எனது இந்தியா!

அந்தமான் சிறைச்சாலை!
##~## |
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்த அரசியல் தலைவர்களையும், சுதந்திரப் போராட்ட வீரர்களையும், அடங்க மறுத்த குற்றவாளிகளையும் தீவாந்திரத் தண்டனை கொடுத்து நாடு கடத்துவதை வழக்கமாக வைத்திருந்தது பிரிட்டிஷ் அரசு. அப்படிக் கைதிகளை அடைத்துவைப்பதற்காக தீவுகளில் சிறைக் கொட்டடிகள் உருவாக்கப் பட்டன. அவற்றை பீனல் காலனி என்று குறிப்பிடுகின்றனர். பிரிட்டிஷ் பீனல் காலனி களில் ஒன்றாக உருவாக்கப்பட்டதே அந்தமான் சிறைச்சாலை.
2006-ம் ஆண்டு, அந்தமான் சிறைச்சாலை நூற்றாண்டு விழா கண்டது. இன்று, அந்தச் சிறைச்சாலையின் ஒரு பகுதி மருத்துவமனையாக மாற்றப்பட்டு இருக்கிறது. ஆனால், அதன் நெடிதுயர்ந்த சுவர்களும், சிறைக் கம்பிகளும், காவல் கோபுரமும், பாறைகளில் வந்து மோதும் அலைகளும் இந்தச் சிறைச்சாலையில் வேதனைப்பட்டு இறந்துபோன, வன்கொடுமைக்கு உள்ளாகி விடுதலை பெற்ற எத்தனையோ மனிதர்களின் நினைவுகளை மீட்டியபடியே இருக்கின்றன.

பீனல் காலனி எப்படி உருவாக்கப்பட்டது என்பது குறித்து, ஆர்.வி.ஆர்.மூர்த்தி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அது, அந்தமான் சிறையைப் பற்றி நமக்கு புது வெளிச்சத்தைக் காட்டுகிறது. பிரிட்டிஷ் அரசு, இந்தியாவில் காலூன்றி ஆட்சி செய்யத் தொடங்கியதும், பல்வேறு மாநிலங்களில் கைது செய்யப்பட்ட மோசமான கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் மற்றும் திருடர்களை ஒடுக்குவதற்காக, அவர்களை நாடு கடத்த முடிவு செய்தது. அதற்காக, 1793-ம் ஆண்டு சுமத்ரா தீவில் சிறைச்சாலை ஒன்று கட்டப்பட்டது. இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்களைக் கப்பலில் ஏற்றி சுமத்ரா தீவுக்குக் கொண்டுசென்று அந்தச் சிறையில் அடைத்தனர்.
அதுதான், இந்தியாவில் இருந்து கைதிகளை நாடு கடத்திய முதல் முயற்சி. சுமத்ராவைத் தொடர்ந்து அந்தமான், சிங்கப்பூர், பினாங்கு, மலாக்கா எனப் பல்வேறு தீவுகளில் பிரிட்டிஷ் அரசு சிறப்பு சிறைகளைக் கட்டி, இந்தியாவில் இருந்து கைதிகளைக் கொண்டுபோய் அடைக்க ஆரம்பித்தது. ஆரம்ப காலத்தில் கைதிகளை கப்பலில் நாடு கடத்திச் செல்வது பெரிய சவாலாக இருந்தது. கடற்பயணத்தில் நோய் தாக்கியும், தங்களுக்குள் சண்டையிட்டும், புயலில் கப்பல் சிக்கி உடைந்து சிதறியும் கைதிகள் பலர் வழியிலேயே இறந்தனர்.
ஆனால், சுமத்ரா சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்ட கைதிகள், அங்கே காடுகளைத் திருத்துவது, சாலை அமைப்பது, பாலம் கட்டுவது போன்ற கடுமையான வேலைகளுக்குப் பயன்பட்டதால், சம்பளம் இல்லாத கூலிகளாக அவர்களைப் பயன்படுத்திக்கொண்டது பிரிட்டிஷ் அரசு. சுமத்ராவின் கவர்னர் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கைதிகளை சீர்திருத்தம் செய்வது இயலாத காரியமாக உள்ளது, அவர்கள் எந்தத் தண்டனைக்கும் அடங்க மறுக்கின்றனர், அவர்களை ஒடுக்குவதற்கு இதைவிட கடுமையான சிறைக்கூடம் அமைப்பது அவசியம் என்று, அரசுக்குக் கடிதம் எழுதினார்.

