ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?

மயக்கம் என்ன?
##~##

ருத்துவத்தில் 'ஹோலிஸ்டிக் ஹெல்த்’ (Holistic health) என்ற மாற்று மருத்துவ முறை ஒன்று இருக்கிறது. 'ஹோலிஸ்டிக்’ என்றால் 'ஒருமுகப்படுத்தப்பட்ட’ என்று அர்த்தம். அதாவது, உடல் ரீதியான, மன ரீதியான, சமூக ரீதியான, பொருளாதார ரீதியான அனைத்துப் பிரச்னைகளுக்கும் சேர்த்து தீர்வு காணும் ஆரோக்கியமான சிகிச்சைமுறை. உதாரணத்துக்கு, ஒருவருக்கு பிரச்னையே கடன்சுமைதான் என்று வைத்துக்கொள்வோம். கடன்பட்டார் நெஞ்சம்போல நினைத்து, நினைத்துக் கலங்கினால் என்னவாகும்? சாப்பிடாமல், தூங்காமல் உடல்நலம் பாதிக்கும். டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டால் கடன்காரன் கடனைத் தள்ளுபடி செய்துவிடுவானா? சிகிச்சையுடன் சேர்த்து, நோய்க்கான ஆணிவேர் என்ன என்பதைக் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட நபருக்கு கவுன்சிலிங் கொடுத்து, பிரச்னையில் இருந்து அவரை முற்றிலுமாக விடுபடச்செய்வதே 'ஹோலிஸ்டிக்’ மருத்துவம்! 

'லேசான காய்ச்சல் என்று போனாலே, ரிசப்ஷனில் அழகான பெண்கள் ஆங்கிலம் பேசி நாலைந்து ஃபைல்களை நிரப்பியும் டாக்டர்கள் கன்சல்டிங் என்ற பெயரில் ஒரு மாதச் சம்பளத்தையே பிடுங்கி விடும் இந்தக் காலத்தில் நீங்கள் சொல்வது எல்லாம் சாத்தியமா?’ என்ற உங்களின் ஆதங்கக்குரல் கேட்கிறது. மது மீட்பு விஷயத்தில் ஊருக்கு நூறு போலி மையங்கள் இருந்தாலும் பாரம்பரியமாக, நேர்மையாக, வசதிகொண்டவர்களுக்கு வியாபார ரீதியாகவும் வசதி இல்லாதவர்களுக்கு சேவை ரீதியாகவும் செயல்படும் மிகப்பெரிய மையங்களும் இந்தியாவில் இருக்கின்றன. அந்த மையங்களில்தான் இதுபோன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.  

மயக்கம் என்ன?

ஹோலிஸ்டிக் சிகிச்சை முறைகளில் ஒன்று, 'காக்நெட்டிவ் தெரபி’ (Cognitive therapy). திரும்பத் திரும்ப 'எழுதும்’ விஷயத்தையே மாற்றி, மாற்றிச் சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். மது மீட்பு விஷயத்தில் எழுத்துக்கு அவ்வளவு பங்கு உண்டு. ஒரு விஷயத்தை எழுதும்போது அந்த விஷயத்துக்குப் பாதி உயிர் வந்து விடுகிறது. அதனால்தான், குழந்தைகளுக்குப் பள்ளியில் கற்பித்து விட்டு, வீட்டிலும் எழுதி வரச்சொல்லி வீட்டுப்பாடம் தருகிறார்கள். எனவேதான், சொல்ல வேண்டியதாக இருக்கிறது.  பொதுவாக, காக்நெட்டிவ் தெரபியை, ஓரளவு படித்தவர்களுக்கும் நல்லது, கெட்டது உணர்ந்த - சொன்னால் புரிந்து கொள்ளும் அளவுக்குப் பக்குவப் பட்ட குடிநோயாளிகளுக்கு மருத்துவர்கள் வழங்குகிறார்கள்.

