மயக்கம் என்ன?

##~## |
சமீபத்தில் ஒரு குடிநோய் மீட்புச் சிகிச்சை மையத்துக்குச் சென்று இருந்தேன். குடிநோயாளியைச் சுற்றி மருத்துவர், உதவியாளர், குடிநோயாளியின் மனைவி, நண்பர் ஆகியோர் உட்கார்ந்து இருந்தார்கள். டேபிளில் குவார்ட்டர் பாட்டில், மினரல் வாட்டர், டம்ளர், ஸ்நாக்ஸ்!
மருத்துவர், 'குடிப்பா... பரவாயில்லை. இன்னைக்கு ஒரு நாளைக்குதானே... தங்கச்சிக்கிட்ட நான் சொல்லிக்கிறேன்...’ என்கிறார். குடிநோயாளியின் மனைவி, 'அதான் டாக்டரே சொல்லிட்டாரே... குடிங்க’ என்கிறார். குடி நோயாளியின் நண்பரோ ஒரு 'லார்ஜ்’ என்பதுபோல விரல்களால் சைகை காட்டி கண்ணைச் சிமிட்டுகிறார். அதிர்ச்சியாக இருந்தது. ஒன்றும் புரியவில்லை.
குடிநோயாளி அமைதியாக, இறுக்கத்துடன், கண்களை மூடி தலைகுனிந்து அமர்ந்து இவர்கள் சொல்வதை எல்லாம் உள்வாங்கிக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் குடிநோயாளியின் நண்பர், 'டேய், அதான் இத்தனை பேர் சொல்றோம் இல்லை. நீ குடிச்சதே இல்லையா? ரொம்ப யோக்கியன்தான்... இந்தா குடி...’ என்று டம்ளரில் சரக்கை ஊற்றி தண்ணீர் கலந்து நீட்டுகிறார். அவ்வளவு நேரம் அமைதியாக அமர்ந்து இருந்த அந்த குடிநோயாளி வெகுண்டெழுந்து, 'அதான் வேணாம்ன்னு சொல்றேனில்ல...’ என்றபடி படார் என்று ஆவேசமாக அந்த டம்ளரைத் தட்டிவிட்டு, எழுந்து சென்று அறை வாயிலில் நின்றுகொள்கிறார்.

குடிநோயாளியைப் பாராட்டும் விதமாக அனைவரும் கைத்தட்டுகிறார்கள். டாக்டர் புன்சிரிப்புடன் எழுந்து சென்று குடிநோயாளியின் முதுகைத் தட்டிக் கொடுத்து 'வெரிகுட்’ என்கிறார். குடிநோயாளியின் முகத்தில் ஆசுவாசம் தெரிகிறது. கண்கள் கலங்கி இருக்கின்றன. அவர் முகத்தில் மிகப் பெரியதாக எதையோ சாதித்துவிட்டதுபோல் பெருமிதம் தெரிகிறது. உண்மையிலேயே, குடிநோயாளியான ஒருவருக்கு இது மிகப் பெரிய சாதனைதான் - மாடு பிடிக்கத் தெரியாத ஒருவர் ஜல்லிக்கட்டில் காளையை அடக்கியதுபோல. கரணம் தப்பினால் மரணம்!
குடிநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளில் ஒன்றுதான் மேற்கண்ட பயிற்சி. மனோதிடம் வளர்க்கும் இந்தப் பயிற்சியை 'அசர்டிவ்னெஸ் டிரெய்னிங்’ (Assertiveness training) என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். மேற்கண்ட முறையில் மட்டும் அல்ல... பெரிய அளவில் நடத்தப்படும் மது மீட்புச் சிகிச்சை மையங்களில் பார்ட்டி சூழல், பிசினஸ் டீலிங் சூழல் போன்ற சூழல்களில் மேற்கண்ட 'ரோல் ப்ளே’ நடத்தி குடிநோயாளியின் மனதை மேன்மேலும் திடப்படுத்துவார்கள். யோகா, தியானம், உடற்பயிற்சிபோல இதுவும் ஒரு கலைதான். ஒரு குடிநோயாளி இன்பமானச் சூழலிலும் சரி... இக்கட்டான சூழலிலும் சரி... குடிக்கக் கூடாது; கடவுளே குவார்ட்டர் பாட்டிலுடன் வந்து வற்புறுத்தினாலும்கூட குடிக்க மாட்டேன் என்று தீர்க்கமாக மறுக்கக் கற்றுத் தரும் கலை இது.
