மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!

போருக்குக் கிடைத்த காரணம்!  

##~##

காப்ரினோவிச்சினுடைய அப்பா போலீஸ் அதிகாரி. ஆகவே, எந்த வழியில் இளவரசர் வரப்போகிறார். பாதுகாப்புக்கு எத்தனை வாகனங்கள் உடன் வரப்போகின்றன. கார் எங்கே நிற்கும் என்ற விவரங்களைக் காப்ரினோ​விச்சால் எளிதாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. இதற்கிடையில், தாக்குதலுக்குத் தேவையான எறிகுண்டுகள், துப்பாக்கிகள், பிடிபட்டால் தற்கொலைசெய்துகொள்வதற்காக சயனைடு மற்றும் வரைபடங்களும் டேனிலோ லிக் என்பவது வழியாக அவர்கள் வசம் வந்து சேர்ந்தன. இளவரசர் வருவதாக இருந்த 1914 ஜுன் 28 அன்று தாக்குதலுக்குத் தயாராக ஒன்று கூடினர். எந்த இடத்தில் எப்படித் தாக்குவது என்பதை முடிவுசெய்துகொண்டனர். லிக் ஒரு முறை சாலையில் நடந்து சென்று காருக்கும் அவர்களுக்கும் இடையில் எவ்வளவு தூரம் இடை வெளி இருக்கிறது என்பதைத் துல்லியமாக அறிந்து வந்து சொன்னான்.

இளவரசர் பெர்டினாண்ட் ரயில் மூலம் செரஜிவோ வந்து இறங்கினார். அவரை வரவேற்​பதற்காக செரஜிவோவின் தலைமை போலீஸ் கமிஷனர் ரயில் நிலையத்துக்கு வந்​திருந்தார். பாதுகாப்புக்காக இரண்டு கார்கள் முன்னே வர திறந்த கார் ஒன்றில் இளவரசர் பெர்டினாண்ட் தனது மனைவி சோஃபியாவுடன் ஒரு காரில் வந்தார். வழி நெடுக மக்கள் வரவேற்றனர். இளவரசரின் கார் எங்கே வந்து நிற்கப்போகிறதோ அதை ராணுவ அதிகாரிகள் பார்வையிட்டு, பாதுகாப்பை அதிகப்​படுத்தினர். சரியாக, 10 மணிக்கு டவுன்ஹாலை நோக்கிச் செல்லத்தொடங்கியது கார். பிளாக் ஹேண்ட் இயக்கத்தினர், ஒரு காபி பார் அருகே ஒளிந்து இருந்தனர். இளவரசரின் கார் அந்தக் கடையை நெருங்கி வந்தது. கடைசி நிமிடத்தில், மெஹமெட்பாசிக் பயந்து விட்டான். அதனால், அவன் சுடவில்லை. கார், அவனைக்கடந்து சென்றுவிட்டது. அடுத்த ஆள், தனது கையில் உள்ள துப்பாக்கியால் சுட முயன்றபோது பாதுகாப்பு வண்டிகள் அருகில் வந்துவிட்டன. இதற்​கிடையில், சாலையின் மறு பக்கம் காத்திருந்த காப்ரினோவிச் தனது கையில் உள்ள எறிகுண்டை, இளவரசர் வந்த காரை நோக்கி வீசினான். அது, இலக்கைத் தாக்குவதற்குப் பதிலாக அடுத்த கார் மீது விழுந்து வெடித்தது. அதில், பாதுகாப்பு வீரர்கள் 20 பேருக்கும் மேலாக பலத்த காயம் அடைந்தனர்.

எனது இந்தியா!

