விகடன் வரவேற்பறை
காசு ஒரு பிசாசு - கலையரசன்
வெளியீடு: கருப்புப் பிரதிகள், B55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை-5. பக்கங்கள்: 108 விலை:

75

உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணங்கள், உலக நாடுகளில் அதன் தாக்கம், அதை மக்கள் எதிர்கொண்ட முறை என்று மிக விரிவாக விஷயங்களைப் பேசுகிற நூல். அமெரிக்காவின் அழுக்குகள், வங்கிக் கடன் வாங்கிக் கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் அமெரிக்க நடுத்தரவர்க்கத்தினரின் நிலை, இலங்கையின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு, உலக மயமாக்கலின் விளைவாக உலகெங்கும் உயர்ந்த விலைவாசியைத் தொடர்ந்து வெடித்த புரட்சிகள் என்று அனைத்தையும் அலசுகிறது நூல். செல்வந்தர்களைக் குறைந்த வரியும், ஏழைகளை அதிக வரியும் கட்டவைக்கும் 'தட்சரிச’த்தின் பிடியில் ஐரோப்பிய, மேற்குலக நாடுகள் சிக்குண்டு இருப்பதையும் கிரீஸ் நாட்டில் எழுந்த இளைஞர்களின் புரட்சிக்குப் பொருளாதார நெருக்கடி வித்திட்டதையும் பதிவுசெய்யும் இந்த நூலை வாசித்து முடிக்கையில் உலகச் சுற்றுலா சென்று, ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த பகுதிகளைப் பார்வையிட்டதான உணர்வு தோன்றுவது நூலாசிரியரின் எளிய மொழிக்குக் கிடைத்த வெற்றி.
க்ரியா இயக்கம்: செந்தில்ராம் வெளியீடு: சென்சார்ட் பிக்சர்ஸ்

சுப்ரமணி என்ற சிறுவனைப் பற்றிச் சிலாகித்துப் பேசுகிறார் ஒரு பெரியவர். போட்டோ எடுப் பதில் ஆர்வம்கொண்ட சுப்ரமணி, அட்டை ஒன்றை கேமராவாகப் பாவித்து, இயற்கையைக் கண்ணுக்குள் சிறை பிடிக்கிறான். தொட்டியில் விழுந்த ஓணான் ஒன்றை வெளியேற்ற அந்தப் பெரியவர் சிரமப்படும்போது, ஒரு நீண்ட கம்பை வைத்து, அதன் போக்கில் தானாகவே வெளியேறவைக்கிறான். சுப்ரமணியின் புத்திசாலித்தனத்துக்குப் பரிசாக, தன்னிடம் பொக்கிஷமாக இருக்கும் கேமராவைப் பரிசளிக்கிறார். குழந்தைகளின் உலகம், அவர்களின் புத்திக்கூர்மை, பெரியவர்கள் அதை எப்படி ஊக்குவிக்க வேண்டும் என்பதைப் போகிற போக்கில், அதேசமயம் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
www.moviefone.com ஹாலிவுட் பல்ஸ் படிக்க...

ஹாலிவுட் சினிமா டைரக்டரி. அந்தந்த வாரம் வெளியாகும் சினிமாக்களின் டிரெய்லர், கதைச் சுருக்கம் போன்ற தகவல்கள். முந்தைய வாரம் வெளியான படங்களை ஏன் பார்க்க வேண்டும், ஏன் பார்க்க வேண்டாம் என்று சுவாரஸ்யமாக விமர்சிக்கும் செய்திகள். தற்போது ஹிட் அடித்திருக்கும் படங்களின் தயாரிப்பில் நிகழ்ந்த சுவாரஸ்யம், தெரிந்த சினிமாக்களைப் பற்றி தெரியாத தகவல்கள், படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரங்கள், 2012-ல் இதுவரை வெளியானவற்றுள் சிறந்த படம் எது எனக் கலந்துகட்டிக் கலக்கும் தளம். ஹாலிவுட்டில் வெள்ளிக்கிழமை பல்ஸ் அறிந்துகொள்ள இந்தத் தளம் தட்டலாம்.
www.karundel.com கருந்தேள் முதல் சிலந்தி மனிதன் வரை...

'கருந்தேள் கண்ணாயிரம்’ என்ற பெயரில் ராஜேஷ் எழுதும் வலைப்பூ. உலக சினிமாபற்றிய நுட்பமான பார்வையுடன் விரியும் வலைதளத்தின் ஒவ்வொரு பதிவும் அபாரம். குறிப்பாக, 'லார்டு ஆஃப் த ரிங்’ படம்பற்றிய தொடர் பதிவுகளை 280 பக்க மின் புத்தகமாக வடிவமைத்து இலவசமாகவே பதிவிறக்கம் செய்ய வசதி அளித்திருப்பது அசரவைக்கும் உழைப்பு. 80-களில் வெளிவந்த தமிழ்ப் படங்கள்பற்றிய பதிவில், அப்போது இருந்த வியாபாரப் போட்டி, ஒப்பீடு கள், அதற்கான யூ டியூப் இணைப்புகள் என விரிவாக எழுதப்பட்டுள்ளது. அக்கறை எழுத்துகள் நிரம்பிய தரமான வலைப்பூ.
அமரா இசை: டி.இமான் வெளியீடு: சரிகம விலை:

99

டெக்னோ பீட்டில் குத்தி எடுக்கும் 'சிம்மக்கல்லு சிம்ரன்...’ பாடலை சீர்காழி சிவசிதம்பரமும் சின்மயியும் அற்புதமாகப் பாடி உள்ளார்கள். நரேஷ் ஐயர், திவ்யா குரலில் 'தீயும் தீயும் தீண்டித் தீண்டி தீபம் ஏற்றுதாம்...’ பாடல் ரொமான்ஸ் ரகசியம் பேசுகிறது. 'என்னென்னமோ...’ பாடலின் 'பட்டப்பகல் கனவா... பக்கத்தில் நிலவா’ எனக் கவிதை வரிகளில் ஈர்க்கிறது. பெரும் பட்டாளமே பாடிய 'கூரப் பொடவ...’ மற்றும் 'அத்தை மகளையும்...’ பாடல்களைக் கேட்கலாம் ரகம். இலவச இணைப்பாக வரும் மூன்று பாடல்களின் 'கரோக்கி’ இசை ஈர்க்கிறது.