ஏன் வரவில்லை நெப்போலியன்?
##~## |

''நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகுங்கள்!''- அ.தி.மு.க. செயற்குழுவில் ஜெயலலிதா கொளுத்திப்போட்ட நெருப்பு, தி.மு.க. முகாமில் திகுதிகுக்க ஆரம்பித்திருக்கிறது. இதுவரையில் தொகுதிப் பக்கம் அவ்வளவாக எட்டிப் பார்க்காத நெப்போலியன், தனது தொகுதியான பெரம்பலூர் பக்கம் எட்டிப் பார்க்கிறார்!
சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை இணை அமைச்சராக இருக்கும் நெப்போலியன் மீது, 'தொகுதிப் பக்கம் தலைகாட்டுவதும் இல்லை; வாக்களித்த மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்பதும் இல்லை’ என்கிற குற்றச்சாட்டு பெரும்பாலான பொதுமக்களால் சுமத்தப்படுகிறது. இந்த நிலையில் செப்டம்பர் 10-ம் தேதி துறையூர் பயணியர் மாளிகைக்கு திடீரென வருகை தந்த நெப்போலியன், அங்கே பொதுமக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை வாங்கி னார். 'இதற்கு முன் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க வந்ததோடு சரி... மக்களவைக்குத் தேர்தல் வர இருப்பதால் இப்போது திடீர் கரிசனம் காட்டுகிறார்’ என்கிறார்கள்.
''நெப்போலியன் எம்.பி-யாக உள்ள பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஒரு சட்டமன்றத் தொகுதி பெரம்பலூர் மாவட்டத்திலும், ஒரு தொகுதி கரூர்

மாவட்டத்திலும், மீதி நான்கு தொகுதிகள் திருச்சி மாவட்டத்திலும் உள்ளன. இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள்... ஸ்டாலின் ஆதரவாளர்கள். ஆனால் நெப்போலியனோ, அழகிரி ஆதரவாளர் என்பதால், அவரை இந்த மாவட்ட நிர்வாகிகள் கண்டுகொள்வதே இல்லை. போதாக்குறைக்கு, திருச்சி ஏரியாவில் பவர்ஃபுல் தி.மு.க. புள்ளியும் அவரது மாமாவுமான கே.என்.நேருவுக்கும் நெப்போலியனுக்கும் குடும்பத் தகராறு. அதனால், தொகுதிக்குள் நடத்தப்படும் கட்சி நிகழ்ச்சிகளுக்குக்கூட எம்.பி. என்ற முறையில் நெப்போலியனை அழைப்பது இல்லை. நெப்போலியன் தொகுதிக்குள் சுற்றுப் பயணம் வந்தாலும், அவருடன் முக்கிய நிர்வாகிகள் யாரும் மரியாதைக்குக்கூட வருவது இல்லை. அவரை சந்திப்பதும் இல்லை. தனியாகத் தொகுதிக்குள் சென்று மக்களை சந்தித்தால், தேவையற்ற சர்ச்சைகள் உண்டாகும். கோஷ்டிப் பூசல் வளர்ந்து விரிசல் மேலும் அதிகமாகும். இதைத் தவிர்க்க விரும்பியே நெப்போலியன் தனது தொகுதிப் பக்கம் அடிக்கடி தலைகாட்டுவது இல்லை'' என்றார் எந்த கோஷ்டியிலும் சேராத திருச்சி தி.மு.க பிரமுகர் ஒருவர்.
''திருச்சி, பெரம்பலூர், கரூர் மாவட்டங்களின் விஜிலென்ஸ் மற்றும் மானிட்டரிங் கமிட்டி தலைவராக வும் நெப்போலியன் இருக்கிறார். மாவட்டங் களில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஒழுங்காக நிறைவேற்றப்படுகின்றனவா என்பதைப்பற்றி வருடத்துக்கு ஒரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்தி விவாதிப்பது இந்த கமிட்டியின் வேலை. ஒரே ஒரு முறை இந்த கமிட்டியைக் கூட்டியதோடு சரி... அதன் பின்னர் அந்த கமிட்டி கூடவே இல்லை. இதனால் மத்திய அரசு நிதி மற்றும் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி சரிவரப் பயன்படுத்தப்படாமல் விரயமாகிறது'' என்றும் ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நெப்போலியனின் பதில் என்ன? நெப்போலியன் சார்பில் அவரு டைய தனிச் செயலாளர் ஜெகநாதன் பதில் சொன்னார்...
''மாதம் ஒருமுறை திருச்சி டோல்கேட்டில் அமைந்துள்ள தனது எம்.பி. அலுவலகத்துக்கு வந்து மக்களைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார் அமைச்சர் நெப்போலியன். அவருடைய வருகையை ஆர்ப்பாட்டமாக விளம்பரப்படுத்துவது இல்லை என்பதால், அது வெளியே தெரியாமல் இருக்கிறது. எம்.பி. ஊரில் இல்லை என்றாலும், அவரிடம் பரிந்துரைக்காக வரும் கடிதங்கள் உடனுக்குடன் அவருடைய பார்வைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைகளுக்குக் குறைந்த கட்டண ரயில் பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறார். தமிழகத்திலேயே அதிக அளவில் குறைந்த கட்டண ரயில் பாஸ் பெற்றுக் கொடுத்த எம்.பி இவர்தான். தன்னுடைய தொகுதியில் ஊனமுற்றோர்களுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில் நான்கு முகாம்களை நடத்தி கோடிக்கணக்கான ரூபாய்க்கு உபகரணங்கள் வழங்கி உள்ளார். விஜிலென்ஸ் மற்றும் மானிட்டரிங் கமிட்டிக் கூட்டம் அடுத்த மாதம் கூட்டப்படுவதற்கான நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மத்திய அமைச்சராக டெல்லியில் பணிகளைக் கவனிக்க வேண்டிஇருப்பதாலும், உடல்நலக் குறைபாடு உடைய தன்னுடைய குழந்தையை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று கவனித்து வருவதாலும், அவரால் அடிக்கடி தொகுதிப் பக்கம் வர முடியவில்லை. கோஷ்டிப் பிரச்னை, கழகத்தினர் புறக்கணிப் பதால் வருவது இல்லை என்பது எல்லாம் கற்பனையான குற்றச் சாட்டு'' என்றார்.
நெப்போலியன் தொகுதிப் பக்கம் அடிக்கடி வந்து தங்கள் குறைகளைக் கேட்டறிய வேண் டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டியது நெப்போலியனின் கடமை!
- அ.சாதிக் பாட்ஷா