காவலர்கள் பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் காப்ரினோவிச் சயனைடைக் குடித்து விட்டு, ஆற்றில் குதித்து உயிர்விட முயன்றான். ஆனால், அதற்குள் காவலர்கள் அவனைப் பிடித்து விட்டனர். காப்ரினோவிச் அடித்து இழுத்துச் செல்லப்படுவதை பொதுமக்கள் பயத்துடன் பார்த்தனர். டவுன் ஹாலில் நடந்த விழாவில், இளவரசரால் இயல்பாகப் பேச முடியவில்லை. தன் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி கண்டிக்கத்தக்கது என்று நடுக் கத்துடன் கூறினார். தாக்குதலில் சோஃபியா நிலைகுலைந்தார். காயமடைந்து மருத்து​வமனையில் சேர்க்கப்பட்டு இருந்த வீரர்களைப் பார்க்க இளவரசர் புறப்பட்டார். அப்போது, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

காலை 10.45க்கு இளவரசரின் கார், மருத்துவமனையை நோக்கிச் சென்றது. ஆனால், டிரைவரின் கவனக்குறைவால் மருத்துவ​மனைக்குப் போவதற்குப் பதிலாக பாதை மாறியது. உடனே, தனது தவறை உணர்ந்த டிரைவர் காரைப் பின்னால் திருப்ப முயன்றபோது, கார் எதிர்பாராமல் நின்றுவிட்டது. கொலை முயற்சியில் தோற்றுப்போயிருந்த பிரின்செப், ஒரு உணவகத்துக்குள் இருந்து இளவரசரின் கார் திரும்பிக்கொண்டு இருப்பதைக் கண்டான். இது நல்ல சந்தர்ப்பம் என்று அவனுக்குத் தோன்றியது. வேகமாக கார் அருகில் சென்றான். பின்னால் திரும்ப முயன்ற கார் நின்றுவிடவே சட்டென தனது பெல்ஜியம் துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினான். முதல் குண்டு இளவரசரின் கழுத்தில் பாய்ந்தது. அடுத்த குண்டு அவரது மனைவி சோஃபியாவின் அடிவயிற்றில் பாய்ந்தது. காவலர்கள் பாய்ந்து வந்து பிரின்செப்பைப் பிடித்து விட்டனர். ரத்தம் சொட்டச்சொட்டத் துடித்த இளவரசர் பெர்டினாண்ட், தனது மனைவி சோஃபியா கண் முன்னே செத்துக்கொண்டு இருப்பதைப் பார்த்தார். உரத்த குரலில், ''சோஃபியா... செத்துவிடாதே, நம் பிள்ளைகளுக்காக நீ வாழ வேண்டும்'' என்றார். ''எனக்கு ஒன்றுமில்லை'' என்று சொல்லிக்கொண்டே அவள் மயங்கி விழுந்தாள். 10 நிமிடங்களில் இளவரசன் பெர்டினாண்ட் இறந்துவிட்டார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் சோஃபியாவும் இறந்தார்.

எனது இந்தியா!

பிரின்செப்புக்கு 20 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. அவனுக்கு ஆயுதம் வழங்கியவர்கள், சதிக்குக் காரணமாக இருந்தவர்கள் என ஐந்து பேர் தூக்கில் போடப்பட்டனர். இளவரசர் கொலையைக் காரணமாக வைத்து ஆஸ்திரியா 1914-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி, செர்பியாவுக்கு 10 கோரிக்கைகளை முன்வைத்தது. அவற்றை ஏற்க செர்பியா மறுத்து விட்டது. அதனால், செர்பியா மீது போர் தொடுப்பதாக ஆஸ்திரியா அறிவித்தது. தனது நட்பு நாடான ஜெர்மனியையும் உதவிக்கு அழைத்தது. செர்பியாவுக்கு உதவ ரஷ்யாவும் முன்வந்தது. போர் தொடங்கியதும், முன்பகை காரணமாக பிரான்ஸ் தன் மீது தாக்கக்கூடும் என்று நினைத்த ஜெர்மன், பிரான்ஸ் நடுநிலை வகிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஆனால், கிடைத்த சந்தர்ப் பத்தைக் கைவிடாமல் ஜெர்மனியைத் தாக்கத் திட்டமிட்டது பிரான்ஸ். இந்த நிலையில், எதிர் பாராமல் பிரான்ஸைத் தாக்க பெல்ஜியம் வழியாக ஒரு பெரும்படையை அனுப்பியது ஜெர்மன். நடுநிலை வகிக்கிற பெல்ஜியம் வழியாக ஜெர்மானியப் படைகள் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய பிரிட்டன், உடனே ஜெர்மனிக்கு எதிராகப் போர் தொடங்கியது.

