ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

சிதம்பரம் பிரதமர் ஆவதை தடுக்கப் பாக்குறாங்க!

சிவகங்கை கலாட்டா...

##~##
சிதம்பரம் பிரதமர் ஆவதை தடுக்கப் பாக்குறாங்க!

'மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய மின்சாரத்தில் சுமார் 1096 மெகா வாட்டை மத்திய அரசு கட் பண்ணி​யதால்தான் தமிழகத்தில் கூடுதல் பவர் கட்!’ - தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் இப்படிச் சொன்னாலும் சொன்னார். இதை​வைத்து சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க-வும் காங்கிரஸும் ஒரு பெரிய போஸ்டர் யுத்தமே நடத்திக்கொண்டு இருக்கின்றன! 

நத்தம் விசுவநாதனின் அறிக்கை வெளியான மறுநாளே, சிவகங்கை மாவட்ட முன்னாள் அ.தி.மு.க. செயலா​ளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான உமாதேவன் பெயரில், 'சிவகங்கை மக்களவைத் தொகுதி மக்களை ஏழு முறை ஏமாற்றியும் மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தை பெற்றுத்தர

சிதம்பரம் பிரதமர் ஆவதை தடுக்கப் பாக்குறாங்க!

முடியாத ப.சிதம்பரமே! உனக்கு மத்திய நிதி அமைச்சர் பதவி ஒரு கேடா?’ என ஒரு போஸ்டர் சிவகங்கை தொகுதிக்குள் பரபரத்தது.

அதைப் பார்த்துவிட்டு சூடான சிதம்பர விசுவாசிகள், 'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதங்களில் மின்வெட்டு அறவே இருக்காது என்ற வாக்குறுதி என்னாச்சு? பொய்யான வாக்குறுதி தந்து மக்களை ஏமாற்றும் ஜெயலலிதா அரசே, பதவி உனக்கு ஒரு கேடா?’ என்று பதில் போஸ்டர்களை ஒட்டினார்கள். இதற்கும், 'வக்கற்ற காரைக்குடி காங்கிரஸாரே! சிந்திப்பீர்... ஏமாறாதீர், ஏமாற்றாதீர். இருண்டுகிடந்த தமிழகத்தை 15 மாதங்களில் ஒளிமயமாக மாற்றியவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். கடந்த 35 ஆண்டுகளாக தேர்தலுக்காக மட்டுமே அப்பாவி மக்களைச் சந்தித்து ஏமாற்றும் தமிழினத் துரோகி ப.சிதம்பரம். 15 மாத கால அம்மா ஆட்சியில் மத்திய தொகுப்பில் இருந்து வந்த மின்சாரம் குறைக்கப்பட்டதா இல்லையா?’ - இப்படி ஒரு பதில் போஸ்டர் உமாதேவனிடம் இருந்து சுடச்சுடப் புறப்பட்டு வந்தது.

சிதம்பரம் பிரதமர் ஆவதை தடுக்கப் பாக்குறாங்க!

சளைக்காமல் இதற்கும் ரிப்ளை கொடுத்த சிதம்பரம் சர்க்கிள், '15 மாதங்களுக்கு முன்பு 2 மணி நேரமாக இருந்த மின்வெட்டை 12 மணி நேரமாக உயர்த்தி தமிழகத்தை இருளில் மூழ்கடித்ததுதான் அ.தி.மு.க. ஜெயலலிதா அரசின் சாதனையா?’ என்று போஸ்டர் ஒட்டியது.

சிதம்பரம் பிரதமர் ஆவதை தடுக்கப் பாக்குறாங்க!

விடுவாரா உமாதேவன்? 'போஸ்டரில் காமராஜரின் படம் இல்லாமல், 'காமராஜர் ஆட்சி அமைப்போம்’ என்று சொல்லும் ப.சிதம்பரத்தின் பொய் சொல்லி காங்கிரஸே! மத்தியத் தொகுப்பில் இருந்து மின்சாரம் குறைக்கப்பட்டதை நாடு அறியும். பொய் சொல்லி ஓட்டுக் கேட்கும் ப.சிதம்பரத்தை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’ என்று வாரினார்.

