ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

கைகலப்பில் அ.தி.மு.க.... கைகட்டி நின்ற காவல் துறை!

வேலூர் வில்லங்கம்

##~##
கைகலப்பில் அ.தி.மு.க.... கைகட்டி நின்ற காவல் துறை!

காங்கிரஸ் பிரமுகர் ஞானசேகரனைச் சுற்றி அடுத்தடுத்துப் பிரச்னைகள் வட்ட​மிடுகின்றன. கடந்த மாதத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ரெய்டு வளையத்தில் சிக்கி இருந்த அவர், நில அபகரிப்பு எதுவும் செய்யவில்லை என்று விடுவிக்கப்பட்டார். ஆனாலும் அ.தி.மு.க-வினரின் வெறுப்பு வட்டத்தில் இருந்து அவர் விடுபடவில்லை என்பதற்கு சமீபத்தில் நடந்த கைகலப்புக் காட்சிகளே சாட்சி. 

என்னதான் பிரச்னை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரும் வேலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஞானசேகரனிடம் பேசினோம்.

''கடந்த 2000-ம் ஆண்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஐந்து லட்ச ரூபாய் செலவில் உள்விளையாட்டு அரங்கம் ஒன்றினை, அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுமார் தலைமையில் சத்துவாச்சாரியில் தொடங்கிவைத்தேன். அதற்கு தென்றல் மனமகிழ் மன்றம் என்று பெயரிட்டோம். சங்கத்தின் சட்டப்படி மன்றத்தைப் பதிவு செய்தோம். அப்போது முதல் தொடர்ந்து 20 வருடங்களாக எனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒன்றரைக் கோடி ரூபாயை தென்றல் மனமகிழ் மன்றத்தின் கட்டுமானப் பணிகளுக்காகக் கொடுத்துவந்தேன். இந்தக் காலத்தில் நகராட்சியோ, பேரூராட்சியோ சிங்கிள் பைசாகூட மன்றத்துக்குச் செலவு செய்யவில்லை. ஆனாலும் உலகத் தரத்துக்கு ஈடாக அந்த விளையாட்டு அரங்கம் பராமரிக்கப்பட்டது. தேக்கு மரத் தரைத் தளம், மூன்று அடுக்கு மாடி, தியான மண்டபம், பில்லியர்ட்ஸ் கோர்ட், டேபிள் டென்னிஸ், மசாஜ் சேர், இரு பாலருக்கும் ஜிம்... என்று பார்த்துப் பார்த்து அமைத்தோம்.

கைகலப்பில் அ.தி.மு.க.... கைகட்டி நின்ற காவல் துறை!

கடந்த 2009-ம் ஆண்டு வாசன் தலைமையில் தென்றல் மனமகிழ் மன்றம் விரிவாக்கப்பட்டது. அப்போது, சத்துவாச்சாரி நகராட்சிக்கு இந்த மன்றத்தைப் பராமரிக்கும் அனுமதி கொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு சத்துவாச்சாரி நகராட்சி வேலூர் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டுவிட்டது. சம்பந்தப்பட்ட நிலம், மின் இணைப்பு அனைத்தும் இப்போது மாநகராட்சியின் பெயரில்தான் இருக்கிறது. பூங்கா நிலங்களில் சத்துவாச்சாரி பகுதிகளில் பலர் திருட்டுத்தனமாக வீடு கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து என்னையே குறிவைத்து வம்பு வளர்க்கிறார்கள். தென்றல் மனமகிழ் மன்றத்தை என் வசம் இருந்து வேலூர் மாநகராட்சி மீட்டுவிட்டதாக அறிக்கைவிடுகிறார்கள். மாநகராட்சியின் கையில் உள்ள நிலத்தை மாநகராட்சியே எப்படி மீட்கும்? இந்த வீண்பழியைப் போக்கத்தான் நீதிமன்றத்தை நாடினேன். கடந்த 5-ம் தேதி நீதிமன்றத்தில் இருந்து 'இது நில அபகரிப்பு கிடையாது. ஞானசேகரன் தென்றல் மனமகிழ் மன்றத்தின் நிலத்தை அபகரித்தாக மாநகராட்சி கூறியது தவறு’ என்று அறிவித்தார்கள். அதன் பிறகுதான் கடந்த 11-ம் தேதி தென்றல் மனமகிழ் மன்றத்துக்குச் சென்றேன். அப்போது அரசு ஊழியர் என்னிடம் வந்து, 'எதற்காக இங்கு வந்தீர்கள்?’ என்று கேட்டார். 'நீதி​மன்றம் என்னைப் பற்றி முறையாகக் கூறிவிட்டது’ என்று பொறுமையாகப் பதில் அளித்தேன். ஆனால் அடுத்த நிமிடம் அ.தி.மு.க-வினர் 100 பேருக்கு மேல் வந்து என்னிடம் தேவை இல்லாத வார்த்தைகளைப் பேசினார்கள்.

