மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!

கல்வி வாணிபம்!

##~##

(பதவி கேட்ட தன் பழைய குருவுக்கு கோபத்தோடு ஒளரங்சீப் எழுதிய கடிதம் இப்படித் தொடர்கிறது...) 

உங்களிடம் இருந்து என்னுடைய முப்பாட்டனார்களின் பெயர்களைக் கூட நான் அறிந்துகொள்ளவில்லை. ஹிந்துஸ்தான் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த புகழ்பெற்ற என்னுடைய முன்னோர்களைப் பற்றிக்கூட உங்களிடம் இருந்து நான் ஒன்றும் தெரிந்துகொள்ளவில்லை. இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த அவர்களுடைய சரித்திரத்துக்கும் நீங்கள் எனக்குக் கற்பித்ததற்கும் அவ்வளவு பெரிய இடைவெளி!

எனக்கு அரேபிய மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுக்க முனைந்தீர். பன்னிரெண்டு வருடங்களுக்கும் மேலாக விழுந்து விழுந்து படித்தாலும் முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியாத ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்ததன் விளைவாக... என் வாழ்நாளில் அவ்வளவு நேரத்தை வீணடித்தேன். இதற்காக நான் உங்களுக்கு எவ்வளவு கடமைப்பட்டு இருக்கிறேன், தெரியுமா?

ஒரு வருங்கால அரசன் பன்மொழிப் புலவனாக இருந்துதான் தீர வேண்டுமா என்ன? அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பேசும் மொழியை விடுத்து இப்படி ஒரு கடினமான மொழியில் புலமை அடைவதுதான் ஒரு அரசனுக்குப் பெருமையா? ராஜ பரிபாலனத்துக்கான அவசியமான முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொண்டு இருக்க வேண்டிய நான் அரேபிய மொழியைக் கற்பதில் எத்தனை காலம் கழித்தேன்!

எனது இந்தியா!

ஒரு மனிதன் தன்னுடைய இளம் வயதில் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டால், அந்த நினைவு வாழ்நாள் முழுவதும் நிலைத்து அவனைப் பெரும் சாதனைகளைச் செய்யத் தூண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? சட்டம், மத வழிபாட்டு முறைகள், விஞ்ஞானம்  ஆகியவற்றை எல்லாம் என் தாய்மொழியில் நான் கற்றிருக்க முடியாதா? என் தந்தை ஷாஜஹானிடம், எனக்கு மதத் தத்துவங்களை போதிக்கப்போவதாக நீங்கள் சொன்னது எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அர்த்தமே இல்லாத, இருந்தாலும் புரிந்துகொள்ள முடியாத, புரிந்துகொண்டாலும் மனத்திருப்தி அளிக்காத, திருப்தி அளித்தாலும் இன்றைய சமுதாயத்தில் எந்தப் பயனுமே இல்லாத புதிர்களை எல்லாம் என்னிடம் போட்டுக்கொண்டு இருந்தீர்கள். அவை எல்லாம் புரிந்து கொள்ள மிகக் கடினமானவை. மறப்பதற்கு மிக எளியவை. நீங்கள் போதித்த மதத் தத்துவங்களைப் பற்றி என் நினைவில் மீதம் இருப்பதெல்லாம் காட்டுமிராண்டித்தனமான இருள் அடர்ந்த பெரிய பெரிய வார்த்தைகள்தான். மேதாவிகளையும்கூட குழப்பக்கூடிய பயங்கரமான வார்த்தைகள்!

அதுமட்டுமா... 'உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும். உங்களைப் போன்ற மேதாவிகளுக்குத்தான் இந்த பயங்கர வார்த்தைகளில் அடங்கி இருக்கிற அரிய தத்துவ ரகசியங்கள் புரியும்’  என்று மற்றவர்கள் நினைத்து ஏமாந்துபோவதற்காக உங்களைப் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட வெறும் வார்த்தைகள் அவை.

காரண காரியங்களை மட்டுமே பார்க்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தக்கூடிய மதத் தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித்து இருந்தால், மனதை ஒரு நிதானத்தில் அடக்கிவைக்கப் பயன்படும் அரிய

எனது இந்தியா!