ஒரு குடிநோயாளியை அன்றைய தினம் குடிப்பதற்குத் தூண்டிய சூழல் எப்படி ஏற்பட்டது என்பதை உள்ளது உள்ளபடி டைரியில் எழுத வேண்டும். அதாவது, 'என் மாப்பிள்ளைக்கு இன்று பிறந்த நாள். ஹோட்டலில் ஹால் புக் செய்து பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளான். காலையிலே போன் செய்து, 'நீ  வரலைன்னா பார்ட்டி களை கட்டாது மச்சான்’ என்று சொல்லி விட்டான். - இது, குடிக்கத் தூண்டிய ஆரம்பச் சூழல். இதை எழுத வேண்டும்.

தொடர்ந்து, குடிநோயாளியின் உள்மனம், அந்த பார்ட்டியைப் பற்றி அவருக்கே தெரி யாமல் சிந்தித்துக்கொண்டே இருக்கும். அலுவலகத்தில் அவர் வேலை பார்த்துக் கொண்டு இருப்பார். ஆனாலும் அடிக்கடி, 'பார்ட்டியில் வெளிநாட்டுச் சரக்கு கிடைக் குமா? பாண்டிச்சேரி டின் பீர் ஆர்டர் செய்து இருப்பானா? போன முறை ஃபிங்கர் ஃபிஷ்ஷ§க்கு பட்டர் சாஸ் பத்தாமப் போச்சு. இந்தமுறை முன்கூட்டியே ஆர்டர் செய்ய வேண்டும். போன முறை மாதிரி ஓவராகி,  டான்ஸ் ஆடி மானம் போய்விடாமல் இம்முறை யார் எவ்வளவு ஏத்தி விட்டாலும் அமைதியாக இருக்கணும்.’ - கடல் அலைகளைப் போல இப்படி எல்லாம் குடி நோயாளியையே அறியாமல் அவரது ஆழ்மனதில் இருந்து எண்ணங்கள் மோதிக்கொண்டே இருக்கும். இதை 'ஆட்டோமேட்டிக் தாட்ஸ்’ (Automatic thoughts) என்கிறார்கள் உளவியலாளர்கள். இந்த சுகமான 'ஆட்டோ மேட்டிக் தாட்ஸ்’ எழுந்தவுடனேயே குடிக்கத் தூண்டும் 'கிரேவிங்’ ஆரம்பமாகும்.

இப்படிக் குடிக்கத் தூண்டிய சூழல், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட 'ஆட்டோமேட்டிக் தாட்ஸ்’, அந்த எண்ணங்களின் விளைவால் எழுந்த 'க்ரேவிங்’ என மூன்று தலைப்புகளில் ஒவ்வொரு விஷயத்தின்போதும் என்ன வெல்லாம் எண்ணங்கள் தோன்றின என்பதை வரிசையாக எழுத வேண்டும். மேற்கண்ட விஷயங்களை எழுதி வைத்துக்கொண்டு ஒவ்வொரு விஷயமாக அலசும்போதுதான், 'ஏன் குடிக்கத்தான் வேண்டுமா; குடிக்காமலும் இருக்க முடியும்’ என்பது தெளிவாகப் புலப்படும். கிட்டத்தட்ட இது ஒரு கடினமான கணக்குப் புதிருக்குப் படிப்படியாக விடை காண்பதைப் போலத்தான் என்கிறார்கள் மது மீட்புச் சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள். இப்படி வரிசையாக எழுதும் குடிநோயாளியின் ஒவ்வோர் எண்ணத்துக்கும் மருத்துவர்கள் வலுவான பதிலடி கொடுப்பார்கள். 'நீ போகலைன்னா பிறந்த நாள் அன்னைக்கு உன் மச்சான் தூக்குல தொங்கிடுவான் பாரு...’ என்று ஒரு பதில் இருக்கும்.