கைகலப்பில் அ.தி.மு.க.... கைகட்டி நின்ற காவல் துறை!

'நீதிமன்றத்தின் கடிதம் என்னிடம் இருக்கிறது’ என்று கூறினேன். அதற்கு, 'எங்களுக்கு எல்லாமே எங்க அம்மாதான். நீதிமன்றம் எங்களை ஒன்றும் பண்ண முடியாது’ என்று கோபமாகப் பேசி கைகலப்பில் ஈடுபட்டனர். அங்கிருந்த நாற்காலிகளை எல்லாம் போட்டு உடைத்தனர். கடமை ஆற்ற வேண்டிய காவல் துறையினர் அவர்களை வேடிக்கை பார்த்ததுதான் வேதனை. என் பெயர் இருந்த கல்வெட்டை உடைத்து எறிந்தனர். அ.தி.மு.க-வைச் சேர்ந்த 2-வது மண்டல தலைவர் ஏ.பி.எல்.சுந்தரம் தலைமையில்தான் அராஜகம் நடத்தப்பட்டது.

எங்களது கட்டுப்பாட்டில் இருந்து போனதும் தென்றல் மனமகிழ் மன்றம், இப்போது குப்பைக் கூடாரமாகிவிட்டது. அங்கு பாதுகாப்பில் இருக்கும் மாநகராட்சி ஊழியருக்குக்கூட இரண்டு மாதங்களாக சம்பளப் பாக்கி. நீதிமன்றத்தையும் காவல் துறையினரையும் மதிக்காமல் அராஜகம் செய்யும் அ.தி.மு.க-வினரா, மக்களுக்கு நன்மை செய்துவிடப் போகிறார்கள்?

நடந்தது குறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளேன். வழக்கம்போல இதுவரை அ.தி.மு.க-வினர் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை. மன்றத்தின் உள்ளே தேசப் பிதா காந்தியின் படத்தை நீக்கிவிட்டு, அங்கே ஜெயலலிதா படத்தை மாட்டி இருக்கிறார்கள். இந்தக் கொடுமையை எங்கு போய் சொல்ல?'' என்று கொந்தளித்தார்.

விளக்கம் கேட்டு அ.தி.மு.க-வைச் சேர்ந்த 2-வது மண்டல தலைவர் ஏ.பி.எல்.சுந்தரத் திடம் பேசினோம். ''சம்பவம் கேள்விப்பட்டு அங்கு நான் சென்றேன். ஞானசேகரனிடம் நான் அமைதியாகத் தான் கேட்டேன். அவர் 'நான் கோர்ட் ஆர்டர் வைத்துள்ளேன்’ என்று காட்டினார். ஆனால் அதற்குள் அ.தி.மு.க-வினர் வந்து அநாகரிகமாக நடந்துகொண்டது தவறுதான். சிலர் இப்படி செய்வதில் எங்களது கட்சியின் பெயர்தான் கெடுகிறது'' என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார்.

சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, ''மாநாகராட்சித் தரப்பிலும் ஞானசேகரன் தரப்பிலும் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஞானசேகரன் தரப்பில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஏ.பி.எல். சுந்தரம் மீதும், 16-வது வட்ட கவுன்சிலர் தாமோதரன் உள்ளிட்டோர் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் விசாரித்துவருகிறோம். கைகலப்பு நடக்கும்போது நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்வது தவறு. பிரச்னை ஏற்பட்டதும் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்துவிட்டோம்'' என்றார்.

- கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்