Published:Updated:

புலித்தடம் தேடி...

புலித்தடம் தேடி...

புலித்தடம் தேடி...

மார்ச் 24, 2002... 

##~##

ஆயுதப் போ ராட்டம் மெள்ள அடங்கி சமாதானச் சம்மதங்களில் அகிம்சையை ஈழம் பின்பற்றிய காலம். அன்றுதான் உயிருக்கும் உடலுக்கும் இடையேயான போரில் இருந்து மீண்டு, ஈழத்துக்குத் திரும்பினார் ஆண்டன் பாலசிங்கம். அவர் வந்து இறங்கிய இடம், இரணைமடு. அந்த இடத்தில் நான் இப்போது நிற்கிறேன்.

பாலசிங்கத்தோடு அவரது மனைவி அடேல் பாலசிங்கமும் கொழும்பு நார்வே தூதரகத்தைச் சேர்ந்த தாமஸும் வந்திருக்க, அவர்களை வரவேற்க பிரபாகரன், அவரது மனைவி மதி​வதனி, சூசை, நடேசன், தமிழ்ச் செல்வன் உள்ளிட்ட மூத்த புலி உறுப்பினர்களும் வந்திருந்தனர். பாலசிங்கம் மீது பிரபாகரன் எத்தகைய பாசத்தையும் மரியாதையையும் வைத்துள்ளார் என்பதை அடையாளப்படுத்தும் புகைப்படங்கள் அவை. புலிகளின் இணையதளங்கள் இவற்றை அந்தக்காலத்தில் பெருமையாக வெளியிட்டன. அத்தகைய படங்களை இன்று, சிங்கள அரசே காட்சிப்படுத்தி இந்த இடத்தில் வைத்துள்ளது. இரணைமடு என்ற இடத்துக்கு என்ன பெருமை தெரியுமா? பாலசிங்கம் வந்து இறங்கிய இடம், பிரபாகரன் அவரை வரவேற்ற இடம் என்பதை பெருமைக்குரிய வரலாற்றுச் சம்பவமாக அவர்களே சொல்லி இருக்கிறார்கள்.

புலித்தடம் தேடி...

1998-ம் ஆண்டின் இறுதியில் கடுமையான சிறுநீரகப் பிரச்னையில் பாதிக்கப்பட்டு இருந்தார் பாலசிங்கம். அவருக்குச் சிகிச்சை அளிக்க வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல நார்வே அரசாங்கமும் செஞ்சிலுவைச் சங்கமும் முயற்சித்தது. ஆனால், அப்போதைய சந்திரிகா அரசு கடுமையான நிபந்தனைகளைப் புலிகளுக்கு முன்வைக்க, பால சிங்கத்தையும் அவரது மனைவியையும் கடல் வழியாக தாய்லாந்துக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன். அங்கிருந்து தன் இங்கிலாந்து கடவுச் சீட்டின் மூலம் லண்டன் சென்றார். 'தாயகத் தேசத்தில் மீண்டும் நான், அதுவும் உயிரோடு; என்ற நிலையில் அடைந்த மகிழ்வுக்கு அளவே இல்லை’  என்று தன்னுடைய புத்தகத்தில் சொல்லும் அளவுக்கு, அப்போது பாலசிங்கம் நோய்வாய்ப்பட்டு ஆபத்தான நிலைமையில் இருந்தார்.

அவர் வெளிநாடுகளில் இருந்த மூன்றாண்டுகளில் சந்திரிகா ஆட்சியில் இருந்து ரணில் விக்கரமசிங்க ஆட்​சிக்கு இலங்கை மாறி இருந்தது. சமாதானக் காலமும் நடைமுறையில் இருந்தது. ஆனாலும், பாலசிங்கம் கொழும்பு வழியாக வருவதை புலிகள் விரும்பவில்லை. ஏனென்றால், சிங்கள அரசு மீது அவர்களுக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை. அதனால், நார்​வேயின் ஏற்பாட்டில் லண்டனில் இருந்து மாலத்தீவுக்கு வந்து, அங்கிருந்து மாலத்தீவின் கடல் விமானத்தில் இரணைமடு குளத்தில் வந்திறங்கினார். அந்த இரணைமடு குளம் இப்போதும் அப்படியே இருக்கிறது.

