விகடன் வரவேற்பறை
மூன்றாம் உலகப் போர் வைரமுத்து
வெளியீடு;> சூர்யா லிட்ரேச்சர் (பி)லிட், 32- டைகர் வரதாச்சாரி சாலை, முதல் தெரு, கலாக்ஷேத்ரா காலனி, பெசன்ட் நகர், சென்னை-90.
பக்கங்கள்; 400 விலை;

300
##~## |
ஒருபுறம் உலகமயமாக்கல், இன்னொரு பக்கம் புவிவெப்பமாதல்... இரண்டுக்கும் இடையே மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்க்கை எப்படிப் பந்தாடப்படுகிறது என்பதைச் சொல்கிறது 'மூன்றாம் உலகப் போர்’. உழைக்கும் மக்களின் - குறிப்பாக - விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வளர்ச்சி யின் பெயரால் முதலாளித்துவ அரசியல் எப்படி எல்லாம் நாசமாக்குகிறது என்பதைக் கருத்தமாயி என்கிற வாழ்ந்து கெட்ட விவசாயியின் கதை மூலம் விவரிக்கிறார் கவிப் பேரரசு வைரமுத்து.
விகடனில் வெளியானபோதே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நாவலுக்கு இரு முக்கியத்துவங்கள் உண்டு. ஒன்று, இன்றைய நவீன விவசாயம் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கான தீர்வுகளைத் தமிழ் பாரம்பரிய விவசாயத்தில் இருந்து மறுஅறிமுகம் செய்வது. இரண்டாவது, இந்த நாவலில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அபாரமான வட்டார மொழிப் பிரயோகம்!
''மண்ணுக்கு உசுர் இருக்கா? புதுச் சங்கதியா இருக்கே!''

''சின்னப்பாண்டி, உன் தந்தைக்கு இதை நீ சொல்லித் தரவில்லையா? மண் என்பது ஜீவராசிகள் தங்கி வசிக்கும் உயிர்க்கூடு. கண்ணறியாத நுண்ணுயிர்களை - காளான் உயிரிகளை - மண்புழுக்களை - பாசி இனங்களை - பூச்சியின் கருமுட்டைகளை - ஒன்று கூட்டி வைத்திருக்கும் உயிர்த்தொகுதிதான் மண். மண்ணுக்குத் தனியாக ஆற்றல் ஏது? இந்த உயிர்த் தொகுதியின் உந்துசக்திதான் மண். கடப்பாரைக்கு உடையாத கரும்பாறை ஒரு தாவரத்தின் வேருக்கு நெக்குருகி நிற்கிறதே... எப்படி? எல்லாம் பாக்டீரியாக்கள் படுத்தும்பாடு. பாறைகளை உடைக்கும் பாக்டீரியா பழங்குப்பைகளை மக்கச் செய்யாதா? உலோகங்களையே கரைக்கும் அந்த உயிரணுக்கள் தாவரங்களின் வேர்களுக்குத் தாய்ப்பால் ஊட்டாதா? மண்ணை எது உயிரோடு வைத்திருக்கிறதோ அதைக் கொல்கிறீர்கள். ரசாயன உரம் தெளித்து, மண்ணைக் கொன்று விவசாயம் பார்க்கிறீர்கள். பிறகு, பிணத்துக்கு எல்லோரும் கூடிப் பிரசவம் பார்க்கிறீர்கள். மண் என்பது ஜடமல்ல; அது ஓர் உயிரி. மனிதக் கொலையிலும் கொடியது மண் கொலை.''
- விவசாயம் என்பது வெறும் தொழில் அல்ல; அது பல விஞ்ஞானத் தொழில்நுட்பங்களின் கூட்டுத் தொகுப்பு; சூழலோடு இயைந்த வாழ்க்கை முறை என்பதைச் சொல்ல நாவலில் வரும் இந்த ஒரு பகுதி போதுமானது. தமிழ் இலக்கியத்தில் வைரமுத்துவுக்குத் தனி இடம் உண்டு. அதை இந்த நாவல் உறுதிப்படுத்துகிறது இன்னொரு முறை!
www.amuthukrishnan.com
சிந்தனைத் தளம்!

