ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

தம்பியைத் தாக்க வந்தவர்கள் அண்ணனைக் கொன்று போட்டார்கள்

பூம்புகார் பகீர்!

##~##
தம்பியைத் தாக்க வந்தவர்கள் அண்ணனைக் கொன்று போட்டார்கள்

ரசியல்வாதிகள் கொடூரமாகக் கொலைசெய்யப்படுவது தமிழகத்தின் சாபமோ? தற்போது நாகை மாவட்டத்​தைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் முத்து.ராஜேந்​திரன் கூலிப் படையினரால் கொலை செய்யப்பட்டுஇருக்கிறார். 

பூம்புகார் அருகே உள்ள மேலை​யூரைச் சேர்ந்தவர் ராஜேந்​திரன். தி.மு.க-வின் மாநில செயற்குழு உறுப்பினர். முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் தூரத்து உறவினர். மாவட்டச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயனிடமும் நெருக்கம் காட்டினார். யாரிடமும் எந்த பேதமும் வைத்துக்கொள்ளாத இவர் கொலைசெய்யப்பட்டு இருப்பது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

''சாயந்தர நேரத்துல எப்போதுமே அவருடைய காம்ப்ளெக்ஸுக்குப் பக்கத்துல இருக்கிற ஏ.டி.எம் சென்டர் வாசல்லதான் நாற்காலியைப் போட்டு உட்கார்ந்​திருப்பார். நண்பர்கள், வியாபாரிகள்னு

தம்பியைத் தாக்க வந்தவர்கள் அண்ணனைக் கொன்று போட்டார்கள்

நிறையப் பேர் அங்கே வந்து பார்த்துப் பேசிட்டுப் போவாங்க. அப்படித்தான் 10-ம் தேதி சாயங்காலம் எட்டு மணிக்கு உட்கார்ந்து, ரிட்டர்யர்டு வாத்தியார் ராஜகோபாலுடன் பேசிட்டு இருந்தார். அப்ப டூ-வீலர்கள்ல வந்த மூணு பேர் இறங்கி அவங்க உட்கார்ந்திருந்த பக்கமாப் போனாங்க. யாரோ ஏ.டி.எம்-முக்குப் போறாங்க போலனு  நெனைச்சோம். ஆனா, அவரு உட்கார்ந்திருந்த இடத்துக்​கிட்ட போனவுடனே ஒருத்தன் பையில் வெச்சிருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து அவங்க மேல் வீசினான். அந்த வெடிகுண்டு நாற்காலிக்கு பக்கத்துல விழுந்து வெடிச்சது. ரெண்டு பேருமே குண்டு வெடிச்ச அதிர்ச்சியில் நாற்காலியில் இருந்து கீழே விழுந்துட்டாங்க. இதைப் பார்த்ததும் நாலைஞ்சு பேரு கடைக்குள்ள இருந்த கட்டைகளைத் தூக்கிட்டு அவங்களை நோக்கி ஓடினோம். அதுக்குள்ளே இன்னொருத்தன் இன்னும் ரெண்டு வெடிகுண்டுகளை எடுத்து எங்களை நோக்கி வீசினான். நாங்க தப்பிச்சு ஓடிட்டோம். நல்ல வேளை... அந்த குண்டுங்க வெடிக்கலே. அதுக்குள் வாத்தியாரை ஓடிப் போயிடுன்னு விரட்டிவிட்டுட்டு, முத்து.ராஜேந்திரனை சரமாரியா அரிவாளால் வெட்டிக் கொன்னுட்டாங்க... படுபாவிங்க'' என்று மிரட்சி விலகாமல் சொல்கிறார் அருகில் இருந்த கடை ஊழியர் ஒருவர்.

தலைப் பகுதி முழுவதுமாக சிதைக்கப்பட்டு அந்த இடத்திலேயே உயிரைவிட்டார் ராஜேந்திரன். தகவல் கிடைத்தவுடன் சீர்காழி டி.எஸ்.பி. பாலகுரு தலைமையில் சீர்காழி மற்றும் பூம்புகார் போலீஸார் விரைந்து வந்தனர். ராஜேந்திரனின் உடலை போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பிவைத்தனர். கொலைக்கு என்ன காரணம் என்று விசாரணையில் இறங்கினர்.

தம்பியைத் தாக்க வந்தவர்கள் அண்ணனைக் கொன்று போட்டார்கள்

மறுநாள் (11-ம் தேதி) காலை 10 மணி வாக்கில் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் 'முத்து.ராஜேந்திரனைக் கொலைசெய்தது நான்தான்’ என்று சரணடைந்தார் சீர்காழி அருகே உள்ள வெள்ளப் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த தளபதி வினோத்.

யார் இந்த வினோத்? ''முத்து.ராஜேந்திரனின் தம்பியும் தி.மு.க மாவட்டப் பிரதிநிதியுமான முத்து.மகேந்திரன்தான் வினோத்தின் இலக்கு. தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிந்து​கொண்ட மகேந்திரன், சமீப காலமாக ஊரில் இருப்பது இல்லை. அவரைத் தேடி வந்த இந்தக் கூலிப் படையினர், 'வந்ததுதான் வந்தோம்... யாரையாவது கொலை செய்துவிட்டு போவோமே’ என்று இவரைக் கொன்றுவிட்டு போய் இருக்கிறார்கள்?'' என்று சொன்னவர்கள், பகைக்கான காரணத்தையும் சொன்னார்கள்.

''மூன்று வருடங்களுக்கு முன்பு இளங்கோ என்பவர் மர்மமான முறையில் சாலை ஓரத்தில் இறந்து​கிடந்தார். அந்த சாவுக்கு முத்து மகேந்திரன்தான் காரணம் என்று இளங்கோ சார்ந்த சமூகத்தினர் உறுதியாக நம்பினார்கள். அதற்குப் பிறகு மேலையூரில் அந்தப் பிரிவினர் ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைத்தபோது பிரச்னைகள் எழுந்தன. அதற்கும் மகேந்திரன்தான் காரணம் என்று அவர்கள் கருதினார்கள். அதனால் இந்தப் பகுதியில் நம் சமூகத்துக்கு எதிரானவராக இருக்கும் முத்து மகேந்திரனைப் போட்டுத்தள்ள வேண்டும் என்று சாதிக் கட்சி ஒன்றின் முக்கியப் பிரமுகரை அணுகினார்கள். தங்கள் காம்ப்ளெக்ஸில் உள்ள ஒரு கடையில் வேலை பார்க்கும் திருமணமான பெண் ஒருவரை அந்தப் பிரமுகர் தொடர்ந்து சீண்ட, மகேந்திரன் குடும்பத்தார் அவரைக் கடுமையாகக் கண்டித்தனர். அந்த வகையில் அவருக்கும் மகேந்திரனுக்கும் தனிப்பட்ட விரோதம் உண்டு. எல்லாவற்றுக்கும் கணக்குத் தீர்க்கத்தான் குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்த கூலிப் படைத் தலைவனான வினோத்தை ஜாமீனில் எடுத்து இந்த அசைன்மென்டைக் கொடுத்திருக்கிறார் அந்தப் பிரமுகர்'' என்று சொல்லி முடித்தார்கள்.

முத்து மகேந்திரனிடம் பேசியபோது, ''இளங்​கோவின் கொலைக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மாமன், மச்சான் தகராறில்தான் அவர் கொலை​செய்யப்பட்டார். தேவை இல்லாமல் எங்களைப் பகையாளியாக சிலர் கருதிவிட்டனர். ஆனால், அந்தக் காரணத்துக்காகத்தான் என்அண்ணனைக் கொன்றார்களா என்று தெரியவில்லை'' என்றார்.  

சீர்காழி டி.எஸ்.பி. பாலகுருவிடம் பேசினோம். ''ராஜேந்திரன் இந்தப் பகுதியில் சிறுபான்மையாக இருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர். அதனால், அவருடைய வளர்ச்சி பிடிக்காதவர்கள் தூண்டுதலால் இந்தக் கொலை நடந்து இருக்கலாம் என்றுதான் புகாரில் சொல்லி இருக்கிறார்கள். இப்போது சரண் அடைந்திருக்கும் வினோத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போதுதான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும். அதன் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்'' என்றார்.

அரசியல் கொலைகள் ஓய்வது எப்போது?

- கரு.முத்து, படங்கள்: கே.குணசீலன்