சேட்டிலைட் நிழல் யுத்தம்... சென்சார் சண்டை... கோலிவுட் மோதல்
'யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
##~## |
ஞாபகம் வருகிறதா’ - 'விஸ்வரூபம்’ படத்தில் வரும் பாடல் வரிகள் இவை. தடைகளைத் தாண்டி கமல் எப்படி வெல்லப்போகிறார் என்பதை தமிழகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. விஸ்வரூப விவ காரத்தில் திரைக்குப் பின்னால் நடக்கும் சில விஷ யங்கள் இங்கே...
பிரச்னைக்குக் காரணம், தி.மு.க. நெருக்கமா?
''சென்சார் போர்டில் அசன் முகம்மது ஜின்னா என்ற முஸ்லிம் ஒருவரே படத்தைப் பார்த்து ஓகே செய்து இருக்கிறார். அப்படி இருக்கும்போது படத்தை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்?’ என்று கமல் தரப்பில் கேட்கிறார்கள். இந்த ஜின்னா யார் தெரியுமா? கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் வளர்மதியை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்.
மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ-வான ஜவாஹிருல்லா, ''முஸ்லிம்களுக்கு எதிரானகாட்சிகள் 'விஸ்வரூபம்’ படத்தில் இருப்பதாக செய்தி வந்ததும் அதற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளி யிட்டோம். உடனே, கமல் சார்பில் என்னிடம் பேசியவர் ஜின்னாதான். 'படத்தின் டிரைலரைப் பார்த்து விட்டு எதிர்க்க வேண்டாம். கமல் பேசத் தயாராக இருக்கிறார்’ என்றார். படத்தை சென்சார் செய்வதோடு ஜின்னாவின் வேலை முடிந்து விட் டது. அவர் எதற்காக கமலுக்கு ஆதரவாகப் பேச வேண்டும்? அப்படிப்பட்டவர் எப்படி படத்தை சென்சார் செய்திருப்பார்?'' என்கிறார்.

தி.மு.க-வுடன் கமல் காட்டிய நெருக்கம்தான் விவ காரம் விஸ்வரூபம் எடுக்கக் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ''படத்தின் சேலம் உரிமத்தை உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருக்கிறார். சென்சார் போர்டில் தி.மு.க-வைச் சேர்ந்த ஜின்னா, ப.சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் கருணாநிதியோடு கமல் மேடை ஏறியது, இவற்றை எல்லாம் ஆளும் கட்சி ரசிக்கவில்லை. அதன்பிறகுதான், கமலுக்குப் பிரச்னைகளும் ஆரம் பம் ஆனது'' என்கிறார்கள்.
ஜின்னா என்ன சொல்கிறார்? ''எந்த மதத்தின் உணர்வும் புண்படுத்தப்படுவதை தணிக்கைத் துறை விதிமுறைகள் அனுமதிப்பது இல்லை. வழி காட்டும் முறைகளின்படிதான் தணிக்கை நடக்கிறது. சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கக்கூடிய வகை யிலோ, உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ, வக்கிரம் மற்றும் ஆபாசம் நிறைந்ததாகவோ காட்சிகள் இருப்பின், அவை நீக்கப்படுகின்றன. ஒரு படத்துக்கான தணிக்கை முறைகளில் அதில் பங்கு பெறும் உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானது. நான் என் கடமையில் இருந்து ஒரு போதும் தவறியது இல்லை, இஸ்லாத்துக்கு எதிராக மட்டுமல்ல, எந்த மதத்துக்கும் எதிரான தவறான உள்நோக்கம் கொண்ட சித்திரிப்புகளை பலமாகவே எதிர்த்து இருக்கிறேன்'' என்கிறார்.
சேட்டிலைட் நிழல் யுத்தம்!
'விஸ்வரூபம்’ சேட்டிலைட் உரிமம் முதலில் ஒரு டி.வி-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகுதான், டி.டி.ஹெச்-ல் 'விஸ்வரூபம்’ வெளியாகும் என்பதை கமல் அறிவித்தார். 'இதை நீங்கள் முன்பே சொல்லி இருந்தால், நாங்கள் இன்னும் விலையைக் குறைத்துக் கேட்டு இருப்போம்’ என்று டி.வி.

தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாம். விலையைக் குறைக்கச் சொல்லி பேரம் நடந்து இருக்கிறது. கமல் தரப்பிலோ, 'இதைவிட அதிக விலைக்கு வாங்க வேறு சேனல் தயாராக இருக்கிறது. உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விடுங்கள்’ என்று சொன்னதோடு, வேறு சேனலுக்கும் படத்தை விற்று விட்டாராம். இந்த நடவடிக்கை அந்த டி.வி. தரப்பை கொந்தளிக்க வைத்து விட்டதாம். ''சேட்டிலைட் உரிமத்துக்கான நிழல் யுத்தமே, 'விஸ்வரூபம்’ படத்துக்கு எழுந்த தடை'' என தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பகிரங்கமாகவே சொல்லி இருக்கிறார்.
'விஸ்வரூபம்’ பிரச்னை நீதிமன்றத்துக்குப் போனதும் நீதிபதி வெங்கடராமன் படத்தைப் பார்க்க முடிவு செய்தார். இதற்காக பிரசாத் ஸ்டுடியோவில் 'விஸ்வரூபம்’ ஸ்பெஷலாகத் திரையிடப்பட்டது. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களும் நீதிபதிகளுடன் படம் பார்த்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு அதிகாரிகளுடன் கமலைப் பேசச் சொன்னது நீதிமன்றம். அநேகமாக, இந்த இதழ் உங்கள் கைகளில் தவழும்போது நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கும்.