அ.முத்துக்கிருஷ்ணனின் எழுத்துக்களின் தொகுப்பு இந்த வலைப்பூ. சுற்றுச்சூழல், சாதியம், உலகமயமாக்கல், பொருளாதாரம், சமூகம், மனித உரிமைகள், அணு அரசியல் போன்ற தலைப்புகளில் அக்கறையுடன் எழுதப் பட்டு பல்வேறு சிற்றிதழ்களில் வெளியான முத்துக்கிருஷ்ணனின் கட்டுரைகளை இந்த வலைப்பூவில் படிக்கலாம். இவர் எழுதிய நூல்கள்குறித்த விவரங்கள், பிற நூல்கள்குறித்த விமர்சனங்களும் காணக்கிடைக்கின்றன. வாரம் ஒரு கார்ட்டூன்குறித்தும், புத்தகம் குறித்தும் எழுதுகிறார். நேர்காணல்கள், ஊடகங்களில் அவர்குறித்து வந்த பதிவுகள் என்று பல தகவல்களைத் தருகிறது. அண்மையில் பள்ளிப் பேருந்து விபத்தில் பலியான ஸ்ருதிகுறித்த கட்டுரை பல்வேறு செய்திகளை நம் சிந்தனைக்குத் தருகிறது. கிறிஸ்துவ மிஷனரிகள் செய்த மத மாற்றம் காரணமாக விளைந்த சமூக மாற்றம் குறித்த பதிவும், அகதிகளாக்கப்பட்ட பழங்குடியினர்குறித்த பதிவும், குஜ்ஜர்களின் போராட்டம் குறித்த கட்டுரையும் இவற்றில் முக்கியமானவை!
மாற்றான்இசை; ஹாரிஸ் ஜெயராஜ்
வெளியீடு; சோனி மியூஸிக்
விலை;

125

வழக்கமான ஹாரிஸ் பாணி இசைதான் என்றாலும் டெக்னோவில் வித்தியாசம் காட்டி மகுடி ஊதுகிறார். 'ரெட்டைக் கதிரே...’ பாடலை க்ரிஷ்ஷின் குரலும் கல்யாணின் வயலின் இசையும் 'ஃப்ளோரசென்ட்’ ஆக்குகிறது. 'புயல் அடித்தும் வாழுதே இரு பறவைகள் ஒரு கூட்டில்... மெதுமெதுவாய்ப் பூக்கட்டும் இந்தப் பூக்கள் எதிர்க் காற்றில்!’ என நா.முத்துக்குமாரின் வரிகள் 'ஒட்டிப் பிறந்த’ இரட்டையர்களுக்கான இனிய இன்ட்ரோ. 'நாணி கோணி...’ பாடல் செம ரகளைக் கச்சேரி. பாடலில் ஸ்ரேயா கோஷலின் குரல் மென் தூறல். 'ஒரு காலை நேரம் நீ வந்தாலே... பனி வீசும் காற்றுக்குப் பணியாமல் தேகம் சூடேறும்’ - ரொமான்ஸ் ரகசியம் சொல்கிறது விவேகாவின் வரிகள். தீப்பிடிக்கவைக்கும் 'தீயே... தீயே...’ பாடல் எனர்ஜி மேளா. 'என்னமோ ஏதோ’ ஆலாப் ராஜு, தீ மூட்டும் சாருலதா மணி, மிக்கி மவுஸ் ஜாலம் காட்டும் சுசித்ரா - ஃப்ராங்கோவின் வசீகரக் குரல் கூட்டணி, ரசனை படையணி. 'அணுச் சிதைவு இல்லாமல் பெண்ணில் மின்சாரம்... அசைகின்ற சொத்துக்கள் உன்னில் ஏராளம்... அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம்’ என பா.விஜய்யின் வரிகளில் 'எக்கச்சக்க’க் குறும்பு. தாமரையின் வரிகளுக்கு சோகம் இழைக்கும் கார்த்திக் - ப்ரியா ஹிமேஷ் குரலில் ஒலிக்கும் 'யாரோ யாரோ...’ பாடல்தான் ஆல்பத்தின் ஒரே மென்மெலடி. 'கால் முளைத்த பூவே... என்னோடு பாலே ஆட வா வா... வோல்கா நதிபோலே நில்லாமல் காதல் பாட வா வா...’ என அழைக்கும் மதன் கார்க்கியின் 'ஐ-பாட்’டெழுத்தில் 'குலேபகாவலி’ மெட்டில் ஒலிக்கும் பாடல் செம அயிட்டம் நம்பர். இந்தத் துள்ளல் மெட்டு... நிச்சயம் ஆகும் ஹிட்டு!
பொய்க் குடம் இயக்கம்; அசோக் ரத்னம்
வெளியீடு; ஆர்ட் புரொடக்ஷன்ஸ்

