''தளபதியின் பாசமலரே!''
##~## |

ஜனவரி 25-ம் தேதி... தமிழ் மொழியை மீட்க தன் உயிர் கொடுத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம். தி.மு.க. சார்பாக தஞ்சை கொண்டிராஜபாளையத்தில் நடந்த கூட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டதற்கு, அ.தி.மு.க. சார்பில் தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர் ரோட்டில் நடந்த கூட்டத்தில் கடும் கண் டனத்தைத் தெரிவித்தனர்.
முதலில் பேசிய அ.தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் புஷ்பவேணி, ''தமிழைக் காக்க தனது தேக்கு மர தேகங்களை தீயில் இட்டு கொளுத்தியவர்களுக்கு வீரவணக்க நாள் இன்று. 1965-ல் வேகம் எடுத்த மொழிப்போருக்கு அறிஞர் அண்ணாதான் காரணம். மொழிப்போரில் உயிரைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அண்ணாவின் வழி நிற்கும் அ.தி.மு.க. என்ற ஒரே கழகத்துக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. ஆனால், கனிமொழி அக்காவை அனுப்பி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்தச் சொல்லி இருக்கிறார் கருணாநிதி. அவருக்கு வீரவணக்க நாள் கூட்டம் நடத்த என்ன தகுதி இருக்கிறது? அவர் கலந்துகொள்ளும் கூட்டத்துக்கு என்ன ஃப்ளெக்ஸ் வைத்திருக்கிறார்கள் தெரியுமா? 'பெண்ணின தலைவியே’, 'பகுத்தறிவு புதல்வியே’ என்று எழுதி இருக்கிறார்கள். கேவலமாக இருக்கிறது. மாநாடு என்ற பெயரில் மாண்புமிகு முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல் வரிசையில் அமர்ந்து நமீதாவின் நடனம் பார்த்தவர். அவர் எல்லாம் தமிழைப்பற்றி, கலாசாரத்தைப்பற்றி பேசவே அரு கதை கிடையாது'' என்று அரை மணி நேரத்துக்கு நான் ஸ்டாப்பாக திட்டித் தீர்த்தார்.

அடுத்து மைக் பிடித்த அமைச்சர் வைத்திலிங்கம், ''அண்ணா காலத்தில் இருந்த தி.மு.க. யாரும் விரல் நீட்டி பேச முடியாத அளவுக்கு இருந்தது. அதற்குப் பிறகு, தி.மு.க-வில் கருணாநிதி என்ற நச்சுப் பாம்பு உள்ளே நுழைந்தது. 'தமிழ், தமிழ்’ என்று சொல்லி தமிழை வைத்து அவரது குடும்பம் வளர்ந்ததே தவிர, தமிழை வளர்க்க ஒன்றுமே செய்யவில்லை. தமிழுக்கு என்றே தனிப் பல்கலைக்கழகத்தை அமைத்தவர் புரட்சித் தலைவர். தலைவர் ஆரம்பித்தார் என்ற ஒரே காரணத்துக்காக அந்தத் தமிழ் பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்காதவர் கருணாநிதி. கரந்தை தமிழ்ச் சங்கத்தில் கருணாநிதி வாழ்நாள் உறுப்பினர். அதற்கென ஒரு பைசா கொடுத்தது இல்லை. இப்போது அம்மாதான் அதற்கென 75 லட்ச ரூபாய் கொடுத்து இருக்கிறார். மக்களை ஏமாற்றுவதற்கு கனிமொழியை விட்டு நாடகம் நடத்துகிறார் கருணாநிதி'' என்று போட்டுத் தாக்கினார்.
மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்களோ இல்லையோ... அக்கப்போர் நன்றாகவே நடந்தது.
- எம்.புண்ணியமூர்த்தி
''தளபதியின் பாசமலரே!''

கருணாநிதி இல்லை என்றாலும்கூட, அவரை மையப்படுத்துவதுதான் தி.மு.க. நிகழ்ச்சிகளில் வழக்கமாக இருந்து வந்தது. இந்த உச்சபட்ச மரியாதையை இப்போது ஸ்டாலினுக்கு வழங்கி புளகாங்கிதம் அடைந்தனர் தஞ்சை உடன்பிறப்புக்கள். ஜனவரி 25-ம் தேதி நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் இது பட்டவர்த்தனமாகவே வெளிப்பட்டது.
பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன், ஸ்டாலின் புகழ் பாடும் பாடல்களே அதிகம் ஒலித்தன. சிறப்பு விருந் தினரான கனிமொழியை வரவேற்கும் ஃப்ளெக்ஸ்களில் கூட, 'தளபதியின் பாசமலரே’ என்ற வாசகங்களோடுதான் வரவேற்பு கொடுத்து இருந்தனர். நிகழ்ச்சியில் மைக் பிடித்த பலரும் ஸ்டாலின் பெயரையே உரக்க ஒலித்தனர். மாவட்ட ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செல்வி திருஞானம், ''ராஜராஜ சோழனுக்கு மிகவும் உறுதுணையாக அவரது சகோதரி குந்தவை நாச்சியார் இருந்தார். அதுபோல, நம்முடைய தளபதிக்கு கனிமொழி திகழ்கிறார்'' என்றார்.
சிறப்புரையாற்றிய கனிமொழி, ''மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம் நடத்த தி.மு.க-வுக்கு மட்டுமே அருகதை இருக்கிறது. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் கூட, தமிழுக்கு ஆபத்து நேர்ந்தது. மொழிப்போர் தியாகிகளுக்கான கூட்டம் நடத்த எம்.ஜி.ஆருக்கே தகுதி இல்லாதபோது, இந்த அம்மாவுக்கு எப்படி தகுதி இருக்கும்? மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிற தேர்வுகளில் தமிழிலும் கேள்வித்தாள் தர வேண்டும் என தி.மு.க-தான் குரல் கொடுத்தது. மத்திய அரசில் உயர் அதிகாரிகளாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் இல்லை. இதனால்தான் ஈழப் பிரச்னை, காவிரிப் பிரச்னை போன்றவைகளில் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை'' என்றார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சை தொகுதியில் கனிமொழி போட்டியிடப் போவதாக பரபரப்பான பேச்சு றெக்கைக் கட்டி பறக்க தொடங்கியுள்ளது. டி.ஆர்.பாலு - பழனிமாணிக்கம் மோதலைத் தவிர்த்து, தி.மு.க. வெற்றி வாகை சூடவும் கனிமொழியை நிறுத்தும் எண்ணம் இருப்பதாக சொல்கின்றனர் தஞ்சை உடன்பிறப்புக்கள்.
- கு.ராமகிருஷ்ணன், படம்: கே.குணசீலன்