ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

ஊழல் பட்டாசு!

தீ விபத்தில் வெடிக்கும் விவகாரம்!

##~##

சிவகாசி வெடிவிபத்து பல ஊழல் வெடிகளையும் கொளுத்திப்போட்டு இருக்கிறது. கிரானைட் ஊழலோடு போட்டி போடும் அளவுக்குப் போயி ருப்பதாகப் பற்றி எரிகிறது சிவகாசி வட்டாரம்! 

சிவகாசி வெடிவிபத்து நடந்த நிறுவனத்தின் உரிமையாளரான அ.தி.மு.க. கவுன்சிலர் முருகேசன், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் வீட்டில் தலைமறைவாக இருந்ததில் இருந்தே பல ஊழல் சங்கிலிகள் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. போலீஸ் அதிகாரிகள் தொடங்கி பல்வேறு துறை அதிகாரிகளும் பட்டாசு அதிபர்களுக்குப் பக்கபலமாக  இருந்து வருவது அம்பலமாகி இருக்கிறது.

வெடிவிபத்தில் 38 பேர் பலியானதைத் தொடர்ந்து வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, தொழிலாளர்

ஊழல் பட்டாசு!

நலத்துறை, வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறை என்று அனைத்து அதிகாரிகள் டீம் இப்போது சிவகாசியில் முற்றுகையிட்டு உள்ளது. அனைத்துப் பட்டாசு ஆலைகளிலும் ரெய்டுகள் நடக்கின்றன. கலெக்டருக்கு அருகே உள்ள 'அருமை’யான அதிகாரி  ஒருவர் பெரு நிறுவனங்களுக்குப் பாதுகாப்​பாகவும் சிறு நிறுவனங்களைப் பலி வாங்குவதிலும் குறியாக இருப்பதாகக் குமுறுகிறார்கள் தொழிலாளர்கள். இதைக் கேள் விப்பட்ட சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள 700-க்கும் அதிகமான சிறு பட்டாசு ஆலைகள் கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டுவிட்டன.

'கடந்த 15 ஆண்டுகளில் பி.ஆர்.பி. நிறுவனம் 16 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. ஆனால், கடந்த 90 ஆண்டுகளாக சிவகாசியில் பட்டாசுத் தொழிலில் நடக்​கும் வரி ஏய்ப்புகளையும் ஊழல்களையும் தோண்டி எடுத்தால், அது கிரானைட் ஊழலை மிஞ்சிவிடும்’ என்கின்றனர்.

சிவகாசியில் சுமார் 790 பட்டாசு ஆலைகள் இருக்கின்றன. ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் வருமானம் வருவதாக அரசின் புள்ளிவிவரங்கள் காட்டு​கின்றன. சிவகாசியில் ஒரே வெடிவிபத்தில் 30 பேர், 40 பேர் பலியானாலும் முதலாளிகள் மீது கிரிமினல் வழக்கு பாயாது.  பட்டாசு ஆலையின் ஃபோர்மேன், மேனேஜர்​தான் பலிகடா ஆக்கப்படுவார்கள்.

ஊழல் பட்டாசு!

சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலைக்கு லை சென்ஸ் பெறுவது முதல், வெடிவிபத்து ஏற்பட்டால் அதைச் சமாளித்து மீண்டும் லைசென்ஸ் பெறுவது வரை உள்ள அரசின் அனைத்து நடைமுறைகளிலும் லஞ்சம் விளையாடுகிறது. பட்டாசு ஆலை ஆரம்பிக்க வேண்டுமானால், வருவாய்த் துறை, போலீஸ், தொழிலாளர் நலத்துறை, தீயணைப்புத் துறை என்று அரசின் பல துறைகளில் தடை இல்லாச் சான்றிதழ் பெற வேண்டும். தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர், ஆர்.டி.ஓ., என்று ஒவ்வொரு அதிகாரிக்கும் 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை பணம் வாரி இறைத்துத்தான் தடைஇல்லாச் சான்றிதழ் பெறு கின்றனர். மாவட்ட வருவாய் அலுவலரிடம் தடை இல்லாச் சான்றிதழ் பெறுவதற்கு 40 ஆயிரம் ரூபாய் வரை தண்டம் அழ வேண்டும். இறுதியாக, சென்னை மற்றும் நாக்பூரில் உள்ள மத்திய அரசின் வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறையினரிடம் லைசென்ஸ் பெற, அங்கு லட்சக்கணக்கில் கொடுத்தால்தான் வேலை நடக்கும். வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்கள் சிலரே நேரடியாக இதில் ஈடு படுகின்றனர். அவர்களிடம் பணம் கொடுத்தால் போதும். நாக்பூரில் ஒரு பேங்க் அக்கவுன்ட்டில் பணம் ஏறிவிடும். பிறகு, அந்தப் பணத்தை நாக்பூர் அலுவலகத்தில் பிரித்து எடுத்துக் கொள்வார்கள். ஆக, கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும் சிவகாசி பகுதியில் போஸ்ட்டிங் பெறுவதற்கு அனைத்து அரசுத் துறைகளிலும் கடும் போட்டி இருக்கும். வருவாய்த் துறையில் தாசில்தார், ஆர்.டி.ஓ., போன்ற பதவிகள் எத்தனையோ லட்சங்களுக்கு விலை போகின்றன.

ஊழல் தலைவிரித்து ஆடும் இடத்தில் பலியாவது என்னவோ அப்பாவிகள்தான்!

- எம்.கார்த்தி

ஊழல் பட்டாசு!

படங்கள்: முத்துராஜ் 10 ஆண்டுகளில் 400 பேர் மரணம்! 

தீ விபத்துக்கு விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதைக் கடுமையாக விமர்சிக்கிறார் மனித உரிமைகளுக்காகப் போராடும் 'எவிடென்ஸ்’ கதிர்.

''கடந்த 10 ஆண்டுகளில் பட்டாசு ஆலைவிபத்துக் கள் மூலம் மட்டுமே தமிழ்நாட்டில் 400 பேர் இறந்து இருக்கிறார்கள். ஆனாலும், விபத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய-மாநில அரசுகளோ மனித உரிமை

ஊழல் பட்டாசு!

ஆணையங்களோ, போதிய அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு அரசு தனது கடமையை முடித்துக்கொள்கிறது. தேசிய மனித உரிமை ஆணையமும் இவர்கள் கொடுக்கும் விளக்கத்தை வாங்கி வைத்துக்கொண்டு அமைதி ஆகிவிடுகிறது. இவ்வளவு பெரிய விபத்து நடந்திருந்தும் நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என்ற அக்கறை மனித உரிமை ஆணையத்துக்கு இல்லை.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சீஃப் கன்ட்ரோலர் ஆஃப் எக்ஸ்ப்ளோசிவ் அலுவலகம்தான், பட்டாசு ஆலைக்கு அனுமதி கொடுக்கிறது. பட்டாசுத் தொழிற்சாலைகள் விதிமுறைப்படி இயங்குகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு சென்னையில் உள்ள மாநில அரசின் தொழிற்சாலைகளுக்கான முதன்மை ஆய்வாளரிடம் இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இவர் பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய வேண்டும். விபத்து நிகழ்ந்த பட்டாசுத் தொழிற்சாலையில் 120 தொழிலாளர்கள் வேலை செய்ய அனுமதி வாங்கி இருக்கிறார்கள். ஆனால், 330 பேர் அங்கே பணியில் இருந்து இருக்கின்றனர். அதில், 55 பேருக்கு மட்டும்தான் இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டு இருக்கிறது. சமீபத்தில், 62 பேர் கொண்ட குழு 15 நாட்களுக்குள் பட்டாசுத் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்’ என்று அறிவித்து இருக்கிறது அரசு. இது சாத்தியமே இல்லை'' என்கிறார் கதிர்.

ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வேகத்தில் ஆய்வுகள் சாத்தியம் இல்லை என்பதே உண்மை. அப்போ, அடுத்த விபத்து வரை காத்திருக்க வேண்டும் என்பதுதான் விதியா?

- குள.சண்முகசுந்தரம்