ஐந்து வருடங்களாகக் குழந்தை இல்லாமல் ஊர்க்காரர்கள் மற்றும் குடும்பத்தாரின் ஏச்சுப்பேச்சுக்கு ஆளாகும் மனைவி. மகனுக்கு இரண்டாம் திருமணம் முடிக்கத் தீவிரமாகப் பெண் தேடும் மாமியார். இந்த நிலையில், கர்ப்பம் தரிக்கிறார் அந்தப் பெண். பிரசவ நாளை நெருங்கும் வேளையில் மருத்துவமனையில் பிறந்த குழந்தை யைத் திருடியதாகக் கைதுசெய்யப்படுகிறார் அந்தப் பெண். கணவனின் இரண்டாம் திருமணத் தைத் தடுக்கக் கர்ப்பம் என்று நாடகம் ஆடிய தையும், குழந்தையைத் திருடியதையும் போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொள்கிறார் அந்தப் பெண். குறைகள் இல்லாவிட்டாலும் பலருக்குக் குழந்தை பிறக்காததற்கு மன அழுத்தமே காரணம் என்கிற மருத்துவ உண்மையைச் சொல்லி, கணவன் - மனைவியைச் சேர்த்துவைக்கிறார் இன்ஸ்பெக்டர். கதையை முன் பின்னாகச் சொல்லி இருக்கும் திரைக்கதை உத்தி சுவாரஸ்யம். தாம்பத்யத்தில் பரஸ்பரப் புரிதல் எவ்வளவு முக்கியம் என்பதைச் சொன்ன விதத்தில் பாராட்டலாம்.
Discoverykids.com ஆன்லைன் ஆடுகளம்!

மிருகங்களின் உலகத்தைக் குழந்தைகளுக்கு எளிமையாகப் புரியவைக்கும் தளம். 'ஜெல்லி ஃபிஷ் என்பவை மீன்களே அல்ல; 650 மில்லியன் வருடங்களாக பூமியில் இருக்கும் அவற்றுக்கு மூளை, எலும்பு, இதயம் என எதுவும் கிடையாது. வவ்வால்களுக்குக் கண்கள் தெரியாது என்பது உண்மை அல்ல; பகலில் நன்றாகவே கண்கள் தெரியும். இரவில் இருள் காரணமாகக் குறையும் பார்வைத் திறனை, எதிரொலி அலைகள் மூலம் சரிசெய்துகொள்கின்றன. டைனோசரின் மிச்சமாக உலகத்தில் எஞ்சி இருப்பவை முதலைகள். அத்தனை பெரிய முதலையின் மூளை யின் மொத்த எடை எட்டு கிராமுக்குள் அடங்கிவிடும்’ இப்படியான செய்திகளோடு சுவாரஸ்யமான புதிர்கள், விடுகதைகள், கணினியின் எளிய பயன்பாட்டைப் பழக்கும் விளையாட்டுகள் என ஆன்லைன் ஆடுகளமாக இருக்கும் தளம்!