ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''என் மகள்தான் மூன்றாவது ரேங்க்!''

போராடும் தாய்... அலட்சியம் காட்டும் கல்வித்துறை!

##~##
''என் மகள்தான் மூன்றாவது ரேங்க்!''

றுகூட்டலில் அதிக மதிப்பெண்கள் வாங்கியும் மாவட்ட ரேங்கில் முன்னுரிமை அளிக்காமல் இழுத்தடிக்கும் கல்வித் துறைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள் மாணவியின் பெற்றோர். தூத்துக்குடி மாவட்டத்தில்தான் இந்த அவலம்! 

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள், கடந்த மே மாதம் 22-ம் தேதி வெளியானது. 1,179 மதிப்பெண் பெற்ற சரண்யா என்ற மாணவி தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் இடத்தையும் 1,175 மதிப்பெண்கள் பெற்ற ரதிவிக்னேசுவரி இரண்டாவது இடத்தையும் 1,173 மதிப்பெண்கள் பெற்ற கிறிஸ்டினா திலகவதனி, சுருதி மீனாட்சி, சந்தோஷினி ஆகிய மூன்று பேரும் மூன்றாவது இடங்களையும் பெற்றதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்தார். அந்த மாணவிகளுக்குப் பாராட்டுகளும் கிடைத்தன.

தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, அதில் தவறுகள் இருப்பதாகக் கருதினால், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு செய்ய முடியும். அப்படி மறுகூட்டல் முறையைத் தேர்வு செய்தபோது, ஒரு மாணவிக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்க... அதன்மூலம் மாவட்ட அளவில் மூன்றாவது இடம் வேண்டும் என்று போராட ஆரம்பித்திருக்கிறார். அந்த மாணவியின் பெயர் மாலதி. ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாலதி முதலில் பெற்ற மதிப்பெண்கள் 1,168. மறு கூட்​டலுக்கு விண்ணப்பித்தபோது ஆங்கிலப் பாடம் இரண்டாம் தாளில் தவறு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. இதனால், ஆறு மதிப்பெண்கள் கூடுதலாகப் பெற்று 1,174 மதிப்பெண்கள் வாங்கினார் மாலதி.

''என் மகள்தான் மூன்றாவது ரேங்க்!''

இதனால், மாலதி மூன்றாவது இடத்தைப் பிடிக்க, மூன்றாவது இடத்தில் இருக்கும் மூன்று

''என் மகள்தான் மூன்றாவது ரேங்க்!''

மாணவிகளின் நிலை கேள்விக்குறியானது. அதேசமயத்தில், 1,169 மதிப்பெண்கள் பெற்ற கோவில்பட்டி மாணவி இமயா, மறுமதிப்பீடு மூலம் 1,180 மதிப்பெண்களைப் பெற்று முதல் இடத்தைப் பிடிக்க  சிக்கல் இன்னும் அதிகரித்தது.  

இதுபற்றி குமுறினார் மாலதியின் தாய் பேச்சியம்​மாள். ''மறுமதிப்பீடு என்பது எழுதிய பேப்பர் முழு வதையும் மீண்டும் திருத்துவது. மறுகூட்டல் என்பது ஒவ்வொரு கேள்விக்கும் போடப்பட்ட மார்க்கைக் கணக்கிடும்போது ஏற்படும் தவறைக் கண்டுபிடிப்பது. அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட போதுதான் என் மகள் மாலதி ஆறு மதிப்பெண்கள் அதிகம் வாங்கினார். 'மறுகூட்டலில் மதிப்பெண் கூடினால் மட்டுமே முதல் மூன்று இடங்களுக்கான தகுதி கிடைக்கும். மறு மதிப்பீட்டுக்குப் பிறகு மதிப்பெண்கள் கூடினாலும் ரேங்க் கிடைக்காது. காரணம்... ஒவ்வோர் ஆசிரியரும் ஒவ்வொரு மாதிரி திருத்தி மதிப்பெண் வழங்குவார்கள் என்பதால் அதைக் கருத்தில்கொள்ள முடியாது’ என்று தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா பத்திரிகைகளில் சொல்லி இருந்தார். அதன்படி பார்த்தால், என் மகளை மாவட்ட அளவில் மூன்றாவது ரேங்க் பெற்றவராக அறிவிக்க வேண்டும். இதை மாவட்டக் கல்வி அதிகாரியிடம் மனுவாக அளித்தோம். ஆனால், இமயா என்ற மாணவி மறுமதிப்பீடு செய்து மாவட்ட அளவில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் என்று சொல்லி, அதனால் என் மகளுக்கு மூன்றாவது இடம் கிடைக்காது என்று சொல்கிறார்.