புலித்தடம் தேடி...

கிளிநொச்சியின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் குளம் அது. இதன் அருகே காடு தென்படுகிறது. அங்குதான் புலிகள் 1993-ம் ஆண்டில் விமான ஓடுதளத்தை அமைத்தனர். அது இப்போது ராணுவ வசம். அதைப்பற்றி கூறிய நண்பர், ''சீரமைப்பை காரணம் காட்டி நீர்த் தேக்க அளவை ராணுவம் குறைச்சிருச்சு. கிளிநொச்சிக்கே நீர்த் தேவை இருக்கு. அதைப் பூர்த்தி செய்யாம, யாழ்ப்பாண குடிநீர்த் தேவைக்கு இங்கே இருந்து நீர் கொண்டு போறதா அரசு சொல்லி இருக்கு. இது யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் சண்ட மூட்டிவிடும் வேல. இன்னுமும் இரணைமடு குளத்தைச் சுத்தியுள்ள இடங்கள ராணுவம் உயர் பாதுகாப்பு வளையங்களாகதான் வச்சிருக்கு'' என்றார்.

நான் சென்றிருந்தபோது குளத்தின் நீர்மட்டம் மிகக் குறைவாகத்தான் இருந்தது. அந்தக் குளம் அருகே ஒரு ராணுவச் சிற்றுண்டி, புத்தக் கோயில் ஆகியவை இருந்தன. குளத்தின் மேம்பாட்டு அலு வலகம் எல்லாம் ராணுவ அலுவலகமாக மாறி இருந்தது. துப்பாக்கி ஏந்திய ஆமியின் ஒரு ஆள், வந்து போகிறவர்களை கவனித்துக்கொண்டு மட்டும் இருக்கிறார்.

புலித்தடம் தேடி...

இரணைமடு குளத்தைப் பார்த்துவிட்டு நண்பரும் நானும் கிளம்பினோம். அங்கே வரும் வழியில் ராணுவ முகாம்கள் இருந்தன. அதன் முன் அரண்களில் புலிகளின் பீரங்கிகள், ஆட்லறி தாக்கிகள் எல்லாம் வைக்கப்பட்டு இருந்தன. ஆனால், அங்கு எல்லாம் நின்று பார்க்கக் கூடாது; போகிற போக்கில் பார்வையில் பதிவு செய்துகொள்ள வேண்டியதுதான். ராணுவத்தின் கடைநிலை ஆட்கள் பனங்கன்றுகளை ஊனிக்கொண்டு இருந்தனர். போரில் பல ஆண்டுகள் பழைமை கொண்ட பனைமரங்களை குண்டுகளாலும் செல்களாலும் அழித்த ராணுவம், 'தேசிய மர நடுகைத் திட்டத்தின்’ கீழ் பனங்கன்றுகளை நடுகிறது. இது சிங்களத்தில் 'தெயட செவன’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கென்று பனை  அபிவிருத்திச் சபையும் அமைக்கப்பட்டு உள்ளது. இது, அழித்த மரங்களை நடும் திட்டமல்ல; இதன் நோக்கம் பனை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு

புலித்தடம் தேடி...

சந்தைப்படுத்துவதுதான். இதைப்பற்றி கொழும்பில் இருக்கும் நண்பர் ஒரு நிகழ்வை குறிப்பிட்டு இருந்தார். 'பனை மரத்தை சிங்கள தேசிய அடையாளமாகக் காட்டுவதற்கு கொழும்பு கடற்கரையில் முழு பனை மரத்தை அப்படியே கொண்டுவந்து வைத்தனர். அது இறந்து விட்டது. இப்போது முழு தென்னை மரத்தை கொண்டு வந்து வைத்து உள்ளனர்’ என்றார். அப்படியான மரங்களின் பிடிப்புக்கு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளதை நானே கொழும்பில் கண்டேன். அந்த மரங்களும் காய்ந்து சாகும் நிலைமையில்தான் இருந்தன. ராஜபக்ஷே அரசுக்கு தேவைஎல்லாம், 'இலங்கை மண்ணில் தன் அரசு நினைப்பதைதான்  இயற்கையுமே செய்தாக வேண்டும்’ என்பதுதான்.