''நாங்கள் தேசத் துரோகிகளா?''
'விஸ்வரூபம்’ படத்துக்கு முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பை அடுத்து கமல் வெளியிட்ட அறிக்கையில், ''நியாயமான தேசப்பற்றுமிக்க முஸ்லிம் யாரும் இந்தப் படத்தைப் பார்த்தால் பெருமைப்படுவார்கள்'' என்று சொல்லி இருக்கிறார். இதுவும் முஸ்லிம் கூட்டமைப்பினரை கொதிக்க வைத்திருக்கிறது. ''சிறு குழு எனச் சொல்லி எங்களை தேசப்பற்று இல்லாதவர்களைப்போல் சித்திரித்து இருக்கிறார். கூடங்குளம் தொடங்கி தர்மபுரி கலவரம், எல் லையில் இந்திய வீரர்கள் தலை துண்டிக்கப்பட்ட விவகாரம் வரை குரல் கொடுக்கும் நாங்கள் தேசத் துரோகிகளா?'' என கேள்வி எழுப்பும் அவர்கள், ''படத்தில் ஹெலிகாப்டரில் இருந்து அமெரிக்கப் படை தாலிபான்களை சுடும் காட்சி வரும். அதில் அப்பாவியான பெண் ஒருவர் பலியாவார். இதற்காக அமெரிக்க வீரர்கள் பரிதாபப்படுவார்கள். தாலிபான்கள் அமெரிக்காவின் தாக்குதலுக்குத் தப்பி ஓடும் காட்சியில் மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு ஓடுவார்கள். அப்போது ஒரு தாலிபான், 'குடும்பத்தினரையும் அழைத்துக்கொண்டு தப்பிச் செல்லலாம்’ என்பார். அதற்கு இன்னொரு தாலிபான், 'அமெரிக்கர்கள் பெண்களை குழந்தைகளை கொல்ல மாட்டார்கள்’ என டயலாக் பேசுவார். இப்படி படம் முழுவதும் அமெரிக்காவுக்கு வக்காலத்து வாங்குவதுபோல காட்சிகளை அமைத்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது'' என்றனர்.
சினிமா மோதல்!
கமலுக்கு ஆதரவாக திரையுலகத்தினரும்அரசியல் கட்சியினரும் குரல் கொடுக்கின்றனர். ரஜினி, பாரதிராஜா, பார்த்திபன், அஜித் ஆகியோர் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பா.ம.க-வும் 'விஸ்வரூபம்’ படத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றன. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் அமீர் ''யாரும், தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு கருத்து தெரிவிக்கலாம்'' என்று சொல்லி இருப்பதை கோலிவுட் ரசிக்கவில்லை.
'கமலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு திரையுலகம் மௌனமாக இருப்பது ஏன்?’ என்று பாரதிராஜா கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு இன்னொரு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. ''ஈழத் தமிழர்களின் வலியைச் சொல்லும் 'காற்றுக் கென்ன வேலி’ படத்துக்கும் இதேபோல் தடை வந்த போது அந்தப் படத்தின் இயக்குநர் புகழேந்தி தங்கராஜும் தயாரிப்பாளர் வெள்ளையனும் மட் டுமே போராடினர். அப்போது, இந்த பாரதிராஜா எல்லாம் எங்கே போனார். மார்க்கெட் வேல்யூ உள்ள நடிகர்களுக்கு மட்டுமே குரல் கொடுப்பது அநியாயம்'' என்று குமுறுகிறது கோலிவுட்டின் ஒரு பிரிவு.
''இது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது!''
கமல் ரசிகர்களும் கருத்து சுதந்திரத்தை ஆதரிப் பவர்களும் சொல்லும் வாதம் இதுதான்...
''நடப்பு விஷயத்தை படமாக எடுக்கும்போது தாலிபான் தீவிரவாதிகளை வேறு மதத்தின் அடையாளமாக எப்படிக் காட்ட முடியும். ஆப்கானிஸ்தானில் நடக்கும் விவகாரத்தை இங்கே இருக்கிற முஸ்லிம்கள் தங்களோடு ஏன் தொடர்பு படுத்திக் கொள்கிறார்கள்? ஆப்கானிஸ்தான் மற்றும் தாலிபான் தீவிரவாதம் பற்றி எத்தனையோ ஆங் கிலப் படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தக் காட்சிகள் எப்படி அனுமதிக்கப்பட்டதோ, அதே அடிப்படையில்தான் இந்தப் படத்துக்கும் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. படத்தை தடை செய்வதைவிட, அந்தப் படத்தைப் பார்க்காமல் புறக்கணிப்பது அதைவிட பெரிய தண்டனைதான். அந்த வழியில்தான் முஸ்லிம்கள் படத்தை எதிர்த்து இருக்க வேண்டுமே தவிர, தடை செய்யச் சொல்வது சரி அல்ல. பேச்சுரிமையும் எழுத்துரிமையும் ஆங்கில அரசு பறித்ததால்தான், சுதந்திரப் போராட்டமே நடந்தது. அப்படிப்பட்ட தேசத்தில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது ஜனநாயகம் அல்ல'' என்கிறார்கள்.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நடக்கும் விஷயங்கள் என்ன அதிர்வலைகளை உண்டாக்கப்போகிறதோ?
- ஜூ.வி. டீம்