அடிப்படையில் 'அசர்டிவ்னெஸ்’ என்பதன் அர்த்தம் - தெளிவாக, நேர்பட, அழுத்தம் திருத்தமாகப் பேசுவது. தனது முடிவில் தீர்க்கமாக இருப்பது. குடிநோயாளிகளுக்கு மட்டும் அல்லாமல், தன்னம்பிக்கை குறைவாக இருப்பவர்களுக்கும் ஒருசில குறைபாடுகளுடன் பிறந்தவர்களுக்கும் உலகம் முழுவதும் மன நல மருத்துவர்களால் பல்வேறு வகைகளில் பயிற்சியாகக் கற்பிக்கப்படும் கலை இது.
குடிநோயைப் பொறுத்தவரை மருந்துகளால் மட்டுமே குணப்படுத்துவது என்பது சாத்தியமே இல்லை. பல்வேறு வகையான கவுன்சிலிங், பயிற்சிகள் மூலமே குடி மீட்பு என்பது சாத்தியம். ஏனெனில், மது குடிப்பது என்பது 'லெர்ன்டு பிகேவியர்’(Learned behaviour) எனப்படும் கற்றுக்கொண்ட ஒரு பழக்கம். அதை எப்படி கற்றுக்கொண்டார்களோ அப்படித்தான் மறக்கவும் வேண்டும். மரபணு சார்ந்த விஷயங்கள் தவிர, மற்ற அனைத்துமே மனிதன் ஒவ்வொன்றாக கற்றுக்கொள்ளும் விஷயங்களே. 'இது நல்லது... இது கெட்டது’ என்பது எல்லாம் நமக்கு சொல்லித் தரப்பட்டவையே. அவற்றைப் பகுத்தறிந்து நல்வழியை நாடிச் செல்லும்போதுதான் வாழ்வின் உயர்வான நிலைக்கு நாம் செல்கிறோம்.
நறுமணம், துர்நாற்றம் ஆகியவைகூட குழந்தையாக இருக்கும்போதே பிறர் உணர்த்திதான் நமக்கு கற்பிக்கப்பட்டது. அதன் பின்பே துர்நாற்றத்தைக் கண்டால் தூர விலகுகிறோம். அதுபோல மது என்பது

துர்நாற்றம் என்று தெரியாததால்தான் - அது தீங்கு விளைவிக்கும் விஷயம் என்று கற்பிக்கப்படாததால்தான் அல்லது கற்பிக்கப்பட்டும் சில சூழல்களாலும் அலட்சியப் போக்கினாலும்தான் ஒருவர் மதுவைக் குடித்து குடிநோயாளி ஆகிறார்.
இன்னொரு விஷயம்... மதுவைத் தவிர வேறு எந்தப் பொருளையும் கண்டு உலகம் இந்த அளவுக்கு பயந்தது இல்லை. 'உன்னிடம் போராடி, சண்டை போட்டு எல்லாம் ஜெயிக்கவே முடியாது’ என்று ஒட்டுமொத்த உலகமும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு... மண்டியிட்டது மதுவின் முன்பு மட்டும்தான். அதனால்தான் துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதைப் போல மதுவைக் கண்டால் தூர விலகி ஓடி விடுவதே நல்லது.
