மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!

இரண்டு ஆசிரியர்கள்

##~##

ரலாற்றின் போக்கைத் திசைமாற்றம் கொள்ளச்​செய்வதில் தனிப்பட்ட ஆளுமைகளுக்கு எப்போதுமே முதன்மையான பங்கு உண்டு. குறிப்பாக, பண்டைய காலத்தில் ஓர் அரசனை உருவாக்குவதில் அவனது ஆசிரியருக்கு முக்கியப் பங்கு இருந்தது. குருகுலக் கல்விபோல ஆசிரியருடன் தங்கி அவருக்குச் சேவை செய்து நல்லறிவையும் அறத்தையும் வீரத்தையும் கற்றுக்கொள்வது அரசர்களின் மரபு. இரண்டு ஆசிரியர்கள் வரலாற்றில் தனித்து அறியப்படுகிறார்கள். ஒருவர், சந்திர குப்த மௌரியனை உருவாக்கிய சாணக்கியர். ராஜதந்திரி, அரசியல் மாமேதை, நீதி சாஸ்திரம் கற்ற பேராசான் என்று புகழப்படும் சாணக்கியர், மௌரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தவர். மற்றொருவர், ஒளரங்கசீப்புக்குக் கல்வி போதித்த முல்லா சாஹிப் என்ற ஆசிரியர். முல்லா, தனக்கு முறையாகக் கல்வி போதிக்காமல் சுயபுகழ்ச்சியும் முகஸ்துதியும் அத்துமீறிக்கொண்டவர் என்று 1652-ல் ஒளரங்கசீப் மிகக் கோபமாக ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். இது, வரலாற்றில் இடம் பெற்ற ஒரு மோசமான ஆசிரியனைப் பற்றிய அரிய பதிவு. இந்த இரண்டு ஆசிரியர்களும் எதிரெதிர் துருவங்கள்.

ஒருவர் மாமன்னரை உருவாக்கி அறத்தை நிலைநாட்டியவர். மற்றவர் சுயநலத்துக்காக கல்வியை அடகுவைத்தவர். வரலாறு இருவரையுமே நினைவு வைத்துள்ளது!

எனது இந்தியா!

தத்துவஞானி, மகா பண்டிதர் என அழைக்கப்பட்ட சாணக்கியர், தட்சசீலப் பல்கலைக்கழகத்தில் ஆசிரி​யராகப் பணியாற்றியவர். சந்திர குப்தனுக்கும் அவனது மகன் பிம்பிசாரனுக்கும் ஆசானாக இருந்தவர். சந்திர குப்தனை அரியணையில் ஏற்றுவதாக அவர் செய்த சபதம் ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியது. மாக்கியவல்லியின் ராஜதந்திரங்களைப் பற்றி இன்று வியந்து பேசுகிறோம். ஆனால், அதற்கு 1,800 ஆண்டுகளுக்கு முன்பே அர்த்தசாஸ்திரம் எழுதி அரசியலுக்கு இலக்கணம் வகுத்து இருக்கிறார் கௌடில்யர். இதுவும் சாணக்கியரின் மறுபெயரே. அவரை விஷ்ணுகுப்தன் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். பொருளாதாரம், நீதி, நிர்வாகம், படை நடத்துதல், நல்லாட்சி தருதல் என அரசின் அடிப்படை அம்சங்களைத் தெளிவாக வரையறை செய்கிறது அர்த்தசாஸ்திரம். சாணக்கியர் கி.மு 350-ல் பிறந்தவர். இவரது பிறப்பிடம் எதுவெனத் தெளிவான குறிப்புகள் இல்லை. ஆனால், பாடலிபுத்திரத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பௌத்த நூலான மகாவம்ச தீபிகையில் சாணக்கியரின் சொந்த ஊர் தட்சசீலம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தென் இந்தியாவைச் சேர்ந்தவராக சாணக்கியர் இருக்கக்கூடும் என்றும் சமண சிந்தாமணி கூறுகிறது. விஷ்ணுகுப்தர் என்பவரும் கவுடில்யர் என்பவரும் ஒருவர் அல்ல என்று சொல்​லும் வரலாற்று அறிஞர்களும் இருக்கிறார்கள். தட்ச சீலத்தில் இருந்த பௌத்தப் பல்கலைக்கழகத்தில் தத்துவம் போதித்து இருக்கிறார் சாணக்கியர். இள வயதிலேயே தேர்ந்த ஞானமும் விவேகமும் தைரியமும்கொண்டு இருந்த சாணக்கியர், சந்திர குப்தனைக்கொண்டு நந்தவம்சத்தை அழித்து மௌரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். சமஸ்கிருத இலக்கியங்களில் சாணக்கி​யரைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம். குறிப்பாக, 'முத்ரா ராட்சசம்’ என்ற நாடகம் சந்திர குப்தன் ஆட்சியைப்பற்றிக் குறிப்பிடுகிறது.

