ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

'எப்படியாவது காப்பாத்திடுங்க...'

துடித்து அடங்கிய தோழர்

##~##
'எப்படியாவது காப்பாத்திடுங்க...'

''தூங்குறதே உங்களுக்குப் பிடிக் காதே..கொஞ்ச நேரம் தூங்கச் சொன்னாலும் மக்கள் பிரச்னை இருக்குன்னு சொல்லிட்டு ஓடு வீங்களே.. இப்போ எல்லோரும் வந்திருக்காங்க. நீங்க எழுந்திருக்காம படுத்திருக்கீங்களே...'' என்று பெருங்​குரலெடுத்து கவிதா கதற, அங்கிருந்த ஒட்டுமொத்தக் கூட்டமும் கலங்கிப்போனது. 

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மோகன்ராஜ். ஈரோடு, கருங்கல்​பாளையத்தில் பாட்டாளிகள் படிப்பகம் என்ற நூலகத்தை நடத்தி வந்தார். கடந்த 26-ம் தேதி, படிப்பகத்துக்கு உள்ளே புத்தகமும் கையுமாகவே கொடூரமாக வெட்டிச் சாய்க்கப்​பட்டார் மோகன்ராஜ்.

யார் இந்த மோகன்ராஜ்?

'எப்படியாவது காப்பாத்திடுங்க...'

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து தியாகு விலகியதும், மோகன்ராஜ் பொதுச் செயலாளர் ஆனார். இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு தமிழ்மொழி, புகழேந்தி என இரண்டு குழந்தைகள். சில மாதங்களுக்கு முன், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தட்டி​யை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கிழித்தபோது, அவர் வீட்டு வாசலில் 'மலம் வெளியேறினால் மனிதனுக்கு நல்லது. காங்கிரஸ் வெளியேறினால் தமிழனுக்கு நல்லது’ என்று போஸ்டர் ஒட்டியவர். ''தமிழ் உரிமைக்காக எங்கு போராட்டம் நடந்​தாலும் அங்கே மோகன்ராஜும் இருப்பார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சாதி ஒழிப்புக் கொள்கைக்காகவும் போராடியவர். இளை​ஞர்களுக்குப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த, பாட்டாளிகள் படிப்பகத்தை நடத்தினார்.ஒரு காலத்தில் ரவுடிகள் நிறைந்த பகுதி என்று சொல்லப்பட்ட கருங்கல்பாளையத்தை, உழைக்கும் மக்கள் மிகுந்த பகுதியாக மாற்றி​யது மோகன்ராஜ்தான்'' என்று அவரது பெரு மைகளைச் சொல்லும் சிலர், மோகன்ராஜ் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்தும் பேசினர்.

'எப்படியாவது காப்பாத்திடுங்க...'

''எங்களோடு போராட்டக் களத்தில் இருந்தவர் சங்கர். அவரது மகன் உமேஷ் படிப்​புக்கு மோகன்ராஜ்தான் நிதி திரட்டிக் கொடுத்தார். சங்க​ரின் நடவடிக்கைகள் சில வருடங்​களாக மாறியது. மது,

கஞ்சா, கட்டப்பஞ்சாயத்து என சங்கரின் பாதை திரும்பியது. எனவே, சங்கரை இயக்கத்தின் பொறுப்பில் இருந்து நீக்கினார் மோகன்ராஜ். ஆனாலும், சங்கரை எப்படியாவது திருத்தி நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என மோகன்ராஜ் முயற்சித்தார். அந்த சங்கரே இவருக்கு எமனாக வருவார் என்று நாங்கள் நினைக்​கவே இல்லை'' என்கிறார் தமிழக தொழிலாளர் முன்னணி அமைப்​பாளர் விஜயகுமார்.

'எப்படியாவது காப்பாத்திடுங்க...'

சம்பவம் நடந்தபோது உட​னிருந்த செல்லமுத்து என்பவரிடம் பே​சினோம். ''ராத்திரி ஏழு மணி இருக்கும். நானும் தோழர் மோகன்ராஜும் படிப்பகத்துல இருந்தோம். சங்கர், அவரோட பையன் உமேஷ், அவரோட நண்பர் ஒருத்தர்னு மூணு பேரு வந்தாங்க. 'வாங்க சங்கர், எப்படி இருக்கீங்க’னு தோழர் கேட்டாரு. அதுக்கு சங்கர், 'நீ என்ன பெரிய .....டா’னு கெட்ட வார்த்தையில திட்ட ஆரம்பிச்சாரு. அடுத்த வார்த்தை தோழர் பேசுறதுக்குள்ள, மூணு பேரும் மறைச்சு வச்சிருந்த கத்தியை எடுத்து சரமாரியா குத்தினாங்க. நான் தடுத்தேன். என்னைக் கீழே தள்ளிவிட்டுட்டாங்க. ரத்தம் சொட்டச் சொட்ட சரிந்து கிடந்த தோழரை ஆம்புலன்ஸ்ல தூக்கிட்டுப் போனோம். 'என்னை எப்படியாவது காப்பாத்திடுங்க. இன்னும் மக்களுக்காக நிறையப் போராட வேண்டி இருக்கு’னு ஆம்புலன்ஸ்ல போறப்ப என் கையைப் பிடிச்சுட்டு சொன்னாரு. அப்படியே அவரு உசிரு போயிடுச்சுங்க'' என்று கதறி அழுதார்.

மோகன்ராஜ் உடலைப் பார்த்து அவரது குழந்தைகளும், மனைவியும் கதறியது கூடி இருந்த அனைவரையும் உலுக்கியது. ''அப்பா.. அப்பா.. எழுந்திருங்கப்பா..'' என்று மோகன்ராஜ் உடலைப் பிடித்து அழுத சிறுவன் புகழேந்திக்கு யாராலும் ஆறுதல் சொல்ல​ முடியவில்லை.

''கருங்கல்பாளையத்துல மோகன்ராஜ் செல்​வாக்கு மிகுந்தவராக இருந்தார். சங்கர் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்டார். சங்கரிடம் இருந்த ஆட்களிடம் பேசி அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்தினார். இதெல்லாம் சங்கரின் கோபத்தை அதிகமாக்கியது. சங்கருக்கு சில அரசியல்வாதிகளும் பின்புலத்தில் இருந்தனர். போலீஸ் விசாரித்தால் உண்மை வெளிவரும்''என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஈரோடு மாவட்ட எஸ்.பி. பொன்னியிடம் பேசினோம். ''சங்கர், உமேஷ், அவருடைய நண்பர் மாதேஸ்வரன் ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் சரணடைந்து விட்டனர். சங்கர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்திருக்கிறார். அதில் மோகன்ராஜ் தலையிட்ட​தாக சொல்கிறார்கள். அந்தக் கோபத்தில் கொலை நடந்து இருக்கிறது. அரசியல் காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. கொலை​யாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்வோம். குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது'' என்றார்.

அப்பாவை இழந்து கதறும் குழந்தைகளின் கண்ணீருக்கு சட்டம் என்ன பதில் சொல்லும்?

- வீ.கே.ரமேஷ், படங்கள்: ரமேஷ் கந்தசாமி