ஒவ்வொரு போஸ்டரையும் நின்று படித்து கழுத்து வலி வரும் அளவுக்கு கலங்கிக்கிடக்கிறார்கள் சிவங்கங்கை மக்கள்.

போஸ்டர் யுத்தத்தைத் துவக்கிவைத்த உமாதேவனிடம் பேசினோம். ''மத்திய அரசில் பிரதமருக்கு அடுத்த இடத்தில் இருக்கிற ப.சிதம்பரம் நினைச்சா, தமிழ்நாட்டுக்கு மத்தியத் தொகுப்பில் இருந்து வரவேண்டிய மின்சாரத்தை கூடுதலாகவே வாங்கிக் கொடுக்க முடியும். ஆனால், அவருக்கு அந்த அக்கறை இல்லை. அம்மா ஆட்சிக்கு எப்படியாச்சும் நெருக்கடிகளைக் கொடுக்கணும். அதுக்காக மின்சார அளவைக் குறைச்சிருக்காங்க. இதுக்கு ப.சிதம்பரமும் உடந்தை. அதனால்தான் போஸ்டர் ஒட்டினேன். போஸ்டருக்குத் தொகுதி முழுக்க நல்ல வரவேற்பு. 'நம்மெல்லாம் வெளியில சொல்ல முடியாத விஷயத்தை உமாதேவன் போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டார்’னு 'சிக்ரி’ விஞ்ஞானிகளே பேசிருக்காங்க.

சிதம்பரம் பிரதமர் ஆவதை தடுக்கப் பாக்குறாங்க!

நாடாளுமன்றத் தேர்தல் வந்தால் மட்டுமே தொகுதி மக்களை ஏமாற்ற வரும் ப.சிதம்பரத்தின் உண்மையான முகத்தை சிவகங்கை தொகுதி முழுக்கத் தோலுரிக்கிறதுதான் இனி என்னோட வேலை'' என்று பொரிந்து தள்ளினார்.

காங்கிரஸ் தரப்பில் முன்னாள் மாவட்டத் தலைவர் துரைசிங்கத்திடம் பேசினோம். ''ஜெயலலிதாவின் ஓர் ஆண்டு சாதனையை 'நூறாண்டு சாதனை’ன்னு அவங்களுக்கு அவங்களே புகழ்ந்துக்கிறாங்க. 'ஆட்சிக்கு வந்ததும் மூன்றே மாதங்களில் தமிழகத்தில் மின் வெட்டே இல்லாமல் செய்வோம்’ என்று ஜெயலலிதா சொன்னாரே. ஆனா, மூன்று மணி நேரமா இருந்த மின் வெட்டு இப்ப 12 மணி நேரமாகிருச்சே... இதுதான் நூறாண்டு சாதனையா? 2-ஜி வழக்கில் ப.சிதம்பரம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து, சிதம்பரம் பிரதமராகக்கூட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த நேரத்தில் ஏதாவது அவதூறு கிளப்பினால் அதைத் தடுத்துடலாம்னு அ.தி.மு.க. நினைக்குது. அதுக்காக மொட்டைத் தாத்தா குட்டையில் விழுந்த கதையா ஏதேதோ போஸ்டர்களை ஒட்டிக்கிட்டு இருக்காங்க. காங்கிரஸ் கட்சியில் இருந்து இதை வன்மையாக் கண்டிக்காம இருக்காங்க. இது கட்சியோட பலவீனத்தைக் காட்டுது'' என்றார்.

மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜரெத்தின​மோ, ''மலிவான விளம்பரத்துக்காகவும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகவும் பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவிட்ட ஜெயலலிதாவுக்கோ அவங்க கட்சிக்காரங்களுக்கோ எதையுமே அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் தலைவர் சிதம்பரத்தைப் பற்றி பேச அருகதை இல்லை. தாங்கள் நொண்டிக் குதிரை என்பதை மறைப்பதற்காக மத்திய அரசு மீது பழியைப் போடுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கும் போஸ்டர் அடிக்கத் தெரியும்'' என்கிறார்.

அடுத்த போஸ்டருக்குத் தயாராகிறது சிவகங்கை!

- குள.சண்முகசுந்தரம்,

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்