ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''உள்ளாட்சித் தேர்தல் எப்போது?''

இழுத்தடிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்... கடுப்பில் மார்க்சிஸ்ட்கள்

##~##
''உள்ளாட்சித் தேர்தல் எப்போது?''

டந்த ஒரு வருட காலமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் காலம் கடத்திக்கொண்டு இருப்பதுதான் ஆளும் என்.ஆர்.காங்கிரஸின் லேட்டஸ்ட் சாதனை. இதனால், செம கடுப்பில் இருக்கின்றன எதிர்க் கட்சிகள்! 

உள்ளாட்சித் தேர்தல் நடத்தவேண்டி நீதிமன்றக் கதவுகளைத் தட்டிக்கொண்டு இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அமைப்பாளர் பெருமாள் இதுகுறித்து நம்மிடம் பேசினார். ''தமிழ​கத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிந்து நகராட்சிக் கூட்டங்கள் கூட்டப்பட்டு, அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்றுகொண்டு இருக்கிறது. புதுச்​சேரியிலோ, என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பதவி ஏற்று ஒரு வருடத்துக்கு மேலாகியும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

''உள்ளாட்சித் தேர்தல் எப்போது?''

கடந்த வருடம் ஆகஸ்ட் 22-ம் தேதிக்குள் நடக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் தள்ளிக்கொண்டே போகவும், விரைவில் தேர்தல் நடத்தவேண்டி நீதிமன்றத்தை நாடினோம். நீதிமன்றமோ ஆறு மாத கால

''உள்ளாட்சித் தேர்தல் எப்போது?''

அவகாசம் கொடுத்து, பிப்ரவரி மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவையும் பின்பற்றவில்லை. டிசம்பர் மாதம் புதுச்சேரியைத் தாக்கிய 'தானே’ புயலைக் காரணம் காட்டியும், தவிர்க்க முடியாத நிர்வாகக் காரணங்களாலும் இன்னும் ஆறு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று, நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அப்போது புதுச்சேரி மாநிலத்துக்கு பல ஆண்டுகளாக தேர்தல் ஆணையர் நியமிக்கப்படாததைச் சுட்டிக் காட்டினோம். 'இவ்வளவு ஆண்டுகளாக தேர்தல் ஆணையரே இல்லாமல் ஒரு மாநிலம் செயல்படுகிறதா?’ என்று ஆச்சர்யம் காட்டிய நீதிபதி, 'ஒரு வார காலத்தில் தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

அப்போதும்கூட 'மாநிலத்தில் ஆளுநர் இல்லை’ என்று காரணம் காட்டி கால அவகாசம் பெற்றது புதுச்சேரி அரசு. மாநிலத் தேர்தல் ஆணையரை நியமித்துவிட்டதாக மார்ச் 15-ம் தேதி விளக்கம் கொடுத்தவர்கள், தேர்தலை நடத்த மேலும் ஆறு மாதங்கள் நீட்டிப்பு பெற்றனர். செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது நீதிமன்றம். தேர்தல் நடத்துவதற்கான சுவடே இல்லை. ஆறு மாத கால அவகாசம் முடியும் தறுவாயில், 'வாக்காளர் பட்டியல் தயாரித்து வருகிறோம்; சரிபார்ப்புப் பணிகள் நடந்து வருகின்றன’ என்று காரணம் காட்டி மேலும் ஐந்து மாதங்கள் நீட்டிப்பு வாங்கி உள்ளது புதுச்சேரி அரசு.

ஒரு அரசு பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டு காலமாகியும் உள்ளாட்சித் தேர்​தலை நடத்த முடியவில்லை என்றால், அந்த அரசின் லட்சணம் என்ன? ஆரம்பத்தில் இருந்தே இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசு அலட்சியப் போக்குடனே செயல்படுகிறது. ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையும் சரி... சட்டமன்ற உறுப்பினர்களும் சரி... அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதை முற்றிலுமாக விரும்பவில்லை. எல்லா அதிகாரங்களையும் தாங்களே வைத்து ஆளவேண்டும் என்ற பேராசையே இதற்குக் காரணம்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 9-ம் அட்டவணையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது சட்டமாகவே உள்ளது. மத்திய அரசோடு உள்ளாட்சியும் இணைந்து மக்களுக்காகச் செய்ய வேண்டிய திட்​டங்கள் ஏராளமாக இருக்கின்றன. இவை எதையும் துளிகூட கண்டுகொள்வது இல்லை. மக்கள் பங்கேற்போடு நடக்கின்ற ஆட்சியைத்தான் மக்களாட்சி என்பார்கள். ஜனநாயக முறைப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய என்.ஆர்.காங்கிரஸ் அரசு, இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிராகச் செயல்படுகிறது. அடுத்த ஐந்து மாத காலத்துக்குள் தேர்தலை நடத்தாவிட்டால், பல கட்டப் போராட்டங்களை அரசுக்கு எதிராக நடத்துவோம்'' என்று சீறினார்.

உள்ளாட்சித் துறையின் இயக்குநர் சுந்தரவடிவேலுவைத் தொடர்பு​கொண்​டோம். ''இப்போதுதான் வாக்காளர் இறுதிப் பட்டியலைத் தேர்தல் துறையினர் தயாரித்து வருகின்றனர். பட்டியல் தயாராகச் சில மாதங்கள் ஆகும். தேர்தலை நடத்த வேண்டியது அவர்கள்தான். அதனால்தான் நீதிமன்றத்தில் மீண்டும் ஐந்து மாத காலம் நீட்டிப்பு வாங்கி உள்ளோம்'' என்றார்.    

மாநிலத் தேர்தல் சிறப்பு அதிகாரி உத்தமனிடம் பேசினோம். ''2007-க்குப் பிறகு தேர்தல் துறையில் ஆணையரே நியமிக்கப்படாமல் இருந்தது. கடந்த மே மாதம்தான் புதுச்சேரி அரசு ஆணையரை நியமித்தது. அதன் பிறகுதான் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலையில் இறங்கி உள்ளோம். வாக்காளர் சரிபார்ப்புப் பணி, பெயர் திருத்தம், பெயர் சேர்ப்புப் பணிகள் நடந்துவருகின்றன. அதன் பின் ஓட்டுப் பெட்டிகளைத் தயார்படுத்துவது, பூத் அதிகாரிகளை நியமிப்பது என்று எப்படியும் மூன்று மாதங்கள் ஆகிவிடும். அதன் பின் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படும். தற்போது நீதிமன்றம் கொடுத்திருக்கும் ஐந்து மாத கால அவகாசமே போதுமானது. அதற்குள் எப்படியும் தேர்தலை நடத்திமுடித்து விடுவோம்'' என்றார் உறுதியாக.

ஐந்து மாதங்கள் கழித்தாவது தேர்தல் நடக்குமா?  

- நா.இள அறவாழி

படங்கள்: ஜெ.முருகன்