ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

'தாதா'வான கல்லூரி மாணவர்கள்!

ராகிங்... பெல்ட் அடி... கடத்தல்

##~##

ராகிங்கில் ஆரம்பித்த பிரச்னை அடிதடியில் உஷ்ணமாகி கடத்தலில் முடிந்திருக்கிறது. 

கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை யில் இருக்கிறது ஆர்.எம்.கே. இன்ஜினியரிங் கல்லூரி. இந்தக் கல்லூரி மாணவர்கள்தான் கடத்தல் விவ காரம் தொடர்பாக திருமங்கலம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

என்ன நடந்தது?

ஆர்.எம்.கே. இன்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் சீனிவாசன், தேஜா, நவீன், பவன், மனோஜ் குமார் மற்றும் அவரது தம்பி பரத் ஆகியோர் அண்ணா நகரில் உள்ள சாந்தி காலனியில் வீடு எடுத்துத் தங்கி இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். ராமசுப்பு ரெட்டி என்ற முதலாம் ஆண்டு மாணவரை கல்லூரியில் தினமும் ராகிங் செய்து இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில், ராமசுப்பு எதிர்ப்பு தெரிவிக்கவே, கடுப்பாகி இருக்கிறார்கள் சீனியர்கள். அதன்பிறகுதான் பிரச்னை வெடித்திருக்கிறது.

'தாதா'வான கல்லூரி மாணவர்கள்!

இந்த விவகாரம் குறித்து, போலீஸ் பிடியில் இருந்த ராமசுப்பு ரெட்டியிடம் கேட்டோம். ''போன மாசம் 29-ம் தேதி நானும் என்னோட ஃப்ரண்ட்ஸ் பரத்குமார், ராகுல் ரெட்டியும் அண்ணா நகர் போயிருந்தோம். எங்களை வழியில் பார்த்த சீனியர்கள், அவங்களோட ரூமுக்கு இழுத்துட்டுப் போனாங்க. 'காலேஜ்ல சீனியரை மதிக்க மாட்டீங்களாடா... சீனியரை எதிர்த்துப் பேசுறீங்களா’ன்னு சொல்லி எங்க மூணு பேரையும் பெல்ட்டால விளாசிட்டாங்க'' என்று சொல்லி அமைதியானார்.

அதன் பிறகு நடந்ததைச் சொல்கிறார் திருமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் பிராங் டி.ரூபன், ''அடி வாங்கிய ராமசுப்பு ரெட்டி, ஆந்திராவில் இருந்து சில ரவுடிப் பசங்களை அழைத்து வந்து, சீனியர்களைப் பழிவாங்க அவங்க ரூமுக்குப் போயிருக்கார். ரூம்ல பரத் மட்டும் இருந்திருக்கார். அவரைக் கார்ல தூக்கிப்போட்டுட்டு இவனுங்க கிளம்பிட்டானுங்க. 'பரத்தைக் கடத்திட்டுப் போறோம்’னு மனோஜ்க்குப் போன் செய்து சொல்லி இருக்காங்க.

'தாதா'வான கல்லூரி மாணவர்கள்!

உடனே, மனோஜ் எங்ககிட்ட வந்து புகார் கொடுத்தார். ராமசுப்பு ரெட்டியைப் பிடிக்க ஒரு தனிப்படை அமைச்சோம். அவரோட செல்லுக்குப் போன் செய்து கேட்ட போது, 'நான் யாரையும் கடத்தவே இல்லை’ன்னு சொன்னார். நாங்க அதட்டிக் கேட்டதும் போனை ஆஃப் செய்து விட்டார். ஏதாவது பிரச்னை ஆகிடும்னு பயந்து... கடத்திட்டுப் போன பரத்தை திரும்பி இறக்கி விட திருமங்கலம் வந்தாங்க. நாங்க பிடிச்சிட்டோம்.

'எதுக்கு கடத்திட்டுப் போன?’ன்னு அந்தப் பையன்கிட்ட கேட்டா... அழுதுகிட்டே சட்டையைக் கழட்டிக் காட்டினார். உடம்பு முழுக்க பெல்ட்டால அடிச்சு செவந்து போயிருக்கு. ரெண்டு குரூப்பும் தப்பு செய்து இருக்காங்க. அதனால ராமசுப்பு ரெட்டிகிட்டயும் புகார் வாங்கிட்டு ஆள் கடத்தல், கொடுங்காயம் ஏற்படுத்துதல்னு இரண்டு தரப்பு பசங்களையுமே கைது செய்து இருக்கோம்'' என்று விவரித்தார்.

விஷயத்தைக் கேள்விப்பட்டு காவல் நிலையத்துக்கு வந்திருந்த சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் சிலரிடம் பேசினோம்.

''ரெண்டு குரூப் பசங்களுமே நல்ல வசதியான வீட்டுப் பசங்க. ரொம்பவும் சுமாராதான் படிப்பாங்க. காலேஜ்க்குள் சாதாரணமாகத்தான் ராகிங் பிரச்னை ஆரம்பிச்சது. அது கடத்தல் அளவுக்குப் போகும்னு நாங்க நினைக்கலை. அவங்க வீட்டுல இருக்கிறவங்களுக்குத் தகவல் தெரியாது. இப்போதுதான் சொல்லி இருக்கோம்'' என்று சொன்னார்கள்.

ஆர்.எம்.கே. இன்ஜினீயரிங் கல்லூரி முதல்வரைத் தொடர்பு கொண்டோம். ''சார் மீட்டிங்ல இருக்காரு. நான் ஏ.ஓ. பேசுறேன். காலேஜ்ல லீவுல இருந்ததால என்ன நடந்ததுன்னு நாங்க இன்னும் விசாரிக்கலை. அதுவும் இல்லாம இது கல்லூரிக்கு வெளியில் நடந்திருக்கு. கல்லூரிக்கும் இந்தப் பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்க கல்லூரியைப் பொறுத்தவரை ராகிங் எப்பவுமே கிடையாது. சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்திய பிறகுதான் நாங்கள் மேற்கொண்டு பேச முடியும்'' என்று சொன்னார்.

ராகிங்கைத் தடுப்பதற்கு சட்டங்கள் மட்டும் போதாது. கல்லூரி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்களைக் கண்காணிக்க வேண்டும். ஏற்கெனவே, நாவரசு என்ற மருத்துவக் கல்லூரி மாணவர் ராகிங் பிரச்னையில் கொல்லப்பட்டதை பொதுமக்கள் இன்னமும் மறக்கவில்லை. இனியும் இப்படியரு அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது. கல்லூரிக்கு வெளியே நடந்த பிரச்னை என்று நிர்வாகம் அசட்டை காட்டுவதும் சரியல்ல.

- நா.சிபிச்சக்கரவர்த்தி

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்