ஈரானின் புகான் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர், 20 வயதான அஃப்ஷின் இஸ்மாயில் காதர்சாதே (Afshin Esmaeil Ghaderzadeh). இவர், உலகின் மிகவும் குள்ளமான மனிதராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவரின் உயரம் வெறும் 2 அடி 1 அங்குலம் மட்டுமே.

முன்பு கொலம்பியாவைச் சேர்ந்த 36 வயதான எட்வர்ட் நினோ ஹெர்னான்டெஸ், உலகின் மிகவும் குள்ளமான மனிதராக கின்னஸ் சாதனையில் அங்கீகரிக்கப்பட்டு இருந்தார். தற்போது அவரை விட அஃப்ஷின் குள்ளமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கின்னஸ் உலக சாதனையால் அங்கீகரிக்கப்படும் நான்காவது குள்ளமான மனிதர் இவர்.
இவர் மிகவும் குள்ளமாக இருப்பதால் மொபைல் போனை பிடிப்பதற்குக் கூட சிரமப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இவரின் பெற்றோர்கள், உடல்நலக் குறைவால் தங்கள் மகன் படிப்பைப் பாதியிலேயே விட்டதாகவும், வேறு எந்த மனநல கோளாறும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். நாளின் பெரும்பகுதியை `டாம் அண்ட் ஜெரி' கார்ட்டூன் பார்ப்பதில் செலவழிக்கிறார், அஃப்ஷின். இவருக்கென சமூக வலைதளத்தில் ரசிகர் பட்டாளமும் உண்டு. அவர்களுக்காக வீடியோ எடுத்து போஸ்ட் செய்கிறார்.
கின்னஸ் சாதனையில் இடம் பெற்றது குறித்து அஃப்ஷின் கூறுகையில், ``என்னுடைய தந்தை ஒரு கட்டடத் தொழிலாளி. வாழ்விற்கான அடிப்படைத் தேவைக்கும், மருத்துவச் செலவுகளுக்கும் நிறையச் சிரமப்பட்டுள்ளோம். உலகின் உயரம் குறைந்த மனிதனாக அங்கீகரிக்கப்படுவது என்னுடைய குடும்பத்திற்கு உதவும் என்று நம்புகிறேன். கின்னஸ் சாதனையில் இடம்பிடிப்பது என்னுடைய கனவு. மக்கள் என் மீது கவனம் செலுத்துகிறார்கள். இது எனக்குச் சிறப்பான உணர்வை தருகிறது'' என்று அகமகிழ்ந்துள்ளார்.