ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

தாயின் கண் எதிரில்... தண்ணீரில் மூழ்கி...

கிருஷ்ணகிரி சோகம்

##~##
தாயின் கண் எதிரில்... தண்ணீரில் மூழ்கி...

கிருஷ்ணகிரியில் தாய் மற்றும் பயிற்சியாளர்கள் முன்னி​லையில் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி பரிதாபமாக இறந்த சம்பவம் இதயத்தைக் கனக்கச் செய்தது! 

சென்னையைச் சேர்ந்த வேலாயுதம் - சிவானந்தா தம்பதியின் ஒரே மகள் தீட்ஷிதாஸ்ரீ. மருத்துவரான தன் கணவர் வேலாயுதத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது ஐந்து வயது மகள் தீட்ஷிதாஸ்ரீ உடன் கிருஷ்ண​கிரி ஆனந்த் நகரில் வசித்து வந்தார் சிவானந்தா. இவர், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஒப்பந்தப் பணியாளர்.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் தீட்ஷிதாஸ்ரீ-க்கு நீச்சல் பயிற்சி அளித்து வந்தார். விடுமுறை நாளான கடந்த 25-ம் தேதியும் வழக்கம்போல தன் மகளுடன் நீச்சல் குளத்துக்குச் சென்றார். லைஃப் ஜாக்கெட் அணிந்து லைஃப் கார்டுகள் முன்னிலையில்தான் நீச்சல் பழகினாள் சிறுமி. ஒரு கட்டத்துக்குப் பிறகு, நீந்த முடியாத அளவுக்கு சோர்ந்து போனாள். அதை உணராமல் நன்றாகப் பயிற்சி பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் இன்னும் கொஞ்ச நேரம் நீந்துமாறு தாய் சிவானந்தா சொல்ல, நீந்த முயன்றாள் தீட்ஷிதா. சோர்ந்து கிடந்த சிறுமியின் உடல் அதற்கு மேல் ஒத்துழைக்காமல் போகவே, திடீரென நீரில் மூழ்கி தண்ணீரைக் குடித்து இருக்கிறாள். அடுத்த நொடியே லைஃப் கார்டுகள் குளத்தில் குதித்து சிறுமியை மீட்டனர். ஆனாலும் அவள் மயங்கியே கிடந்தாள். உடனே, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வேகமாக இத்தனை நட வடிக்கைகள் எடுத்தும், சிறுமியைக் காப்பாற்ற முடியவில்லை. அதிக தண்ணீரைக் குடித்ததால், மூச்சுத்திணறி குளத்​திலேயே தீட்ஷிதாஸ்ரீயின் உயிர் பிரிந்து விட்டதாகத் டாக்டர்கள் கூறினர்.

தாயின் கண் எதிரில்... தண்ணீரில் மூழ்கி...

கண் எதிரில் மகளைப் பறிகொடுத்த சோகத்தில், ''என் ஆசைக்காக நீந்தச் சொல்லி இப்போது என் செல்வத்தைப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறேனே...'' என்று சிவானந்தா கதறி அழுத காட்சி அனை​வரையும் உலுக்குவதாக இருந்தது.

தாயின் கண் எதிரில்... தண்ணீரில் மூழ்கி...

சிறுமியின் மரணத்​துக்கு யார் பொறுப்பு? ''பெற்றோரின் எண் ணங்களையும் ஆசைகளையும் நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தத்​துக்கு இன்றைய குழந்தைகள் ஆளாவதுதான் இந்த மரணத்துக்குக் காரணம்'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

'ரோட்டரி - மாநகர் கிருஷ்ணகிரி’ சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன், ''குழந்தை தீட்ஷிதாஸ்ரீயின்

தாயின் கண் எதிரில்... தண்ணீரில் மூழ்கி...

இழப்பை எதைக்கொண்டும் ஈடுசெய்ய முடியாது. அந்தத் தாயும் நிச்சயமாக இப்படி ஒரு விபரீதம் நடக்கும் என்று யூகித்து இருக்க வாய்ப்பு இல்லை. ஆனாலும், நமது நிறைவேறாத ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் குழந்தைகள் மீது திணிக்கும் எண்ணம்தான் பல சமயங்​களில் இதுபோன்ற ஆபத்துக்களில் முடிகிறது. படிப்பு, போட்டிகள், மேடைகள், விளை யாட்டு என எதைத் தொட்டாலும் தங்கள் குழந்தைதான் முதலில் வரவேண்டும் என இன்றைய பெற்றோர் நினைக்​கிறார்கள். சாதனை புரியும் குழந்தைகள்தான் பெருமைக்கு உரியவர்கள் என்று நம்புகிறார்கள். குழந்தைகளை அன்பாக சொல்லியோ மிரட்டியோ சாதனைகளுக்காக தயார் செய்கிறார்கள். மிரட்​டுவதோ, அன்பாக சொல்வதோ இரண்டுமே தவறு​தான்.

குழந்தைகளிடம் இயல்பாக இருக்கும் ஆர்வத்தைக் கவனமாக வளர்த்து எடுப்பதே பெற்றோரின் கடமை. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். பக்கத்து வீட்டுக் குழந்தை வீணை வாசிக்கிறது என்பதற்காக நம் குழந்தையையும் வீணை வாசிக்கச் சொல்லி பாடாய்படுத்தக் கூடாது. ஒரு பெற்றோரைப் பார்த்து இன்னொரு பெற்றோர் பிஞ்சுகளின் மேல் பாரத்தைச் சுமத்துகிறார்கள். இது ஒரு தொற்று வியாதி கலாசாரம். இதன் சாதக, பாதகங்களைப்பற்றி எல்லாம் கவலையேபடாமல் பெரும்பாலான பெற் றோர் புகழுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். இந் தக் கலாசாரத்தால் இன்றைய குழந்தைகள் பல்வேறு மனத்தொல்லைகளுக்கு ஆளாகி​றார்கள். மேலும், இதுபோன்ற சூழல் குழந்தை​களை ஆரோக்கியமாக வளரவிடாமல் செய்யும். இன்னொரு பக்கம் பிஞ்சு நெஞ்சில் போட்டியையும் பொறாமையையும் வளர்க்கும். சில நேரங்களில், தீட்ஷிதாஸ்ரீ-க்கு நேர்ந்ததுபோல் மிகப்பெரிய விபரீதங்களும் நடக்கும். இதுபோன்ற உயிர் இழப்புகளுக்குப் பிறகாவது பெற்றோர் வர்க்கம் தங்கள் பார்வையை விசாலப்படுத்த வேண்டும். குழந்தைகளின் சுதந்திரச் சிறகுகளை எந்த வகை​யிலும் சுருங்கிடாமல் பார்த்துக்​கொள்ள வேண்டும். இல்லை என்றால், இதுமாதிரி சோகங்கள் தொடர்கதையாகி விடும்'' என்று எச்சரிக்கை விடுத்தார்.

பெற்றோர் படிக்க வேண்டிய பாடம் இது!

- எஸ்.ராஜாசெல்லம்