மும்பை, தாராவியில் பொங்கல் பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகை தமிழ் அமைப்புகளால் தாராவி 90 அடி சாலையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் யுவசேனா சார்பாக 18-வது ஆண்டு பொங்கல் விழாவையொட்டி 1,008 பானைகளில் பெண்கள் பொங்கலிட்டனர். பெண்கள் பொங்கலிடுவதற்கு தேவையான பானை, அரிசி, சர்க்கரை உட்பட அனைத்து பொருள்களும் யுவசேனாவால் வழங்கப்பட்டது. அதிகாலை 5 மணிக்கே பெண்கள் அனைவரும் தாராவி 90 அடி சாலையில் பொங்கலிட குவிய ஆரம்பித்தனர். இது தவிர 90 அடி சாலையிலுள்ள சக்தி விநாயகர் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் 500 பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டனர்.

இந்தப் பொங்கல் விழாவை தமிழ்நாடு பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
இதற்காக நேற்றே மும்பை வந்த குஷ்பு இன்று காலை 7 மணிக்கு தன்னுடைய சகோதரியுடன் தாராவி பொங்கல் விழாவுக்கு வந்தார். அவரை தமிழர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பொங்கலிட தயாராக இருந்த பெண்களுக்கு தேவையான பொருள்களை, பெண்களுக்கு குஷ்பு வழங்கினார். அதோடு முதல் பானையில் பொங்கலிட்டு விழாவையும் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய தலைவர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட்டு குஷ்பு எம்.எல்.ஏ.வாக மாறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தனர். விழாவில் பேசிய குஷ்பு, ``வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நிரூபிக்கும் விதமாக என்னுடைய வாழ்க்கை இருக்கிறது. மும்பையில் பிறந்து வளர்ந்தாலும், நான் சென்னையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழச்சியாக வாழ்கிறேன்.
என்னை மீண்டும் மும்பைக்கு அழைத்து வந்து பொங்கல் விழாவை நடத்துவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் குடும்பத்தில் திருமணமாகி நான் சென்றிருப்பது எனக்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரமாக கருதுகிறேன். நமது சம்பிரதாயம் மற்றும் கலாசாரத்தை பார்க்கும்போது இது போன்ற ஒன்று உலகத்தில் எங்கும் இருக்க வாய்ப்பு கிடையாது. என்னுடைய குழந்தைகளும் தாங்கள் தமிழர்கள் என்பதற்காக மிகவும் பெருமைப்படுகின்றனர்" என்று தெரிவித்தார். மும்பை பெண் என்பதை நிரூபிக்க குஷ்பு சில வார்த்தைகள் மராத்தியிலும் பேசினார்.
இதே போன்று 90 அடி சாலையில் காவல் நிலையத்தகு எதிரில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடந்த பொங்கல் விழாவில் 200-க்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டனர். இது தவிர முன்னாள் எம்.எல்.ஏ.வர்ஷா கெய்க்வாட் சார்பாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். இதே போன்று கிராஸ் ரோட்டில் மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டனர்.

பெரும்பாலான இடங்களில் பொங்கலிட வந்த பெண்களுக்கு தேவையான பொருள்களை சம்பந்தப்பட்ட பொங்கல் விழா ஏற்பாட்டாளர்களே கொடுத்தனர். பொங்கல் பண்டிகையால் தாராவி 90 அடி சாலை திணறியது. சாலை முழுக்க மக்கள் வெள்ளம் போல் காட்சியளித்தது. பொங்கல் விழாவை காண மும்பை முழுவதுமிருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். அதோடு யூடியூபர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களும் குவிந்திருந்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி 90 அடி சாலையில் காலை 5 மணியிலிருந்து 10 மணி வரை போலீஸார் வாகன போக்குவரத்து மூடப்பட்டிருந்தது. இது தவிர மும்பையில் டாடா மராத்தான் போட்டியும் இன்று காலையில் நடத்தப்பட்டது. இதற்காக 30-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டிருந்தன.