17-ம் நூற்றாண்டு வரை அந்தமான் தீவுகள் ஆதிவாசிகளுக்கு மட்டுமே உரியதாக இருந்தது, மலாய் கடற்கொள்ளையர் அதைத் தங்களது கொள்ளைக்கு உதவியாகப் பயன்படுத்திவந்தனர். அதனால், அந்தமானை யாரும் நெருங்கி விடாமல் இருப்பதற்காக அங்கே வசிக்கும் ஆதிவாசிகள், மனிதர்களைக் கொன்று சாப்பிடும் நரமாமிசப் பட்சிகள் என்ற கட்டுக்கதையைப் பரப்பிவிட்டனர். அந்த பயம் காரணமாகவே, வணிகக் கப்பல்கள் எதுவும் அந்தமான் பக்கம் வரவே இல்லை.
கொல்கத்தாவில் இருந்து 600 மைல் தூரத்தில் இருக்கிறது அந்தமான். இந்தத் தீவுக் கூட்டம் சங்கிலித் தொடர் போல 204 தீவுகளைக்கொண்டது. வட அந்தமான், நடு அந்தமான், பரதாங்கு, தென் அந்தமான், ரட்லண்ட் தீவு என ஐந்து முக்கியத் தீவுகள் இங்கு இருக்கின்றன. இவை, அடுத்தடுத்து அமைந்துள்ளன. வட அந்தமான் 51 மைல் நீளம் கொண்டது. நடு அந்தமான் 59 மைல், தென் அந்தமான் 49 மைல் நீளம் கொண்டவை. அடர்ந்த காடுகள்கொண்ட அந்தமானில், அவிந்துபோன எரிமலை ஒன்று இருக்கிறது. அந்தமான் தீவுகளில் மழை பெய்யும்போது ஓடும் நீரோடைகள் மட்டுமே இருக்கின்றன.
அந்தமானில் பெய்யும் மழையின் அளவு அதிகம். வெப்பமும் வாட்டி வதைக்கக்கூடியது. பிரெஞ்சு தேசத்தின் ஏசு சபையைச் சேர்ந்த ஊழியர்கள், 17-ம் நூற்றாண்டில் அந்தமானுக்குச் சென்று ஊழியம் செய்ததாக, வில்லியம் டேம்பியர் என்பவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
1773-ம் ஆண்டு அந்தமான், பிரிட்டிஷ் வசமானது. அதைத் தொடர்ந்து, ஆர்சிபால்ட் பிளேர் 1789-ம் ஆண்டு அந்தமானுக்கு வந்து, துறைமுகம் அமைத்து அந்தத் தீவைத் திருத்தம்செய்து நிர்வகிக்கத் தொடங்கினார். அவரது பெயரால்தான் போர்ட் பிளேர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பிளேர் துறைமுகம் அகன்றது. அதன் நுழைவாயிலின் குறுக்கே சிறிய தீவு ஒன்று இருக்கிறது. ஆகவே, அதன் உள்ளே கப்பல் வரவும் வெளியே போகவும் இரண்டு வழிகள் அமைக்கப்பட்டன. இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட கைதிகளைக் கொண்டு அந்தமானில் சாலைகள் அமைக்கவும் கட்டடங்கள் கட்டவும் தொடங்கினார் ஆர்சிபால்ட். 1792-ம் ஆண்டு தென் அந்தமானின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள காரன்வாலிஸ் துறைமுகத்துக்கு நிர்வாகம் மாற்றப்பட்டது. 1858-ம் ஆண்டு அந்தமானில் நிரந்தர சிறைக்கூடம் அமைப்பது என முடிவு செய்த பிரிட்டிஷ் அரசு, அதற்காக ஒரு கமிஷனை நியமனம் செய்தது. அதில், லெஃப்டினன்ட் ஹீத்கோட், டாக்டர் ஃபிரடெரிக் ஜே மாத், டாக்டர் பிளேபேர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அந்தமானுக்கு விஜயம் செய்து, தேவையான இடங்களைத் தேர்வு செய்தனர். அதன் பிறகு, கேப்டன் மான் தலைமையில் சிறைச்சாலை அமைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ராணுவ மருத்துவரும், ஆக்ராவில் ஜெயிலராகப் பணியாற்றியவருமான ஜே.