ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

ஆட்டோ தேடிய மல்லிகார்ஜுனைய்யா!

விடை பெற்றார் மிஸ்டர் நேர்மை!

##~##

கிடுகிடுவென இடித்த வானம் மழை பெய்யாமல் வெறுங்காற்றோடு போனால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் ஆகிப்போனது ஜெய​லலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் இன்றைய நிலைமை! 

ஸ்பெஷல் கோர்ட், கர்நாடக ஹை கோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் என மாறி, மாறி சுற்றிக்கொண்டு இருந்த சொத்துக்குவிப்பு வழக்கை இறுதிக் கட்டத்துக்குப் போராடி இழுத்து வந்தவர் நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா. இவரது ஓய்வும், அரசுத்தரப்பு வக்கீல் ஆச்சார்​யாவின் அதிரடி விலகலும் வ‌ழக்கின் போக்கில் பேரிடியாய் இறங்கி முடக்கிப் போட்டுள்ளது.

இன்னமும் நம்பிக்கையில் தி.மு.க.!

'நிச்சயம் இந்த வழக்கில் ஜெயல​லிதாவுக்குத் தண்டனை கிடைக்கும்’ என்று நம்பிக்கையுடன் இருந்த தி.மு.க-வினர்​களும் இப்போது சோர்ந்து விட்டனர். 'புதிய நீதிபதி, புதிய அரசு வக்கீல் நியமனம் போன்ற விஷயங்களில் இனி பெங்களூருவை நம்பிப் பிரயோஜனம் இல்லை’ என்று, தி.மு.க. டெல்லி​யில் மையம் கொண்டிருக்கிறது. 'பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் நடந்து வரும் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட் தினமும் கண்காணிக்க வேண்டும்’ என்றும் ' மீதமுள்ள 600 கேள்விகளையும் உட னடியாக சசிகலாவிடம் கேட்க வேண்டும்’ என்றும் பேராசிரியர் அன்பழகன் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கும் மனு, வரும் 5-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது, 'அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யாவுக்கு ஜெ. தரப்பில் தொடர்ந்து குடைச்சல் கொடுத்த காரணத்தாலே அவர் திடீரென வழக்கில் இருந்து விலகி இருக்​கிறார். அதற்கு ஆச்சார்யாவின் பத்திரிகைப் பேட்டிகளே சாட்சியம்’ என ஆணித்தரமாகச் சொல்ல இருக்கிறார்​களாம். தேவைப்படும் பட்சத்தில் ஆச்சார்யாவை டெல்லிக்கு அழைத்துச் சென்று நீதிபதிகளின் முன்பு ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவும், தி.மு.க. வக்கீல் அணி தீவிரமாக வேலை செய்து வருகிறதாம். சுப்ரீம் கோர்ட் முரட்டுத்​தனமான நடவடிக்கை எடுக்கும் என்று இன்னமும் நம்பிக்கை​யுடன் இருக்கிறார்கள்.

ஆட்டோ தேடிய மல்லிகார்ஜுனைய்யா!

விடை பெற்றார் மிஸ்டர் நேர்மை!

'விடை பெறுகிறார் நீதிபதி... ஜெயலலிதா நிம்மதி!’ என நாம் எழுதிய போது, 'நீதிபதி ஓய்வு பெற வாய்ப்பு இல்லை, பதவி நீட்டிப்பு கிடைக்கும்’ என்று பலரும் அடித்துச் சொன்னார்கள். ஆனால், நாம் சொன்னபடியே நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா ஓய்வு பெற்று விட்டார்.

ஆகஸ்ட் 31-ம் தேதி வழக்கம் போல காலை 11 மணிக்கு சிரித்த முகத்துடன் புது கோட்சூட் அணிந்து கோர்ட்டுக்குள் நுழைந்தார். அன்று நடந்ததை நீதிபதிக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

''கடைசி நாள் என்பதால் பெரு​மகிழ்ச்சி​யோடும், அன்புடனும் எங்கள் ஒவ்வொருவரிடமும் பேசினார். இனி வழக்கை புதிய நீதிபதி விசாரிப்பார் என்பதால் மிச்சம் இருந்த வேலைகளைக் கவனமாக செய்து முடித்தார். அதன் பிறகு அவரோடு பணியாற்றியவர்கள் என்ற முறையில் அவருக்கு மதிய விருந்து அளித்தோம். பிறகுஒவ்வொரு​வராக அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். இறுதியாக நீதிபதிக்குப் பிடித்த புத்தர் சிலையைப் பரிசளித்தோம். ரொம்பவே சந்தோஷப்​பட்டார். அதன்பிறகு, எங்களைத் தனித்தனியாக அழைத்து, 'நான் வழக்கின் நெருக்கடியில் உங்​களிடம் ஏதாவது கோபமாக நடந்து கொண்டிருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்’ என மென்மையான குரலில் சொன்னதும், எங்களுக்குக் கண்ணீரே வந்து விட்டது. அதன் பிறகு மாலை பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் இருக்கும் அத்தனை மாவட்ட நீதிபதிகளும் சேர்ந்து விருந்து கொடுத்து, பிரியாவிடை கொடுத்தனர். அவர்கள் மத்தியில் பேசும் போதும் உருக்கமாகவே பேசினார்'' என்றார்கள்.

ஆட்டோ தேடிய மல்லிகார்ஜுனைய்யா!

