மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!

நீண்டு செல்லும் சாலை  

##~##

பரந்த இந்தியாவை ஒன்றுசேர்த்த முக்கியக் காரணியாக நெடுஞ்சாலைகளையும் ரயில் பாதைகளையும் குறிப்பிடுவேன். சாலைகள் மேம்பாடு அடைந்த காரணத்தால் வணிகச் சந்தையும், தபால் போக்குவரத்தும், வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கின. இதனால், பரவலான இடப்பெயர்ச்சி நடந்தது.

இன்று, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்ய எத்தனையோ நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்தியாவின் எல்லையோர மாநிலங்கள் வரை செல்வதற்கு ரயில் பயணம் உதவுகிறது. சிதறுண்டுகிடந்த இந்தியாவை ஒன்றுசேர்த்தவை நெடுஞ்சாலைகளே. இந்தியாவின் நெடுக்காகப் பயணம்செய்யும் ஒருவர், ஒவ்வொரு நான்கு மணி நேரத்திலும் மாறுபட்ட உணவு வகைகள், பண்பாடு, பேச்சுமொழி இருப்பதை உணர முடியும். பன்முகக் கலாசாரமே இந்தியாவின் தனித்துவம். இந்தப் பண்பாட்டுக் கலப்பினை ஒருவர் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றால், அவர் சாலை வழியாக இந்தியாவில் பயணிக்க வேண்டும். உணவு, உடை, உபசரிப்பு, மொழி, நம்பிக்கை, சடங்கு மற்றும் கலை என்று எத்தனையோ மாறுபட்ட, தனித்துவமான கலாசார அம்சங்கள் இருக்கின்றன என்பதை நேரடியாக அறிய முடியும்.

எனது இந்தியா!

இந்திய வரலாற்றின் முக்கிய அம்சங்களில் ஒன்று, அதன் நெடுஞ்சாலையின் வரலாறு. குறிப்​பாக, கிராண்ட் டிரங்க் ரோடு எனப்படும் இந்தியாவின் மிக நீண்ட நெடுஞ்சாலையானது மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசால் உருவாக்கப்பட்டது. கிழக்கில் வங்காள தேசத்தின் சிட்டகாங்கில் தொடங்கி கங்கை நதியோட்டத்தை ஒட்டியே நீண்டு வளைந்து கைபரைக் கடந்து, பெஷாவர் வழியாக ஆப்கானிஸ்தானின் காபூல் வரை இந்தச் சாலை படுத்துக்கிடக்கிறது. அதாவது, இன்றுள்ள மேற்கு வங்காளம், ஜார்கண்ட், பீகார், உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் என நீண்டு பாகிஸ்​தான் வழியாக ஆப்கானிஸ்தான் வரை செல்கிறது. 2,500 கி.மீ. தூரத்தை இணைக்கும் இந்த நெடுஞ்சாலையை 'உத்ர பாதை’ என்று குறிப்பிடுகின்றனர். இதற்கு, 'ராஜ பாதை’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இந்தியாவுக்கும் மேற்கு ஆசிய நாடுகளுக்கும் இடையில் வணிகப் பரிமாற்றம் ஏற்படுத்துவதற்காகவே இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. குறிப்பாக, தட்ஷசீலத்தில் இருந்து பாடலிபுத்திரம் வரை வணிகர்கள் சென்று வருவதற்கு முறையான பாதை தேவை என்று கருதியே இந்தச் சாலை அமைக்கப்பட்டது.

இந்தச் சாலையைப் பராமரித்தது சந்திர குப்த அரசின் படைப் பிரிவு என்பதால், பாதுகாப்பான பயணத்துக்கு உகந்ததாக இந்தச் சாலை கருதப்பட்டது. இதன் வழியாக மேற்கொள்ளப்பட்ட வணிகம் குறித்து மெகஸ்தனிஸ் தனது 'இண்டிகா’ நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். செலூகஸ் நிகோடரின் தூதராக மௌரியப் பேரரசரான சந்திரகுப்தரின் அரசவைக்கு அனுப்பிவைக்கப்பட்டவர் மெகஸ்​தனிஸ். எட்டு பகுதிகளைக்கொண்ட இந்த நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. 1846-ம் ஆண்டு ஸ்வான் பெகுக் என்பவர், சிதறிக்கிடந்த மெகஸ்தனிஸின் குறிப்புகளைத் தொகுத்து ஒழுங்குபடுத்தினார். ஜே.டபிள்யூ. மாக்ரின்டல் இதை கிரேக்க மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 'இண்டிகா’ நூலில் நம்ப முடியாத பல தகவல்கள் இருக்கின்றன. குறிப்பாக, இந்தியாவில் ஒற்றைக் கால்கொண்ட மனிதர்கள் வசிக்கின்றனர், கொம்பு உள்ள குதிரைகள் இருந்தன, பாதங்கள் வரை காது வளர்ந்த மனிதர்கள் வாழ்ந்துவந்தனர், ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்கு மூக்கே கிடையாது என்பதுபோன்ற மெகஸ்தனிஸின் குறிப்புகள் வாய்மொழியாகக் கேட்டறிந்த பொய்த் தகவல்களாகவே இருக்கின்றன. ஆனாலும், அவர் மௌரிய அரசின் காலத்தில் நடந்த அரசியல் மற்றும் நிர்வாக முறைகள் பற்றி நிறையத் தகவல்களை வழங்கி இருக்கிறார்.