அந்த நாடகத்தில் சாணக்கியரோடு சந்திர குப்தனுக்கு ஏற்பட்ட ஆழமான நட்பு விவரிக்கப்படுகிறது. மௌரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க சாணக்கியர் மேற்கொண்ட தந்திரங்கள் இன்றளவும் முக்கியமான அரசியல் பாடங்களாகக் கருதப்படுகிறது. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க அதன் அடிப்படை வலிமை​யானதாக இருக்க வேண்டும்.

எனது இந்தியா!

அடிப்படையில் இந்தியா ஒரு விவசாய நாடு என்பதால், இங்குள்ள மக்கள் சமாதானத்தையும் அமைதியையும் விரும்புபவர்களாக இருந்தனர். இந்த மனப்பாங்கை,  நிலமே மனிதர்களுக்கு கற்றுத்தருகிறது. பூமியிடம் இருந்து மௌனத்தையும் காத்திருப்பதையும் தன்னலமற்றப் பகிர்ந்துகொள்ளலையும் இந்தியர்கள் கற்றுக்கொண்டனர். அதனால்தான் அவர்களுக்கு இன்னொரு தேசத்தின் மீது படையெடுத்துச் சென்று நாடு பிடிக்கும் ஆசை இல்லை. தனது பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள வலிமையான ஒருவரை நாடிச் செல்வது எளிய மனிதர்களின் இயல்பு. இதே மனநிலைதான் அரசனைத் தேர்வு செய்வதிலும் மக்களுக்கு இருக்கிறது என்கிறார் சாணக்கியர். வலிமையான மைய அரசு அமைவதுதான் சாம்​ராஜ்யத்தை உருவாக்குவதில் முதல் படி. அதைத் தனது சீடரான சந்திர குப்தனைக்கொண்டு மெய்யாக்கிக் காட்டினார் சாணக்கியர். இன்றும் ஆட்சிப் பணியில் இருப்பவர்களுக்கு ஆதார நூலாகவே அர்த்த சாஸ்திரம் இருக்கிறது.

சந்திர குப்தனுடைய சபையில் ராஜகுருவாகப் பணியாற்றிய சாணக்கியர் குறித்து ஏராளமான கதைகள் இருக்கின்றன. அவருடைய மரணம்கூட புதிரானது. பிந்துசாரன்தான் சாணக்கியரைக் கொன்றான் என்று கூறும் வரலாற்று ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். அரசனின் கோபத்துக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்டார் சாணக்கியர் என்றொரு கதையும் இருக்கிறது. உயிரோடு அவர் புதைக்கப் பட்டதாக சமண மரபுக் கதைகள் கூறுகின்றன. சாணக்​கியரின் வாழ்க்கை தெளிவற்ற சித்திரமாக இருந்தாலும் அவரது அர்த்த சாஸ்திரம் இந்தியாவின் மகத்தான நீதி நூலாகக் கொண்​டாடப்படுகிறது. 455 சூத்திரங்​​களைக்​கொண்ட அர்த்த சாஸ்திரத்தில் 216 சூத்திரங்கள் ராஜ​நீதியை வலியுறுத்துகின்றன. அர்த்த சாஸ்திரம் என்பது ஒரு தொகை நூல்தான். இதில் கூறப்​பட்டுள்ள அறக் கருத்துக்கள் முன்னதாகப் பலராலும் சொல்லப்பட்டவை. அவற்றை சாணக்கியர் தொகுத்துத் தந்து இருக்கிறார் என்று கூறும் ஆய்வாளர்களும் இருக்கிறார்கள். இதுபோலவே, மகாபாரதத்தில் வரும் விதுரன் அருளியதாகச் சொல்லப்படும் விதுர நீதியும் ஒரு முக்கியமான நீதி சாஸ்திர நூல். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நிறைய ஒற்றுமைகளைக் காண முடிகிறது.

