ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

கோயில் நகைகளைக் கொள்ளை அடித்தாரா?

பாப்பா சுந்தரத்துக்கு எதிராக பகீர்

##~##
கோயில் நகைகளைக் கொள்ளை அடித்தாரா?

'நச்சலூர் செல்லாண்டியம்மன் கோயிலில் விக்கிர​கத்​துக்கு அடியில் பல அடிகள் தோண்டி, அங்கிருந்த தங்கம், வைர, வைடூரிய நகைகளை தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து இரவோடு இரவாகத் தோண்டி எடுத்தார், அ.தி.மு.க-வைச் சேர்ந்த குளித்தலை எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம்’ என்று கிளம்பி இருக்கும் குபீர் புகாரால் பரபரத்துக்கிடக்கிறது கரூர் மாவட்டம்!   

இந்த விவகாரத்தை வெளிக்கொண்டு வருவதில் தீவிரமாக இருக்கும் நங்கவரம் தி.மு.க. செயலா​ள​ரான சுந்தரத்திடம் பேசி​னோம். ''எங்கள் ஊரில் இருக்கும் செல்லாண்டியம்மன் கோயில் 250 வருஷம் பழைமையானது. அந்தக் கோயிலுக்கு பின்னால் இருக்கும் வயலில் உழுகும்போது தங்க நாணயம், செப்புத் தகடு, தங்கக் கிரீடம்னு பல அரிய வகைப் பொருட்கள் கிடைத்தன. இந்த விவரம் அரசாங்கத்துக்குப் போகவும், தொல்பொருள் துறையினர் இங்கே வந்து ஆய்வு செஞ்சுட்டு, அடியில் ஒரு பழைமையான நகரமே இருக்க வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க. செல்லாண்டியம்மன் கோயிலுக்கு உள்ளேயும் புதையல் இருக்குனு தொல்​பொருள் ஆராய்ச்சியாளர்கள் சொல்ல... 10 ஆண்டுகளாகக் கோயிலைத் திறக்காமல் இருந்தோம். எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம் பதவிக்கு வந்த பிறகு, இந்தக் கோயிலை ஆக்கிரமிக்க முயற்சி செய்தார். ஊர் மக்கள் ஒற்றுமையாக இருந்து காத்துவந்தோம். வெளியாட்களை அனுப்பினால் பயன் இல்லை என்று உள்ளூரில் அவருடைய ஆதரவாளராக இருக்கும் ஜானகிராமன், பூசாரி சுப்பிரமணியன், ஆறுமுகம், கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் அடங்கிய குழுவைத் தயார்செய்தார். இதைத் தெரிந்துகொண்ட ஊர் மக்கள், 'எங்கள் ஊர் கோயிலில் ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது’ என்று அதிகாரிகளிடம் தெரிவித்தோம். அவர்களும் பார்த்துக்கொள்வதாக உறுதி அளித்தனர். இருப்பினும் அந்த அசம்பாவிதம் நடந்துவிட்டது.

கோயில் நகைகளைக் கொள்ளை அடித்தாரா?

ஜூன் 3-ம் தேதியன்று அதிகாலை 3 மணிக்கு கோயிலுக்குள் நுழைந்தது ஜானகிராமன்

கோயில் நகைகளைக் கொள்ளை அடித்தாரா?

தலைமையிலான கும்பல். அம்மன் சிலையைப் பெயர்த்து எடுத்துவிட்டு, பல அடி ஆழம் தோண்டி இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் கோயில் கட்டும்போது விக்கிரகத்துக்கு அடியில் தங்கம், வைடூரியம், வைரம், செப்புத் தகடுகளை புதைத்துவைப்பது வழக்கம். அதுபோன்று புதைத்துவைக்கப்பட்ட பல அரிய பொருட்களை களவாடிவிட்டனர். தகவல் அறிந்து விடியற்காலையில் பொது​மக்கள் அந்தக் கோயிலை சூழ்ந்தோம். காவல் துறை, தாசில்தார், வி.ஏ.ஓ. என அனைவரும் வந்தனர். கும்பலைச் சேர்ந்த பூசாரி சுப்பிரமணியன் மட்டும் மாட்டிக்கொண்டார். ஊர் மக்கள் முன்னிலையில், 'பாப்பா சுந்தரம் சொன்னதன் பேரில் ஜானகிராம​னுடைய ஆட்கள் இந்தக் கோயில் அம்மன் சிலையை பெயர்த்து அடியில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை அள்ளிச் சென்றார்கள்’ என்று ஒப்புக்கொண்டார் சுப்பிரமணியன். அப்போது இன்ஸ்பெக்டர் முத்தரசு, 'பாப்பா சுந்தரம் சார் லைன்ல இருக்கார்... பேசு’ என்று தன்னுடைய செல்போனைக் கொடுத்தார். கொஞ்ச நேரத்தில், 'என்னை விட்டுருங்க. நான் எதையும் பார்க்கலை. இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று சொல்லிவிட்டார் சுப்பிரமணியன். இன்ஸ்பெக்டரும் 'எல்லோரும் கலைஞ்சு போங்க... இங்கே ஒண்ணும் நடக்கலை’ என்று விரட்டிவிட்டார். 'அப்ப சாமி சிலை பெயர்ந்துகிடக்குதே... எப்படி?’ என்று விளக்கம் கேட்டோம். 'அதை யார் செஞ்சாங்கன்னு கண்டுபிடிக்கிறோம். அதுவரை இந்தக் கோயிலுக்குள்ள யாரும் போகக் கூடாது’னு தாசில்தார்கிட்ட சொல்லி கோயிலுக்கு சீல் வெச்சுட்டார். இதுவரை எங்களுக்கு நியாயமான எந்தப் பதிலும் கிடைக்கலை. கோயில் சொத்து களவாடப்பட்டதுல உண்மை தெரிஞ்சாகணும்'' என்று கொதித்தார்.