மெகஸ்தனிஸுக்கு இளம் வயதில் திக்குவாய் இருந்தது. ஆகவே, அவர் தனது இந்தியப் பயணத்தில் கேட்டறிந்த தகவல்களை வைத்தே தனது பயணக் குறிப்புகளை எழுதி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்படுகிறது. 15 ஆண்டுகளை இந்தியாவில் கழித்த மெகஸ்தனிஸ், கிராண்ட் டிரங்க் ரோடு குறித்த பதிவுகளை துல்லியமாக எழுதி இருக்கிறார். புரஸ்பூர், ஹஸ்தினாபூர் கன்யகுப்ஜா, பிரயாகை, பாடலிபுத்திரம், தாமிரலிப்டா மற்றும் தட்ஷசீலம் ஆகிய ஏழு நகரங்கள் இந்தச் சாலை வழியாக இணைக்கப்பட்டு இருந்தன. இன்று, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இருந்து 32 கி.மீ. தூரத்தில் தட்ஷசீலம் நகரத்தின் அழிந்துபோன மிச்சங்கள் காணப்படுகின்றன. புத்த ஜாதகக் கதைகள் தட்ஷசீலம் குறித்து நிறையத் தகவல்களை நமக்குத் தருகின்றன. முக்கிய பௌத்த ஸ்தலமாக விளங்கிய தட்ஷசீலம் அன்று, முக்கிய வணிக நகரங்களில் ஒன்றாக இருந்தது. அத்துடன், சிறப்பான கல்விச் சாலைகள் அங்கே அமைந்திருந்த காரணத்தால் பல்வேறு இடங்களில் இருந்தும் மாணவர்கள் கல்வி கற்றுக்கொள்ள தட்ஷசீலத்துக்கு வந்திருக்கின்றனர்.

அந்தக் காலங்களில், ஒரு பையன் எட்டு வயது வரை வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றுக்கொள்ள வேண்டும். அதன்பிறகு, 12 வயது வரை ஆசிரமத்தில் கல்வி கற்பான். அது முடிந்து, உயர்கல்வி கற்க விரும்புகிறவர்கள் தட்ஷசீலத்தைத்தான் தேர்வு செய்வர். அங்கே, ஏழு ஆண்டுகள் ஆசிரியருடன் தங்கிப் பயிலும் மாணவர்கள், அறிவியல், தத்துவம், வானவியல், கணிதம், கவிதை, மெய்ஞானம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றனர். இப்படிக் கல்வியின் பொருட்டு பயணம் செய்யும் மாணவர்களுக்கு, கிராண்ட் டிரங்க் ரோடு முக்கியப் பயண வழியாக இருந்தது.  மௌரிய அரசர்களைப் பற்றிய தகவல்கள் சங்க இலக்கியத்தில் காண முடிகிறது. குறிப்பாக, அகப்பாடல் ஒன்றில்,

''மோகூர் பணியா மையின், பகைதலை வந்த

மாகெழு தானை வம்ப மோரியர்

புனைதேர் நேமி உருளிய குறைத்த'' (அகம்  251)

என்ற குறிப்பு காணப்படுகிறது. நந்தர்களுக்குப் பின்வந்த மௌரியர்களை, புதியவர்கள் என்ற பொருளில் வம்ப மோரியர் என்கிறார்கள். மேலும், தனது கட்டுரை ஒன்றில் வரலாற்று அறிஞர் கணியன் பாலன், அசோகர் தனது 32 கல்வெட்டுக்களில் இரண்டு கல்வெட்டுக்களில் மட்டுமே தனது எல்லைக்கு அப்பால் உள்ள அரசுகளின் பெயர்களைக் குறிப்பிடுகிறார் என்ற அரிய தகவலைத் தருகிறார். அதன்படி, இரண்டாவது மற்றும் 13-வது கல்வெட்டுக்களில் தமிழகத்தை ஆண்ட அரசுகளின் பெயர்கள்

எனது இந்தியா!

வருகின்றன. இரண்டாவது கல்வெட்டில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான மருத்துவப் பணிகளை எந்தெந்தப் பகுதிகளில் செய்கிறேன் என்பதைச் சொல்லவந்த அசோகர்... சோழர்கள், பாண்டியர்கள், சத்ய புத்திரர்கள், கேரளப் புத்திரர்கள் ஆகிய தமிழக நாடுகளின் நான்கு அரசகுலப் பெயர்களையும் முதலில் சொல்லிவிட்டு, அதன் பின்னரே கிரேக்க அரசர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இருக்கிறார். 13-வது கல்வெட்டில், தர்ம நெறி எந்தெந்த நாடுகளில் பரவ வேண்டும் என்று சொல்லவந்த அசோகர், முதலில் கிரேக்க அரசர்களின் பெயர்களையும் சோழர்கள், பாண்டியர்கள் என இரு தமிழ் அரசர்களின் பெயர்களையும் பின்னர் குறிப்பிடுகிறார் என்கிறார்.

