கல்லூரி செய்த தவறுக்கு மாணவிகளுக்குத் தண்டனையா?
##~## |
'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ’ என்று பதறுவார்களே அப்படியரு பரிதவிப்பில் இருக்கிறார்கள் மதுரையில் உள்ள அருள்மிகு மீனாட்சி அரசினர் பெண்கள் கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவிகள்!
தன்னாட்சி அந்தஸ்து கொண்ட இந்தக் கல்லூரியில் 1997-க்கு முன்பு வரை பி.ஏ. ஆங்கில இலக்கியம் என்ற பாடப் பிரிவு இருந்தது. 1997-ல் இதில் சில பாடத் திட் டங்களைக் கூடுதலாகச் சேர்த்து பி.ஏ. தொடர்பியல் ஆங்கிலம் என்ற பாடமாக மாற்றினர். கடந்த 15 வருடங்களில் இங்கே இந்த கோர்ஸை எடுத்துப் படித்த 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் பி.எட்., எம்.எட்., முடித்து அரசுப் பணியில் இருக்கின்றனர். இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தகுதியற்ற நபர்கள் பங்கேற்றுப் பணியில் சேர்வதைத் தடுக்கும் விதமாக, கலைக் கல்லூரிகளில் உள்ள வெக்கேஷனல் கோர்ஸ்களைத் தெரியப்படுத்தும்படி 2010-ல் அரசுத் தரப்பில் இருந்து அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற் றறிக்கை அனுப்பப்பட்டது. இதையடுத்து, தாங்கள் நடத்தும் வெக்கேஷனல் கோர்ஸ்கள் பற்றிய விவரங்களை அரசுக்குத் தெரிவித்து ஒப்புதல் வாங்கி இருக்கின்றன கல்லூரிகள். ஆனால், மதுரை மீனாட்சி கல்லூரி நிர்வாகம் தாங்கள் நடத்தி வரும் பி.ஏ. தொடர்பியல் ஆங்கிலம் கோர்ஸைப் பற்றி அரசுக்குத் தெரிவிக்கவில்லை. அதுதான் இப்போதைய சிக்கல்!

இந்தக் கல்லூரியில் 2001 மற்றும் 2009-ல் பி.ஏ. தொடர்பியல் ஆங்கிலம் படித்து பி.எட்., முடித்த சிவகாசி முத்துப்பிரியாவும் தேவாரம் லட்சுமியும் கடந்த பிப்ரவரியில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலருக்கானத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் கடந்த ஜூனில் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் போனபோதுதான் வில்லங்கம் வெடித்து இருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசினார் முத்துப்பிரியா. ''சான்றிதழ் சரிபார்ப்புக்குப் போனப்ப, 'பி.ஏ. தொடர்பியல்

ஆங்கிலம் படிப்பு என்பது, பி.ஏ. ஆங்கில இலக்கியத்துக்கு இணையான படிப்பு இல்லை’னு சொல்லி எங்களை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. ஆங்கில இலக்கியத்தில் உள்ள 90 சத விகிதப் பாடத் திட்டங்கள் அப்படியே தொடர்பியல் ஆங்கிலத்தில் இருக்கு. மற்ற கல்லூரிகள் எல்லாம் தங்களிடம் உள்ள வெக்கேஷனல் கோர்ஸ்கள் குறித்து அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பி அந்த கோர்ஸ்களைப் போட்டித் தேர்வுகளுக்கான பட்டியலில் சேர்த்துவிட்டன. ஆனால், எங்களது கல்லூரி நிர்வாகம் அப்படிச் செய்யாமல் விட்டதன் பலனை இப்போது நாங்கள் அனுபவிக்கிறோம். மே 28-ல் நடந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்விலும் நான் பாஸாகி இருக்கிறேன். அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பிலும் எங்களை நிச்சயம் ரிஜெக்ட் செய்துவிடுவார்கள். தொடக்கக் கல்வி அலுவலர் தேர்வில் நாங்கள் ரிஜெக்ட் ஆனதுமே கல்லூரியில் போய்க் கேட்டோம். சம்பந்தமே இல்லாத பள்ளிக் கல்வித்துறைக்குக் கடிதம் எழுதி ஒன்றரை மாதங்களை கல்லூரி நிர்வாகம் வீணாக்கி விட்டது. அதனால், இரண்டாவது முறை யாகவும் நாங்கள் வாய்ப்பைப் பறிகொடுக்க வேண்டிய பரிதாபத்தில் இருக்கிறோம்'' என்றார்.

லட்சுமியையும் சந்தித்துப் பேசினோம். ''உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் தேர்வில் நாங்கள் ரிஜெக்ட் ஆனதுமே, நானும் முத்துப்பிரியாவும் நீதிமன்றத்தில் தடை வாங்கிட்டோம். எங்களுக்கான இரண்டு பணியிடங்களை காலியாக வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. சமீபத்தில் நடந்த பட்டதாரி ஆசிரியருக்கான தேர்விலும் நான் 94-வது ரேங்க்கில் தேர்வானேன். அதுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்குப் போனப்பவும், எடுத்த எடுப்பிலேயே என்னை ரிஜெக்டட்னு சொல்லி அனுப்பிட்டாங்க. தமிழக முதல்வர்தான் தலையிட்டு இதுக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லணும்'' என்று கோரிக்கை விடுத்தார்.
இந்தப் பிரச்னைக்காக, மீனாட்சி கல்லூரியில் இப்போது தொடர்பியல் ஆங்கிலம் படிக்கும் மாணவிகளைத் திரட்டிக்கொண்டு பேரணி நடத்தி கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள் முன்னாள் மாணவிகள்.
கல்லூரி முதல்வர் அன்னம்மாளை சந்தித்தோம். ''எங்க பிள்ளைகளோட வாழ்க் கையில் நாங்க எதுக்காக விளையாடணும்? வெக் கேஷனல் கோர்ஸ் லிஸ்ட் அனுப்புறது சம்பந்தமா அரசுத் தரப்பில் இருந்து எங்களுக்கு எந்த நோட்டிஃபிகேஷனும் வரலே. வந்திருந்தா, முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருப்போம். இப்போ இப்படி ஒரு பிரச்னை இருக்குன்னு தெரிஞ்சதுமே நாங்க தனிக்கவனம் எடுத்து அதைச் சரிசெய்வதற்கான முயற்சிகளை எடுத்துட்டு இருக்கோம். இன்னும் ஓரிரு வாரத்துக்குள் தீர்வு கிடைச்சிடும்'' என்றார். மதுரை மண்டலக் கல்லூரிக்கல்வி உதவி இயக்குநர் பார்வதியிடம் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசினோம். ''இந்தப் பிரச்னை சம்பந்தமா ஜூலை மாதமே நாங்க கல்லூரிக் கல்வி இயக்குநருக்குக் கடிதம் எழுதினோம். வறுமைப்பட்ட பிள்ளைகளோட வாழ்க்கைப் பிரச்னையா இருக்கிறதால் இதை ஸ்பெஷல் கேஸா எடுத்துக்கணும்னு போன மாதமும் நினைவூட்டல் கடிதம் அனுப்பி இருக்கிறோம். சீக்கிரமே எல்லாம் நல்லபடியா முடிஞ்சிரும்'' என்றார் நம்பிக்கையாக.
அரசுக் கல்லூரியை நம்பி வந்த மாணவிகளை இப்படி அலைக்கழிக்கலாமா?
- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி