மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!

அனார்கலியின் காதல்!  

##~##

ரலாற்றில் புனைவு கலந்துவிடும்போது, அதைத் தனித்துப் பிரித்து எடுக்கவே முடியாது. முற்றிலும் உண்மையாக வரலாறு எழுதப்படுவது இல்லை. அதன் இடை​வெளியைப் புனைவுகளே பூர்த்திசெய்கிறது. பல நேரங்களில் வரலாற்று உண்மைகளைவிட, புனைவையே மக்கள் அதிகம் நம்புகின்றனர். இரண்டு முக்கியமான வரலாற்றுப் புனைவுகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒன்று, அக்பரின் மகன் சலீம் அடிமைப் பெண்ணான அனார்கலியைக் காதலித்தான். அது பிடிக்காத அக்பர், அனார்கலியை உயிரோடு சமாதி கட்டிவிட்டார் என்பது. மற்றொன்று, புத்தர் பன்றி மாமிசம் சாப்பிட்டு ஜீரணமாகாமல் இறந்துபோனார் என்பது. இந்த இரண்டும் உண்மையா? அல்லது யாரோ கட்டிவிட்ட கதைகள் சரித்திர உண்மைகள் என்ற பெயரில் உலவுகின்றனவா?

அனார்கலி பற்றி 'மொகல் இ ஆசாம்’ என்ற ஹிந்தித் திரைப்​படம் வெளியான காலத்தில் இருந்து இன்று வரை வாதப்பிரதி​வாதங்கள் நடக்கின்றன. அனார்கலி என்ற நடனக்காரி உண்மையிலேயே இருந்தாளா? அவள் சலீமைக் காதலித்த குற்றத்துக்காக உயிரோடு புதைக்கப்பட்டாளா? என்ற கேள்விகள் இன்றும் இருக்கின்றன. இதே நிகழ்வின் மாற்று வடிவம்போலவே கம்பரின் மகன் அம்பிகாபதி, சோழ இளவரசி அமராவதியைக் காதலித்த கதையும் இருக்கிறது.

எனது இந்தியா!

வரலாற்றின் ஊடாக இப்படியான புனைவுகள் ஆழமாக வேரூன்றிவிடுகின்றன. அதை, முழுவதும் பொய் என்று புறந்தள்ளவும் முடியாது. இதோ இருக்கின்றன சான்றுகள் என்று நிரூபிக்கவும் முடியாது. அவை, மக்களின் நம்பிக்கை உருவாக்கிய கதைகள்.

அனார்கலி கதையை நிரூபிக்க, லாகூரில் அனார்கலிக்காக கட்டப்பட்ட நினைவு மஹால் இருக்கிறது.

எனது இந்தியா!

ஷாஜகான் தனது காதலியின் நினைவாக தாஜ்மகால் கட்டப்படு​வதற்கு இதுவே முன்னோடி என்கின்றனர். இன்றும் லாகூரில் அனார்கலி பஜார் என்ற வீதி இருக்கிறது. அதை ஒட்டியே அந்த நினைவு மண்படம் இருக்கிறது.  அங்கே, சலீம் எழுதிய பிரிவுக் கவிதை ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. இந்த மஹால், நாதிரா என்ற நடன மங்கையின் நினைவாகக் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இவைதான் அனார்கலி வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் என்கின்​றனர் ஒரு சாரார்.

ஆனால், அனார்கலியை உருகிஉருகிக் காதலித்த சலீம் தனது நினைவுக் குறிப்பில் அனார்கலியைப் பற்றி ஒரு வரிகூட ஏன் எழுதவில்லை? அக்பரின் வாழ்க்கைக் குறிப்புகளிலும் அனார்கலி பற்றி ஒரு தகவலும் இல்லை. இவை தவிர, லாகூரின் வரலாற்றை விவரிக்கும் பஞ்சாப் சரித்திர நூல்களில் அனார்கலி பற்றி ஒரு சொல்கூட கிடையாது. ஆகவே, இது ஒரு கட்டுக்கதை. சுவராஸ்யத்துக்காகப் புனையப்பட்ட கதையை நிஜம் என்று மெய்ப்பிக்கப் போராடுகின்றனர். வரலாற்றில் இதற்கான எந்த நேரடிச் சான்றுகளும் இல்லை என்று மறுக்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