அன்று மாலை 7.30 மணி அளவில், கோர்ட்டை விட்டு வெளியே வந்தார் நீதிபதி மல்லிகார்​ஜுனைய்யா. அவருடன் ஸ்பெஷல் கோர்ட்டில் பணியாற்றிய‌ கோர்ட்டார் பிச்சமுத்து உள்ளிட்ட பலரும் கார் வரை வந்து வழியனுப்ப வந்தனர்.

அப்போது மல்லிகார்ஜுனைய்யா, ''மாலை 5 மணியோடு என் நீதிபதி பதவி போய் விட்டது. நீங்கள் போகலாம்'' என்றவர் தான் இதுவரை பயன்படுத்தி வந்த நீதிபதிக்கான காரில் ஏறவும் மறுத்து விட்டார். ஊழியர்களும், சக நீதிபதிகளும் எவ்வளவோ வற்புறுத்திய போதும் சிரித்து கொண்டே ''நோ... நோ'' என்றபடி ஆட்டோ பிடித்துப் பயணிக்கத் தயாரானார். அந்த நேரத்தில், நீதிபதிக்கு நெருக்கமான வக்கீல் ஒருவர் ஓடி வந்து, 'என்னுடைய காரில் டிராப் பண்றேன். வாங்க’ என்று மல்லிகார்ஜுனைய்யாவிடம்  கெஞ்சி அழைத்துச் சென்றார்.

நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா 'டாடா’ காட்டிக் கொண்டே கோர்ட் வளாகத்தை விட்டு வெளியேறிய போது, கோர்ட்டின் கடைநிலை ஊழியர் ஒருவர் தன்னை மறந்து தேம்பி அழுதே விட்டார்.

வாய்தா கொடுக்க மட்டும் சோமராஜு?!

நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா ஓய்வைத் தொடர்ந்து, சொத்துக் குவிப்பு வழக்குக்குப் புதிதாக‌ நீதிபதி நியமிக்கப்படும் வரை, இடைக்காலப் பொறுப்பு நீதிபதியாக‌ நீதிபதி சோமராஜு நியமிக்கப்பட்டு இருக்கிறார். 58 வயதான நீதிபதி சோமராஜு, இப்போது பெங்களூரு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதி பதியாகப் பணியாற்றி வருகிறார். இவர், 2004-ம் ஆண்டு ஹூப்ளி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த போது ரயில்வே ஊழியர்கள் தொடர்பான வழக்கில் அதிரடித் தீர்ப்பு வழங்கி, கர்நாடகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர். இது வரை, பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் கட்டடத்தில் முதல் தளத்தில் இயங்கி வந்த ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு, இனி அதே கட்டடத்தில் மூன்றாவது தளத்தில் 49-வது ஹாலுக்கு மாற்றப்பட்டு உள்ளது. 'நீதிபதி சோமராஜு இடைக்காலப் பொறுப்பு நீதிபதி என்பதால் வழக்கை விசாரிக்காமல், வாய்தா மட்டுமே கொடுப்பார்’ என்றும் சொல்லப்படுகிறது.

சொத்துக் குவிப்பு அம்புட்டுத்தானா?

நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் ஓய்வு, ஆச்சார்​யாவின் ராஜினாமா என சந்தோஷச் செய்திகளால் திக்குமுக்காடிப் போன ஜெயலலிதா தரப்பு வக்கீல் அணி, கடந்த 3-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போதும் சிரித்த‌ முகத்துடனே கோர்ட்டுக்கு வந்தனர். வழக்கம் போல ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி 'அதே’ காரணங்களைச் சொல்லி ஆஜாராகவில்லை. அரசு வக்கீல் ஆச்சார்யாவும் வரவில்லை. வழக்கு நீதிபதி சோமராஜு முன்னிலையில் விசாரணை வந்த போது, ''நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் நியமனம் குறித்து தாக்கல் செய்த மனு கர்நாடக ஹை கோர்ட் விசாரணையில் இருப்பதால் வழக்கை விசாரிக்கக் கூடாது'' என்று சசி​கலாவின் வக்கீல் மணிசங்கர்  வாய்தாவுக்கு காரணம் சொன்னார்.

''அந்த மனு விசாரணையில் இருக்கிறதே தவிர, வழக்கை விசாரிக்கவே கூடாது என ஹை கோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் சொல்லவில்லை'' என அரசுத் தரப்பு ஜூனியர் வக்கீல் சந்தேஷ் சவுட்டா ஆட்சேபம் தெரிவித்தார். ஆனால் நீதிபதி சோமராஜு, ''அந்த மனு வரும் 12-ம் தேதிக்குள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதால், வழக்கை 19-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன்'' என்றார்.

''புது நீதிபதியையும், புது அரசு வ‌க்கீலையும் உடனடியாக நியமிக்க வேண்டிய கர்நாடக ஹை கோர்ட் தலைமை நீதிபதி விக்ரம்ஜித் சென், ஹாங்காங் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.  கர்நாடக அரசும் இந்த வழக்கு பற்றி சொல்லிக் கொள்ளும்படி, அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. அதனால் புதிதாக நீதிபதி, அரசு வக்கீலை நியமித்து, அவர்கள் சொத்துக்குவிப்பு வழக்கு எனும் பெரும் நாவலை படித்து... முடித்து... ஆராய்ந்து... வாதாடி... தீர்ப்பு எழுதி முடிப்பதற்குள்...'' என்று நொந்து போகிறார்கள் இந்த வழக்கை உன்னிப்பாக கவனிப்பவர்கள்.

தாமதம் தொடர்கிறது!

- இரா.வினோத்

படங்கள்: ந.வசந்தகுமார்