மதுரை, ஜான்சி ராணி பூங்கா முன்பு கடந்த 1980-ம் ஆண்டு, ஜூலை 20-ம் தேதி தி.மு.க இளைஞரணி தொடங்கப்பட்டது. அணியை அப்போதைய தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதி தொடங்கிவைத்தார். அந்த நேரத்தில் இளைஞரணிச் செயலாளராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். 1980-ம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெரும் தோல்வியைத் தழுவியது. அந்த நேரத்தில் தி.மு.க-வில் இளைஞரணியின் தொடக்கம் கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தி.மு.க-விலுள்ள பல அணிகளில் இளைஞரணி சக்திவாய்ந்த அணியாகவே உருவெடுத்தது. காலப்போக்கில் தி.மு.க-வில் இளைஞரணிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. தி.மு.க-வின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணிச் செயலாளராக ஸ்டாலின், 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி வகித்தார். தி.மு.க-வின் பொருளாளராகப் பதவி உயர்வு பெற்றதையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு வெள்ளக்கோயில் சாமிநாதன் இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர், 2019-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போதைய பொதுச்செயலாளர் அன்பழகன் அந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில், தற்போது அந்தக் கட்சியின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இளைஞரணி துணைச் செயலாளர்களாக தூத்துக்குடி ஜோயல், ரகு, இளையராஜா, அப்துல் மாலிக், பிரகாஷ், பிரபு, சீனிவாசன், ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் .

இதற்கான அறிவிப்பைக் கடந்த 23-ம் தேதி கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். இந்த நிலையில், தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின், தனது 45-வது பிறந்தநாளை நாளை (27-ம் தேதி) கொண்டாடவிருக்கிறார். தமிழகம் முழுவதுமிருக்கும் தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் தங்களின் வாழ்த்துகளை பேனர்கள் அமைத்தும், போஸ்டர்கள் ஒட்டியும் தெரிவித்துவருகிறார்கள்.
இந்த நிலையில், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயலின் ஏற்பாட்டில் தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் வாழ்த்து வாசகம் தாங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட 200 ஆட்டோக்கள் அணிவகுத்தன. ஒவ்வொரு ஆட்டோவின் பின்புறமும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த ஸ்டிக்கரில், ‘பிறந்தநாள் காணும் இளம் தலைவர், ஆருயிர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. தூத்துக்குடி கணேஷ்நகரில் தொடங்கிய இந்த ஆட்டோ பேரணி, மாநகராட்சியின் முக்கியச் சாலைகள் வழியாகச் சென்றது. வழிநெடுகிலும் இனிப்புகளும் வழங்கப்பட்டன. இல்லம்தோறும் தி.மு.க இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியைத் தொடங்கிவைப்பதற்காக (கடந்த 20-ம் தேதி) தூத்துக்குடிக்கு வந்தார் உதயநிதி.

அவரை வரவேற்க விமான நிலையத்துக்குள் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ-க்கள் மார்கண்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் காத்திருந்தனர். அப்போது தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமியக் கலைஞர்கள் முன்செல்ல, டிரம்ஸ் குழு பின்செல்ல நடுவில் பெரும் இளைஞர் கூட்டத்துடன் மாஸ் என்ட்ரி கொடுத்தார் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல்.
விமான நிலையத்துக்கு அருகிலுள்ள அவரது வீட்டிலிருந்து விமான நிலையம் வரை சுமார் 500 இருசக்கர வாகனங்கள், 50-க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுக்க அவரின் வருகையை யாரும் எதிர்பார்க்கவில்லை. தூத்துக்குடியிலுள்ள இரண்டு அமைச்சர்களுமே ஜோயலை ஒதுக்கிவைத்திருப்பதால், உதயநிதியின் வருகையையொட்டி இப்படி ஒரு பிரமாண்டத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார்.

இரண்டு அமைச்சர்களின் வரவேற்பு ஏற்பாட்டைவிட ஜோயல் சிறப்பாகச் செய்திருந்தது உதயநிதியையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நிறைவாக ஆளுயர மாலையை உதயநிதிக்கு அணிவித்து பித்தளை வாளையும் கையில் கொடுத்தார் ஜோயல். ”யாரும் எதிர்பார்க்காததை பிரமாண்டமாகச் செய்வதில் வல்லவர் ஜோயல். உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு பிரமாண்ட ஆட்டோ பேரணியையும் நடத்திவிட்டார்” என்கிறார்கள் கட்சியினர்.