விரட்டிய சொந்தங்கள்... கை கொடுத்த கலெக்டர்... ஆக்ஷனில் ஜூ.வி.!
##~## |

''என் பேரு மகேஸ்வரி. சேலம் மாவட்டம் ஆத்தூர்ல இருந்து பேசுறேன். எங்க வீட்டுக்காரர் என்னை விட்டுட்டுப் போயிட்டாரு. எங்களுக்கு ஆறு வயசுல மன வளர்ச்சி இல்லாத ஒரு குழந்தை இருக்குது. எங்க அப்பாகூடத்தான் நான் இவ்வளவு நாளா இருந்தேன். இப்போ எங்க அப்பாவும் செத்துப்போயிட்டாரு. 'மன வளர்ச்சி இல்லாத குழந்தை எமனோட குழந்தை. அதைக் கொன்னுடு’ன்னு ஊருல இருக்கிறவங்களும் சொந்தக்காரங்களும் விரட்டுறாங்க. ரொம்ப அவஸ்தைப்படுறேன். எனக்கு என்ன பண்றதுனே புரியலை. எனக்கு ஒரு வழி காட்டுங்க...''- இப்படி ஒரு வேதனைக் குரல் ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044 - 66808002 ) பதிவாகி இருந்தது.
மகேஸ்வரியை ஆத்தூர் அருகே உள்ள அம்பேத்கர் நகரில் சந்தித்தோம். ''நான் பத்தாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தப்ப எங்க பக்கத்து ஊர்க்காரரான முருகனைக் காதலிச்சேன். அவரு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதா சொன்னதால, அவரு சொன்னதுக்கு எல்லாம் சம்மதிச்சேன். என் வயித்துல புள்ளை உண்டாயிடுச்சு. இந்த விஷயம் தெரிஞ்சதும் முருகனோட வீட்டுல இருக்கிறவங்க அவருக்கு வேற ஒரு பொண்ணோட கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்க.

அதை எப்படி எதிர்க்கிறதுன்னும் எனக்குத் தெரியலே. அதனால எங்க அப்பா வீட்டுல இருந்தேன். எனக்கு பையன் பொறந்தான். நாளாக நாளாகத்தான் அது மன வளர்ச்சி இல்லாத குழந்தைன்னு தெரிஞ்சது. குழந்தையை விட்டுட்டு நான் வேலைக்கு எங்கேயும் போக முடியாது. எங்கப்பாதான் மூட்டை தூக்கி சம்பாதிச்சு சாப்பாடு போட்டு வளர்த்தாரு. ஒரு மாசத்துக்கு முன்னாடி அப்பாவும் செத்துட்டாரு. அதுல இருந்து எனக்கு சாப்பாட்டுக்கே வழி இல்லே. குழந்தைக்கும் பால் வாங்க முடியலே. வேற வழி இல்லாமல் குழந்தையைத் தனியா விட்டுட்டு கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். ஒரு நாள் திரும்பி வந்துப் பார்த்தா, குழந்தை கீழே விழுந்து உடம்பெல்லாம் காயமா இருந்தது. அக்கம்பக்கத்துல இருந்து யாரும் என் குழந்தையைக் கவனிக்கவே இல்லே.

எங்க ஊர்ல இருக்கிற எல்லோரும் என் குழந்தையை, 'இது எமனோட குழந்தை... இதைக் கொன்னுடு. இல்லைன்னா ஊரையே நாசமாக்கிடும்’னு திட்டுறாங்க. நான் முடியாதுன்னு சொன்னதால, இப்போ எனக்கு யாரும் தண்ணிகூட கொடுக்க மாட்டேங்குறாங்க. போன வாரம் எங்க ஊருக்கு வந்த மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவங்கதான் உங்க பத்திரிகை நம்பரைக் கொடுத்தாங்க. எனக்கும் என் குழந்தைக்கும் ஏதாவது உதவி பண்ணுங்கய்யா!'' - கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட்டார். பக்கத்திலேயே அந்தக் குழந்தை அமைதியாய்த் தவழ்ந்தபடியே நம்மைப் பார்த்தது.
சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூஷணத்திடம் விஷயத்தைச் சொன்னோம். பொறுமையாகக் கேட்டவர், ''அவங்களை அழைச்சுட்டு வாங்க... என்ன உதவி செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்வோம்'' என்று சொன்னார். மகேஸ்வரியையும், அந்தக் குழந்தையையும் அழைத்துக்கொண்டு சேலம் கலெக்டர் அலுவலகத்துக்குப் போனோம்.
மகேஸ்வரியிடம் எல்லாப் பிரச்னைகளையும் தெளிவாகக் கேட்ட கலெக்டரின் கண்கள் கலங்கிவிட்டன. ''பாருங்க, நம்ம மக்கள் எப்படி எல்லாம் இருக்காங்க!'' என்று வருத்தப்பட்டவர், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் நடராஜனைக் கூப்பிட்டார். ''இந்தக் குழந்தையையும் அம்மாவையும் ஒரு நல்ல ஹோம்ல சேர்க்கணும்.'' என்று உத்தரவிட்டார். ''சி.எஸ்.ஐ. பாலர் ஞான இல்லத்தில் சேர்க்கலாம் சார். அங்கே ஸ்பெஷல் கேர் எடுத்துக் கவனிச்சுக்குவாங்க'' என்று சொன்னார் நடராஜன்.
''இந்தக் குழந்தைக்கு முழு உடல் பரிசோதனை செய்யச் சொல்லுங்க. ஸ்பெஷல் கேர் எடுத்து கவனிக்கச் சொல்லுங்க. அம்மாவும் அங்கேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்க. அரசின் சார்பாக இந்த பெண்ணுக்கு இந்திரா குடியிருப்புத் திட்டத்தில் வீடு கொடுக்க ஏற்பாடு செய்யுங்க'' என்று உத்தரவு இட்டார்.
''என் உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் இந்த உதவியை நான் மறக்க மாட்டேங்க!'' - என்று கையெடுத்துக் கும்பிட்டார் மகேஸ்வரி. மகேஸ்வரியும் அவரது குழந்தையும் இப்போது ஹோமில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இனி நல்லதே நடக்கட்டும்!
- வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்