இப்படியான சம்பவங்களை நானும் நண்பரும் பேசிக்கொண்டே வர, இரணைமடு சந்தி வந்தது. அங்கும் ராணுவத்தின் வெற்றிச்சின்னம் ஒன்று உள்ளது. அந்த வெற்றிச்சின்னத்தின் சுவற்றில் குண்டு பாய்ந்து சுவர் பிளந்துள்ளதைப் போன்றும், பிளந் துள்ள இடுக்கில் சிங்கள தேசிய மலரான 'நீல அல்லி’ உதித்தது போன்றும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்தியப் படைகளை எதிர்த்துப் போரிட்ட மாலதி 1987-ல் மரணம் அடைந்தார். இவரே புலிகளின் முதல் பெண் மாவீரர். மாலதியின் நினைவாக இரணைமடுச் சந்தியில் ஒரு நினைவிடத்தை புலிகள் அமைத்து இருந்தனர். அந்த நினைவிடத்தைப்பற்றி நண்பரிடம் கேட்டேன். அவர் காட்டிய இடத்தில், அப்படி ஒரு நினைவிடம் இருந்ததற்கான அடை யாளமே இல்லை. அந்தச் சந்தியில் இருந்து சாலையைக் கடக்க... போலீஸ்காரர் நிறுத்தினார். அப்போதுதான் கவனித்தேன், தலைக்கவசத்தை அணியாமல் நான் கையில் வைத்திருந்ததை. ஆம்!  இலங்கைச் சட்டப்படி இரு சக்கர வாகனத்தில் பயணிக்க கூடிய இருவருமே தலைகவசம் அணிய வேண்டும். அரை மணி நேரம் நிற்க வைத்து, பிறகு போக அனுமதித்தார் அவர்.

வண்டியில் போகும்போது நண்பர், 'தமிழீழ வாகனச் சட்டம்’ பற்றி கூறினார். ''இலங்கைச் சட் டப்படி 'இவ்வளவு கி.மீ. வேகம்’ என்ற கட்டுப்பாடு உள்ள இடத்தில் எவ்வளவு வேகம் போனாலும் ஒரே அபராதம்தான். ஆனால், புலிகளிடம் அப்படி இல்லை, ஒவ்வொரு கி.மீ. வேக அதிகரிப்புக்கும் தனித் தனியாக அபராதம் விதிப்பார்கள். ஒரு முறை இலங்கை நீதிபதி ஒருவர் குடித்துவிட்டு அதிவேகத்தில் வாகனத்தை செலுத்தியுள்ளார். அந்த வாகனத்தை புலிகளின் வாகனப் பிரிவு போலீஸார் நிறுத்தி அபராதம் விதித்துள்ளனர். உடனே அவர், தமிழ்ச்செல்வனுக்கு அழைத்து முறையிட, 'நானே அவ்விடத்தில் வேக​மாகச் சென்றதற்காக அபராதம் செலுத்தி உள்ளேன்’ என்று கூறியுள்ளார். நீதிபதி, 'கட்ட முடியாது’ என்று சொல்ல... 'இல்லை என்றால், நீங்கள் போக முடியாது’ என்று கூறியுள்ளார். 'உங்களிடம் பணம் இல்லை என்று சொல்லுங்கள். நான் தருகிறேன். ஆனால், கட்ட முடியாது என்று

புலித்தடம் தேடி...