'பிறந்த நாளைக்குத்தானே கூப்பிடுகிறான்? அந்த ஒரு நாளைக்குக்கூட குடிக்கக் கூடாதா?’ என்ற உங்கள் எண்ணத்துக்கு, 'மது இல்லாத பிறந்த நாள் கொண்டாட்டங்களும் உண்டு. அங்கு குடிக்காமல் சந்தோஷமாக ஆட்டம் போடும் ஆட்களும் இருக்கிறார்கள்’ என்று பதில் தருவார்கள். இப்படி, மருத்துவர் பதில் சொல்லிக் கொண் டிருக்கும்போதே... மிக மோசமான குடிநோயாளியாக இருந்து திருந்திய ஒருவர், தான் 10 ஆண்டுகளாக எப்படிப் பிறந்த நாளைக் கொண்டாடுகிறேன் என்பதை அவரது மனைவி, குழந்தைகளுடன் வந்து விளக்குவார்.

இப்படி, ஒரு குடி நோயாளியிடம் இருக்கும் ஒரு பெரிய டைரியில் சுமார் நூற்றுக்கணக்கான எண்ணக் கேள்விகளுக்கு மனநலம் மற்றும் மது மீட்புச் சிறப்பு மருத்துவர்களின் பதில்கள் குவிந்து கிடக்கும். இந்த பதில்கள் ஒவ்வொன்றும் பொட்டில் அடித்தது போல, குடிக்கும் எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறியும்படியாக இருக்கும். போட்டித் தேர்வு களுக்கான தடிமனான புத்தகங்களைப் பார்த்து இருப்பீர்கள். கிட்டத்தட்ட அப்படித்தான் இதுவும். சுருக்கமாகச் சொன்னால், குடியைத் தவிர்ப் பதற்கான அகராதி!

மது மீட்புக்கான 'ஹோலிஸ்டிக் ஹெல்த்’ மருத்துவத்தில்... சாதாரண நடைப்பயிற்சியில் தொடங்கி மசாஜ் வரைக்கும் ஒரு குடிநோயாளிக்குச் சொர்க்கத்தையே உணர்த்தி குடியை மறக்க வைக்கும் நிறைய சிகிச்சை முறைகள் உண்டு. அவற் றையும் சொல்கிறேன்.

 தெளிவோம்

மயக்கம் என்ன?

மதுவுக்கு எதிராக மனிதச் சங்கிலி!

அக்டோபர் 2-ம் தேதி முதல், பூரண மதுவிலக்கு கோரி மனிதச் சங்கிலிப் போராட்டம், தெரு முனைப் பிரசாரம், விழிப்பு உணர்வு நாடகங் கள், கைப்பிரதிகள் விநியோகம், தலைமைச் செயலகம் முன் முற்றுகைப் போராட்டங்கள் போன்றவற்றை அறிவித்து இருக்கிறது எஸ்.டி.பி.ஐ. கட்சி. அதன் மாநிலத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, ''கல்வி, மருத்துவம், சுகாதாரத்தை மேம்படுத்துவதை விட்டுவிட்டு, குடியைக் கெடுக்கும் டாஸ்மாக் விற்பனையை மேம்படுத்துவதில் இந்த அரசு கவனம் செலுத்துகிறது. லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்ட பிறகு அதை வாங்கியவர்களில் 95 சதவிகிதம் பேர் சீட்டு வாங்குவதை நிறுத்தி விட்டனர். அதேபோல, மதுக் கடைகளை மூடிவிட்டால் கண்டிப்பாக 95 சதவிகிதம் பேர் குடிக்க மாட்டார்கள். எனவே, வரும் அக்டோபர் 2-க்குள் அரசு பூரண மதுவிலக்கை அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அன்றைய தினம் தமிழகம் முழுவதும் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்த இருக் கிறோம். இதில் பங்கேற்க பொதுமக்கள், மாணவ - மாணவிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம்'' என்றார்.

- எம்.செய்யது முகம்மது ஆசாத்

மயக்கம் என்ன?
மயக்கம் என்ன?
மயக்கம் என்ன?
மயக்கம் என்ன?
மயக்கம் என்ன?
மயக்கம் என்ன?
மயக்கம் என்ன?
மயக்கம் என்ன?
மயக்கம் என்ன?

 தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ளது வேப்பங்குளம். இங்கே ஊராட்சித் தலைவராக இருக்கும் சிங்கதுரை, கடந்த 10 ஆண்டுகளாக தனது ஊரில் மதுப் பழக்கத்துக்கு எதிராக நூதன முறையில் போராடுகிறார். தன்னுடைய கிராமத்தில் குடிப்பவர்களைச் சந்தித்து, ''நீ குடிப்பதை நிறுத்தினால் உன் பிள்ளையின் பெயரில் 5,000 ரூபாய் டெபாசிட் செய்கிறேன். ஆனால், உன் குலசாமி மேல் சத்தியம் செய்ய வேண்டும்'' என்று சத்தியம் வாங்கி குடியைத் தடுக்கிறார். இப்படிச் சத்தியம் செய்து, மூன்று ஆண்டுகள் வரை தன் சத்தியத்தைக் காப்பாற்றுவோருக்குச் சொன்னபடி பணம் தருகிறார். இதுவரை சுமார் 50 பேர் இவர் முன்னிலையில் குலசாமி மீது சூடம் அணைத்துச் சத்தியம் செய்திருக்கிறார்கள். இதேபோல், அந்த ஊரில் இருந்த 'கள்ளுக்கடை ஸ்டாப்’ என்ற பேருந்து நிறுத்தத்துக்கு 'நேதாஜி நிறுத்தம்’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளார்.

- சி.சுரேஷ், படம்: செ.சிவபாலன்

இன்றைக்குக் குடிக்கப்போகும் குடி நோயாளி அன்பர்களுக்காக ஒரு சின்ன டெஸ்ட்.

மளிகைக்கடை லிஸ்ட் எழுதி இருக்கிறீர்களா? அதுபோலத்தான் இதுவும். குடும்பத்தில், அலுவலகத்தில், நண்பர்கள் வட்டாரத்தில், உறவினர் வட்டாரத்தில் என்னென்ன வேலைகளை பெண்டிங் வைத்து இருக்கிறீர்கள்?  அம்மாவுக்குக் கண் புரை ஆபரேஷன் செய்ய வேண்டும். ரொம்ப நாளாக குழந்தைகள் டூர் அழைத்துச் செல்லக் கேட்டு நச்சரிக்கிறார்கள். 'ஏங்க இந்த வருஷமாச்சும் ஒரு ஏ.சி. வாங்கி மாட்டுங்களேன். வீட்டுல வெக்கை தாங்கலை’ என்று தினமும் மனைவி நச்சரிக்கிறாள். கிராமத்தில் இருக்கும் பெற்றோர், 'டேய் இந்த வருஷமாச்சும் புள்ளை குட்டிளோட வந்துட்டுப் போடா’ என்று, மூன்று ஆண்டுகளாக அழாதக் குறையாகக் கேட்கிறார்கள். 'நேரம் கிடைக்கிறப்ப இந்தப் புது ப்ராஜெக்ட்டை முயற்சி செய்து பாருங்களேன்’ என்று, முதலாளி ஒரு ஐடியா கொடுத்து ஆறு மாதங்கள் ஆகின்றன.

இப்படி நீங்கள் பெண்டிங் வைத்து இருக்கும் விஷயங்களை எல்லாம் வரிசையாக ஒரு பட்டியல் போட்டு எழுதுங்கள். கை வலிக்கும்தான்... என்ன செய்ய? அவ்வளவு விஷயங்கள் பாக்கி இருக்கின்றன. முடிந்ததா? இன்னொரு பேப்பரை எடுத்து, இன்றைக்கு நீங்கள் குடிப்பதற்கான காரணங்களை எழுதுங்கள். பெண்டிங் வைத்து இருக்கும் விஷயங்களை விட நீங்கள் குடிப்பதற்கான காரணங்கள் நிறைய இருந்தால், தாராளமாக நீங்கள் குடிக்கலாம்!