பி.வாக்கர் தலைமையில் 733 கைதிகள் அந்தமானுக்குக் கொண்டுவரப்பட்டு அங்குள்ள சாத்தம் மற்றும் ரோஸ் தீவைச் சுத்தப்படுத்தத் தொடங்கினர். ரோஸ் தீவைத் தலைமையகமாகக் கொள்வது என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இந்தப் பணியின்போது தீவில் வேலை செய்துகொண்டு இருந்த கைதிகள் சிலர் காவலர்களை மீறி கள்ளத் தோணியில் தப்பி, நடுக்கடலில் பிடிபட்டுக் கொல்லப்பட்டனர். இன்னொரு பக்கம், அந்தமானின் ஜாவ்ரா ஆதிவாசிகள் மறைந்திருந்து தாக்கி வெள்ளையரை விரட்ட முயன்றனர்.
கைதிகளாக வந்தவர்களில் பஞ்சாபிகள் அதிகம். அவர்கள் ஒன்றுசேர்ந்து ஜே.பி.வாக் கரைக் கொன்றுவிட்டுத் தப்பி ஓடத் திட்டம் தீட்டினர். அதன்படி, இரவில் வாக்கர் தங்கியிருந்த கூடாரத்தைத் தாக்கினர். ஆனால், வாக்கருக்கு விசுவாசமாக இருந்த இரண்டு பஞ்சாபிகள் மற்ற கைதிகளைக் காட்டிக்கொடுத்த காரணத்தால், தப்பிச் செல்ல முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. அந்தமானை பீனல் காலனியாக்கும் பணி எளிதாக நடக்கவில்லை. அங்கே, தொடர்ச்சியாகப் பெய்யும் மழை காரணமாக தொற்று நோய் பரவி கைதிகள் செத்து விழுந்தனர். மோசமான சீதோஷ்ண நிலை காரணமாகக் கட்டுமானப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மலேரியா கொசு, அட்டைக் கடி, விஷப் பாம்புகள் எனக் கைதிகள் தொடர்ந்து அவதிப்பட்டனர்.
இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பெரும்பான்மையான கைதிகள், இளைஞர்களாகவே இருந்தனர். ஆகவே, அவர்கள் அடக்க முடியாத பாலுறவு வேட்கையில் ஆதிவாசிப் பெண்களைக் கற்பழிக்கத் தொடங்கினர். மேலும், கைதிகளுக்கு இடையில் ஓரினச் சேர்க்கையும் அதிகமானது. அதைக் கட்டுப்படுத்த இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை அழைத்து வந்து அந்தமானில் தங்கவைத்து குடும்பமாக வேலை செய்யவைக்கலாம் என்ற யோசனையை வாக்கர் தெரிவித்தார்.

அதை ஏற்றுக்கொண்ட பிரிட்டிஷ் அதிகாரிகள், இந்தியாவில் இதற்காக லாலா முண்டன் சிங், ராம் தயாள் என்ற இரண்டு ஏஜென்ட்களை நியமனம் செய்தனர். அவர்களுக்கு மாதச் சம்பளம் 50 ரூபாய். கைதியின் மனைவி, குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடித்து அந்தமானுக்கு அனுப்பிவைத்தால், கூடுதலாக இரண்டு ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதனால், இரண்டு ஏஜென்ட்களும் கைதிகளின் குடும்பங்களைத் தேடி வங்காளம் முழுவதும் அலைந்தனர்.
