ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

வறட்சியில் டெல்டா விவசாயிகள்...

ஓர் அணியில் திரளுமா அரசியல் கட்சிகள்?

##~##

சோழநாடு சோறு​டைத்து என்பதெல்​லாம் பழங்கதை. காவிரி நீர் தட்டுப்பாட்டால் அவர்களே வேறு மாநிலத்தில் இருந்து அரிசி வாங்கும் கொடுமைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். குறுவை சாகுபடி மட்டுமன்றி சம்பா பட்டமும் சிக்கலாகி இருப்பது டெல்டா மக்களிடையே வேதனையை அதிகப்படுத்தி இருக்கிறது! 

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதி முழுவதும் சமீபத்தில் விவசாயிகளும் பொது​மக்களும் கடையடைப்பு போராட்டம் நடத்தி, இரு சக்கர வாகனப் பிரசாரமும் செய்தார்கள்.

போராட்டக் களத்தில் இருந்த கொள்​ளிடம் கீழணைப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் வினாயகமூர்த்தி, ''காவிரி டெல்டா பகுதி என்றால், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் அடங்கும். அதில் 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள். தென் மேற்குப் பருவ மழை பொய்த்துப்போனதாலும், காவிரியில் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படாததாலும் விளைநிலங்கள் பாலைவனமாகிவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வட கிழக்குப் பருவ மழை மூலம் நமக்குக் கிடைக்கும் காவிரி நீரில் சுமார் 200 டி.எம்.சி. தண்ணீர் காவிரி டெல்டா மாவட்டங்கள் வழியாகக் கடலில் கலந்து வீணாகிறது. காவிரியில் 16 தடுப்புக் கதவணைகளையும், கொள்ளிடத்தில் 8 தடுப்புக் கதவணைகளையும் கட்டித் தண்ணீரைத் தேக்கிவைத்தால், நாம் அண்டை மாநிலத்திடம் தண்ணீர் கேட்டு கையேந்தத் தேவை இல்லை. அதில் 25 அடி தண்ணீரைத் தேக்கிவைத்து முப்போகம் விவசாயம் செய்யலாம். கடந்த 60 ஆண்டுகளாகத் தண்ணீரைத் தேக்கிவைக்க எந்த முயற்சியையும் தமிழக அரசு செய்யவில்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலும், மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் கட்டப்பட்ட அணைகளையும் ஏரிகளையும்தான் பயன்படுத்திவருகிறோம். நம் மீது ஆங்கிலேயர்களுக்கு இருந்த அக்கறைகூட இப்போது இருக்கும் அரசுகளுக்குக் கிடை​யாது'' என்றார் ஆதங்கத்துடன்.

வறட்சியில் டெல்டா விவசாயிகள்...

விவசாயிகளின் போராட்டம் ஒரு பக்கம் என்றால், அரசியல் கட்சிகளும் தங்களது போராட்டங்களைத் தொடங்கிவிட்டன. இந்தப் போராட்ட சீஸனைத் தொடங்கிவைத்தவர் விஜயகாந்த். தனது பிறந்த நாள் நலத் திட்ட உதவிகளை வழங்க ஆகஸ்ட் 10-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வந்த விஜயகாந்த், ''கர்நாடகத்திடம் தண்ணீர் பெறாததால் ஏற்பட்டிருக்கிற இந்த வறட்சிக்கு மாநில அரசே பொறுப்பு. பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும்'' என்றார்.

வறட்சியில் டெல்டா விவசாயிகள்...

கடந்த 17-ம் தேதி தஞ்சாவூரில் விவசாயி​களின் கூட்டத்தைக் கூட்டிய டாக்டர் ராமதாஸ், ''விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரணமாகத் தர வேண்டும். வேலை இன்றிப் பாதிக்கப்பட்டு இருக்கிற விவசாயத் தொழிலாளர்களின் குடும்பம் ஒன்றுக்குப் பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் தரவேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார். விவசாய சங்கங்களும் கிளர்ந்தெழுந்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல் என்று டெல்டா மாவட்டங்களைக் கிடுகிடுக்கவைத்தார்கள். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் போராட்டக் களத்தில் குதித்தன. கீவளுர் சட்டமன்ற உறுப்பினர் மகாலிங்கம், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ரயில் மறியலில் ஈடுபட்டுக் கைதாகினார்கள்.

நாம் தமிழர் கட்சியினர் கடந்த 24-ம் தேதி தஞ்சாவூரில் குவிந்தார்கள். வறட்சி மாவட்டங்களாக டெல்டாவை அறிவிக்கக் கோரியும், காவிரியில் உடனே தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும்

வறட்சியில் டெல்டா விவசாயிகள்...

கோரிக்கைகளை எழுப்பிய சீமான், தன் இயக்கத்தினரோடு ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார். தி.மு.க. சார்பில் கடந்த 30-ம் தேதி நாகை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விவசாயிகளுக்கு நிவாரணம், டெல்டாவை வறட்சிப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று முழங்கியது தி.மு.க.

தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், ''கர்நாடக அணைகளில் நீர் இருந்தும் கடந்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய 64 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்படாததால், இந்தியாவின் நெற்களஞ்சியமாக விளங்கிய காவிரி டெல்டா விளைநிலம் எல்லாம் பாழ்பட்டுக்கிடக்கிறது. குறுவைதான் போகிறது என்று பார்த்தால், சம்பா சாகுபடியும் கேள்விக்குறி ஆகியிருக்கிறது. தமிழன் என்றாலே வேறு தேசத்துக் குடிமகனாகக் கருதுகிறது மத்திய அரசு'' என்று முழங்கினார்.  

அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் குறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன், ''கர்நாடகாவில் நான்கு அணைகளிலும் தேக்கிவைக்கப்​பட்ட தண்ணீரை எடுத்து அங்கு கோடைச் சாகுபடி செய்துவிட்டார்கள். இப்போது போராடும் கட்சிகள் அப்போதே குரல் கொடுத்திருந்தால், நமக்குப் பாதி அளவு தண்ணீராவது கிடைத்திருக்கும். இப்போது அவர்களிடம் தண்ணீர் குறைவாக உள்ள நிலையில் எல்லோரும் களம் இறங்கிக் கத்துவதால் எந்தப் பலனும் ஏற்படாது'' என்கிறார்.

டெல்டா விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சேரன், ''நாடாளுமன்றத் தேர்தலை மனதில்வைத்து மத்திய அரசு, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா உள்ளடக்கிய ஐந்து மாநிலங்களை வறட்சிப் பகுதிகளாக அறிவித்து கிட்டத்தட்ட 1,400 கோடி ரூபாயை வறட்சி நிவாரண நிதியாக ஒதுக்கியுள்ளது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் புயல், வெள்ளம், வறட்சி தாண்டவமாடியும் மத்திய அரசு எந்த உதவிக் கரமும் நீட்டவில்லை. இந்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் இப்படித் தனித்தனியாகப் போராட்டம் நடத்தினால், மத்திய அரசின் கவனம் திரும்பாது. அனைத்துக் கட்சிகளும் ஓர் அணியில் திரண்டால், விவசாயிகளும் அவர்கள் பின்னால் அணி திரள்வார்கள். கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரும் பெற முடியும். மத்திய அரசிடம் இருந்து வறட்சி நிவாரணமும் பெற முடியும்'' என்கிறார்.

செய்வார்களா நமது அரசியல் கட்சியினர்?  

- கரு.முத்து, க.பூபாலன்

படங்கள்: கே.குணசீலன், எஸ்.தேவராஜன்