விகடன் வரவேற்பறை
அகாலம் - புஷ்பராணி
வெளியீடு: கருப்புப் பிரதிகள், பி55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை-5. பக்கம்: 208 விலை

155

எழுத்தாளர் புஷ்பராஜாவின் சகோதரி புஷ்பராணியின் ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள். உண்மை என்பதாலேயே குலை நடுங்கவும், மனம் சிதையவும்வைக்கிறது போராட்ட நினைவுகள். ஈழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் சீரிய பங்கை முன்வைக்கும் இந்த நூலில் புஷ்பராணியின் சிறை வாழ்க்கைப் பக்கங்கள் மிக முக்கியமான பகுதி. பெண் கைதிகள் முன் நிர்வாணமாக நடமாடும் ஆண் காவலர்கள், குப்பைத் தொட்டி போன்ற அலுமினியத் தட்டில் வழங்கப்பட்ட உணவுகள் என்று நீள்கின்றது நினைவுகள். இப்படியும் நடக்குமா என்பது இல்லை, இப்படி எல்லாம் ஈழத் தமிழ்ச் சூழலில் நடந்திருக்கிறது என்ற உண்மையைப் பதிவு செய்திருக்கிறார் புஷ்பராணி.
காதல் மன்னன் ஜெமினி கணேசன் (பயோகிராஃபி ஃபிலிம்)
இயக்கம்: அசோக் குமார் வெளியீடு: மோஸர்பேர் விலை:

99

ஆரம்ப காலப் படங்களில் ஆர்.கணேஷ் என்ற பெயருடன் நடிக்கத் துவங்கி, ஜெமினி கணேசனாக உருவெடுத்தவரின் வரலாற்றைப் பேசுகிறது இந்த ஆவணப் படம். ஜெமினி தயாரித்த ஒரே படம் 'நான் அவன் இல்லை...’, அவர் இயக்கிய ஒரே படமான 'இதய மலர்’ படத்தில் 'லவ் ஆல்’ என சொந்தக் குரலில் பாடி அசத்தியது, அவருடைய இந்திப் புலமை, கலைச் சேவைக்காக லாஸ்வேகாஸில் 'கிங் ஆஃப் ஸ்டார்ஸ்’ பட்டம் வழங்கியதோடு அந்த நாளை 'ஜெமினி டே’ என அறிவித்து, மேயராக்கி நகர சாவியைக் கொடுத்து கௌரவிக்கப்பட்டது என அவர் வாழ்வின் இறுதிக் காலம் வரை அழகழகான காட்சிகளோடு தொகுக்கப்பட்டு இருக்கிறது. ஆங்கில சப்-டைட்டிலோடு ஆவணப்படுத்தப்பட்டு இருக்கும் இந்தப் படம் ஒரு பொக்கிஷம்.
www.techshout.com
என் இனிய இயந்திரா

ஐ-போன், ஆண்ட்ராய்ட், லேப்டாப், டேப்லட் என சகல இயந்திரங்களையும் முழுமையாகப் பயன்படுத்தச் சொல்லித்தரும் தளம். சாம்சங் கேலக்ஸி எஸ் 3-ன் ப்ளஸ் மைனஸ், ஆண்ட்ராய்டின் சிறந்த 10 அப்ளிகேஷன்கள், சுவாரஸ்யமான கேம்கள், யூடியூப்பில் இருந்து இலவசத் தரவிறக்கத்துக்கான வழிகள் எனக் கொட்டிக்கிடக்கும் அப்டேட் தகவல்களை அள்ளிக் கொள்ளலாம்!
பொன்மாலைப் பொழுது இசை: சி.சத்யா
வெளியீடு: திங்க் மியூஸிக் விலை:

99

'எங்கேயும் எப்போதும்’ சத்யாவின் இரண்டாவது ஆல்பம். கண்ணதாசன் பேரனுக்கு வைரமுத்துவின் மகன் எழுதிய, 'வார்கோதுமைக் கள்ளோடு வா தோழனே என்னோடு... ஊர்விட்டோடி காற்றைச் சுவாசிக்கலாம்!’ பாடலின் வரிகளில் இளமை ஈர்ப்பு. 'வார்கோதுமை கள்’ என்று 'பீரு’க்குத் தமிழ் அடையாளம் கொடுக்கிறார் மதன் கார்க்கி. 'நீ இன்றி...’ பாடலில் மதன் கார்க்கியின் 'அந்தாதி’த் தமிழ் கவன ஈர்ப்பு. 'அடிக்கடி...’ பாடல் அடிக்கடி கேட்கத் தூண்டும் ரகம். கார்த்திக், ஸ்டீவ் வாட்ஸ் குரல்களில் தாமரையின் வரிகளில், 'இரவுகளில்...’ பாடல் பின்னிரவு மென்மெலடி வகை!
செலினா கோம்ஸும் சிக்ஸரும்!
http://kaviyulagam.blogspot.in/

கொழும்பில் இருந்து எழுதும் மைந்தன் சிவா என்பவரின் வலைப்பூ. ஜனரஞ்சகப் பத்திரிகையைப் போல கலகல கலவையில் கட்டுரைகள் நிரம்பியிருக்கின்றன. ஹாலிவுட் நடிகை செலினா கோம்ஸ் பற்றிய கட்டுரையில் இளமை ததும்பினால், கிரிக்கெட் பதிவுகளில் புள்ளிவிவர ஒப்பீடுகள், ஆய்வுகள் என செம டீடெய்ல். இலங்கையில் இருந்தாலும் பவர் ஸ்டார், இளையராஜா துதி எனத் தமிழ்நாட்டு ரசனை தூக்கல்!