குடியாத்தம் குபீர்
##~## |

'குடியாத்தம் நகராட்சியின் எல்லாக் கழி வுகளும் எங்கள் ஏரியில் கலக்கிறது. ஆடு, மாடுகளைப் பலிவாங்கி, மனி தர்களுக்கு எண்ணற்ற நோய்களைப் பரப்பும் இந்த ஏரியைச் சுத்தப்படுத்தவில்லை என்றால், போராட் டத்தில் குதிப்போம்'' என கொந்தளிக்கிறார்கள் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அம்மணாங்குப்பம் மக்கள்.
என்னதான் பிரச்னை?
அம்மணாங்குப்பம் ஏரிப்பாசன தலைவர் விஜயகுமார் கொதிப்புடன் பேசினார். ''இங்கு 260 ஏக்கர் பரப்பளவில் ஏரி இருக்கிறது. ஒரு காலத்தில் குடியாத்தம் பகுதிக்குத் தண்ணீர் தரும் ஏரியாக இது இருந்தது. இப்போது, கழிவுநீர் குட்டையாக மாறிவிட்டது. இந்தப் பகுதியில் மட்டும் சுமார் 5,000 பேர் வசிக்கிறார்கள். ஏற்கெனவே, இந்தக் கழிவு நீரைக் குடித்து 40 ஆடுகளும், ஐந்து பசு மாடுகளும் இறந்து விட்டன. இது மட்டுமல்ல... ஏரி நீரை நம்பி வசிக்கும் கொக்கு, நீர்க்காகம், காடை, நாரை போன்ற

பறவைகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. வாரத்துக்கு 50 பறவைகளாவது இறந்து ஒதுங்குகின்றன.
ஏரியில் சாக்கடை நீர் கலப்பதற்குக் காரணம், குடியாத்தம் நகராட்சிதான். இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை இந்தப் பகுதி மிகவும் சுத்தமாக இருந்தது. நகராட்சியின் கழிவு நீரை இந்த ஏரியில் கலக்க ஆரம்பித்த பிறகே சுகாதாரம் சீரழிந்தது. 50 வருடங்களுக்கும் மேலாக, நகரின் கழிவு நீரை பாலாற்றில்தான் விட்டனர். இப்போது, கழிவு நீரை இந்த ஏரிக்குத் திருப்பி விட்டு இருக்கிறார்கள். இதுபற்றி, நகராட்சியில் புகார் கொடுத்தோம். நகராட்சி அதிகாரிகள் இந்தப் பகுதியை எட்டிக்கூட பார்க்கவில்லை. எங்கள் பகுதி நகராட்சி எல்லையில் வரவில்லை என்று காரணம் சொல்கிறார்கள்.

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கரிடம் புகார் கொடுத்தோம். அவரும் எங்களைக் கண்டுகொள்வதாக இல்லை. சென்னையில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் கொடுத்தோம். அதிகாரிகள் சிலர் எட்டு மாதங்களுக்கு முன் ஏரிப் பகுதிக்கு வந்தனர். தண்ணீரை

சோதனை செய்து 'இது மிகவும் அபாயகரமான தண்ணீர். கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால், யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. உள்ளூர் நகராட்சி முதல் முதல்வரின் தனிப்பிரிவு வரை எல்லா இடத்திலும் புகார் கொடுத்து முட்டி மோதிப் பார்த்து விட்டோம். ஆனால், ஒரு முன்னேற்றமும் இல்லை.
இந்த இரண்டு ஆண்டுகளில் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. எப்போதும் துர்நாற்றம் வீசுகிறது. மழைக் காலத்தில் நிலைமை இன்னும் மோசம். இரண்டு மாதங்களுக்கு முன், நான்கு குழந்தைகள் டெங்குவால் பாதிக்கப்பட்டன. அதற்கு இந்த ஏரியில் உற்பத்தியான கொசுக்கள்தான் காரணம். நிலத்தடி நீர் மிகவும் மோசமாகி வருகிறது. அடிக்குழாயில் வரும் நீரால், உடம்பில் அரிப்பு ஏற்படுகிறது. கால்நடைகள் அந்த நீரைக் குடித்ததும், மயங்கிப் படுத்து விடுகின்றன. மலேரியா காய்ச்சல் முதல் எல்லா நோய்களும்

மனிதர்களைத் தாக்குகின்றன. பக்கத்தில் இருக்கும் வயல், தென்னந்தோப்பு எல்லாம் இந்தக் கழிவு நீரால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பகுதியில் குழந்தைகள் அதிகமாக இருக்கிறார்கள். தவறுதலாக ஏரிக்குள் விழுந்து விட்டால், கண்டிப்பாகப் பிழைக்க முடியாது. ஏழு அடி ஆழத்துக்கு சேறும் சகதியுமாக இருக்கிறது. எந்த உயிரும் இந்த ஏரியால் பலியாகக் கூடாது. அதுக்கு இனிமேலாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த சேகர், ''நாங்களும் எத்தனை நாள்தான் மனு கொடுத்துக்கொண்டே இருப்பது? அரசு அதி காரிகள் சும்மா பேருக்கு வந்து பார்த்துவிட்டு போகிறார்கள். ஆனால், நடவடிக்கை எடுத்த மாதிரி இல்லை. இனியும் இதே நிலை நீடித்தால், நாங்கள் கடுமையான போராட்டங்களில் இறங்குவோம்'' என்று உணர்ச்சிவசப்பட்டார்.
குடியாத்தம் நகராட்சித் தலைவர் அமுதா சிவபிரகாசத்திடம் பேசினோம். ''இன்னும் ஆறு மாதங்களில் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் சுருக்கமாக.
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர், ''இதுகுறித்து எந்தப் புகாரும் எனது பார்வைக்கு வரவில்லை. எனினும் விசாரிக்கிறேன். பொதுமக்களின் நலன் மிகவும் முக்கியம்'' என்று உறுதி அளித்தார்.
வேறு ஏதேனும் விபரீதம் நடக்கும் முன் விரைவில் நடவடிக்கை தேவை!
- கே.ஏ.சசிகுமார்
படங்கள்: கா.முரளி