தத்துவங்களை எனக்கு நீங்கள் போதித்து இருந்தால், அதிர்ஷ்டத்தால் தாக்கப்பட்டு செல்வத்தில் திளைத்தாலும் சரி,  துரதிர்ஷ்டத்தால் தாக்கப்பட்டு தோல்வியைத் தழுவினாலும் சரி,  இரண்டுக்குமே மயங்காத மனோ தைரியத்தை அளிக்கக்கூடிய தத்துவங்களை நீங்கள் எனக்குப் போதித்து இருந்தால்...  நாம் யார்? உலகத்தின் மேன்மை என்ன? எப்படி இந்த பூமி இயங்குகிறது?  என்பதை எல்லாம் நான் உணர்ந்துகொள்ள உதவி செய்யும் வகையில் நீங்கள் எனக்குக் கல்விபோதித்து இருந்தால்..  

அலெக்ஸாண்டர் அவனு டைய குரு அரிஸ்டாட்டிலுக்கு எவ்வளவு கடமைப்பட்டு இருந்தானோ, அதைவிட அதிகமாக உங்களுக்கு நான் கடமைப்பட்டு இருப் பேன். அலெக்ஸாண்டர் அரிஸ்​டாட்டிலுக்குச் செய்த தற்கும் மேலாக உங்களுக்குச் செய்து இருப்பேன். நன்றி செலுத்தி இருப்பேன்.

எப்போதும் என்னை முகஸ்துதி செய்துகொண்டே இருந்ததற்குப் பதிலாக ராஜபரிபாலனத்துக்குத் தேவையான விஷயங் களை எனக்கு நீங்கள் கற்றுக்கொடுத்து இருக்க வேண்டாமா? குடிமக்களுக்கு அரசன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? அரசனுக்குக் குடிமக்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்பதை எல்லாம் சொல்லிக் கொடுத்து இருக்க வேண்டாமா?

என் வாழ்க்கைப் பாதையில் ஒரு கட்டத்தில் என்னுடைய பதவிக்காகவும் உயிருக்காகவும்கூட என்னுடைய உடன்பிறந்த சகோதரர்களுடனேயே நான் வாள் எடுத்துப் போரிட நேரிடும் என்பதை உணரும் அளவுக்கு நீங்கள் போதித்த கல்வி அமைந்து இருக்க வேண்டாமா? ஒரு நகரத்தை எப்படிக் கைப்பற்றுவது? ஒரு படையை எப்படி வழிநடத்திச் செல்வது  என்பதை எல்லாம் நான் அறிந்துகொள்வதில் நீங்கள் அக்கறை காட்டினீர்களா? பயனுள்ள விஷயங்களை ஏதாவது நான் இப்போது அறிந்துவைத்திருந்தால், அதற்காக நான் கடமைப்பட்டிருப்பது வேறு பலருக்குக்தான்! நிச்சயமாக பெருமை எதுவும் உமக்கு அல்ல! போங்கள்! நீங்கள் எந்தக் கிராமத்தில் இருந்து வந்தீர்களோ, அந்தக் கிராமத்துக்கே போய்ச் சேருங்கள்! நீர் யார்? எங்கிருந்து வந்தீர்கள்? என்ன ஆனீர்கள்? இதை எல்லாம் எவருமே தெரிந்து கொள்ள வேண்டாம்!''

- இப்படி முடிகிறது ஒளரங்சீப்பின் கடிதம். எப்படி ஒரு கோபம் வெளிப்பட்டு இருக்கிறது, பார்த்தீர்களா?

கல்வியைப் போதிப்பதற்கு கட்டணம் வாங்கலாமா? கூடாதா? என்பதைப் பற்றி பண்டைய கிரேக்கத்தில் வாதப் பிரதிவாதங்கள் நடந்து இருக்கின்றன. வசதி உள்ளவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கலாம். ஆனால், ஏழைகளிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கிரேக்க அரச சபை தீர்மானம் செய்தது. அன்று தொடங்கிய கல்வி வணிகம் மெள்ள வளர்ந்து ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு பெருமளவு வணிக சந்தையாகிப்போனது. அதன் உச்ச நிலைதான் இன்றுள்ள கல்விச் சூழல். இன்று நம்மிடம் அர்த்த சாஸ்திரம் உள்ளிட்ட அற நூல்கள் இருக்கின்றன. ஆனால், அந்த அறத்தை நாம் முழுமையாகக் கைவிட்டுவிட்டோம்.

அந்த உண்மையை முகத்தில் அறைவதைப் போல சொல்வதற்காகவே சந்திரகுப்த மவுரியனின் குருவான சாணக்கியரும், ஒளரங்கசீப்பின் இந்த குருவும் இரண்டு துருவங்களாக நினைவூட்டப்படுகிறார்கள்.

எனது இந்தியா!