சாலைகளை மேம்படுத்தியதில் மௌரியர்கள் காட்டிய கவனம் குறிப்பிடத்தக்க ஒன்று. அதன் விளைவாக​வே, கிராண்ட் டிரங்க் ரோடு சிறப்பாக அமைக்கப்​பட்டது. மௌரியர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்தச் சாலையை முறைப்படுத்தியவர் ஷெர் ஷா சூரி. இவர், 16-ம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட சூர் வம்சத்து அரசர். தபால் மற்றும் போக்குவரத்துக் காரணங்களுக்காக ஷெர் ஷா சூரி, இந்தச் சாலையை மேம்படுத்தினார். குறிப்பாக, சாலையோர உணவு விடுதிகள், தங்கும் இடங்கள் அமைத்ததோடு வெயிலின் கொடுமை தெரியாமல் இருக்க சாலை முழுவதும் மரங்களை நட்டார் ஷெர் ஷா. இந்தச் சாலையை பராமரிப்பதற்கு என்றே தனியாக ஒரு துறையை உருவாக்கி சிறப்பு ஊழியர்​களையும் நியமித்தார் ஷெர் ஷா. சாலையில் ஒவ்வொரு மைல் தூரத்துக்கும் ஒரு மைல்கல் அமைக்கப்பட்டதுடன், சுமைகள் கொண்டு​செல்பவர்கள் இளைப்பாறிக்கொள்ள சுமைதாங்கிக் கற்கள் அமைக்கப்பட்டன. நீண்ட தூரம் குதிரைகளில் பயணம் செய்பவர்கள், இரவில் தங்கும்போது குதிரைகளுக்கு வைத்தியம் செய்வதற்கு என்று மருத்துவ நிலையங்களும் அமைக்கப்பட்டன. ஷெர் ஷா சூரி அமைத்த மைல் கற்களையும் சாலையோர விடுதிகளையும் இன்றும் டெல்லி அம்பாலா நெடுஞ்சாலையில் காணமுடிகிறது. இந்தச் சாலை போர்ப் படைகள் செல்வதற்கு வசதியாக அகலமாகவும் உறுதியாகவும் ஆற்று வழிகளில் பாலங்களுடன் உருவாக்கப்பட்டு இருந்தன.

ஷெர் ஷா சூரியின் மறைவுக்குப் பிறகு, இந்தச் சாலையை மொகலாயர்கள் மேம்படுத்தி தங்கள் யுத்த செயல்பாட்டுக்கு உகந்ததாக மாற்றிக்கொண்டனர். அதை, பிரிட்டிஷ் படையினர் தங்கள் வசமாக்கிக்கொண்டு அவர்களே இந்தச் சாலைக்கு கிராண்ட் டிரங்க் ரோடு என்று பெயர் சூட்டினர். சாலைகளின் பாடல்களைக் கேட்க முடிந்தவர்கள் வரலாற்றில் மறைந்துபோன நிகழ்வுகளை அறிந்துகொள்ள முடியும் என்பார்கள். அப்படியான ஒரு வரலாற்றுச் சின்னமாக கிராண்ட் டிரங்க் சாலை  இருக்கிறது. நான்கு நூற்றாண்டுகளாக இந்தச் சாலையின் வழியே எத்தனை பேர் கடந்து சென்றனர். எவ்வளவு முக்கியச் சம்பவங்களுக்கு இந்தச் சாலை சாட்சியாக இருந்தது என்பது வியப்பு ஏற்படுத்தக்கூடியது. இந்தச் சாலை பெர்சிய, கிரேக்கப் படைகளைப் பார்த்து இருக்கிறது. மங்கோலியர்களும் ஹீனர்களும் இதன் வழியாகச் சென்று இருக்கின்றனர். மொகலாயர்கள் இந்தியாவுக்குள் இந்தச் சாலை வழியாகவே வந்து சேர்ந்தனர். சாலை என்பது பயணிகள் பயணம் செய்வதற்காக மட்டும் இல்லை. அதன் வழியே மிக முக்கியமான வணிகப் பொருட்களான சீனப் பட்டு, அரேபிய வாசனைப் பொருட்கள், காபூல் மது, கலைப்பொருட்கள் ஆகியவை பாடலிபுத்திரத்தில் உள்ள சந்தைக்குக் கொண்டுவரப்பட்டன. மேலும், இந்தச் சாலையில் நடக்கும் குற்றங்களைத் தடுக்க காவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். குற்றத்தை விசாரிப்பதற்கு தனி நீதிபதிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர். சௌக்கீ எனப்படும் ஓய்வு விடுதிகள் வழி நெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்தன. சுங்கச் சாவடிகள் அமைத்து வரி வசூல் செய்யப்பட்டது. சாலை எந்த நகரத்தை நோக்கிச் செல்கிறது என்பதை அடிப்படையாக வைத்து சுங்க வரி வசூலிக்கப்பட்டது.

தொடரும் பயணம்...