கோயில் நகைகளைக் கொள்ளை அடித்தாரா?

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்​கும் காங்கிரஸ் பிரமுகரான  திருச்சி வேலுச்சாமி, ''ஊரில் நடந்த விஷயங்​களைக் கேள்விப்பட்டு அடுத்த நாளே இன்ஸ்பெக்டர் முத்தரசுகிட்ட பேசினேன். அப்படி எதுவும் நடக்கலை என்றார். அப்படிச் சொன்னவர், எதுக்காக அதிகாரிகளை அழைத்து கோயிலுக்கு சீல் வைக்கணும்? பாப்பா சுந்தரத்தின் கையாளாகவே இன்ஸ்பெக்டர் முத்தரசு செயல்படுகிறார். எங்களுக்குக் கிடைச்ச தகவல்... தோண்டப்பட்ட அம்மன் சிலைக்கு அடியில் அரிய வகை ஐம்பொன் சிலைகள், தங்கம், வைரப் பொருட்கள் கிடைச்சு இருக்குது. அதை சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் மூலம் எம்.எல்.ஏ. வெளிநாட்டுக்கு அனுப்பிட்டார். இந்த விஷயத்தை நேர்மையாக விசாரிக்காத இன்ஸ்பெக்டர் மீது மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கோம். புதையல் கடத்தலில் ஈடுபட்ட அனைவரும் சிக்கும் வரையில் விட மாட்டோம்'' என்று சூளுரைத்தார்.

இது குறித்து ஜானகிராமனிடம் பேசினோம். ''அவங்க சொல்ற மாதிரி புதையல் ஒண்ணும் இல்லைங்க. கோயில் கமிட்டி அமைச்சு நன்கொடை வசூல் பண்ணி கோயி​லைப் புதுப்பிக்கலாம்னு இருந்​தோம். அதுக்காகத்தான் ஒருநாள் இரவு, கமிட்டியில இருக்கிறவங்க எல்லாம் சேர்ந்து கோயிலுக்குள் இருக்குற சிலையைப் பெயர்த்து எடுத்​தோம். அதுல கிடைச்சது வெறும் ஆறு தங்கக் காசு, ஒரு செப்புத் தகடு மட்டும்​​தான். கோயில் கமிட்டியில் சேர்த்துக்​காததால ஆளுக்காள் ஒண்ணு சேர்ந்துக்கிட்டு, புதையல் அது இதுனு கதை விடுறாங்க. அதுல பாப்பா சுந்தரம் மேல சொல்ற குற்றச்சாட்டு முழுக்கப் பொய்'' என்றார்.

குளித்தலை இன்ஸ்பெக்டர் முத்தரசு​விடம் பேசிய​போது, ''நீங்க  சொல்ற மாதிரி எந்த சம்பவமும் நடக்கவே இல்லை'' என்று ஒரேடியாக மறுத்தார்.

எம்.எல்.ஏ பாப்பா சுந்தரத்திடம் கேட்டோம். ''ரொம்ப வருஷமா பூட்டிக்​கிடக்கும் கோயிலைத் திறந்து விழா நடத்துறதுல, ரெண்டு கோஷ்டிக்கு இடையில் பிரச்னை. அதுனால வேணும்னே இப்படி எல்லாம் சொல்லிட்டு இருக்காங்க. எனக்கும் அவங்க சொல்ற குற்றச்சாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்றார்.

உண்மை என்னவோ... அந்த செல்லாண்டியம்​மனுக்கே வெளிச்சம்!

- ஞா.அண்ணாமலை ராஜா