'மொகல் இ ஆசாம்’ இந்தியத் திரைப்பட வரலாற்றில் ஒரு காவியம். ஆசிப் இயக்கத்தில் 1960-ம் ஆண்டு வெளியானது இந்தப் படம். கவித்துவமான வசனங்களைக் கொண்ட இந்தப்படம் சலீம்-அனார்கலி ஜோடியின் காதலைக் கொண்டாடுகிறது. இந்தப் படத்தில் நடித்துள்ள பிரித்வி ராஜ்கபூரைப் பார்த்தால், அக்பர் இப்படித்தான் இருந்திருப்பார், இப்படித்தான் பேசியிருப்பார் என்று தோன்றும். அத்தனை கச்சிதமான நடிப்பு. அதுபோலவே, சலீமாக நடித்துள்ள திலிப்குமார், அனார்கலியாக நடித்துள்ள மதுபாலா ஆகியோரின் நடிப்பும் அற்புதம்.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே, வட இந்தியா எங்கும் அனார்கலியின் கதை நாடகமாகவும், கதைப் பாடலாகவும் பொதுமக்களிடம் பிரபலம் ஆகியிருந்தது. இந்தப் படத்தின் இமாலய வெற்றி, அனார்கலியை காதலின் ஒப்பற்ற நினைவுச் சின்னமாக்கியது.

அனார்கலி கதை எங்கிருந்து தொடங்கியது? வரலாற்றில் இப்படி ஓர் புனைவை யார் உருவாக்கியது? 1608-ம் ஆண்டு முதல் 1611-ம் ஆண்டு வரை இந்தியாவில் சாயப் பொருட்களை விற்பதற்காக பயணம் மேற்கொண்ட 'வில்லியம் பின்ஞ்ச்’ என்ற கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த வெள்ளைகாரர்தான் அனார்கலி கதையை முதலில் பதிவுசெய்தவர். அவர், லாகூரில் உள்ள ஒரு மலர்த் தோட்டத்துக்குள் புராதனமான சமாதியைக் கண்டதாகவும், அந்தச் சமாதி அக்பரின் ஆசை நாயகிகளில் ஒருத்தி இறந்துபோனதற்காக கட்டப்பட்டது எனவும், அவள் பெயர் அனார்கலி, அவளை இளவரசன் சலீம் காதலிப்பதை விரும்பாத அக்பர், அனார்கலியைக் கொன்றுவிட்டார் என்றும் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார் வில்லியம் பின்ஞ்ச்.

எனது இந்தியா!

இந்தக் கட்டுகதைதான் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து இந்தியா முழுவதும் பரவியுள்ளது. வில்லியம் பின்ஞ்சுக்கு முன், அனார்கலி - சலீம் காதல் குறித்து வேறு எந்த சரித்திரப் பதிவுகளும் இல்லை. பின்ஞ்சைப் போலவே, இந்தியாவுக்குள் பயணம் மேற்கொண்ட 'எட்வர்ட் டெர்ரி’ என்ற வெள்ளைக்காரர், தானும் லாகூரில் இந்தக் கதையைக் கேள்விப்பட்டதாகவும், அது உண்மை என்பதை நிரூபணம் செய்யும் நினைவு மண்டபத்தை தான் பார்த்ததாகவும் தனது குறிப்பேட்டில் எழுதிவைத்து இருக்கிறார்.

இந்த இரண்டு வெள்ளைக்காரர்களின் குறிப்பு​களையும் நம்பிய உருது வரலாற்று ஆசிரியர்கள், லாகூரில் உள்ள நாதிரா நினைவு மஹாலை இந்தக் கதையோடு இணைத்து விட்டனர். அப்படி உருவானது​தான் அனார்கலி - சலீம் காதல் கதை.

அனார்கலியின் காதலை மறக்க முடியாத சோக நாடகமாக உருமாற்றியவர் உருது நாடக ஆசிரியரான சையத் இமிதியாஸ் அலி. அவர்தான் அனார்கலியின் காதல் கதையை முதலில் நாடகமாக எழுதி வெற்றி கண்டவர். 1922-ம் ஆண்டு அவரது நாடகம் அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகத்தைத் தழுவியே 'மொகல் இ ஆசாம்’ படம் தயாரிக்கப்பட்டது.

