ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

இறால் பண்ணையால் அழியும் விவசாயம்

பதறும் பொன்னேரி

##~##
இறால் பண்ணையால் அழியும் விவசாயம்

''விவசாய நிலங்களும் பயிர்களும்இறால் மீன் பண்ணைக் கழிவுகளால் கருகிப்போய் இருக்குங்க. எங்க ஆறு பஞ்சாயத்து மக்களும் எவ்வளவோ போராடியும் எந்தவிதத் தீர்வும் கிடைக்கலை. அதான், ஜூ.வி.யை நாடி வந்திருக்கோம்'' - ஆக்ஷன் செல்லில் (044-60808002) பேசினார் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகில் உள்ள தேவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமு என்ற விவசாயி. 

அவருடன் சென்று பண்ணைகளைப் பார்வையிட்டோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் வலைகளால் சூழப்பட்ட இறால் மீன் குட்டைகள்.

''எங்கள் கிராமத்துல இப்போ 100 ஏக்கர் அளவுக்கு இறால் மீன் பண்ணை வெச்சிருக்காங்க. இந்தப் பண்ணைகளில் இருந்து வரும் கழிவு நீரால் மீதம் இருக்கிற நிலமும் பாழாகுது. கழிவு நீர் போறதுக்கான வழி கிடையாது. எல்லாமே விவசாய நிலத்துக்குத்தான் போகுது. மழைக்காலத்துல வயல்களில் நீர் அதிகமாத் தேங்கி நிக்கும்போது அதை ஏரிக்குத் திருப்பி விடுவோம். இப்போ விளைநிலங்களைச் சுத்தி இறால் பண்ணைகள் இருக்கிறதால தண்ணீர் போறதுக்கு வழியில்​லாம பயிர்கள் அழுகி நாசமாப்போகுது. இந்த ஊரைச் சுத்தி உள்ள ஆறு பஞ்சாயத்துக்கும் இங்கே ஏரிக்குப் பக்கத்தில் இருக்கிற 'போர்’ல இருந்துதான் கூட்டுக் குடிநீர் போகுது. குடிநீர் போகிற பைப்ல இந்தக் கழிவு நீரும் கலக்கிறதால அதைக் குடிச்சா, உடம்பெல்லாம் அரிக்குது.

இறால் பண்ணையால் அழியும் விவசாயம்

பயிர் செஞ்சா வருஷத்துக்கு ஒரு ஏக்கருக்குப் பத்தாயிரமோ, பதினைஞ்சாயிரமோதான் கிடைக்கும்.

இறால் பண்ணையால் அழியும் விவசாயம்

இறால் பண்ணைக்கு வாடகைக்குவிட்டா, வருஷத்துக்கு 20 முதல் 25 ஆயிரம் வரைக்கும் பணம் கிடைக்குது. ஆனால், காலத்துக்கும் சோறு போடுறது நம்ம விவசாயம்தான்னு புரியாம, ஏழை விவசாயிங்க பயிர் நிலங்களைக் குத்தகைக்கு விடுறாங்க. இந்த கெமிக்கல் தண்ணீரால பயிர் வளர மாட்டேங்குது. வேறவழி இல்லாம அந்த பண்ணைக்குப் பக்கத்துல இருக்கிற நிலத்தையும் இறால் பண்ணைக்கே குத்தகைக்கு விட்டுடுறாங்க. எங்க ஊர்க்காரங்க யாருக்கும் இங்கே பண்ணை இல்லை. சென்னையில் இருந்து வந்து விவசாய நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து இந்தத் தொழில் செய்றாங்க. எங்க விவசாய நிலத்துக்கு உதவும் உயிரினமாக இருக்கிறது தவளையும் பாம்பும்தான். பாம்பும் தவளையும், இறாலையும் மீனையும் முழுங்கிடுமோன்னு பயந்து அதுங்களைப் புடிச்சு பிளாஸ்டிக் கவர்ல கட்டி ரோட்டுல போட்டுடுறாங்க. அதுங்க மூச்சுமுட்டித் துடிச்சு செத்துப்போகுதுங்க' என்று வருத்​தத்துடன் முடித்தார் ராமு.