கல்கத்தாவில் இருந்து தனிக் கப்பல் மூலம் கைதிகளின் குடும்பங்கள் அந்தமானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அங்கே, ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறிய விவசாய நிலம் வழங்கப்பட்டது. குடும்பத்துடன் சேர்ந்து வசிக்கத் தொடங்கியதால், கைதிகள் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு விசுவாசத்துடன் உழைக்கத் தொடங்கினர். 1858-ம் ஆண்டு 8.035 கைதிகள் அந்தமானுக்குக் கொண்டுவரப்பட்டு இருந்தனர். அதில், 2,098 கைதிகள் நோயுற்றும், போதுமான உணவு இல்லாமலும் இறந்துபோயினர். கடும் தண்டனை காரணமாக 612 பேர் மனநலம் பாதிக்கப்பட்டு பைத்தியம் ஆகிவிட்டனர்.
குடும்பம் இல்லாத கைதிகள் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கைதிகளின் குடும்பத்துப் பெண்களைத் தாக்கி வன்புணர்ச்சி செய்யத் தொடங்கினர். கைதிகளுக்குத் தேவையான குளிராடைகள், உணவு, தானியங்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டது. கைதிகளுக்கான மருத்துவமனை, பணிமனைகள் மற்றும் மாற்று உடைகள் வழங்கப்பட வேண்டும் என்று ராபர்ட் நேபியர் என்ற அதிகாரி அரசுக்குக் கடிதம் எழுதினார். அதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றுவதாக அரசு அறிவித்தது. நிலைமையை ஆராய்வதற்காக மேஜர் நெல்சன் டேவிட் தலைமையில் ஒரு குழு 1867-ம் ஆண்டு அந்தமானுக்கு வந்தது. அவர்கள், கைதிகளை ஒடுக்குவதற்காக கறாரான சட்டத் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்று சிபாரிசு செய்தனர். 1871-ம் ஆண்டு மேயோ பிரபு அந்தமானுக்கு வந்தார். அவர், அந்தமானைச் சுற்றிப்பார்த்துவிட்டு கைதிகளுக்குத் தேவையான தானியங்களை அவர்களே உற்பத்தி செய்துகொள்ள வேண்டும், காய்கறித் தோட்டம் அமைப்பது, கால்நடை வளர்ப்பது, மரம் வெட்டுவது போன்ற பணிகளை குடும்பத்தினர் செய்ய வேண்டும் என்று அறிவித்தார்.
அதுவரை, தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை மேயோ நிறுத்திவிட்டதால் ஆத்திரமடைந்த ஷேர்அலி என்ற கைதி, மேயோவைக் கொலை செய்துவிட்டான். இந்தக் கொலைக்கு பிறகு, அந்தமான் சிறை ஒரு நரகமாக மாறியது. கைதிகள் அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு மறுக்கப்பட்டது. மோசமான குடிநீர் தரப்பட்டது. கைதிகளை நிர்வாணப்படுத்தி கடும் சித்ரவதை செய்தனர்.
1873-ம் ஆண்டு, உள்துறை செயலாளர் கேம்பல், அந்தமானுக்கு வந்து, கைதிகளுக்கு வழங்கப்பட்ட கடுமையான தண்டனைகளைக் குறைத்து உத்தரவிட்டதோடு, அவர்களின் மறுவாழ்வுக்கு உரிய வழிமுறைகளை ஏற்படுத்தும்படி வலியுறுத்தினார்.
1874-ம் ஆண்டு, அந்தமானில் இருந்த கைதிகளின் எண்ணிக்கை 7,820. இதில், 895 பேர் பெண்கள். 500 கைதிகள் திருமணமாகி குடும்பத்துடன் இருந்தனர். 578 சிறுவர்களும் அவர்களுடன் இருந்தனர். சுதந்திரமாக வேலை செய்ய பரோல் அனுமதி பெற்ற கைதிகளின் எண்ணிக்கை 1,167. ஹென்றி நார்மன் என்ற பிரிட்டிஷ் அதிகாரி, கைதிகள் தங்களுக்குள் திருமணம் செய்துகொள்ள முன்வர வேண்டும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 128 கைதிகள் அங்கே இருந்த பெண் கைதிகளைத் திருமணம் செய்துகொண்டனர்.