லாகூரைச் சேர்ந்த இமிதியாஸ் அலி, சிறுவயதில் தான் கேட்ட கதைகளைக்கொண்டு அனார்கலியைப் பற்றி ஒரு நாடகத்தை எழுத விரும்பினார். அதற்காக அவர் உருது வரலாற்று ஆசிரியர்களைத் தேடிச்சென்று விவரங்களைச் சேகரித்து இருக்கிறார். நேரடிச் சான்று​கள் கிடைக்காதபோதும்,

எனது இந்தியா!

ஜெயின்கானின் மகளை சலீம் காதலித்து இருக்கிறான், அது அக்பருக்குப் பிடிக்கவில்லை என்ற அபுல்பாசல் எழுதிய நாட்குறிப்​பைக்​கொண்டு தனது நாடகத்தை எழுதி இருக்​கிறார். நாடகத்தின் முன்னுரையில், இது கற்பனையான நாடகம், இதில் உள்ள வரலாற்றுத் தகவல்களுக்கு எந்தச் சான்றுகளும் கிடையாது என்று இமிதியாஸ் அலியே குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், சோக ரசம் சொட்டும் அந்தக் காதல் நாடகத்​தை வெகுவாக ரசித்த மக்கள் அது வரலாற்​றில் மறைக்கப்பட்ட உண்மை என்று நம்பத் தொடங்​கினர்.

அதற்குத் துணைசெய்வதுபோல அமைந்தது இமிதியாஸ் அலி வெளியிட்ட நாடக நூலின் முகப்பில் இருந்த அனார்கலியின் படம். அனார்கலி எப்படி இருப்பாள் என்ற ஓவியத்தை முகப்புச் சித்திரமாக முதன்​முதலில் வெளியிட்டவர் இமிதியாஸ் அலி. அந்த ஓவியத்தின் பிரதிகள்தான் இன்றும் அனார்கலியைச் சித்திரிக்கும் ஓவியமாக உலவுகின்றன.

இமிதியாஸ் அலிக்காக அனார்கலி ஒவியத்தை வரைந்தவர் அவரது நண்பரும் புகழ்பெற்ற ஓவியருமான அப்துல் ரஹ்மான் சுக்தி. அனார்கலி என்பதற்கு மாதுளை மலர் என்று பொருள். ஆகவே, அப்துல் ரஹ்மான் மொகலாய நுண்ணோவிய மரபில் வரையப்படுவதுபோல கையில் மலரோடு உள்ள இளம் பெண்ணாக அனார்கலியை எழிலோடு வரைந்து இருக்கிறார். இந்தச் சித்திரம் அனார்கலி உண்மையான பெண் என்று நம்புவதற்குப் பெரிதும் துணை செய்தது.

அந்த நாடகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதைத் திரைப்படம் ஆக்குவதற்கான முயற்சியில் பலர் இறங்கினர். 1923-ம் ஆண்டு, மும்பையில் மௌனப் படமாக அனார்கலி தயாரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பேசும் படம் உருவான காலத்தில் இமிதியாஸ் அலியே தனது நாடகத்தைத் திருத்தி எழுதி அனார்கலி என்ற பேசும் படம் தயாரிக்க உதவி செய்தார். அதன் பிறகு வங்காளத்திலும், 1953-ம் ஆண்டு நந்தலால் ஜஸ்வந்த் லால் இயக்கத்தில் ஹிந்தியிலும் அனார்கலி கதை படமாக வெளியானது. 1960-ல் ஆசிப் இயக்கத்தில் பிரம்மாண்டமான திரைப்படமாக 'மொகல் இ ஆசாம்’ வெளியாகி மிகப் பெரிய வெற்றியைக் கண்டது. அது முதல், அனார்கலியின் கதை மக்கள் மனதில் மாறாத வரலாற்றுச் சம்பவமாகப் பதிவாகிவிட்டது.

அனார்கலி கதை முழுவதும் கற்பனை இல்லை. அதனுள் வரலாற்று உண்மைகள் புதையுண்டு இருக்கின்றன. அபுல் பாசல் எழுதியுள்ள 'அக்பர் நாமா’வில் அக்பருக்கும் இளவரசர் சலீமுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தன என்றும், மன்னரது அந்தப்புரத்துக்குள் சலீம் அனுமதியின்றி நுழைந்தார் என்றும், அவரைக் கடுமையாகத் தண்டிக்கும்படி அக்பர் உத்தரவிட்டதாகவும் குறிப்பிடப்​​பட்டு இருக்கிறது.

எனது இந்தியா!