பிரிட்டனுக்கு ஆதரவாக ஜப்பானும்இணைந்து​கொண்டது. அதுபோலவே, பல்கேரியா ஜெர்மனியு​டனும் ருமேனியா பிரிட்டனோடும் இணைந்தன. ஒட்டமான் பேரரசு ஜெர்மனியை ஆதரிப்பதாக அறிவித்தது. உண்மையில், இந்தப் போர் தங்களது சொந்த லாபங்களை நிறைவேற்றிக்கொள்ள ஐரோப்​பிய நாடுகள் போட்டுக்கொண்ட சண்டையே. அதன் ஊடாக மறைந்திருப்பது பொருளாதார மேலாண்மையும் நாடுபிடிக்கும் ஆசையுமே.

இந்தப் போரில், பிரிட்டன் தனது படைகளுடன் இந்தியாவில் இருந்த ராணுவத்தையும் இந்தியாவின் பல்வேறு சமஸ்தான மன்னர்களின் படைகளையும் தனது உதவிக்குப் பெற்றுக்கொண்டது. கூடுதலாக, தனது காலனியாக இருந்த நாடுகளில் இருந்த படைப்பிரிவுகள் எல்லாவற்றையும் போர் முனைக்கு வரவழைத்தது. இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 13 லட்சம் வீரர்கள், இந்தப் போரில் கலந்துகொண்டனர் என்கிறார்கள். இறந்த இந்தியர்களின் எண்ணிக்கை 62,000. காயம் அடைந்தவர்கள் 67,000 பேர்.

முதல் உலகப் போருக்கு முன்பு வரை ஆண்டுக்கு 15,000 பேர் மட்டுமே ராணுவப் பணிக்கு சேர்க்கப்பட்டு இருந்தனர். உலகப் போர் காரணமாக இந்தியாவில் ஓர் ஆண்டில் மூன்று லட்சம் பேர் ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். துருக்கி, ஜெர்மனியுடன் இணைந்து கொண்டதால் தங்களது ஆங்கிலோ பெர்சியன் எண்ணெய் கம்பெனியை துருக்கியப் படைகள் தாக்கி அழித்துவிடும் என்று கருதிய பிரிட்டன், அதைப் பாதுகாப்பதற்காக இந்தியப் படையை நிறுத்தியது. எண்ணெய்க் கிணறுகள் தனியார்மயமாகத் தொடங்கியதும், தங்களுக்கான விற்பனைப்பொருளாக அதைப் பயன்படுத்த முடிவுசெய்த பிரிட்டன் உருவாக்கியதே பஸ்ரா எண்ணெய் கம்பெனி. அங்கே இருந்துதான் போர் முனையில் உள்ள பிரிட்டிஷ் வாகனங்களுக்குத் தேவையான எரிபொருள் கிடைத்த்து. பிரிட்டனின் இந்த வர்த்தக நிறுவனத்தைப் பாதுகாக்க இந்தியர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து சண்டையிட்டனர்.

எனது இந்தியா!

முதல் உலகப் போரில் இந்தியர்கள் காட்டிய விசுவாசத்துக்கும் உயிர்த் தியாகத்துக்கும் பரிசாக பலருக்கு விக்டோரியா சிலுவை மெடல் வழங்கப்பட்டது. அந்த விருது 1911 வரை இந்தியர்கள் எவருக்கும் வழங்கப்பட்டது இல்லை. மொத்தம் 1,561 நாட்கள் நடந்த இந்தப் போரில் நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஸ்கண்டினேவிய நாடுகள், மொனாக்கோ ஆகியவை மட்டுமே நடுநிலை நாடுகளாக இருந்தன. 60 மில்லியன் ஐரோப்பியர்களை உள்ளடக்கிய சுமார் 70 மில்லியன் ராணுவ வீரர்கள் போரில் ஈடுபட்டு இருந்தனர். இதில் 40 மில்லியன் பேர் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 20 மில்லியன் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

