ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''கட்சி செல்வாக்கைக் குலைக்க சதி செய்கிறார்!''

கே.பி.முனுசாமி மீது பாயும் கம்யூனிஸ்ட்கள்

##~##
''கட்சி செல்வாக்கைக் குலைக்க சதி செய்கிறார்!''

''தளி தொகுதி எம்.எல்.ஏ-வான ராமச்சந்திரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு மேல் வழக்காகப் பதியப்பட்டு​வருவதற்குக் காரணம் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமிதான்'' என்று பகீர் புகார் ஒன்று புதிதாகக் கிளம்பி இருக்கிறது!   

பெரியார் திராவிடர் கழக கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பாளர் பழனி, கடந்த ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தளி தொகுதி எம்.எல்.ஏ-வான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன் அவருடைய மாமனார் லகுமய்யா, சகோதரர் வரதராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருக்கும் அவர்கள் மீது கல்குவாரியில் ஊழல் செய்தது, நில ஆக்கிரமிப்பு, கொலை வழக்குகள் என அடுக்கடுக்கான பல வழக்குகள் பாய்ந்து வருகின்றன. இதில் லகுமய்யா, வரதராஜன் உள்ளிட்ட நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டு இருக்கிறது. எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மீதும் எந்த நேரமும் குண்டர் சட்டம் பாயலாம் என்ற நிலை.

''கட்சி செல்வாக்கைக் குலைக்க சதி செய்கிறார்!''

இதுகுறித்து, அந்தக் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன் நம்மிடம் பேசினார். ''பெரியார் திராவிடர் கழகத் தோழர் கொலை சம்பவத்தில் சட்டப்படியான நடவடிக்கை என்னவோ, அதைச்செய்ய எங்கள் கட்சி எந்த எதிர்ப்பும் தெரிவிக் கவில்லை. எம்.எல்.ஏ-வான ராமச்சந்திரன் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இல்லை என்பதை சட்டத்தின் உதவியோடு நிரூபிப்போம். அதேநேரம், குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் போலீஸில்தான் சரணடைய வேண்டும் என்பது இல்லை. நீதிமன்றத்திலும் சரணடைய சட்டத்தில் இடம் இருக்கிறது. அந்த

''கட்சி செல்வாக்கைக் குலைக்க சதி செய்கிறார்!''

வகையில் ராமச்சந்திரனும் மற்றவர்களும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களைக் கைதுசெய்ய முடியவில்லையே என்ற இயலாமை ஏற்படுத்திய கோபத்தில் எம்.எல்.ஏ-வை போலீஸார் பாடாய்ப்படுத்துகிறார்கள். சமூக, பொருளாதாரச் சூழல் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் இந்த பகுதியில் சில கொலைகள் நடந்து இருக்கின்றன. அதை எல்லாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்கள்தான் செய்ததுபோல், ஒரு மாயத்தோற்றத்தை போலீஸார் உருவாக்கப் பார்க்கிறார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் சம்பந்தமே இல்லாத வழக்குகளை எல்லாம் ராமச்சந்திரன் தரப்பு மீது போடுகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான கிரானைட் குவாரிகள் இருக் கின்றன. ஆனால், ராமச்சந்திரனின் சகோ தரர் நடத்தும் குவாரியில் மட்டும் விதிமீறல் நடந்தது போல் அரசு அதிகாரிகள் தீவிரம் காட்டுகிறார்கள்.

அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர் ராமச்சந்திரன். அதுதான் அவரைத் தளி தொகுதியில் மக்கள் செல்வாக்கு மிக்கவராக உயர்த்தி இருக்கிறது. ஓசூர், வேப்பனஹள்ளி தொகுதிகளிலும் இவரால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து இருக்கிறது. அதை எல்லாம் மன தில்வைத்துக்கொண்டு அவரையும் எங்கள் கட்சியின் வளர்ச்சியையும் அழிக்க நினைத்து அவர் மீது எட்டு வழக்குகள் போட்டு இருக் கிறார்கள். குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட ஆளும் கட்சியின் மிகசெல்வாக்கு நிறைந்த புள்ளி ஒருவர்தான் இதற்கெல்லாம் காரணம். ஆனால், அனைத்து வழக் குகளையும் சட்டப்படி சந்திக்க எங்கள் இயக்கத்துக்குத் தெரியும். அதேநேரம், தேவையற்ற வழக்குகளை சுமத்தியவர்கள், நீதிமன்றத்தில் அதற்கான பதில் சொல்லியே தீர வேண்டும்'' என்று கொதித்தார்.  

உள்ளூர் இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் சிலரிடம் பேசியபோது, ''எம்.எல்.ஏ. மீது தொடர்ந்து வழக்குகள் போடத் தூண்டுதலாக இருப்பது அமைச்சர் கே.பி.முனுசாமிதான். தளி தொகுதியில் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக இருக்கிறது. இரண்டாவது இடத்தில் தி.மு.க. இருக்கிறது. அ.தி.மு.க-வோ ரொம்ப பலவீனமாக மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது. பின்தங்கிய நிலையில் இருக்கும் தங்கள் கட்சியை வளர்க்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார் அமைச்சர். அதனால்தான் தொடர்ந்து வழக்குகளைப் போட்டு கட்சிப்பணி மற்றும் மக்கள் சேவை செய்ய முடியாதபடி ராமச்சந்திரனுக்கு நெருக்கடி கொடுகிறார். தான் ஏழை மக்களின் தோழன் என்பதை ராமச்சந்திரன் பல நேரங்களில் பதிவு செய்து இருக்கிறார். தொகுதி மக்களும் அவர் மீது அசைக்க முடியாத அபிமானம் வைத்து இருக்கிறார்கள். அதனால், போலீஸ் போடும் பொய் வழக்குகளில் இருந்து அவர் விரைவிலேயே மீண்டு வருவார். சூழ்நிலையைச் சாதகமாக்கி கட்சியை வளர்க்க நினைக்கும் ஆளும் கட்சிப் புள்ளிகளின் கனவில் மண்தான் விழப் போகிறது'' என்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனு​சாமி​யிடம் கேட்டோம். ''பல்வேறு புகார் கள் வருவதால் ராமச்சந்திரன் தரப்பு மீது வழக்குகள் போடப்பட்டு வருவதாகக் கேள்விப்பட்டேன். அவர் மீது வழக்குகள் பாயக் காரணமாக என்னையும் எங்கள் கட்சியையும் குறிப்பிடுவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அமைச்சராக இருக்கும் ஒரே காரணத்துக்காக, மாவட்ட போலீஸார் எந்த நடவடிக்கை எடுத்தாலும் என் பக்கம் விரல்கள் நீள்வது எப்படி நியாயம்?'' என்று பதில் அளித்தார்.

ராமச்சந்திரன் குற்றமற்றவர் என்பதை கம்யூனிஸ்ட்டுகள் நிரூபிக்க வேண்டும்!

- எஸ்.ராஜாசெல்லம்

படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்