பிடிவாதம் பிடித்தால், நீங்கள் போக முடியாது. நான் இதில் தலை​யிட முடியாது’ என்று கூறிவிட்டார் தமிழ்ச்செல்வன். பணத்தைச் செலுத்திய பிறகுதான் சென்றுள்ளார் நீதிபதி. இந்தக் கடுப்பில் அதே நீதிபதி ஒரு வழக்கில் பிரபாகரனுக்கு கடுமையான தண்டனைகள் விதித்துள்ளார்’ என்று சொல்லிச் சிரித்தார் நண்பர். அதற்குள், நண்பர் ஒருவரின் வீட்டை அடைந்​தோம். நல விசாரிப்புகளுக்குப் பிறகு இப்போதைய நிலைமைகளை அவர் குறிப்பிட்டார். ''எல்லோரும் சமாதானப் போர், பொருளாதாரப் போர் என்று எது எதோ சொல்றாங்கள். ஆனால், உண்மையில் இங்கு நடந்துக்கொண்டு இருப்பது கலாசாரப் போர். அனுராதபுரம் என்பது சிங்கள கலாசார நகரம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இப்போ நீங்க வந்த சந்திப் பக்கம் போருக்கு முன்ன 'பாண்டியன் ஐஸ்கிரீம் கடை’ இருந்தது. அவ்விடம் இன்னும் சில ஆண்டுகளில் சிங்கள கலாசார இடமாக மாறும். அனுராதபுரத்துல இருந்து கற்களை இங்க கொண்டுவந்து போட்டிருக்காங்க. அதில் கழிவு நீர ஊத்தறது என் கண்கூட பாத்திருக்கன். கழிவு நீர ஊற்ற ஊற்ற அது பழைய கல்போல ஆகும். அதன் பின் ஆய்வாளர்களை அழைத்து அனுராதபுர கல்லையும், இரணைமடு சந்தியில கொண்டு வந்து போட்ட கல்லையும் ஒப்பிடுவாங்க. அதன் தொடர்ச்சி இங்கிருக்குனு சொல்லி 'சிங்களத்தின் பூர்வீக நிலம்’னு நினைவிடம் கட்டுவாங்க'' என்றார்.

தமிழ்ப் பகுதிகள் சிங்களத்தின் பூர்வீகம் என்ற அடையாளம் காட்டப்படுவதற்கு இவர் குறிப்பிட்டது​போல் பல வேலைகள் தமிழர் பகுதிகளில் ராணு வத்தால் அரங்கேற்றப்பட்டு வருகிறது. அதனால்தான் ராணுவத்தை தமிழர் பகுதிகளில் இருந்து விலக்க மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இப்போது நாங்கள் கனகபுரம் துயிலும் இல்லத்தை நோக்கி நகர்கிறோம். உடன் வந்திருந்தவர் ஒரு கவிஞர். ''பொதுவாகவே நவம்பர் மாத இறுதியில் துயிலும் இல்லங்களுக்குச் செல்லும் வீதிகள் கண் ணீரால் நனைக்கப்பட்டு இருக்கும். தமிழீழமே சோக கீதத்தை இசைத்துக் கொண்டு இருக்கும். போரா ளிகளை நினைவுகூரும் நினைவிடங்கள் ஈழத்தில் இருந்ததுபோல், எந்த நாடுகளின் விடுதலைப் போராட்டத்தின் முனைப்பிலுமே இருந்தது இல்லை. அப்படிப்பட்ட புலிகள், சிங்கள ராணுவத்தை நிராயுத பாணிகளாக பிடித்தால், ஒரு அடிகூட அடிக்க மாட்​டார்கள். இவ்வளவு ஏன், முள்ளிவாய்க்கால் முடிவுக்கு முன்னர்கூட, எட்டு சிங்கள ராணுவச் சிப்பாய்களை விடுதலை செய்தனர். ஆனால் இன்று மாவீரர் துயிலும் இடங்களை அடையாளம் இல்லாமல் ஆக்கி விட்டனர்'' என்ற அவர், தமிழில் மொழி பெயர்க்கப் பட்ட பாலஸ்தீன மாவீரர் பாடல் ஒன்றை நினைவு படுத்தினார்.

''ஓ! மரணித்த வீரனே... உன் சீருடைகளை எனக்குத் தா, உன் பாதணிகளை எனக்குத் தா, உன் ஆயுதங்​களை எனக்குத் தா, ..... எவருமே காணாத உன் இரு துளி கண்ணீரை...  தப்பி ஓடும் உன் இருப்பை, தனித்து நிற்கும் தீர்மானத்தை உன் தோழன் இருக்கூராய் உண்டாடப்பட்டதனால் உன் துன்பம் என்னவென்று நான் அறிந்து​கொள்வதற்கு...'' என்று விடுதலைப் போரின் வலியை சொல்லும் அப்பாடலை நினைத்தவாறு மாவீரர் துயிலும் கல்லறைகளை நோக்கி நகர்கிறேன்.

ஊடறுத்துப் பாயும்..