப்பிராணிங்கன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும், அதுலயும் நாய்கள் வளர்ப்புல அலாதி இன்பம். என்கிட்ட நிறைய விலையுயர்ந்த நாய்கள் இருக்கு. ஆனா, உலகத்துலயே விலை அதிகமான, கம்பீரமான நாய் என்கிட்ட இருக்கணும்னு நெனச்சுதான் ஹைடரை விலைக்கு வாங்கி வளர்த்துட்டு இருக்கேன்.

20 கோடி ரூபாயில் ஒரு நாய்!

மற்ற நாய்களை எல்லாம் எனது ஃபார்மில் தான் வளர்க்கிறேன். ஆனால், ஹைடர்க்காக எனது வீட்டுக்குள் பிரத்யேக அறை ஒதுக்கியிருக்கேன். தினமும், 1.5 கிலோ சமைக்காத சிக்கன், ஆறு முட்டை, நாய்களுக்கான உணவு அரைக் கிலோன்னு பார்த்துப் பார்த்துக் கொடுப்பேன். உணவு, பராமரிப்புன்னு மாசம், 7,000 ரூபாய் வரைக்கும் செலவாகுது. தற்போது, 1.5 வயதான இந்த நாய், 110 கிலோ எடையில் இருக்கு. இதப்போல கம்பீரமான, அழகான நாய் வகை உலகத்துல வேறெதுவும் இல்ல!

நாக்பூருல நடந்த பேஷன் ஷோவுக்கு, கடபோம் ஹைடர அழைச்சுட்டுப் போனப்ப, போட்டி நடத்துற ஒருங்கிணைப்பாளர்கள், ரெண்டு லட்ச ரூபா பரிசா கொடுத்தாங்க. நாய்களுக்கான அழகுப் போட்டியில இதுவரை, இவன் 32 பதக்கங்கள் வென்றிருக்கான். கர்நாடக பைக்கர்ஸ் அசோசியேஷன், 40 கிராம் தங்கச்சங்கிலி பரிசா கொடுத்தாங்க, பெங்களூருல நடந்த எலக்ட்ரிக்கல் வாகன எக்ஸ்போவுல, 6.5 லட்சம் மதிப்புடைய மின்சார கார், பைக், சைக்கள்னு கொடுத்தாங்க. ஒரு நாய்க்கு இவ்வளவு பரிசுகள் கொடுக்குறது இதுதான் முதல் முறைன்னு நெனைக்கிறேன்.

20 கோடி ரூபாயில் ஒரு நாய்!

கன்னட இயக்குநர் அனீஸ் தயாரிப்புல உருவாகிட்டு வர்ற கெளரி சங்கர் படத்துல, நடிகர் ரவிச்சந்திரன், நடிகை அபூர்வாகூட சில காட்சிகள்ல ‘கடபோம் ஹைடர்’ நடிச்சிருக்கான். அவனுக்காக தனி ‘ரோல்’ கொடுத்திருக்காங்க. இதுல நடிக்கறதுக்காக, பத்து லட்ச ரூபா கொடுத்திருக்காங்க. சொன்ன பேச்சக் கேட்டு அமைதியா இருந்து, சில டேக்லயே நடிச்சு அசத்தியிருக்கான். இனி தொடர்ந்து பேஷன் ஷோவுக்குக் கூட்டிட்டுப் போலாம்னு இருக்கேன், திரைப்படங்களிலும் அறிமுகம் செய்யக் காத்திருக்கேன்’’ என, நம்மிடம் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார்.

செல்லப்பிராணிகள் வளர்ப்பது சாதாரணம்தான்; ஆனால், 20 கோடி ரூபாய்க்கு ஒரு நாய் வாங்கி, தனி ரூமில் வளர்ப்பது வியப்புக்குரியதே. இருந்தாலும், இந்த வகை நாய் சந்தையில், 5–10 லட்சம் ரூபாய்க்குள் கிடைக்குமென்ற சர்ச்சையும் நிலவுகிறது.