விகடன் வரவேற்பறை
அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்
பால் சக்காரியா
தமிழில்: கே.வி.ஜெயஸ்ரீ வெளியீடு: வம்சி புக்ஸ் 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை-1.
விலை:

100 பக்கம்: 160

மலையாள எழுத்தாளர் பால் சக்காரியா வின் சிறுகதைகள் அடங்கிய நூல். குழந்தை களின் உலகம், ஒரு சராசரி மலையாளியின் மன ஓட்டங்கள், விளிம்பு நிலை மனிதர்களின் பிரச்னைகள், அரசியல் பகடி, வாழ்வின் மீதான கரிசனம், நேசிக்கும் மனிதர்கள் மீதான அன்பு என்று ஒவ்வொரு கதையிலும் ஒவ்வோர் உணர்வு பிரதானம். 'அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்’ கதையில் நெகிழ்ச்சியுடனும் நன்றி உணர்வுடனும் அல்ஃபோன்சம்மா வாழ்நாளில் தன்னைச் சமீபித்தவர்களைத் தனது இறுதிச்சடங்கின்போது காற்றாக மாறி முத்தமிட்டுச் செல்வது சிலிர்ப்பு. 'உறுதிமொழி’ கதையில் சின்னச் சின்னக் கேள்வி பதில்களை வைத்து கதையைப் பின்னி அரசியல் நையாண்டி செய்யும் பால் சக்காரியாவின் ஆளுமை வியக்கவைக்கிறது.
பகல் காட்சி
இயக்கம்: ஷியாமளன்
வெளியீடு: சுபா க்ரியேஷன்ஸ்

காதல், பாசப் போராட்டங்களுக்கு இடையே கையில் இருக்கும் கடைசிப் பணத்தைச் செல வழித்து தயாரிப்பாளருக்குக் கதை சொல்கிறார் ஓர் உதவி இயக்குநர். கதை பிடித்துப்போய் தயாரிப்பாளர் படம் தயாரிக்கிறார். ஆனால், வெளியாகும் அன்றே திருட்டு டி.வி.டி. வெளியாக, தற்கொலைக்கு முயல்கிறார் தயாரிப்பாளர். பிறகு என்ன நடந்தது என்பது க்ளை மாக்ஸ். திருட்டு டி.வி.டி-யால் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நச்சென உணர்த்தும் குறும்படம்.
இணையம் இணைவோம்.
http://ponmalars.blogspot.com

அசத்தல் தொழில்நுட்ப வலைப்பூ. இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருட்கள், இணையத்தின் புதிய வசதிகளைப் பயன்படுத்தும் முறை, தவறுதலாக அழித்துவிட்ட ஃபைலை மீட்கும் வழி, கூகுள் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டும் வழிமுறை என அனைத்து இடுகைகளும் இணைய உலகத் தொழில்நுட்பத்தைக் கைக்கொள்ள கற்றுத்தருகின்றன.
சிரிப்பு டாட்காம் zefrank.com

டான்ஸ் ஆடத் தெரியாதவர்கள் எளிமையாக டான்ஸ் ஆடுவது எப்படி என்று பொழுதுபோகாமல் சும்மாச்சுக்கும் சே ஃப்ராங்க் ஒரு குறும்பு வீடியோவை அப்லோட, அது வைரல் ஹிட் அடிக்க... இப்போது சே ஃப்ராங்க் நெட் சூப்பர் ஸ்டார். குறும்பு ஐடியாக்களை முதலில் அவர் செய்துகாட்டி, பிறகு நம்மையும் செய்யச் சொல்லி அதை இந்தத் தளத்தில் பகிர்ந்துகொள்கிறார். 'அன்றும் - இன்றும்’ போட்டோக்கள், ஒரு நிமிட விளையாட்டுகள், காதலில் தோற்றால் என்னவெல்லாம் நடக்கும் என்று காமெடிக் கட்டுரைகள் எனச் சிரிசிரி தளம்!
நான்
இசை: விஜய் ஆண்டனி
வெளியீடு: ஜெமினி ஆடியோ விலை:

99

எலெக்ட்ரிக் கிதார் ராஜ்யத்தில் ஃபாஸ்ட் பீட் பாடலாக ஒலிக்கும் 'மக்கயாலா...’ பாடல் இனி பப்களின் சாய்ஸ். 'உலகினில் மிக உயரம்... மனிதனின் சிறு இதயம்’ பாடல் அழகிய மெலடி. அரேபியன் ஸ்டைலில் பின்னியெடுக்கிறது 'தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடல். தனிமையும் சோகமும் கலந்து ஒலிக்கும் 'தினம் தினம்...’ பாடலில் தீபக்கின் குரல் ஃப்ரெஷ். 'நோ ஒன் இஸ் பெர்ஃபெக்ட்...’, 'தப்பெல்லாம் தப்பே இல்லை வெர்ஷன்- 2’ என தீம் மியூஸிக்கிலும் ஈர்க்கிறது விஜய் ஆண்டனியின் இசை.