குறிப்பாக, அரசன் எவ்வாறு நீதி வழங்க வேண்டும் என்பதற்கு இரண்டு நூல்களும் ஒன்றுபோலவே வழிகாட்டுகின்றன. ஆகவே, இந்த அறக் கருத்துக்கள் இந்தியச் சமூகத்​தில் தொன்மையாக இருந்து வந்திருக்கின்றன என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. சந்திர குப்தனின் வழியாக வரலாற்​றின் ஒளி வீசும் ஆசானாக சாணக்கியர் நிலைபெற்றுவிட்டார். ஆனால், ஒளரங்கசீப்புக்கு ஆசிரி​யராக இருந்தபோதும் கறைபடிந்த மேகமாகவே காட்சி அளிக்கிறார் முல்லா சாஹிப். ஒளரங்கசீப் சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்ட பிறகு, முல்லா சாஹிப், 'ஒளரங்கசீப் சபையில் தனக்கு கௌரவப் பதவியும் சன்மானமும் தர வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து இருந்தார். அதற்குப் பதிலாகத்தான், ஒளரங்கசீப்  இந்தக் கடிதத்தை எழுதி இருக்கிறார். இந்தக் கடிதம், தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு, துக்ளக் இதழில் 01.11.1974-ல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்தக் கடிதத்தின் முழு வடிவம் இது. ஒளரங்கசீப்பின் கோபத்தையும் கல்வியின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டையும் இந்தக் கடிதம் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது. அதோடு, ஆசிரியர்களின் பொறுப்பு உணர்ச்சியையும் உண்மையைத் தைரியமாக எடுத்துச் சொல்லும் துணிவையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அந்த வகையில், இந்தக் கடிதம் வெளியாகி 400 ஆண்டுகளுக்கு மேலாக ஆனபோதும் இன்றைக்கும் அது பொருத்தமானதாகவே உள்ளது. இனி, ஒளரங்கசீப்பின் கடிதம்...

''கற்றவரே!

நீர் என்னிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன? நான் உங்களை என்னுடைய அரச சபையில் ஒரு முக்கியப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று உங்களால் நியாயமாக எதிர்பார்க்க முடியுமா? ஒன்று சொல்கிறேன். நீங்கள் எனக்கு எப்படிக் கல்வி போதித்து இருக்க வேண்டுமோ... அப்படிச் செய்து

எனது இந்தியா!

இருந்தால், உங்களுக்கு நான் பதவியைத் தருவதுபோன்ற நியாயமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது.

ஏனென்றால், நான் ஒரு விஷயத்தை நிச்சயமாக ஒப்புக்கொள்வேன். ஒரு குழந்தை தன்னுடைய தந்தைக்கு எவ்வளவு கடமைப்பட்டு இருக்கிறதோ, அந்த அளவுக்குத் தனக்கு முறையான கல்வியைப் போதித்த ஆசிரியனுக்கும் கடமைப்பட்டு இருக்கிறது.

ஆனால், நீங்கள் எனக்குப் போதித்த முறையான கல்வி என்பது எங்கே இருக்கிறது?

ஐரோப்பாவை ஒன்றுமில்லாத ஒரு சூன்யப் பிரதேசம் என்று போதித்தீர்கள்.  போர்ச்சுக்கீசிய நாட்டு மாபெரும் மன்னரைப் பற்றியோ, அவருக்கு அடுத்த ஹாலந்து மன்னரைப் பற்றியோ, இங்கிலாந்து மன்னரைப் பற்றியோ, நீர் எமக்கு ஒரு விவரமும் கூறவில்லை. பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாட்டு மன்னர்களை எல்லாம் நமக்கு அடங்கிய மிகச் சிறிய குறுநில மன்னர்கள் என்று கூறினீர்கள். ஹிந்துஸ்தான் மன்னர்களின் பெயரைக் கேட்டாலே உலகத்தில் எந்த நாட்டு மன்னனும் நடுங்கினான் என்று கதை கட்டினீர்கள். எங்கள் பரம்பரையைப் புகழ வேண்டும் என்பதற்காக, உலகத்தில் உள்ள மற்ற நாடுகள் எல்லாம் நமக்கு அடங்கியவையே என்று கூறினீர்கள்.

ஆஹா...! வியந்து பாராட்டப்பட வேண்டிய சரித்திர அறிவு! எனக்கு நீங்கள் என்ன கற்றுக் கொடுத்து இருக்க வேண்டும்?  உலக நாடுகளில் எல்லாம் என்ன நடக்கிறது? அந்த நாடுகளின் பலம் என்ன? அவர்களின் போர்முறைகள் என்ன? மதக்கோட்பாடுகள் என்ன? ராஜ தந்திரங்கள் என்ன?  இவற்றை எல்லாம் எனக்கு நீங்கள் கற்றுக்கொடுத்து இருக்க வேண்டாமா? உண்மையான சரித்திரத்தை எனக்குக் கற்றுக்கொடுத்து பல நாட்டு மன்னர்களின் வாழ்வையும் தாழ்வையும் அவர்களது எழுச்சியையும் வீழ்ச்சியையும் நான் உணரும்படி செய்து இருக்க வேண்டாமா? எவ்விதமான தவறுகளால் அல்லது எதிர்பாராத நிகழ்ச்சிகளால் அங்கே புரட்சிகள் தோன்றின? அந்த சாம்ராஜ்யங்கள் அழிந்தன  என்றெல்லாம் நீங்கள் எனக்குச் சொல்லிக்கொடுத்து இருக்க வேண்டாமா?

எனது இந்தியா!