சீனிவாசன் என்பவர், ''பொதுவா ஆறு மாசத்துக்கு ஒரு முறை, மூணு மாசத்துக்கு ஒரு முறைதான் குட்டையில இருந்து இறால் மீன் எடுப்பாங்க. ஆனா, இந்த இடத்துல ஒன்றரை மாசத்துக்கு ஒரு முறை எடுக்கிறாங்க. அந்த உயிரினங்கள் சீக்கிரம் வளர்றதுக்கு ஏதோ கெமிக்கல் கலக்குறாங்க. அந்த கெமிக்கல் எங்க விளை நிலங்களை நாசப்படுத்துது. பயிரெல்லாம் கருகிப்போய் விடுகிறது. இதைஎதிர்த்து மூணு நாலு வருஷமாப் போராடிட்டு இருக்கோம். 100 அடிக்கு மேல ஆழம் தோண்டி போர் போட்டு தண்ணீர் எடுக்கிறதால தண்ணீரெல்லாம் உப்பா மாறிப்போச்சு. கடைசியில், குடிக்கிறதுக்குக் கூட தண்ணீர் இல்லாமப் போயிடும் போல'' என்கிறார் ஆதங்கத்துடன்.

குத்தகைக்கு விட்டிருக்கிற விவசாயியான குமரனிடம் பேசினோம். 'இந்த ஊர் நிலத்தடி நீர்

இறால் பண்ணையால் அழியும் விவசாயம்

சரியில்லாததால், விவசாயம் சரியா பண்ண முடியலை. விளைச்சலும் கிடையாது. அப்படியே விவசாயம் செய்தாலும் லாபம் கிடையாது. வர்ற பணத்துல, வேலை செய்றவங்களுக்குக் கூலி கொடுக்கிறதுக்கே சரியா இருக்கு. இறால் பண்ணை வைக்கிறதுக்கு குத்தகைக்கு விட்டா வருஷத்துக்கு 22 ஆயிரம் வரைக்கும் தர்றாங்க. பணத்துக்குப் பணமும் வருது, கூடவே வேற வேலையும் செய்துக்கலாம். அதனால்தான் குத்தகைக்கு விட்டிருக்கோம்'' என்கிறார் அப்பாவியாக.

இறால் பண்ணை உரிமையாளரான பரமனிடம் பேசினோம். ''அவங்க சொல்ற மாதிரி எந்தக் கெமிக்கலும் நாங்க கலக்குறது கிடையாது. பயிர்களுக்குப் பயன்படுத்துற டி.ஏ.பி. போன்ற உரங்களைத்தான் பயன்படுத்துறோம். மூணு மாசத்துக்கு ஒரு முறைதான் நாங்க வளர்ப்பு மீன்களை வெளியே எடுக்கிறோம். அந்தக் கிராமத்து மக்கள் விவசாயம் பண்ண முடியாம, விளைச்சலும் இல்லாமத் தவிச்சுட்டு இருந்தாங்க. இப்போ நாங்க பண்ணை வச்சிருக்கிறதால், கிராம மக்களுக்கு வேலை கொடுத்து அவங்களையே பராமரிக்கச் சொல்றோம். நிலத்தோட சொந்தக் காரங்களுக்கு குத்தகைக்கான பணத்தை சரி யாகக் கொடுத்துடுறோம். சிலர் மட்டும் ஏன் எங்க மேல குத்தம் சொல்லுறாங்கன்னு தெரியலை'' என்கிறார்.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் சீனிவாசுலு, ''இந்தப் பிரச்னையை பற்றிய தகவல் எங்களுக்குக் கிடைத்ததும் ஆய்வுக்காக ஒரு குழுவை அமைத்துள்ளோம். முதல்கட்டமாக அந்தப் பகுதியில் உள்ள நீர் மற்றும் மண்ணை எடுத்து, பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பியுள்ளோம். ஆய்வு முடிவு வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

விவசாய நிலத்தைக் காப்பாற்றுங்கள்!

- கவிமணி, படங்கள்: அ.ரஞ்சித்