ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

கட்டடம் இல்லாத கல்லூரி... பீடித் துண்டு சாப்பாடு

காஞ்சிப் பொறியியல் பரிதாபம்

##~##
கட்டடம் இல்லாத கல்லூரி... பீடித் துண்டு சாப்பாடு

மிழகத்தில் கல்வி என்பது தனியார் சொத்து ஆகிவிட்ட பிறகு, மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுவது தினசரி சம்பவமாகி விட்டது. 

இந்தப் பட்டியலில் அரசுக் கல்வி நிறுவனங்களும் சேர்ந்து விட்டதுதான் துரதிர்ஷ்டம். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் 16 உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒன்றான காஞ்சிபுரம் பொறியியல் கல்லூரி மாணவர்கள், கல்லூரியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாதததைக் கண்டித்து வகுப்புகளைப் புறக்கணித்து கடந்த 7-ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். 2010-ல் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் அடையாள அட்டையில் தொடங்கி ஆய்வுக்கூடம் வரை எல்லாமே பிரச்னை.

சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள அந்தக் கல்லூரிக்கு விரைந்தோம். பெயர்ப் பலகை இல்லை என்பதே கல்லூரியின் லட்சணத்தைச் சொன்னது. போராட்டம் நடத்திய மாணவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பல்கலைக்கழகத்தின் தரப்பில் இருந்து பேச்சு​வார்த்தை நடத்தி ஒரு தீர்வு சொல்லாத வரை வகுப்புக்குச் செல்வது இல்லை என மாணவர்கள் உறுதி காட்டினர்.

கட்டடம் இல்லாத கல்லூரி... பீடித் துண்டு சாப்பாடு

கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கும் சுதர்ஷன், ''இந்த காலேஜ் 2010-ல்  தொடங்கப்பட்டது. 3-வது பேட்ச் இப்போதுஆரம்பமாகி விட்டது. மெக்கானிகல் இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்பட நாலு துறைகளில் மொத்தம் 530 பேர் படிக்கிறோம். நல்ல மார்க் எடுத்து அரசு ஒதுக் கீட்டில்தான் இங்கே சேர்ந்து இருக்கோம். ஆனா, வேற வழிஇல்லாம வந்தவங்கபோல பல்கலைக்கழகம் எங்களை நடத்துகிறது. 500 மாணவர்களுக்கு எட்டே அறைகள்தான் இருக்கு. கல்லூரிக்கு என இடம் இருந்தும் மூணு வருஷமா வாடகைக் கட்டடம்தான். கல்லூரியில சேரும்போதே உள்கட்டமைப்பு வசதிக் காக தலைக்கு 100 ரூபா வசூல் செய்றாங்க. ஆனா, இன்றுவரை கட்டடத்தை கட்டி முடிக்கவில்லை. இன்ஜினீரியங் படிப்புக்கு லேப் கிடையாது. செமஸ்டருக்கு ஒரு முறை ஆரணி, விழுப்புரம்னு லேபுக்காக அலையுறோம். விடுதி இன்னும் மோசம். உணவுல பீடித்துண்டு, புழு, கரப்பான் பூச்சி கிடக்கும். கான்ட்ராக்டரை மாற்றச்சொல்லி பல தடவை முறையிட்டும் கண்டுக்கவே இல்லை. சுத்தமில்லாத உணவால், பசங்க எப்போதும் மருந்து மாத்திரை களோடவே இருப்பாங்க'' என்றார்.

இடைமறித்த ராஜ்குமார் என்ற மாணவர், ''35 ஆசிரியர்கள்ல ஒன்றிரண்டு பேர்தான் சீனியர். இவ்வளவு மாணவர்களுக்கு குறைந்த பட்சம் 150-ல் இருந்து 200 கம்ப்யூட்டர்கள் அவசியம். இருப்பதோ 25 மட்டும்தான். இன்டர்நெட் வசதி கிடையாது. குறைந்தபட்சம் நூலகம்கூட கிடையாது. எந்த வசதியும் இல்லாத நிலையில் எதற்குக் கல்லூரியைத் தொடங்கினர் என்பது புரியவில்லை. மெக்கானிக்கல் துறை இன்னும் மோசம். ஆரம்பிச்ச மூணு மாசம் வரை பேராசிரியர்களே நியமிக்கலை. பேருந்து வசதி கிடையாது. இத்தனை வருஷத்துல கல்லூரிக்கு ஒரு போர்டு வைக்கக்கூட இவ்வளவு பெரிய பல்கலைக் கழகத்துக்குத் தோணாதது இன்னும் கொடுமை'' எனக் கொதித்தார்.

மாணவர்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பியது கல்லூரி நிர்வாகத்தை எட்ட, சென்னை மண்டலத்தில் உள்ள நான்கு கல்லூரிகளின் பொறுப்பாளரான வேலன் என்பவர் உடனே வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதுவும் தோல்வி​யைத் தழுவியது. மாணவர்களின் உறுதியைக் கண்ட கல்லூரித் தரப்பு, உடனடியாக அண்ணா பல்கலைக் கழகத்துக்குத் தகவல் தர சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தார் துணைவேந்தர் காளிராஜ்.

கோரிக்கைகள் ஒவ்வொன்றையும் நாள், வாரம், மாதம் என காலவாரியாக நிறைவேற்றுவதாக, மாணவர்களிடம் உறுதி​யளித்தார்.  

20 நாட்களில் பேருந்து வசதி, ஒரு மாதத்தில் லேப் மற்றும் இன்டெர்நெட் வசதி, இரண்டு மாதங்களில் 150 கூடுதல் கம்ப்யூட்டர்கள், சமையல் கான்ட்ராக்ட் முடிந்ததும் புது நபரை மாற்றிவிடுவது, ஓர் ஆண்டுக்குள் கல்லூரிக் கட்டடம் கட்டி முடிப் பது என மாணவர்களுக்கு உறுதியளித்த பிறகு, விடைபெற்றார் துணைவேந்தர் காளிராஜ். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக மாணவர்களின் நீண்டநாள் கோரிக்கையான, கல்லூரியின் நேர மாற்றத்தை அங்கேயே அறிவித்து மகிழ்ச்சி ஏற்படுத்தினார். காலை 8 மணி முதல் 3.50 வரை என இருந்த வகுப்பு நேரத்தை 9 முதல் 4 வரை என அங்கேயே அறிவித்தார்.

கல்லூரி முதல்வர் டாக்டர் கோதண்டபாணி, ''மாணவர்களின் கோரிக்கைகளை ஓரிரு நாட் களில் தீர்த்துவிட முடியாது. கல்லூரிக்கு என சொந்தக் கட்டடம் இல்லாததே மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாததற்குக் காரணம். கல்லூரிக்கான இடத்தில் இன்னும் 18 மாதங்களுக்குள் கட்டடம் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. நூலகம், இன்டர்நெட், கம்ப்யூட்டர் லேப் வசதிகளை அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்குள் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார் துணைவேந்தர். மாணவர்களின் கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும்.'' என்றார்.

கவலையற்ற சூழ்நிலையில்தான் கல்வி செழிக்கும்!

- எஸ்.கிருபாகரன், படம்: வீ.ஆனந்தஜோதி