முதல் உலகப் போரில் ஜெர்மனி விஷ வாயுவைப் பயன்​படுத்தியது. இதனால், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அது, ஓர் தவறான முன்மாதிரிச் செயலாகும். பன்னாட்டு ஒப்பந்தங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்த கடல் விதிமுறைகளை அலட்சியமாகத் தூக்கி எறிந்தது. கடல்பரப்பு முழுவதும் கடற்கண்ணிகளை விதைத்தது பிரிட்டன். இதனால், ஆத்திரம் அடைந்த ஜெர்மனி, நீர்மூழ்கிக் கப்பல் மூலம், பயணிகள் கப்பல்களையும் தாக்கி அழிக்கத் தொடங்கியது. 1915-ம் ஆண்டில் ஆர்.எம்.எஸ். லூசித்தானியா என்னும் பயணிகள் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. ஹெலிகாப்டர்களும் ஆயுதம் தாங்கிய விமானங்களும் முதல் உலகப் போரில்தான் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டன. முதல் உலகப் போரில் இந்தியா தாக்கப்பட்டது ஒரே ஓர் இடத்தில் மட்டுமே. அது, மதராஸ்.

1914-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு, எம்டன் கப்பல் மதராஸைத் தாக்கியது. முதலில், பர்மா எண்​ணெய் கம்பனிக்குச் சொந்தமான எண்ணெய்க் கலன்கள் மீது குண்டுகளை வீசியது. இதனால், கலன்கள் தீப்பற்றி எரியத் தொடங்கின. அதைத் தொடர்ந்து, துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டு

எனது இந்தியா!

இருந்த சிறிய சரக்குக் கப்பல் ஒன்றைத் தாக்கியது எம்டன். அந்தக் கப்பலில் இருந்த 26 மாலுமிகள் காயம் அடைந்தனர். 5 பேர் இறந்தனர். பிரிட்டிஷ் காவல் படையின் பதில் தாக்குதலால், எம்டன் கடலுக்குள் திரும்பிவிட்டது. எம்டனின் இந்த எதிர்பாராத தாக்குதலில் சென்னை நகரமே பயத்தில் ஆடிப்போனது. ஜெர்​மானியக் கடற்படையின் கப்பலான எம்டன், 1908-ம் ஆண்டில் போலந்து நாட்டின் டான்ஜிக் என்ற கப்பல் கட்டும் இடத்தில் உருவாக்கப்பட்ட போர்க் கப்பலாகும். எம்டனில் 20 பீரங்கிகள் பொருத்தப்பட்டு இருந்தன. முதல் உலகப் போரின்போது எம்டன் ஓர் அசுரனைப் போல இந்தியப் பெருங்கடலில் 25-க்கும் மேற்பட்ட கப்பல்களை வேட்டையாடியது. முதல் உலகப் போரில் பிரிட்டனுக்கு துணையாக இந்திய வீரர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்ற எதிர்ப்புக் குரல் வெளிநாடுகளில் வாழும் சுதந்திர உணர்ச்சிமிக்க இந்தியர்களிடம் இருந்து எழுந்தது. முதல் உலகப் போரில் பிரிட்டன் தோல்வி அடைந்தால், இந்தியாவின் தலையெழுத்து மாறிவிடும் என்று அவர்கள் நம்பினர். ஆனால், ஜெர்மனி தோற்றுப்போனதுடன் பிரிட்டன் வலிமைமிக்க நாடாகவும் உருமாறிவிட்டது.

இந்த யுத்தச் சந்தையில் அதிகப் பாதிப்பு இல்லாமல் லாபம் ஈட்டியது அமெரிக்காதான். முதல் உலகப் போரின் பின்னால், இந்தியர்களின் வாழ்க்கையில் ஒளி வீசும் என்று கனவு கண்ட இந்தியர்களுக்கு பிரிட்டனின் அணுகுமுறையில் அதன் பிறகு எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது வருத்தம் கலந்த உண்மை. இந்தியர்கள் பிரான்சிலும், மெசபடோமியாவிலும் ஆப்பிரிக்காவிலும் போய்ச் சண்டையிட்டதன் மிச்சமாக இருப்பது வெறும் மெடல்கள் மட்டுமே. பொருளாதார ஆதாயங்கள் முழுவதும் பிரிட்டனுக்குத்தான் கிடைத்தன. இதுதான், இந்தியர்களின் விசுவாசத்துக்குப் பலன் போலும்.

எனது இந்தியா!