மாலதி எல்லா வகுப்புகளிலும் நன்றாகப் படிப்பாள். அதனால் முக்கியமான இடத்துக்கு வருவாள் என்று நம்பினோம். மதிப்பெண்கள் குறைவாக இருந்ததால், மறுகூட்டல் வரை போராடினோம். மாவட்ட அளவில் மூன்றாவது இடமாவது கிடைக்கும் என்று பார்த்தால், அதற்கும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். மறுமதிப்பீடு மூலம் வரக்கூடிய மதிப் பெண்களைக்கொண்டு ரேங்க் கொடுக்க முடியாது என்கிறது தேர்வுத்துறை. அதனால், மறுமதிப்பீடு மூலம் இமயா பெற்ற மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், என் மகளை மாவட்டத்தில் மூன்றாவது ரேங்க் என்று அறிவியுங்கள் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் கேட்டோம். ஆனால், அவர் எங்கள் கோரிக்கையைப் புறக்கணித்து விட்டார். 'எல்லா விவரத்தையும் இயக்குநருக்கு அனுப்பியாச்சு. அங்கே போய்க் கேளுங்க. இதுல நான் ஒண்ணும் செய்ய முடியாது’ என்று சொல்லி விட்டார்.

இயக்குநர் வசுந்தராவிடம் நேரில் போய் முறையிட்​டோம். 'மூன்றாவது இடத்தை வைச்சு என்ன செய்யப் போறீங்க? அதுல எந்தச் சலுகையும் கிடையாதே. ரொம்ப பிரஷர் கொடுத்தீங்கன்னா, திரும்பவும் உங்க மகள் மார்க்கை மதிப்பீடு செய்வோம். அதுக்குப் பிறகு மார்க் குறைந்து போகவும் வாய்ப்பு இருக்கு’ என்று மறைமுகமாக மிரட்டினார். ஏற்கெனவே, அவர் வெளியிட்டிருக்கும் பத்திரிகைப் பேட்டியைக் காட்டிக் கேட்டபோது, 'இதனால் கல்வித்துறைக்குக் கெட்ட பெயர் ஏற்படும்’ என்று சொல்லி இந்த மேட்டரை அமுக்குவதிலேயே குறியாக இருந்தார்.

கண் முன்னே நடக்கும் தவறை அப்படியே விட்டுவிட முடியுமா? தமிழக முதல்வருக்கு இதுதொடர்பாக மனு அனுப்பி இருக்கிறோம். அவர்தான் கருணை காட்ட வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை நியாயமான முறையில் பிடித்தவர்கள் யார் யார் என அரசு உடனே அறிவிக்க வேண்டும்'' என்றார்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரான ராமச்சந்திரனிடம் பேசினோம். ''மாணவி மாலதியின் பெற்றோர் கொடுத்திருக்கும் மனுக்களை தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்பி இருக்கிறோம். மேற்கொண்டு அவர்தான் முடிவெடுக்க வேண்டும்'' என்றார் சுருக்கமாக.

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வசுந்தரா​தேவியிடம் பேசினோம்.'' நீங்க சொல்ற மாதிரி என்கிட்ட யாரும் வந்து மனு கொடுக்கவில்லை. நான் விசாரிக்கிறேன். மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கிறேன்'' என்று சொன்னார். மாணவிக்கு உரிய நியாயம் கிடைப்பது எப்போது?

- எஸ்.சரவணப்பெருமாள்

படங்கள்: வீ.நாகமணி, ஏ.சிதம்பரம்