கொதிக்கும் புதுச்சேரி
##~## |

''கடும் நிதிப் பற்றாக்குறையால் புதுச்சேரி அரசுத் தள்ளாடி வரும் நிலையில், வாரியத் தலைவர் பதவிகளை முதல்வர் என்.ரங்கசாமி தலைமையிலான அரசு வாரி வழங்குகிறது'' என்று அரசியல் மற்றும் அதிகாரிகள் மட்டத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் எரிச்சலோடு சொல்கிறார்கள்.
புதுச்சேரி மாநிலத்தில் இப்போது நிலவிவரும் நிதிநெருக்கடி குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம், ''மத்திய அரசு மாநிலத்துக்கு ஒதுக்கும் நிதியில் ஒரு பகுதியை மானியமாகவும் மற்றொரு பகுதியைக் கடனாகவும் ஒதுக்கும். புதுச்சேரி சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்று வரை நாம் பெற்ற கடன் தொகை மட்டும் 4,500 கோடி. வட்டி மட்டுமே 400 கோடிகளுக்கு மேல் செலுத்துகிறோம். 2006-ம் ஆண்டு வரை 2,300 கோடி மட்டுமே கடனாக இருந்தது. இன்றோ 4,500 கோடியைத் தாண்டி விட்டது. இதற்கு முதல்வர்

ரங்கசாமியே முழுக்காரணம். திட்ட அறிக்கைகளைக் கொடுத்து, வங்கிகளிடம் கடன் வாங்கி இருக்கிறார். ஆனால், அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவில்லை.
நான் முதல்வராக இருந்தபோது பல தனியார் பெட்ரோல் நிறுவனங்கள் 200 கோடி ரூபாய்க்கு வரி பாக்கி வைத்திருந்தன. தயவு தாட்சண்யம் பார்க்காமல், அவர்களிடம் வரி வசூல் செய் தோம். வரி கட்டாதவர்களின் நிறுவனங்களுக்கு சீல் வைத்தோம். ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். சீல் வைக்கப்பட்ட பெட் ரோல் நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு விட்டன. அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி மட்டுமே 116 கோடி ரூபாய். மாநிலத்தில் அனைத்துத் துறைகளிலும் வரி வசூலை முறைப்படுத்தினாலே ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் கிடைக்கும்'' என்று ஆலோசனை சொன்னார்.
புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளரான அன்பழகன், ''ஒரு மாநிலமே நிதிப் பற் றாக்குறையால் ஸ்தம்பித்துக்கொண்டு இருக் கும்போது, அதுபற்றி கவலையே இல்லாத வராகதான் என்.ஆர். செயல்படுகிறார். ஒவ்வொரு துறைக்கும் அதிகாரிகள் இருக் கும்போது வாரியத் தலைவர்கள் எதற்கு? புதிதாக நியமிக்கப்பட்டவர்களையும் சேர்த்து இப்போது 25 வாரியங்களுக்குத் தலைவர்கள் உள்ளனர். சாராய வியாபாரிகளுக்கும் மோசடி செய்பவர்களுக்கும்தான் வாரியத் தலைவர் பதவி களை என்.ஆர். வழங்கியுள்ளார். 20 லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம்

ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டுதான் பதவிகளை வழங்கியுள்ளார். நிதி நெருக்கடியின்போது அரசின் செலவுகளைக் குறைப்பதுதான் நல்லாட்சிக்கு உதாரணம். ஆனால், என்.ஆரோ செலவுகளை ஏற்றிக்கொண்டே செல்கிறார். வாரியத் தலைவர்களை நியமித்ததே ஒரு தண்டச் செலவு. இதில் அவர்களுக்கு மாத ஊதியத்தையும் கொடுத்து, வாகன வசதிகளையும் ஏற்படுத்தி, அவர்களுக்கு உதவியாக தலா ஐந்து ஊழியர்களையும் நியமித்துக்கொள்ள அனுமதி கொடுப்பது எல்லாம் ஜீரணிக்கவே முடியாதவை'' என்று ஆவேசப்பட்டார்
நிதிப் பற்றாக்குறை குறித்து புதுச்சேரி நிதித் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், ''அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது. அப்படி வழங்க வேண்டும் என்றால், மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதியையும் மத்திய அரசு அதிகப்படுத்தித் தந்திருக்க வேண்டும். ஆனால், எப்போதும் வழங்கும் நிதியைத்தான் வழங்கி இருக்கிறது. அதிலும் 4,500 கோடி ரூபாய் கடனில் 400 கோடி ரூபாயை வட்டித் தொகையாகப் பிடித்துக் கொண்டுதான் நிதியை கொடுத்துள்ளது.
முன்பு, மத்திய அரசுடனான கூட்டுக் கணக்கில் இருந்ததால், வேண்டிய நேரத்தில் பணத்தைச் செலவு செய்து கொண்டு இருந்தோம். அதனால், எந்த நிதி நெருக்கடியும் ஏற்படவில்லை. 2007-ம் ஆண்டில் இருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு என்று தனி வங்கிக் கணக்கு வேண்டும் என்று என்.ஆர். பெற்றுக்கொண்டார். எப்போதும் 70 சதவிகிதத்தை மானியமாகவும் 30 சதவிகிதத்தைக் கடனாகவும் மத்திய அரசு தரும். தனிக்கணக்குத் தொடங்கியதில் இருந்து 30 சத விகிதத்தை மானியம் என்றும் 70 சதவிகிதத்தைக் கடன் என்றும் மாற்றிவிட்டது. அதனால்தான் இன்று மத்திய அரசுக்கு 4,500 கோடி ரூபாய்க்குக் கடன்பட்டுள்ளோம். போதாக்குறைக்கு 25 வாரியத் தலைவர்களை வேறு நியமித்து விட்டார். இவர்களால் ஆண்டுக்கு மூன் றரைக் கோடி ரூபாய் அரசுக்கு வீண் செலவு'' என்றார் அவர்.
இதுதொடர்பாக, என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலனிடம் பேசினோம். ''காங்கிரஸில் இருந்து என்.ஆர். வெளியேறியபோது மாநில முதல்வராக பொறுப்பேற்ற வைத்தியலிங்கம் கடனாகப் பெற்ற தொகை மட்டுமே 2,000 கோடிக்கு மேல். காங்கிரஸ் வாங்கிய கடனுக்கு எல்லாம் நாங்கள் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? நிதி நெருக்கடியைச் சமாளித்து வருகிறோம். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை வாரியத் தலைவர்கள் மூலம் வெளிக்கொண்டு வருகிறோம். அது எப்படித் தவறாகும்? என்.ஆரைப் பொறுத்தவரை கட்சியின் கடை நிலைத் தொண்டனும் பதவிக்கு வர வேண்டும் என்பார். காங்கிரஸில் உள்ள தலைவர்கள் இதை விரும்பவில்லை'' என்றார்.
நிதி நெருக்கடியில் இருந்து புதுச்சேரியை மீட்டெடுப்பாரா ரங்கசாமி?
- நா.இள.அறவாழி, படங்கள்: ஜெ.முருகன்