ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

ஆவேச கிருஷ்ணசாமி... காத்திருந்த ஜான் பாண்டியன்!

இமானுவல் குரு பூஜை பரபரப்பு

##~##

ழிப் பேரலையாக எழும் எனப் பயந்த இமானு​வல் நினைவு தினம், அசம்பாவிதங்​கள் ஏதும் இன்றி அமைதியாக நடந்து முடிந்ததில் பொது​​மக்களுக்கு பெரும் நிம்மதி!   

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடி தன் உயிரைக் கொடுத்தவர் இமானுவல் சேகரன். அவருடைய நினைவாக ஆண்டுதோறும் செப்​டம்பர் 11-ம் தேதி குருபூஜை நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இமானுவல் சமாதி அமைந்துள்ள பரமக்குடியில் கூடுகிறார்கள். கடந்த ஆண்டு நடந்த குருபூஜைக்கு வந்த ஜான் பாண்டியனை போலீஸார் தூத்துக்குடியில் தடுத்து நிறுத்தவே, பரமக்குடியில் அவருடைய ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். அது துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. இதில் ஆறு பேர் பலியானார்கள். அதனால், இந்த ஆண்டு இமானுவல் சேகரனின் நினைவு தினம் நெருங்கிய நேரத்தில், தென் மாவட்ட மக்கள் பீதியில் உறைந்துகிடந்தார்கள்.

ஆவேச கிருஷ்ணசாமி... காத்திருந்த ஜான் பாண்டியன்!

வழக்கமாக, இமானுவல் நினைவிடத்தில் அவருடைய படம் மட்டுமே அஞ்சலிக்காக வைக்கப்படும். இந்த முறை, கடந்த ஆண்டு துப்பாக்கிச் சூட்டில் பலியான ஆறு பேர் மற்றும் ம.பச்சேரியில் கொல்லப்பட்ட மாணவன் படங்களும் வைக்கப்​பட்டன. விழா நிர்வாகிகளிடம் போலீஸார் அதனை அகற்றச் சொல்ல... அவர்களோ மறுத்துவிட்டனர். அஞ்சலி செலுத்த வருமாறு பரமக்குடி துப்பாக்கிச் சூடு விசா​ரணை ஆணையத்தின் நீதிபதி சம்பத்துக்கு அழைப்பு விடப்பட்​டிருந்தது. அவர் சார்பாக ஆணைய வழக்கறிஞர் மணிமுத்து, அலுவலர் பத்ரோஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

நினைவஞ்சலி செலுத்த வரும் கூட்டத்தைப் படம் பிடிப்பதற்காக ஐந்து முனை சந்திப்பில், ஆணையத்தினர் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தனர். அதனால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நடக்கவே ஜாலியானார் போலீஸ் எஸ்.பி. காளிராஜ் மகேஷ்குமார். மீடியா ஆட்களிடம், ''காஷ்மீரில் ரிப்போர்ட்டர்ஸ் எல்லாம் புல்லட் ஃபுரூப் போட்டிருப்பாங்க. நீங்க ஹெல்​​மெட்கூடப் போடாம வந்திருக்கீங்க'' என்று பேசிக்​கொண்டு இருந்த நேரத்திலேயே, பிரச்னைக்குரிய தகவல் வந்து சேர்ந்தது. கமுதி அருகே முஷ்டகுறிச்சியிலும், செய்யாமங்களம் பகுதியிலும் கலவரம் நடப்பதாக செய்தி பரவியது. உடனே அஞ்சலி நிகழ்வில் சிறு பதற்றம் ஏற்பட்டது. நல்ல வேளையாக, 'அது சிறிய அளவிலான கல்வீச்சு சம்பவம்’ என்று புரியவைக்கவே... அனைவரும் நிம்மதியானார்கள்.

ஆவேச கிருஷ்ணசாமி... காத்திருந்த ஜான் பாண்டியன்!

அஞ்சலி செலுத்த வந்த கூட்டத்தை உஷாராக போலீஸார், லத்திகளைப் பயன்​படுத்தாமல், ஒருவருக்​கொருவர் தங்கள் கைகளை இணைத்துக்கொண்டு கட்டுப்படுத்தினர். அஞ்சலி செலுத்த வந்த சீமான், 'இமானுவல் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்’ என்று முழங்கிவிட்டுச் சென்றார்.  

கடந்த ஆண்டு துப்பாக்கிச் சூடு நடந்த ஐந்து முனை ரோடு வழியாக அஞ்சலி செலுத்த வந்த​வர்கள், சம்பவ இடத்தைக் கடந்தபோது ஆவேசம் அடைந்தனர். போலீஸாரையும், ஜெயலலிதா அரசையும் அர்ச்சித்தபடியே சென்றனர். கொஞ்சமும் டென்ஷன் ஆகாத போலீஸார் வேடிக்கை மட்டும் பார்த்தார்கள்.

படையோடு வந்த டாக்டர் கிருஷ்ணசாமி, ஐந்து முனை ரோட்டில் காரில் இருந்தபடி மலர்களைத் தூவி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ''கடந்த காலங்களில் இங்கு அஞ்சலி செலுத்திய அ.தி.மு.க. தலைவர்கள், 'அம்மா அரசு அமைந்ததும், நினைவு நாளை அரசு விழாவாகக் கொண்டாடுவோம்’ என்று வாக்குறுதி அளித்தனர். அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அத்துடன் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கும் நினைவுத் தூண் அமைக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் நாங்கள் போராட்டத்தில் இறங்குவோம்'' என்று திரி கொளுத்திப்போட்​டார் கிருஷ்ணசாமி. நினைவிடத்தைவிட்டு வெளி​யேறும்​போது அவருடைய ஆதரவாளர்கள்சிலர், அ.தி.மு.க-வினர் வைத்திருந்த ஃப்ளெக்ஸ் போர்டு​களைத் துவம்சம் செய்தனர்.

கிருஷ்ணசாமி கிளம்பத் தாமதம் ஆனதால், ஜான் பாண்டியனை மதுரை சாலையில் தடுத்து நிறுத்தி வைத்து இருந்தனர் போலீஸார். 40 கார்களில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஐந்து முனை ரோட்டுக்குள் நுழைந்தார் ஜான் பாண்டியன். ரோட்டில் கூடி நின்ற அவருடைய கட்சியினர் அரசுக்கும் போலீஸாருக்கும் எதிராக ஆவேசக் கூச்சல் போட்டாலும், அவர் அமைதியாகவே அந்த இடத்தைக் கடந்து சென்றார். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், கூடி இருந்தவர்கள் மத்தியில் ஜான் பாண்டியன் பேசுவதற்கு மைக் கேட்க... விழா நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். இதனால் எதுவும் பேசாமலே அந்த இடத்தில் இருந்து கிளம்பினார்.

வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு வட இந்தியத் தலைகளான ராம்விலாஸ் பஸ்வானும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியச் செயலாளர் பிரமோத் குரிலும் ஆஜரானார்கள். ''காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலான பல்வேறு மாநிலங்​களில் இருந்து இமானுவலுக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளோம். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக உயிர்விட்ட இமானுவலுக்குப் பஞ்சாபில் சிலை வைக்கப்படும்'' என்று அதிரடி கிளப்பினார் பிரமோத் குரில்.

அனைத்து குரு பூஜைகளும் இப்படியே அமைதி​யாக நடக்கட்டும்!

- இரா.மோகன், செ.சல்மான்

படங்கள்: உ.பாண்டி