ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

இதுவரை சேவை.... இனிமேல் பணம்!

ஜிப்மர் கொந்தளிப்பில் புதுவை

##~##

லைவலி, காய்ச்சல், இருமல் என்று தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றால் எக்ஸ்ரே, ஸ்கேன் என்று சில ஆயிரங்களைக் கறந்து விடுகிறார்கள் என்பதால், மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையை நோக்கி ஓடுவார்கள் புதுவை மக்கள். ஆனால்  சில நாட்களுக்கு முன்பு ஜிப்மர் நிர்வாகத்தில் இருந்து வெளியான அறிக்கை, அத்தனை பேருக்கும் அதிரவைத்துள்ளது. சிகிச்சை பெறுவதற்கு வருமானக் கட்டுப்பாடு விதித்துள்ளார்கள். 

இந்த விவகாரத்துக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் ஜிப்மர் ஊழியர்கள் ஒன்றிணைந்து ஜிப்மர் பாதுகாப்பு குழு அமைத்து போராடி வருகிறார்கள். மார்க்சிஸ்ட்

இதுவரை சேவை.... இனிமேல் பணம்!

கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் பெருமாளிடம் பேசினோம், ''பிரெஞ்சு அரசின் கீழ் இருந்த எக்கோல் மருத்துவக் கல்லூரி, 1956-ம் ஆண்டு தன்வந்திரி மருத்துவக் கல்லூரி என்று பெயரிடப்பட்டு, அன்றைய பாரதப் பிரதமர் நேரு அடிக்கல் நாட்டினார். அவருடையை மறைவுக்குப் பிறகு ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்று மாற்றப்பட்டு சுருக்கமாக ஜிப்மர் என்று அழைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 195 ஏக்கர் பரப்பளவுகொண்ட ஜிப்மரில் இலவச சிகிச்சை சிறந்த முறையில் செய்யப்பட்டுவந்தன. அதனால் நாள்தோறும் புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 6,000 பேர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால், இப்போது திடீரென மக்கள் விரோத அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், ஜிப்மரைத் தன்னாட்சி நிறுவனமாக மாற்றியதுதான்.  

இதுவரை சேவை.... இனிமேல் பணம்!

கடந்த 2004-ம் ஆண்டு ஜிப்மரைத் தன்னாட்சி நிறுவனமாக மாற்றுவதற்காக, அன்றைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்தார். அவருக்கு முன்பு அமைச்சராக இருந்த தலித் ஏழுமலையும் ஜிப்மரைத் தன்னாட்சி நிறுவனமாக மாற்றுவதற்குத் தீவிர ஆர்வம் காட்டினார். காரணம் தன்னாட்சி அதிகாரம் கிடைத்து விட்டால், ஜிப்மரின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையீடு இருக்காது. மருத்துவ கவுன்சிலுக்கு அமைச்சரே தலைவராக இருக்கலாம்.

இதுவரை சேவை.... இனிமேல் பணம்!

கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரலாம். இன்னபிற விஷயங்களுக்கும் வசதியாக இருக்கும்  என்று சிலர் நினைத்தார்கள்.

இதற்குப் பலத்த எதிர்ப்பு தெரிவித்து, போராட் டங்கள் நடத்தி அந்த மசோதாவை நிறைவேறவிடாமல் செய்தோம். ஆனால் எங்கள் எதிர்ப்பை மீறி 2008-ல் மசோதா நிறைவேற்றப்பட்டு ஜிப்மர் தன்னாட்சி நிறுவனமாக மாற்றப்பட்டுவிட்டது. நாங்கள் அப்போது என்ன நடக்கும் என்று எதிர்பார்த்து எதிர்ப்பு தெரிவித்தோமோ, அதுவே இப்போது நடந்துவிட்டது. முதலில், 'ஜிப்மரில் வழங்கப்படும் அனைத்து சிகிச்சைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்’ என்று அறிவித்தார்கள். அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் இப்போது, 'புற்றுநோய் சிகிச்சைகளுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும். ரூபாய் 2,499 மாதம் வருமானத்துக்குக் குறைவாகப் பெறுவோருக்கு சிகிச்சை இலவசம்’ என்று அறிக்கை வெளியிட்டு உள்ளனர். இது மக்களை முட்டாள் ஆக்கும் செயல். தற்போது புற்று நோய்ப் பிரிவுக்கு மட்டும் கட்டணம் என்று சொல்வது, கூடிய விரைவில் மற்ற துறைகளிலும் அமல்படுத்தப்படும். அதனால் முழுமையாக இலவச சிகிச்சை வழங்கும் வரை போராட்டம் நடத்துவோம்'' என்று ஆவேசம் காட்டினார்.

ஜிப்மர் ஊழியர்கள் சங்கத் தலைவர் ஆரோக்கியம் கலைமதியிடம் பேசினோம், ''மாத வருமானம் ரூபாய் 2,499-க்குக் கீழ் வருமானச் சான்றிதழ் வைத்துள்ளவர்களுக்கு மட்டும் சிகிச்சை இலவசம் என்று நிர்வாகம் சொல்கிறது. இப்போது 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு தினம் 100 ரூபாய் வழங்கப்படுகிறது. மாதம் முழுவதும் வேலை கிடைத்தால் அவர்கள் வருமானமே இந்த எல்லையைத் தாண்டிவிடும். பிறகு யாருக்குத்தான் இலவச சிகிச்சை கிடைக்கும்? இது குறித்து ஜிப்மர் பாதுகாப்புக் குழு சார்பில் டெல்லி செல்ல இருக்கிறோம். அமைச்சர் குலாம் நபி ஆசாத் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்துப் பேசி மாற்றத்துக்கு வலியுறுத்துவோம்'' என்றார்.

கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஜிப்மர் இயக்குனர் டாக்டர் ரவிக்குமாரிடம் பேசினோம், ''ஏழு கோடி ரூபாய்க்கு புதிய உபகரணங்கள் வாங்கி உள்ளோம். அதற்கு பராமரிப்புச் செலவை ஈடுகட்டவே கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. மத்திய அரசின் மசோதாவை எந்த வகையிலும் நாங்கள் மீறவில்லை. மத்திய அரசின் கணக்குப்படிதான் 2,499 ரூபாயை நிர்ணயம் செய்தோம். புற்று நோய்ப் பிரிவு தவிர்த்து மற்ற துறைகளில் இலவச சேவை தொடரும்'' என்றார் சுருக்கமாக.

மக்களுக்கு எந்த நன்மையும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறதோ?

- நா.இள. அறவாழி

படங்கள்: ஜெ.முருகன், ஆ.நந்தகுமார்