குடிநோயாளிகள், 'இப்படியாகி விட்டோமே... நமது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே’ என்று ஒருபோதும் கவலைகொள்ள வேண்டாம். நீங்கள் நினைத்தால் நிச்சயம் இதில் இருந்து மீண்டுவிடலாம். குடிநோயாளிகளின் ஆறுதலுக்காக அல்ல... உண்மையிலேயே ஒரு விஷயத்தை இங்கு சொல்கிறேன். மதுவில் இருந்து முழுமையாக மீண்டுவிட்ட குடிநோயாளிகள் பலரும் சொல்லும் கருத்துதான் இது. 'மது அடிமையாக இருந்தமைக்கு எந்த அளவுக்கு வேதனை அடைகிறேனோ அதே அளவுக்கு மது அடிமையாக இருந்தமைக்குப் பெருமையும்படுகிறேன்’ என்பார்கள். வீழ்வது என்பது தவறு அல்ல... வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு. அலுங்காமல் குலுங்காமல் வாழ்க்கையைக் கடப்பவர்களைவிட அடி மேல் அடி வாங்கி அனுபவங்களையும் வேதனைகளையும் அரைத்துக் குடித்து கடந்த குடிநோயாளிகளிடம் பிறருக்கு கற்றுக்கொடுக்க இருக்கும் பாடங்கள் ஏராளம். மரணத்தையும் எதிர்கொள்ளும் மனோதிடத்தையும் எந்தச் சூழலையும் சுகமாக்கும் பக்குவத்தையும் அவர்கள் பெற்று இருப்பார்கள்.
'குடியில் இருந்து மீள்வதற்கு முன் - குடியில் இருந்து முழுமையாக மீண்ட பின்’ என்று குடிநோயாளிகளின் வாழ்க்கையை இரண்டாகப் பிரிக்கலாம். அதனால்தான் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் கூட்டங்களில் தினமும் நாலைந்து உறுப்பினர்களின் பிறந்த நாளையாவது கொண்டாடுகிறார்கள். அவரை வாழ்த்திப் பேசுகிறார்கள். பலூன் கட்டி, கேக் வெட்டி மகிழ்கிறார்கள். அந்தப் பிறந்த நாள் என்பது அந்த உறுப்பினரின் உண்மையான பிறந்த நாள் அல்ல... அவர் கடைசியாக குடியில் இருந்து முழுமையாக மீண்ட நாளையே பிறந்த நாள் என்று அறிவித்து கொண்டாடுகிறார்கள். உண்மைதானே, குடி மீட்பு என்பது ஒருவருக்கு மறுபிறவிதானே!
குடிக்க நினைக்க ஏராளமான தூண்டுதல், காரணங்கள் இருப்பதுபோல குடியை மறக்கவும் அதைவிட அதிகமான வழிமுறைகள் உண்டு. அதில் ஒன்று இது. 'நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன். இனி எப்போதுமே குடிக்க மாட்டேன்’ என்று உங்கள் உலகம் அறிய பகிரங்கமாக பறைசாற்றுங்கள். மெயிலைத் தட்டுங்கள். மெசேஜைப் பறக்கவிடுங்கள். என்ன நடக்கும்? உங்கள் மனைவிகூட நம்பவே மாட்டார். நண்பர்கள்... நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார்கள். 'உஸ்ஸ்ஸ்... இது எத்தனையாவது தடவை மாப்ளே?’ என்பார் ஒரு குடி நண்பர். இன்னொரு நண்பரோ, 'நண்பா, வெறும் தண்ணியில எழுதிவைக்கிறதா? இல்லை சரக்கு ஊத்தி எழுதிவைக்கிறதா?’ என்பார்!
தடுக்கி விழாமல் எந்தக் குழந்தையும் நடை பயின்றது இல்லை நண்பர்களே. தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டதுதான் நல் வாழ்க்கை நடைமுறைகள். இன்றைக்கு நாம் அனுபவித்துக்கொண்டு இருக்கும் அத்தனை நவீனக் கண்டுபிடிப்புகளும் தோற்றுத் தோற்று... சிற்பங்களைப் போலச் செதுக்கி செதுக்கி... ஒவ்வொரு தொழில்நுட்பமாக 'அப்-டேட்’ செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டவைதான். ஆகவே, நண்பர்கள் ஏளனம் செய்கிறார்கள்... பத்து வருஷம் குடும்பம் நடத்தின பொண் டாட்டியே நம்ப மாட்டேங்கிறாள் என்று எல்லாம் வருத்தப்படாதீர்கள். அவர்களின் ஏளனத்திலும் நம்பிக்கையின்மையிலும்கூட உங்கள் கடந்த கால குடி வரலாற்றுக்குப் பங்கு இருக்கிறதுதானே?
குடிக்க மாட்டேன் என்று அறிவித்த பின்பு நண்பர்களின் கேலிக்குப் பயந்தாவது குடிப்பதற்கு குடிநோயாளிகள் பயப்படுவார்கள். குறிப்பிட்ட நேரம் வந்ததும் குடிக்கக் கூப்பிடும் குடி நண்பர்களில் பத்து பேரில் நான்கு பேர் உங்களைக் குடிக்க அழைக்க மாட்டார்கள். அப்படியே நண்பர்கள் குடிக்கும் இடத்துக்கு நீங்கள் சென்றாலும் 'அதான் குடிக்க மாட் டேன்னு சொல்லிட்டியே? எதுக்கு வந்த?’ என்று நல்ல நண்பர்கள் இரண்டு பேராவது சொல்வார்கள். 'இல்லை, இல்லை... குடிக்க வற்புறுத்தும் நண்பர்கள்தான் எனக்கு அதிகம்’ என்று சொல்கிறீர்களா? எத்தனை முறை வற்புறுத்துவார்கள்... நான்கைந்து முறை? அத்தனை முறையும் மறுத்துவிடுங்கள். நண்பர்கள் கை காசை தண்டத்துக்குச் செலவு செய்து வாயில் புனலை வைத்தா வலுக்கட்டா யமாக ஊற்றுவார்கள்?
குடியை மறக்க இன்னோர் எளிய வழியும் உண்டு. வீட்டில் இருந்தாலும் சரி... அலுவலகத்தில் இருந்தாலும் சரி... எப்போது வேண்டுமானலும் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம். இதை 'காவர்ட் சென்சிட்டிசேஷன்’ (Covert sensitization) என்கிறார் கள் மனநல மருத்துவர்கள். இந்தப் பயிற்சி கொஞ்சம் காமெடியாகத்தான் இருக்கும். சும்மா இருக்கும்போது எல்லாம் அடிக்கடி குடிப்பதைப் போலவும்... குடிக்கும்போது கசந்து, குமட்டி வாந்தி எடுப்பதுபோலவும் கற்பனை செய்துகொள்ளுங்கள். மனைவியை, குழந்தையை அடி பின்னி எடுத்து இருப்பீர்கள் அல்லது மனைவி உங்களை வெளுத்துக் கட்டி இருப்பாள். 'அய்யோ அம்மா’ என்று அலறி இருப்பீர்கள். அதை எல்லாம் கற்பனைசெய்து பாருங்கள். போலீஸிடம் சிக்கியது, தெருவில் அரை நிர்வாணமாகப் புரண்டது, சாக்கடையில் உருண்டது என மது குடித்தபோது நடந்த விரும்பத்தகாத விஷயங்களை நேரம் கிடைக்கும்போது எல்லாம் நினைத்து, கற்பனைசெய்து பாருங்கள். சத்தியமாகச் சொல்கிறேன். பல சமயங்களில் உங்கள் உடல் நடுநடுங்கிவிடும்... பதைபதைத்துப்போவீர்கள். ஒருகட்டத்தில் குடியின் மீதான வெறுப்பு மனதில் மேலோங்கத் தொடங்கும்!
தெளிவோம்